
ஒவ்வொரு சமூகத்திலும் தார்மீக வாழ்க்கைக்கு முன்மாதிரியாகத் திகழும் ஒரு மனிதன் அந்த சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறான். அதே போல், எந்த மனிதன் தர்மத்தை மீறுகிறானோ அதாவது அறநெறிக்கு எதிராக நடக்கிறானோ, அவன் அந்த சமூத்தின் அழிவுக்கும் காரணமாகிறான்.
அறநெறிப்படி வாழும் ஒரு மனிதனின் செயல்கள் சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும். இவனை கிருஹஸ்த ஞானி (இல்வாழ்க்கையில் இருக்கும் ஞானி) என்று ஸ்ரீகிருஷ்ணர் கருதுகிறார்.
கிருஹஸ்த ஞானி லோக க்ஷேமத்திற்காக செயல் புரிகிறார்; அஞ்ஞானி மனத்தூய்மை அடைய செயல் புரிகிறான். ஞானி ஆனந்தத்தைத் தேடி செயல் புரிவதில்லை; ஆனந்தத்தோடு செயல் புரிகிறார். ஆனந்தத்திற்காக செயல் புரிபவன் விருப்பு வெறுப்புகளால் கட்டப் பெற்று சம்சாரியாக – பந்தங்களோடு விருப்பு வெறுப்புகளோடு — வாழ்கிறான்; ஆனந்தத்தைத் தேடி நிற்பதால் வாழ்க்கையில் பல பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது. ஞானிக்கோ வாழ்வில் வரும் பிரச்னைகளும் இறைவன் திருவிளையாடலாக இருக்கும்.
ஸ்ரீகிருஷ்ணர் கர்ம யோகத்தைப் பற்றிக்கூறும் மூன்றாவது அத்தியாயத்தில் கீழ்க்கண்ட சுலோகங்களை நமக்கு அருளுகிறார்.
प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः । .
अहंकारविमूढात्मा कर्ताहमिति मन्यते ॥३.२७॥
ப்ரக்ருதே க்ரியமாணானி குணை கர்மாணி சர்வஷஹ
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா செயல்களும் பிரக்ருதியின் குணங்களால் (இயல்பான குணங்களால்) செய்யப்படுகின்றன.
நான் என்ற ஆணவத்தால் (அஹங்காரத்தால்) மனம் மயக்கப்பட்ட ஒருவர், “நான் தான் செய்பவன்” என்று கருதுகிறார்.
तत्त्ववित्त्तु महाबाहो गुण्कर्म विभागयोः ।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ॥३.२८॥
தத்வவித்து மகாபாஹோ குணகர்ம விபாகயோஹோ
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ன சஜ்ஜதே
ஓ அர்ஜுனா! ஆனால், குணங்களின் உண்மையையும் அவற்றின் செயல்பாடுகளையும் அறிந்தவர், குணங்கள் (புலன் உறுப்புகள்) குணங்களுக்கிடையில் (புலன்-பொருள்கள்) செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு விலகி இருப்பார்.
.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’ என்ற மனோபாவம் உண்டு. தான் என்ற எண்ணத்துடன் அஹங்காரத்துடன் செயல்படும் ஒருவனது ‘நான்’ என்ற நிலை, கீழ் நிலையை – தாழ்ந்த நிலையைக் குறிக்கும். தார்மீக நிலைப்படி அகங்காரம் என்பது பணிவோடு இருப்பதற்கு மாறாக கர்வத்துடனும், ஆணவத்துடனும் இருப்பதைக் குறிக்கும். வேதாந்த விசாரத்தில் அகங்காரம் என்பது ஆத்மாவால் உயிர்க்கப்பட்ட உடல் மன வளாகத்தைக் குறிக்கும். இவ்வாறு தாழ்ந்த நிலையில் உள்ள ‘நான்’ என்னும் நிலை, ‘நான்தான் இதனைச் செய்தேன்; இதனை நான்தான் அனுபவித்தேன்’ என்ற எண்ணத்தை ஒரு மனிதனுள் ஏற்படுத்தி அவனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தும். உயரிய நிலையில் உள்ள ‘நான்’ என்ற நிலை, ஆத்ம சைதன்யமாக (விழிப்புணர்வுள்ள சுத்த அறிவு) தான் என்ற எண்ணம் இன்றி, அனைத்து செயல்களுக்கும் ஒரு சாட்சியாக நின்று செயல்படும்.
சுவாமி பரமாத்மானதா இந்த உயரிய ஆத்மாவை இவ்வாறு விவரிக்கிறார்:
· ஆத்ம சைதன்யம் (விழிப்புணர்வுள்ள சுத்த அறிவு) என்ற உணர்வு உடலின் ஒரு பகுதி, சொத்து அல்லது விளைபொருள் அல்ல. · ஆத்ம சைதன்யம் என்ற உணர்வு உடலை ஊடுருவி உயிர்ப்பிக்கும் ஒரு சுயாதீனமான உறுபொருள் ஆகும். · ஆத்ம சைதன்யம் என்ற உணர்வு இடம் சார்ந்து உடலின் எல்லைகளால் வரையறுக்கப் படுவதில்லை. · நிலையற்ற இந்த உடல் வீழ்ச்சியடையும் போது ஆத்ம சைதன்யம் என்ற உணர்வு நிலைத்திருக்கும். அது நித்தியமானது. · உடலின் வரம்புகளுக்கு அப்பால் பரவி, உடலின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்திருக்கும் இந்த ஆத்ம சைதன்யம் என்ற உணர்வு, தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஊடகம் இல்லாததால் நமக்குத் தெரிவதில்லை; வெளிப்படுவதும் இல்லை. ஆன்மீக வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளே இந்த உயரிய ‘நான்’ என்ற நிலையை உணர்ந்து இந்த ‘நானுடன்’ என்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும். ஞானி என்பவர் இந்த ஐக்கியத்தை உணர்ந்தவர். ஒரு மனிதனின் தாழ்ந்த நிலை என்பதே அவன் தன் மனத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் தாம். உடலும் மனமும் வாழ்வின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப உற்சாகத்தையும் துக்கத்தையும் அனுபவித்து தட்டுத் தடுமாறி வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து விட முயற்சிக்கும். உயரிய ‘நான்’ என்பதை அவை உணரா. இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அஞ்ஞானி தாழ்ந்த நிலையில் இருக்கும் ‘நான்’ உடன் இணைந்து அதிருப்தியும் இன்னும் வேண்டும் என்ற ஆசையும் மேலிட வாழ்கிறான் என்கிறார். வெளிஉலகில் ஒரு மனிதன் அடையும் புகழும் பேரும் அவனது சாதனைகளும் எந்த நாளும், ஆத்ம சைதன்யத்துடன் இணையும்போது ஒருவனுக்குக் கிடைக்கும் எல்லையற்ற ஆனந்தத்தைத் தராது என்கிறார். ஆனால் உயரிய நிலையை அடைந்த ஒரு ஞானியோ இந்த உலகில் உலகியல் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த உடலையும் மனத்தையும் உபயோகிக்கிறார். வாழ்வின் மேடு பள்ளங்கள் அவரை ஒன்றும் செய்யாது. மனத்தில் எவ்வித பாரமின்றி உலகியல் அனுபங்களையே ஒரு சாட்சி மனோபாவத்துடன் எந்தவித பற்றுமின்றி ஏற்றுக் கொள்கிறார். எப்படி சிவபெருமானின் முடிமீது அமர்ந்திருக்கும் அந்தப் பாம்பு ஒரு அலங்காரமாக மாறி, ஒரு பாம்பு தரும் பய உணர்வை மாற்றி விடுகிறதோ, அதே போல் அகங்காரமும் ஒரு ஞானிக்கு அலங்காரமாக மாறி விடும். ஒரு கையை ஆட்டினால், அந்த இயக்கம் கையோடு தான் தொடர்புடையது; அந்த கையை நாம் காணச் செய்யும் அந்த ஒளியோடு அந்தக் கைக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அது போலவே மனத்தில் உள்ள அகங்காரம் மட்டுமே இயங்கும்; அதனை உணர்விக்கும் ஆத்மசைதன்யம் எந்த இயக்கமும் காட்டாது இருக்கும். அகங்கார நிலையிலிருந்து, வாழ்க்கை என்பது செயல்பாடுகளும் அந்தச் செயல்களின் விளைவுகளை அனுபவிப்பதுமேயாம். இந்த அகங்காரமே உலகத்தோடு பரிவர்த்தனை செய்கிறது. ஒரு ஞானி இவை அத்தனையையும், எந்த விதமான உணர்ச்சிகளின் அதிர்வுகளையும் சந்திக்காது, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்கிறார்.
ஞானி ஒவ்வொருவரையும், ஒவ்வொரு மனதையும் உலகளாவிய சட்டத்தின் பார்வையில் இருந்து பார்க்கிறார். அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கருணையுடன் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஆரோக்கியமான ஏற்றுக்கொள்ளல் ஜீவன் முக்தி என்று அழைக்கப்படுகிறது.
விருப்போடு நாம் செய்யும் செயல்கள் பந்தங்களை ஏற்படுத்தும். இந்தப் பந்தத்தின் விளைவுகளாய் சம்சாரம் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் கர்மாக்கள் மட்டுமே அகங்காரத்தை பழுக்க வைக்க உதவும். கர்மாக்களுக்கு எப்படி எதிர்மறையான பக்கம் (பந்தங்கள் ஏற்படுத்தி நம்மை பிறவிப் பெருங்கடலில் தள்ளி விடும்) இருக்கிறதோ, அதே போல் ஒரு நல்ல பக்கமும் உண்டு. எவ்வாறு ஒரு பழம் பழுத்த பின் மரத்தில் ஒட்டிக் கொள்ளாமல் தானாகவே விழுந்து விடுமோ, அது போலவே, அகங்காரமும் பழுத்தவுடன் எளிதாக அகற்றப்படும்.
வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரமங்களும் அகங்காரத்தை பழுக்க வைக்கும் தோல்களைப் போன்றவை. கிருஹஸ்த ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் வெளிப்புறமாகத் துறவை ஏற்காவிட்டாலும், மனத்திற்குள், முன்பு பற்றுடன் இருந்த அனைத்திலிருந்தும் பிரிந்து செல்லத் தயாராக இருக்கிறார். எனவே ஒரு ஞானியும் குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே கர்ம யோகத்தைப் பின் பற்றலாம். அகங்காரத்தைப் பழுக்க வைப்பதற்கான வழியே சாதன, சதுஷ்டய சம்பத்தி (விவேகம், வைராக்யம், ஷட்சம்பத்தி (ஆறு குணங்களின் தொகுப்பு) மோக்ஷத்தை அடைய தீவிர விருப்பம்) என்று தர்ம சாத்திரம் கூறும்.
இறுதியாக ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தைப் பின்பற்ற ஆறு வழிகளை நம் முன் வைக்கிறார்.
- ஆன்மீக வளர்ச்சியையே வாழ்க்கையின் பிரதான நோக்கமாகக் கொள்வது
- செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது
- செய்த செயலின் விளைவுகளை இறைவன் அருளிய பிரசாதமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது; திட்டமிட்டு செயல்படுவது ஆனால் செய்த செயல்களுக்காகவும் செய்யப்போகும் செயல்களுக்காகவும் கவலைப் படாமல், இறைவன் அருளிய வரப் பிரசாதமாக ஏற்றுக் கொள்வது
- ‘நான்’ என்ற எண்ணம் சிறிதும் இன்றி பணிவுடன் அனைத்தும் இறைவன் அருளே என்று செயல்படுவது
- செயல்படும் கர்த்தாவாகவும் செயலை அனுபவித்து இன்ப துன்பங்களை உணரும் போக்தனாகவும் இல்லாமல் மனத்தில் சமநிலையுடன் இருப்பது
இவ்வாறு செயல்படுவதினால் மனத்தில் எந்தவிதமான உளைச்சலும் இன்றி, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, சுதந்திரமாக சுயவிருப்பத்துடன் திட்டமிட்டு, தவறுகளைத் திருத்தி, தன்னையும் மேம்படுத்திக் கொண்டு, செயல்பட்டு உன்னத நிலையை அடைந்து, வாழ்க்கையில் உயரலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இத்துடன் பகவத் கீதையின் மூன்றாவது அத்தியாயமான கர்ம யோகம் முற்றுப் பெற்றது.

கனமான பதிவு.
“நான் நிறைய தர்மங்கள் செய்திருக்கிறேன். நான் எல்லோரிடமும் அன்பாயிருக்கிறேன். நான் எல்லோருக்கும் உதவியாக இருக்கிறேன். நன் சொர்க்கம் போகமுடியுமா ஸ்வாமி?” என்று ஒரு துறவியிடம் ஒரு மனிதன் வந்து திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருந்தானாம்.
“நான் இருக்கும் வரை உன்னால் அது முடியாது” என்று அந்தத் துறவி சொன்ன பதில் எப்போது புரிந்ததோ அந்த மனிதனுக்கு.. எப்போதோ படித்தது.
இந்தக் காலமாயிருந்தால் முதல் தடவையே “அப்படியா.. முதலில் உன்னை காலி செய்து விடுகிறேன்’ என்று கிளம்பி விடுவார்!
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike
ஸ்ரீ ராமானுஜரின் கூற்றுப்படி இந்த அத்தியாயத்தின் சுருக்கம்
1. செல்வ ஆசை கொண்ட பக்தர்கள் சந்திர கிரகத்தை அடைந்து, செல்வத்தை அனுபவித்து, தங்கள் புண்ணியத்தை இழந்த பிறகு பூமிக்குத் திரும்புகிறார்கள்.
2. ஆத்மா அனுபவத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் சுயத்தை அனுபவிக்க இடையில் ஒரு இடத்தை அடைகிறார்கள்.
3. பகவானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் வைகுண்டத்தை அடைகிறார்கள், பூமிக்குத் திரும்பவே மாட்டார்கள். – raghupathy
LikeLike