அத்தியாயம் 10
குமுதம் அட்டையில் கோவில் கோபுரமா.. ஆஆஆ
குமுதம் பத்திரிகையில் வேலை பார்த்ததில் பல நன்மைகள் கிடைத்தன. அவற்றில் சிறந்த நன்மை, பல துறைகளின் டாப் மனிதர்களின் அறிமுகமும் நட்பும்.
ஆனால் அந்த அறிமுகத்தையும் நட்பையும் எங்களுக்கு சாதகமாக என்றைக்குமே பயன்படுத்திக் கொண்டதில்லை. எங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஒரு உத்தியோகம் வேண்டும் என்றோ எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளில் இலவசமாய் கச்சேரி செய்து கொடுக்க வேண்டும் என்றோ யாரையும் அணுகியதில்லை.
அவ்வளவு ஏன்..
பத்திரிகையாளர்கள் என்றாலே ‘கவர்’ வாங்குவார்கள் என்றொரு கெட்ட பெயர் நிலவிக் கொண்டிருந்தது.
சில பேர் அப்படிச் செய்ததும் உண்டு. யாரிடமாவது பேட்டி வாங்கியிருப்பார்கள். அல்லது அட்டைப் படத்தில் போட்டோ போட்டு.. அவர்களைப் பற்றி எழுதுவதாக கமிட் செய்து கொண்டு ஒரு தொகையை இவர்களை கேட்டு வாங்குவார்கள்.
இது தவிர press conference .. அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்பவர்கள் தாங்களாக முன்வந்து நிருபர்களுக்கு கவரில் ஒரு தொகையோ அன்பளிப்போ தருவதும் உண்டு…
என் கணவர் பாமா கோபாலனின் குடும்பத்திலும் சரி என் பிறந்த வீட்டிலும் சரி லட்சியமும், கொள்கையும், நேர்மையும் ஊறி இருந்தது.
உழைத்த காசு மட்டுமே ஒட்டும் என்றும் மற்றபடி வரும் எதுவும் நமக்கு நிலைக்காது என்று உறுதியாக நம்பினோம்.
ஒருமுறை கங்கை அமரன் குமுதம் இதழ் தயாரித்த போது அதன் கோ-ஆர்டினேட்டராக சென்றவர் என் கணவர்.
இதழ் தயாரிப்பது என்றால் என்ன… கோ-ஆர்டினேட்டரின் பணி என்ன.. என்று கேட்கிறீர்களா?
பத்திரிகையில் மொத்தம் 96 பக்கங்கள்.
அதில் தொடர் அம்சங்கள், தலையங்கங்கள் போக.. உள்ள 45 பக்கங்களை அந்த பிரபலத்துக்காக ஒதுக்கி விடுவார்கள். அவர் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டிகள், சந்திப்புகள், கேள்வி பதில்கள்.. தங்களைப் பற்றிய கட்டுரைகள் என்று கொடுக்கப்பட்ட எல்லைக்குள் புகுந்து விளையாடலாம்.
அவரவர் தயாரிக்கும் இதழுக்கு அட்டைப்படம் அவரவர் விருப்பப்படி தீர்மானிப்பார்கள். ( சாலமன் பாப்பையா குமுதம் தயாரித்த போது மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்தை அட்டையில் போட வேண்டும் என்றார். உண்மையில் குமுதத்தில் அப்படி போடுவதில்லை. ஆனால் பாப்பையா தன் வேண்டுகோளை உறுதியாக இருந்ததால்.. அதிசயமாகக் குமுதம் இதழின் அட்டைப்படத்தில் ஒரு கோவில் வந்தது!)
பெரும்பாலும் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தின் மொத்த பேரும் அட்டையில் வரவேண்டும் என்று விரும்புவார்கள்.
அப்போது, எப்பாடுபட்டாவது அத்தனை பேரும் சிரிக்கிற மாதிரி முகம் மலர்ந்த போட்டோவாக வர வேண்டும் என்று பாமா கோபாலன் விரும்புவார்.
புகைப்பட நிபுணர்கள் ( பெரும்பாலும் பிரபு சங்கர், கே எஸ் அருணாச்சலம், கே.வி.ஆனந்த் போன்றவர்கள்) படம் எடுக்கும்போது பாமா கோபாலன் தொடர்ந்து ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார். போஸ் கொடுப்பவர்கள் சிரிக்கும் போது புகைப்படக்காரர் கிளிக்கி விடுவார்.
அதுபோல் அட்டையில் வந்த மிகச்சிறந்த போட்டோக்களில் கங்கை அமரன் குடும்ப போட்டோவும் ஒன்று.
45 பக்கங்கள் என்பதால் நான்கைந்து முறைகள் அந்த பிரபலத்தின் வீட்டிற்கு போய், பேட்டி ரெகார்ட் வருவார் கோ-ஆர்டினேட்டர் கோபாலன்.
கேசட்களை என்னிடம் கொடுப்பார். நான் டைப் செய்து கொடுப்பேன். அந்த பிரபலம் வேண்டுகோள் விடுத்தால் அவரிடம் ஒருமுறை பேட்டியைக் காட்டி விட்டு வருவதுண்டு.
நான்கைந்து நாட்கள் வெற்றிகரமாக முடிந்த பிறகு கங்கை அமரனிடம் விடை பெற்று வீட்டுக்கு வெளியே வந்தார் பாமாஜி.
கங்கை அமரனின் உதவியாளர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து ஒரு கவரை நீட்டினார்.
“அமர் ஐயா குடுக்கச் சொன்னாரு..”
இவருக்குப் புரிந்துவிட்டது. “வேணாங்க. எனக்குக் குமுதம் சன்மானம் தருது”
“இது அன்பளிப்புங்க.”
“மன்னியுங்க. என் வழக்கமான வேலையைத்தான் நான் செய்யறேன்” உறுதியாய் மறுத்துவிட்டுக் கிளம்பினார்.
எப்போதுமே நேர்மையாய் இருப்பதில் இன்னொரு நன்மை உண்டு.
எப்போதும் கவலையற்றிருக்கலாம்.
கங்கை அமரன் இதழ் வெளியாகி நல்ல பாராட்டை அவருக்கு வாங்கித் தந்தது.
அடுத்த இதழில் அனைவரும் பிஸியாகிவிட்டோம். ஒரு நாள் திரு ஜ ரா சுந்தரேன் ஏதோ பேச்சு வாக்கில் பாமாகோபாலனைக் கேட்டாராம். “என்ன .. கங்கை அமரன் கவர் கொடுத்தாராம். மறுத்துட்டீங்களாமே.. குட்”
அதெப்படி இவருக்குத் தெரியும் என்று வியந்தபோது “கவர் கொடுத்து உங்களை டெஸ்ட் செய்யச் சொன்னதே எடிட்டர்தான்” என்றார்.
சிலிர்த்தது.
இதே மாதிரி ஏதோ கஷ்டத்துக்கு அன்பளிப்பை ஏற்ற ஒரு நிருபர் எங்களிடம் மனம் விட்டு வருத்தப்பட்டது என்ன தெரியுமா?
“போயும் போயும் அந்தப் பிரபலத் தொழிலதிபரிடம் கை நீட்டிட்டேன். இப்போ கிடந்து சாகறேன்..”
என்ன ஆச்சு?
“அந்தப் பேட்டியும் அட்டைப்படமும் சில காரணங்களால குமுத்ததில் பிரசுரமாகலை.. அந்த ஆள் போட்டு டார்ச்சர் செய்யறான்..” வாய்விட்டு சிரித்துவிட்டோம்.
அதன் பிறகு ஒரு பத்திரிகை ஆசிரியர் இல்லத் திருமணத்தில் அந்தத் தொழிலதிபர் வந்திருந்தார். அந்த நிருபரும் வந்திருந்தார். இவரை அவர் ஒருமையில் அழைத்து “கார்ல கிஃப்ட் வெச்சுருக்கேன். போய் எடுத்துட்டு வாய்யா…” என்றவுடன் நாங்கள் மிக மதிக்கும் அந்த நிருபர் ஓடினார் எடுத்து வர. மிகவும் வருத்தமாக இருந்தது.
பிரபலமானவர்கள் இதழ் தயாரிக்கும்போது பல சுவையான சம்பவங்கள் நேர்ந்ததுண்டு.
பாமாஜிக்குப் பொதுவாக இசையில் நுண்ணறிவு, கிரிக்கெட் ஆர்வம் இரண்டுமே கிடையாது. ஆனால் மிகப் பெரிய இசை வித்வான்களையும் கிரிக்கெட் ஆளுமைகளையும் சந்தித்து பிரமாதமான பேட்டிகள் வாங்கியிருக்கிறார்.
ஜேசுதாஸ் இதழ் தயாரித்தபோது என்ன ஆயிற்று தெரியுமா?
என் குமுத நாட்கள் தொடரும்..


