
நான், என் மனைவி, மகன்கள் ஆகிய நால்வரும் ஸீயாட்டிலிருந்து இந்தியா கிளம்பும் முன் இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரே ஏமாற்றம்.
நேராக டில்லி வந்து இறங்கியவுடன் கரோல்பாக்கில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு என் பால்ய நண்பன் ரவியைப் பார்க்கக் கிளம்பினோம். (அவன் தன் வீட்டிற்கு வந்து தங்கும்படி என்னை அழைக்கவில்லை) மயூர் விஹாரில் வீடு. பழைய கதைகள்… நாங்கள் எங்கள் ஊரில்- கும்பகோணம் – சேர்ந்து விளையாடியது, ஒன்றாகவே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தது, நான் வங்கிப் பதவி உயர்வில் தொன்னூறுகளில் டில்லி வந்தது, அங்கே சரோஜினி நகர் மார்க்கெட்டில் பிரும்மச்சாரிகளான இருவரும் பெண்கள் பின்னால் சேர்ந்து சுற்றியது, ரவியின் பஞ்சாபிப் பெண் காதலுக்குத் தூது போனது…….. இப்படி எல்லாவற்றையும் பேசிப் பேசிப் பொழுதைக் கழிக்க எண்ணியவனுக்கு பெருத்த ஏமாற்றம். ஏதோ ஒப்புக்கு இரண்டு வார்த்தை பேசி வணக்கம் சொல்லிவிட்டு, நொய்டாவில் இருக்கும் தன் மாமனார் வீட்டுக்கு அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டான் என் நண்பன். பழையன கழிந்து போய் விட்டன போலிருக்கிறது அவனுக்கு.
மறுநாள் வந்தே பாரத்தில் கிளம்பி வாரணாசி. முன்பே பேசி வைத்திருந்தபடி புரோகிதர் தயார் செய்து வைத்திருந்த அறையில் தங்கி அடுத்த நாளிலிருந்து ஐந்து நாள் காரியங்கள். அலஹாபாத்தில்- ஓ… இப்போது ப்ரயாக்ராஜ் இல்லை? – திருவேணி சங்கமம், பின்னர் காசி வந்து கங்கையில் ஸ்நானம், ஸ்ரார்த்தங்கள், பின்னர் கயாவில் கிரியைகள், திரும்பி வந்து முடிவுக் காரியங்கள் எல்லாம் எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் நடந்து முடிந்தன. இவ்வளவு தூரம் வந்ததற்கு அயோத்யா பிரயாணம் உபரி. காசி யாத்திரையுடன் பெற்றோருடன் இருந்த ஒரு உறவு நூல் எங்கோ அறுந்து போனதாக மனத்தின் ஒரு மூலையில் தோன்றியது.
கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். நான் என் ஏமாற்றங்களைப் பற்றி இன்னும் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை.
மறுநாள் நேராக சென்னை. அங்கே என் நண்பன் சுரேஷ் எனக்காக அவன் வீட்டில் ஒரு பெரிய அறையையே ஒழித்து வைத்திருந்தான். அவன் என்னோடு பாங்கில் வேலை பார்த்தவன். நாங்கள் இருவரும் ஒரு அரசாங்க வங்கியில் குமாஸ்தா வேலையில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சேர்ந்தோம். நான் பதவியில் உயர்ந்தேன். அவன் உயரவில்லை. அப்படியே போதும் என்று இருந்து விட்டு விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு, பிள்ளையோடு இருக்கிறான்.
நான் சென்னை வந்து ஒன்பது வருஷமாகிறது.
இங்கே கொஞ்சம் பழைய கதை சொல்ல வேண்டும்.
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே என்.ஐ.ஐ.டியில் ஏதோ விளையாட்டாகச் சேர்ந்த கம்ப்யூட்டர் படிப்புகள் கொஞ்சம் ஊக்கம் தர வேலை மாற்றத்துக்கு என்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், 2000 மாவது ஆண்டின் துவக்கத்தின் போது கணிணிகள் தங்கள் தரவில் உள்ள தேதிகளை சரியாகத் திருத்திக் கொள்ள வைப்பதற்கு ஒரு பெரும் நிபுணர் படையே உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒய்2கே. அந்த சமயத்தில் எனக்கு ஒரு கணிணி தொழில் நுட்பக் கம்பெனியில் ஒரு வாய்ப்பு வர உடனடியாக வங்கி வேலையை உதறிவிட்டுத் தாவினேன். சில மாதங்களில் யூ. எஸ். பயணம். அவர்களுக்கு என் வேலை பிடித்துப் போய் அங்கேயே இருக்க வைக்க, இப்போது பதினைந்து வருடமாக அமெரிக்கக் குடிமகன். மனைவி, குழந்தைகளும் அமெரிக்கப் பிரஜைகள்.
2016ல் அம்மாவின் இறுதிக் காரியங்களுக்காக மனைவியுடன் வந்தேன். பிறகு கோவிட், பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு முடிவு இப்படி எத்தனையோ காரணங்கள். மறுபடியும் இப்போதுதான் இந்தியப் பயணம்.
இரண்டு நாள் சென்னையைச் சுற்றினோம். புதிய கட்டிடங்கள், மெட்ரோ ரயில், மால்கள் என்று சென்னை நிறைய மாறிவிட்டது. பழைய சினிமா தியேட்டர்களைக் காணவில்லை. ஆனால், தெருவில் சுற்றும் மாடுகளும் நாய்களும் கூவம் முதலான சாக்கடைகளும் அரசியல் கட்சிகளின் கூச்சல்களும் இன்னும் மாறவே இல்லை. முன்போலவே, மக்கள் தெரு முனையில் குழாயில் தண்ணீர் பிடிக்க சண்டையிடுகிறார்கள். தெரு ஓரத்தில் தங்கள் காலைக் கடன்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் இங்கே என்றும் மாறாத நிரந்தரம் போலும்.
சரி, அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். சென்னையிலிருந்து கும்பகோணம் போய், மறுநாள் குடவாசல் அருகில் கிராமத்தில் என் குல தெய்வம் பிடாரி அம்மனுக்கு அபிஷேகத்தை முடித்துக் கொண்டு காரில் கும்பகோணம் திரும்பிய போது, என் மனைவி சித்ராதான் முதலில் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
“நீங்க இருந்த வீடு இங்கேதானே எங்கோ இருக்கு?”
“ஆமாம். வெள்ளை விநாயகர் தெரு”
“அந்த வீட்டைப் போய் பார்க்கலாமா?”
“எதுக்கு?”
“சும்மாதான். அந்த வீடு இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கணும்னு ஆசையாய் இருக்கு”
எங்களுக்குக் கல்யாணமான புதிதில் என் குடும்பம் அந்த வீட்டில்தான் இருந்தது. சித்ரா பலமுறை அங்கே வந்திருக்கிறாள்.
“நீங்களும் நானும் முதல் முதலாச் சேர்ந்தது அங்கேதான், ஞாபகமிருக்கா?” சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, அதன் அர்த்தம் தெரியாமல் என் இளைய மகன், “வாட் மா? வாட் டிட் யு ஸே?” என்று வினவினான். அவனுக்கு அர்த்தம் சொல்ல அவளுக்கு வெட்கமாக இருந்தது.
“பிரதீப்! உன் தாத்தா, பாட்டி அந்த வீட்டிலேதான் இருந்தாங்க. நாங்க இரண்டு பேரும் கூட கொஞ்ச நாள் அங்கே இருந்தோம்” என்று சொல்லி சமாளித்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.
சித்ரா மறுபடியும் சிரித்தாள்.
”எனக்கு அந்த வீட்டை மறுபடியும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.”
”சரி, நாளைக்குப் போகலாம்”
மறுநாள் போய் பார்த்த போது முதலில் வெள்ளை விநாயகர் கோவிலையே அடையாளம் தெரியவில்லை. புதிய சன்னதிகள், மின்சார முரசு, தரையில், சுவரில் புதிய சலவைக் கல் பதிப்பு என்று வடிவமே புதிதாய் மாறியிருந்தது. கோவிலை வலம் வந்து விட்டு, என் ஒன்பதாம் நம்பர் வீட்டைத் தேடினேன். ஆனால், ஐந்துக்குப் பிறகு பதினோராம் இலக்கம்தான் கண்ணில் பட்டது. இடையில் ”மஹாலட்சுமி கல்யாண மாளிகை” என்று ஒரு பெரிய கட்டிடம். பெரிய வாசல் கேட். உள்ளே பெரிய அளவில் வாகனங்கள் நிறுத்தும் இடம். பெரிய முகப்பு. இதற்கு முன் பார்த்ததே இல்லை. எதிரில் இருந்த பெட்டிக் கடைக்காரரிடம் விசாரித்தேன்.
“அதுங்களா? இங்கே வரிசையா இருந்த அஞ்சு வீடுகளையும் ஒருத்தரே வாங்கி, இடிச்சுட்டு இப்படிப் பெரிய கல்யாண மண்டபமா கட்டிட்டாரு. சின்ன தெரு. ஒரே டிராஃபிக்கா ஆகிப் போச்சு”
எங்கள் வீடு எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மர கேட்டைத் தாண்டி சிறிய ஆளோடி, தாழ்வாரம், கூடம், சமையல் அறை, தாழ்வாரத்தில் ஒரு அறை எல்லாம் உண்டு. கூடத்தில் மேலே மச்சுக்குக் செல்ல ஒரு மரப் படிக்கட்டு. மச்சில் ஒரு அறை நான் படிப்பதற்கு. பின்னர் அதுவேதான் சித்ரா சொன்ன அந்த நிகழ்வும் நடந்த அறை. பின்னால் பெரிய கொல்லையில் கிணறு, மூன்று தென்னை மரங்கள், மாட்டுக் கொட்டில். எல்லாம் எங்கே போயின? கால வெள்ளத்தில் அடித்துப் போனதா? புயல் காற்றில் பறந்து போனதா?
என் அப்பா ஒரு ரைஸ் மில்லில் கணக்கர் உத்தியோகம் பார்த்தார். தெரு முடிவில் மில். மில்லின் முதலாளிக்குச் சொந்தமானதுதான் இந்த ஐந்து வீடும். அதனால் சொற்ப வாடகை. எனக்குக் கல்யாணம் நடந்த போது இந்த வீட்டில்தான் இருந்தோம். மூத்தவன் பிறந்து அவன் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த வீட்டில்தான் நடந்தது. நான் டில்லிக்குப் போய் மனைவி குழந்தையுடன் தங்கி இருந்த போது அப்பா வயது முதிர்ச்சியின் காரணமாக இறந்து போனார். அவரின் எல்லா காரியங்களும் இந்த வீட்டில்தான் நடந்தன. இரண்டு வருடம் அம்மா தனியாய் இருந்தாள். நான் அமெரிக்கா புறப்படு முன் அம்மாவை சென்னையில் என் உறவினர் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றேன்.
அந்தப் புதிய கட்டிடத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டில் நான் வளர்ந்தது, படித்தது, திருமணம், இறப்பு என்று ஒவ்வொரு நிகழ்வும் வரிசையாக கண் முன்னே பவனி வர, துக்கம் தொண்டையை அடைத்தது. திரும்பிப் பார்த்த போது சித்ரா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாள். என்னை விட அவளுக்குத் துக்கம் அதிகமாக இருந்தது போலிருந்தது. அவள் அருகே சென்ற போது, “தாங்க முடியலை” என்று சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிள்ளைகள் இருவரும் காரணம் தெரியாமல் சிலையாய் நின்றிருந்தார்கள். பேசாமல் நால்வரும் வந்த வாகனத்துக்கு விரைந்தோம்.
ஹோட்டல் அறையில் நீண்ட மௌனம். மௌனத்தைக் கலைத்து, என் மூத்த மகன்தான் முதலில் பேசினான். ஆங்கில உரையாடல் தமிழில், உங்கள் வசதிக்காக:
“அப்பா, நீ பிறந்த வீடா அது?”
“இல்லை. நான் வாழ்ந்து வளர்ந்த வீடு”
“அப்போ உன் பிறந்த வீடு எது?”
“அது என் பாட்டி, அதான் அம்மாவோட அம்மா வீடு. அது திருவாரூக்குப் பக்கத்தில் காக்கழனின்னு கிராமத்திலே இருக்கு. இங்கேயிருந்து 25 மைல்”
“சரி… நாளைக்கு அங்கே போய் அதைப் பார்ப்போமா?”
எனக்கு பதில் சொல்வதற்கு பயமாயிருந்தது. இன்று போல நாளையும் அதிர்ச்சி காத்திருந்தால்?
“இல்லை வேண்டாம். நேரே சென்னைக்குப் போகலாம்”
“ம்ஹூம்… எனக்கு உன் பிறந்த வீட்டைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு”
”நான் கூட அந்த வீட்டைப் பார்த்ததே இல்லை. அவனும் ஆசைப்படறான். அந்த வீட்டையும் போய் பார்த்துட்டே போகலாம்” என்றாள் சித்ரா.
மறுநாள், திருவாரூர் வழியே காக்கழனி பயணம்.
நானே அந்த ஊருக்குப் போய் முப்பது வருடத்துக்கு மேலாகிறது. பாட்டி ராஜ்யம் செய்த வீடு. அவள் மறைவுக்குப் பிறகு, அம்மா ஒரே பெண் ஆனதால் அங்கிருந்த எல்லாவற்றையும் விற்று விட்டு வந்துவிட்டார் அப்பா. இப்போது எப்படி இருக்குமோ தெரியாது.
திருவாரூர் தாண்டி கூகுள் மேப் பார்த்து, வழியை விசாரித்துக் கொண்டு கிராமத்தை நெருங்கினோம். தூரத்தில் சிதிலமடைந்த பெருமாள் கோவில் கோபுரம் தெரிந்தது.
“இந்த ஊர்தான்”
அக்ரஹாரத்தில் நுழைந்த போது, இருபுறமும் பாதி வீடுகள் இல்லை. என் பாட்டி வீடு இருந்த இடத்தின் அடையாளமே இல்லை. சுமாராக அனுமானித்துக் கொண்டு ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டோம்.
எதிரே இருந்த வீட்டின் கதவைத் தட்டினேன்.
கதவு திறந்ததும், ஒரு முதியவள் எதிர்பட்டாள்.
“என் பேரு தியாகராஜன். அமெரிக்காலேருந்து வரேன். இங்கே மங்களம் மாமி வீடு எங்கே இருக்கு, தெரியுமா?”
“எந்த மங்களம் மாமி?”
“அதான் சுப்பைய்யர் ஆம்படையாள். மரகதம்ன்னு ஒரு பெண் கூட உண்டே?”
“தெரியலையே”
சித்ராவும் பிள்ளைகளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சட்டென்று ஞாபகம் வந்து, ”கடைக்கார சுப்பைய்யர்ன்னு சொல்லுவா. அவர் ஸ்கூல் பக்கத்திலே ஒரு கடை வைச்சிருந்தாரே?”
“ஓ… அந்த மாமியா? நீங்க அவாளுக்கு என்ன வேணும்?”
“நான் அவாளுடைய பேரன். மரகதம் மாமி பிள்ளை”
“அப்படியா? அதோ எதுத்தாப்பிலே இருக்கே அந்த வீடுதான்”
அவள் கை காட்டிய இடத்தில் வீடே இல்லை.
“அந்த வீடா? அங்கே வெறும் இடிஞ்ச சுவர்தானே இருக்கு”
”அது இடிஞ்சு போய் பத்து வருஷமாச்சு. உங்கப்பா அந்த வீட்டை வித்துட்டுப் போன பிறகு வாங்கினவா, மேலே நல்ல தேக்கு மரமா இருக்குன்னு எல்லாத்தையும் பிரிச்சு வித்துட்டா. வீடு மழையிலே நனைஞ்சு போய் சுவரெல்லாம் எல்லாம் சரிஞ்சு விழுந்துடுத்து. இப்போ அங்கே வெறும் கருவேல மரப் புதர்தான் இருக்கு.”
நான் படியிறங்கி அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
“அங்கே போகாதீங்கோ! உள்ளே நிறைய பாம்பு இருக்குன்னு சொல்றா”
அவள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த இடிந்த வீட்டை நோக்கிச் சென்றேன். வீட்டின் ஒரு அடையாளம் கூட இல்லை. கொஞ்சம் துணிந்து உள்ளே போன போது, காலின் கீழ் சிமெண்ட் தரை தென்பட்டது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பாட்டி வீட்டு முற்றம் மூன்று புறத்தில் தாழ்வார ஓரத்தில் சிமெண்டு பூசியிருக்கும். இது என் பாட்டி வீடுதான்.
சுற்றிப் பார்த்து, காமிரா அறை இருந்த இடத்தை நோட்டமிட்டேன். அந்த அறையில்தான் நான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். அப்படி ஒரு அறை அங்கே இருந்ததற்கான சுவடே இல்லை.
நின்ற இடத்தில் “ஓ” வென்று கதறி கண்ணீர் விட்டு அழுதேன்.
நான் அழுவதைப் பார்த்து சித்ராவும் பிள்ளைகளும் அருகில் வர முயன்ற போது, அவர்களைத் தடுத்து நிறுத்தினேன். நேரே சென்று அந்த அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு காரில் ஏறினேன்.
நான்கு நாட்கள் கழித்து சென்னை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த போது, சோகமான என் முகத்தைப் பார்த்து விட்டு சித்ரா என்னவென்று ஜாடையில் கேட்டாள்.
“இந்தத் தடவை எல்லா இடத்திலும் பழசோட இருந்த ஒரு தொடர்பு அறுந்து போன மாதிரி இருக்கு. டெல்லி நண்பனோட நட்பு, பெத்தவாளோட உறவு, பிறந்து வளர்ந்த இடத்தோட அடையாளம், எல்லாம்”
“அப்படி இல்லை. புதுசு வரவர பழசெல்லாம் அழிஞ்சுதான் போகும். அதை மாத்த முடியாது. பழசை நினைச்சிண்டே இருந்து புதுசை ஏத்துக்காம இருந்தா நமக்குத்தான் நஷ்டம்” என்ற சித்ரா கொஞ்சம் நிறுத்தி, “நமக்கும் வயசாயிடுத்து. நாமும் பழசாயிட்டோம் இல்லையா?” என்று முடித்தாள் புன்னைகையோடு.
அவள் புன்னகைக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் இருந்ததாக எனக்குப் பட்டது.

அடடே… எங்கள் குலதெய்வமும் குடவாசல் அருகே சிறு கிராமம்தான்.
உணர்வுபூர்வமான கதை. இதே போல ஒரு கதை எழுதி பாதியில் நிற்கிறது! கடைசியில் சித்ராவின் வார்த்தைகள் அருமை, அர்த்தமுள்ளவை, ஆறுதல் அளிப்பவை.
எங்கள் நிலாக் ஸ்ரீராம் .
LikeLike
// நிலாக் //
Blog
LikeLike
கதை மிகவும் உணர்வுகள் நிறைந்த கதை. இப்படித்தான் நானும் எங்கள் வீட்டைத் தேடிப் பார்த்து ஏமாந்ததை எழுதி வைத்திருக்கிறேன்.
கடைசியில் சித்ரா சொன்னது சரிதான் என்றாலும் யோசிக்க வைத்த ஒன்று.
கீதா
LikeLike
கதை மிகவும் உணர்வுகள் நிறைந்த அழகான கதை
இப்படித்தான் நானும் எங்கள் வீட்டைத் தேடிப் பார்த்து ஏமாந்ததை எழுதி வைத்திருக்கிறேன்.
கடைசியில் சித்ரா சொன்னது சரிதான் என்றாலும் யோசிக்க வைத்த ஒன்று.
கீதா
LikeLike