அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஆதிகாலத்தின் மக்கள் தொகை உலகில் சில லட்சங்களில் இருந்த பொழுது இறைவன் மக்களோடு மக்களாக வாழ்ந்து உறவாடினான்.
முருகனுக்கு திருமால் மாமா முறை, திருமாலுக்கு அம்பாள் தங்கை முறை. அவுங்க கல்யாணம் எல்லாம் கூட இங்கதான் நடந்தது.
ஈசன் மக்களோடு மானிடனாய் கலந்து நடத்திய திருவிளையாடல்களை கதை கதையாய் கேட்டுள்ளோம்.
திருவாரூர் வீதிகளில் தன் நண்பன் சுந்தரருக்காக பரவை நாச்சியாரிடம் நடையாய் நடந்து சிவபெருமான் தூது சென்றதை அறிவோம்.
இறைவனும் மனிதர்களை நல்லவர்களாக படைத்து மகிழ்ந்தான்.
பின்னர் மக்கள் தொகை லட்சங்கள் கோடிகளான பொழுது அவனது வருகை குறைந்தது. கடவுளரின் பிரதிநிதிகளாக புத்தரும், மகாவீர்ரும், ஏசுபிரானும், முகமது நபியும் தோன்றி மக்களால் கடவுளாக்கப் பட்டனர்.
பின்னர் மத போதகர்களும், சமயக் குரவர்களும், ஆழ்வார்களும் அவதரித்து கடவுளர்களை நினைவு படுத்திக் கொண்டிருந்தனர்.
மக்கள் தொகை பல நூறு கோடிகளான பின் மத போதகர்களின் நம்பகத் தன்மை குறைந்து கொண்டு வந்தது. கடவுளின் நிலமை தர்ம சங்கடமாகியது. யோசித்த கடவுள், தன் உதவி தேவைப் படும் மனிதனுக்கு சக மனிதனை வைத்தே உதவி செய்யும் உபாயத்தை கண்டுபிடித்தான்.
யாரோ ஒருவர் சமயத்தில் வந்து கடவுள் போல உதவியதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். அந்த ‘யாரோ ஒருவர்’ கடவுளால் அனுப்பப் பட்டவர் என்ற உண்மையை வெகு சிலரே அறிந்திருப்போம். நான் கூட கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் உதவியால் மகிழ்ந்த தருணங்கள் பல.
சமீபத்திய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டால் நான் மேலே கூறியது உண்மை என்று நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.
தமிழ் நாட்டில் பெரிய கோவில்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெலாம் மனைவியுடன் சென்று வருவேன். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அது குறைந்து விட்டது. வயது மூப்பு ஒரு காரணம் என்றாலும் ஆவலுடன் குழந்தை போல் குதித்துக் கொண்டு கிளம்ப மனைவி இல்லாததுதான் முக்கிய காரணம். நான் சோர்ந்திருக்கும் சமயம் என் மகன் ‘ஏதாவது கோவிலுக்கு போகலாமா’ எனக் கேட்பான். மறுத்து விடுவேன். ஆனால் உள் மனதில் அண்ணாமலையாரை என்றாவது ஒருநாள் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தோன்றி மறையும்.
சில நாட்களுக்கு முன்னர் என் மகனுடன் செய்யாறு அருகே ஒரு தொழிற் கூடத்தை தொழில் முறையில் சந்திக்க ஏற்பாடு. முதல் நாள் மாலை பெயர் தெரியாத எண்ணில் இருந்து என் மகனுக்கு அலைபேசியில் அழைப்பு. பேசிய குரல் ‘ நான் திருவண்ணாமலை கோவிலில் இருந்து பேசுகிறேன். உங்கள் எண்ணை அற நிலையத்துறை அமைச்சர் அலுவளகத்தில் கொடுத்தார்கள். நீங்கள் நாளை எத்துனை மணிக்கு வருகிறீர்கள்’ என்று விணவியது.
என் மகனுக்கு ஒன்றும் புரிய வில்லை. பதிலாக ‘ நான் வருவதாக கூற வில்லை. மேலும் அமைச்சகத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் தவறான எண்ணை அழைக்கிறீர்கள்’ என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
மறு நாள் காலை காரில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது மீண்டும் அழைப்பு அதே எண்ணில் இருந்து அதே கேள்வி, என் மகனும் அதே பதிலுடன் துண்டித்தான். சில நிமிடங்களில் தொடர்ந்த அழைப்பு ‘ எங்களுக்கு அமைச்சர் அலுவளகத்தில் இருந்து வந்தது இந்த எண்தான், மீண்டும் இன்று காலை உறுதிப் படுத்தினார்கள், நீங்கள் எத்துனை மணிக்கு வருகிறீர்கள்’ எனக் கேட்டது
என் மகன் என்னைப் பார்க்க ‘ இது ஈசனின் விளையாட்டப்பா, மாலை 5 மணிக்கு வருவதாக சொல்லி விடு’ எனக் கூறினேன்.
சந்திப்பை முடித்து மாலை திருவண்ணாமலை கோவிலை நெருங்கும் சமயம் என் மகன் அந்த எண்ணை தொடர்பு கொண்டான். பதில் குரல், ஒரு கோபுரத்தின் பெயரைக் கூறி அங்கே வரச் சொன்னது. அக் கோபுரத்தின் உயர்ந்த கதவு உட்புரம் பூட்டப் பட்டிருந்தது. மீண்டும் அழைத்தவுடன் ஒரு இளைஞர் கதவினைத் திறந்து எங்களை மரியாதையுடன் அழைத்துச் சென்று அண்ணாமலையார் அருகே நிறுத்தி தரிசனம் செய்வித்து அம்பாளைக் காண வைத்து அனுப்பினார். நான்கைந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து கிடைக்க வேண்டிய தரிசனம் சில நிமிடங்களில் முடிந்து விட்டது.
என்னை திருவண்ணாமலைக்கு வரவழைத்து தரிசனம் செய்வித்தது யார்?
‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ வந்தேன் என்பதைத் தவிர என்னிடம் விடையேதும் இல்லை.

நிஜமாக நடந்ததா என்று சந்தேகிக்க வைக்கும் நிகழ்வு. பிரமிக்க வைத்தது.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike