
- விழும்மின் பொற்கலம் பெற்றங்குஓர் ஏழைபோய்க்
கழுவு வான்புகக் கைத்தலத் தில்இராது
அழுவம் நீர்புகுந்து ஆழ்தலின் கெட்டுஉயிர்
வழுவி னார்கதை வைகலும் கேட்டுமால்
[விழும்-விரும்பத்தகும், மின்-ஒளிபொருந்திய, பொற்கலம்-பொற்பாத்திரத்தை; அழுவம்=ஆழம்; வைகலும்=நாள்தோறும்]
ஒளி பொருந்திய ஒரு பொற்பாத்திரத்தை அறிவில்லாதவனாகிய செட்டி நாழி மிளகு கொடுத்து விலைக்கு வாங்கினான். அவன் தானிருந்த இடத்திற்குப் போய் அதன் பாசியைத் தேய்த்துக் கழுவும் பொருட்டு, ஒரு கிணற்றின் கரையில் உட்கார்ந்துகொண்டு அதனைத் தேய்க்க, அப்பாத்திரம் அவனுடைய கையைவிட்டு நழுவி ஆழமான நீருக்குள் புகுந்து அமிழ்ந்து விட்டது. அதனை முன்னே ஒருவன் வாங்காது கைதவறவிட்டதனாலும், உயிர் நீங்கின இருவருடைய சரித்திரத்தை, தினந்தோறும், நாம் கேட்டிருக்கின்றோம். ஆதலின், எவரும் பேராசை கொள்ளலாகாது.
இங்கு கூறிய செட்டிகளின் கதையாவது: ஓர் உழவன் மண்வெட்டும்போது, கீழே புதைந்து பாசியேறிக் கிடந்த பொற்பாத்திரம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதனைப் பொன்னென்று உணராது ஒரு செட்டிக்குக் காட்ட, அவன் அதனைப் பொன்னென்று அறிந்து, “இதற்கு விலை யாது, என்று உழவனைக் கேட்டான்; அவன், ”அதற்கு நாழி மிளகு வேண்டும்,” என்றான். செட்டி, “ஒரே முறையில் விலையை முடிவு செய்து விடலாகாது; ஆழாக்குத் தருகிறேன், உரி தருகிறேன் என்று சொல்லி இவனைப் போகவிட்டுத் திருப்பிப் பின் நாழியுங் கொடுத்து இதனைப் பெற்றால்தான் இவன் சந்தேகப்படமாட்டான்,” என்றெண்ணி அவ்வாறே செய்ய, அந்த உழவன் மற்றொரு செட்டிக்குக் காட்டினான்.
அவன் உடனே அதனைப் பொன்னென்று உணர்ந்து கொண்டு நாழி மிளகையுங் கொடுத்து வாங்கிக்கொண்டு அதன் பாசி போகத் தேய்த்துக் கழுவும் பொருட்டு ஒரு பழங்கிணற்றின் அருகே போய் அதனைத் தேய்க்க, அது கையைவிட்டு நழுவிப் பாதாளத்தில் வீழ்ந்தது. அதுகண்டு அவன் பிரமைகொண்டு, ”அது கழுவாக் காலோ,” என்று பிதற்றி மரணமெய்தினான். அதனை வாங்காமல் கைவிட்ட செட்டி, மீண்டும் அதனை வாங்க உழவனைத் தேடி எங்கும் தேடிக்காணாமையால், “அம்மிளகு கொடுத்தாலோ,” என்று பிரமைகொண்டு பிதற்றி மரண மெய்தினான்,”” என்பதாம். [நாழி, ஆழாக்கு, உரி என்பன முகத்தல் அளவுச் சொற்கள்] இது ஜீவசம்போதனையில் உள்ளது.
27 சந்தம் மாயினும் தன்பழப் பிண்டியைக்
கந்த மாய்ப்புளி நீரொடு காடியாய்ச்
சிந்தை ஒன்றிலன் உண்ட சிரேட்டியும்
அந்த மில்பொருள் காத்தவன் ஆயினான்.
[சந்தம் மாய்தல்=கெட்டுப்போயிருத்தல்; பழப்பிண்டி=பழைய இலவமுள் மாவு; காடி=கூழ்; சிரேட்டி=செட்டி; அந்தமில்=அழகில்லாத]
தன்னுடைய பழைய இலவமுள் மாவை, புளித்த நீருடனே கலந்து, கூழாகக் காய்ச்சி, அதன் இயற்கை நலமானது கெட்டிருந்தாலும், அதனை மனத்திலே இழிவென்று கருதாதவனாய், மிகவும் வாசனையுடையதாக, அதனை எண்ணி உண்டு பொருளை அதிகமாகச் சேர்த்துச் செலவு செய்யாமல் வைத்திருந்த, செட்டி ஒருவனும், அச்செல்வத்தின் மீது கொண்ட ஆசையினாலே மறு பிறப்பில் பாம்பாய்ப் பிறந்து அழகில்லாத அச்செல்வத்தைக் காத்துக் கொண்டிருந்தவனானான்.
இதில் கூறப்பட்டுள்ள செட்டியின் கதையாவது:- ”ஓர் உலோபியாகிய செட்டி இலவ முள்ளை இடித்து மாவாக்கிப் புளித்த காடியிற் சேர்த்துக் கூழாகக் காய்ச்சி அதனைக் குடித்துக்கொண்டே மிகுந்த பொருள் தேடி வைத்தான். அச்செல்வத்தைச் செலவழிக்காமல் அதைக் காத்துக் கொண்டே இருந்தான். அவன் உயிர்விட்டு அடுத்த பிறவியிலும் பாம்பாகப் பிறந்து அதனைக் காத்துக்கொண்டிருந்தான்,” என்பதாம். இது ஜீவசம்போதனையில் உள்ளது.
28 பொன்னின் ஏறுடைச் செட்டிஇல் போந்துஇருள்
கன்னம் இட்டவன் அப்பொருள் கொண்டு போய்த்
துன்னு தாபதன் தூங்கும்உறி யில்கிடந்து
இன்னல் எய்தினன் என்பதும் கேட்டுமால்.
பொன்னின் எடை=-செல்வம் மிகுதியாக உடைய; போந்து-போய்; இருள்=இரவில்; துன்னு=மோசவழியிற் பொருத்திய; தாபதன்-உறித்தாபதனென்னும் கபட சன்யாசி]
மோசவழியிற் பொருத்திய, உறித் தாபதனென்னும் கபட சன்யாசி, செல்வம் மிகுதியாய் உடைய, ஒரு வணிகனது வீட்டிலே, இரவில் போய், கன்னக் கோல் வைத்துச் சுவரைத்துளைத்து உட்புகுந்தான்., அவனுடைய செல்வத்தைத் திருடிக் கொண்டு போய்த் தொங்குகின்ற உறியிலே தங்கியிருந்து, அப்பொருளாசையால் செய்த தொழிலினாலே அரசனால் தண்டிக்கப்பட்டுத் துன்பம் அடைந்தான் என்ற கதையையும், கேட்டிருக்கின்றோம். ஆதலின், பிறர் பொருளைத் திருடுவோம் என்னும் சிந்தை எவர்க்கும் கூடாதாம்.
இங்குக் கூறிய உறித்தாபதன் கதையாவது: “ஒரு திருடன் சன்யாசி வேடம் பூண்டு, ஆலமரமொன்றில் உறியைக் கட்டி, அதன்மேல் மகாயோகி போல் பகற்கால மெல்லாம் தங்கியிருந்து இராக்காலத்தில் வெளியேறிப் பிறர் பொருள்களை அபகரித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு நாள் மிகுந்த செல்வமுள்ள ஒரு செட்டியின் வீட்டில் கன்னம் வைத்து உள்புகுந்து அவன் பொருள்களைத் திருடிக்கொண்டு போய் வைத்துவிட்டு உறியில் தூங்கினான். அவனுடைய இரகசியத் திருட்டை அரசன் உணர்ந்து அவனைத் தண்டித்தான்; அதனால் அவன் உயிர் இழந்தான், என்பதாகும். இது சிராவகாசாரம் என்னும் நூலில் காணப்படுகிறது.
29 நீடு நீள்நெறிச் செல்பவன் நாள்தொறும்
பாடி கண்டங்குஓர் பாசனத் தால்நிறை
நாடி நாள்தொறும் நெய்தனக்கு ஈட்டிய
தாடி வெண்ணெய் தனதுஉரை கேட்டுமால்.
[பாடி=ஆயர்களின் ஊர்; நீள்நெறி=நீண்ட வழி; பாசனத்தால்=பாத்திரத்தால்;
தினந்தோறும் மிகவும் நீண்ட வழியிலே நடப்பவன் ஒருவன் ஓர் ஆயர் ஊரைக்கண்டு அவ்வூரை அடைந்து அங்கு ஒரு பாத்திரத்திலே மோரை வாங்கிப் பருகினான். அப்படிக் குடிக்கும்போது, தாடியில் ஒட்டிய வெண்ணெயால், நிறைநாடி எடை அளவு தினந்தோறும், தன் உபயோகத்துக்குச் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒரு சேராக்கி அதனால் பொருள் சேர்க்கலாமென்று வீண் ஆலோசனை செய்துகொண்டே இறந்து நரகத்தையடைந்த தாடி வெண்ணெய்க்காரனுடைய, சரித்திரத்தையும், நாம் கேட்டிருக்கின்றோம். அங்ஙனம் வீண் ஆலோசனை செய்யலாகாது?” என்பது இதன் கருத்து.
தாடி வெண்ணெய்க்காரன் சரிதையாவது: ”பேராசை கொண்ட ஒருவன், பசுக்கூட்டம் மிகுந்த ஓர் ஆயர்பாடியில் தாடி வளர்த்துக்கொண்டு சென்று, ஆயர்களால் தரப்பட்ட மோரைத் தாடியில் தோயும்படிக் குடித்து அதனால் தாடிமயிரில் ஒட்டிய வெண்ணெயை நாள்தோறும் சிறிது சிறிதாகச்சேர்த்து ஒரு சேர் நெய்யாக்கினான். அதனால் அவனுக்குத் தாடி வெண்ணெய்க்காரனென்னும் பட்டப் பெயருண்டாயிற்று. அதன்மேல் அத்தாடி வெண்ணெய்க்காரன், அந்த நெய்யையே முதலாக வைத்துப் பெருத்த வியாபாரம் செய்து அதிகப்பொருள் சம்பாதிக்கலாம் என்னும் பேராசையை மனத்தில் வைத்துக்கொண்டேயிருந்தான். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறாமல் இறந்து நரகத்தை அடைந்தான்” என்பதாகும்.
இக் கதை அருங்கலச்செப்பிற்கு முதல் நூலாகிய ”ரத்னகரண்டகம்” என்னும் நூலில் உள்ளது.
30 அறத்தி னால் பொருள் கேட்டது கொள்ளலன்
மறத்தி னால்அர விந்தனும் மாநிதித்
திறத்தில் ஒன்றிலன் ஊன்உடை உண்டியுண்டு
இறப்ப வும்நர கத்திடை எய்தினான்.
[மறத்தினால்=பாவச் செய்கையினால்; திறத்தில்=அனுபவிக்கும் தன்மையில்; ஒன்றிலன்=பொருந்தாதவன்]
அளகாபுரிக்கு அரசனாகிய அரவிந்தன் என்பவனும், தரும நூல்களினாலே, கேட்ட தருமோபதேசமாகிய நிலைபெற்ற சம்பவத்தை, மனத்தில் கொள்ளாது பாபச் செய்கையினாலே தாகச்சுரம் எனும் நோய் வயப்பட்டு, தான் பெற்ற சிறந்த நிதியை அனுபவிக்கும் தன்மையில் பொருந்தாதவனாய் மாமிசத்தையுடைய உணவை உண்டு இறந்து நரகத்திடைச் சார்ந்தான். ஆதலின் எவரும் இத்தகைய பாவங்களைச் செய்யாதொழிவாராக.
அரவிந்தன் கதையாவது:- அளகாபுரிக்கு அரசனாகிய அரவிந்தன் என்பவன், கல்வியினைக் கசடறக் கற்றான். தான் கேட்டுக்கொண்ட தரும நெறிகளை மறந்து, கெட்ட சிந்தையுடையவனாக மாறினான். பாவச் செயல்களைக் கடைப்பிடித்தான். அவன் தான் பெற்ற செல்வத்தையும், கல்வியையும் அனுபவிக்காமல், மரணம் வரும் காலத்தில், தான்செய்த பாவங்களினால், தாகச்சுரம் எனும் நோய் வரப்பெற்றான். அப்பொழுது அவன் கற்றவை எல்லாம் அவனுக்கு வசமாகாது ஒழிந்தன.
அதனால் அவன், தன் மூத்த மகனாகிய அரிச்சந்திரனை அழைத்து அவனிடத்தில், “மகனே! தாகச்சுரத்தால் எனது உடல் பாதிக்கப்பட்டு மிகவும் கொதிக்கின்றது. என் உடலில் இடப்பட்ட சந்தனக்குழம்பு முதலியவைகளும் வெப்பத்தால் கரிந்து போகின்றன. ஆதலால், நீ உத்தரகுருஷேத்திரத்து சீதாநதி தீரத்திலுள்ள சோலைப்பிரதேசங்களில் என்னை உனது வித்தைகளால் கொண்டுபோய்ச் சேர்ப்பாய். அங்குள்ள கல்பதரு மரங்கள் நிறைந்த வனங்களிடையே மிகவும் குளிர்ச்சி கலந்து வீசுகின்ற குளிர்காற்று வந்து வீசுவதால் எனது உடலின் வெப்பமானது தணியும்,” என்றான். அதைக் கேட்ட அரிச்சந்திரன் அவ்வாறே செய்க என்று தனது ஆகாசகாமினி வித்தைகளை ஏவினன். அவை அரவிந்தனுடைய பாபத்தால் அவ்வாறு செய்யாது ஒழிந்தன. அதனால் அரிச்சந்திரன், ”தாகச்சுரமகாவியாதி அசாத்தியம் போலும்,” என்று நினைத்து சோகம் உடையவனாய்ச் செய்வதொன்றும் அறியாமல் இருந்தான்.
அப்படி இருக்கையில் ஒருநாள், அரவிந்தன் படுத்திருந்த இடத்திற்கு மேலே இரண்டு பல்லிகள் சண்டையிட்டுக் கொண்டன. அவற்றினின்றும் இரத்தத் துளிகள் அரவிந்தன் உடலின் மேல் வீழ்ந்தன. அவை வீழ்ந்த இடத்தில் சுரத்தின் வெப்பமானது தணிந்தது. அதுகண்டு அரவிந்தன், “நமது சுரவெப்பம் தணிவதற்கு இதுவே பெரும் மருந்து போலும்,” என்று கருதினான். தனக்கே தோன்றிய விபரீத அறிவினால் “இரத்தத்தில் மூழ்கினால் நமது சுரம் முழுதும் தணியும்” என நிச்சயித்தான். ஓரிடத்தில் மிருகங்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டான். உடனே தன் இளைய மகனாகிய குருவிந்தன் என்பவனை நோக்கி, “இந்த மிருகக் கூட்டங்களைக் கொன்று எனக்கு இரத்தச் சோறு சமைத்துத் தருவாயாக” என்றனன்.
அது கேட்டக் குருவிந்தன் விலங்குகளைக் கொல்லும் பாவத்திற்கஞ்சி என் செய்வோம் என்று கவலையுடன் சென்றான். மேலும் அவன் ஞானியாகிய, ஒரு முனிவர் மூலம் தன் தந்தை மரணமடைந்து நரகம் அடைவார் என்பதை உணர்ந்து அக்காரியத்தைச் செய்யச் சம்மதி்க்காமல் இருந்தான். ஆயினும் ”தந்தைக்குத் தந்த வாக்கினையும் நிறைவேற்ற வேண்டுமே,” என்று இரத்தம் போன்ற வேறு ஒரு பொருளால், ஒரு குளத்தை உண்டாக்கி அரவிந்தனுக்குக் காட்டினன். அவன் அதனை மிகுந்த செல்வம் கண்ட ஏழை போலக் கண்டு மகிழ்ந்தான். அக்குளத்தில் வீழ்ந்து மூழ்கினான். அதிலுள்ள போலி இரத்தத்தை பருகிக் கொப்பளித்தான்.
அவ்வாறு கொப்பளிக்கும்போது அது இரத்தம் போன்ற வேறு திரவமென்பது அவனுக்குத் தெரிந்தது. அதனால் அவன் அவ்வாறு செய்த குருவிந்தன் மீது கோபம் கொண்டு கத்தியை உருவிக் கொண்டு அவனை வதைக்கும் பொருட்டு ஓடினான். அப்படி ஓடும் போது அவன் அடிதளர்ந்து தான் வைத்திருந்த கத்தியின் வாயிலேயே வீழ்ந்து இறந்து நரகத்தை அடைந்தான் என்பதாகும்.
