இரு பாண்டியர்கள்

மாறவர்மன் குலசேகர பாண்டியனுடன், பாண்டிய மரபு முடிந்துவிடவில்லை. ஆனால், பாண்டியப்பேரரசு அவனுடன் முடிந்து விடுகிறது.

தேவர் களம்: பாண்டிய மன்னர்களின் பட்டியல்‘என்னடாது – இப்ப தானே – ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வந்து, மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி, சரித்திரத்தைப் புரட்டி எடுத்தான் … என்றெல்லாம் கதைபடித்தோம். அதுக்குள்ளேயா இப்படி ஒரு முடிவுரை?’ என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா? சரித்திரம் ஒரு விசித்திரம் தான்! சரி.. விஷயத்துக்கு வருவோம்…

மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் – வீரபாண்டியன் – துணை மகாராணி (சின்ன வீடு) க்குப் பிறந்தவன்.. இளையவன் – சுந்தரபாண்டியன் – பட்டத்து மகாராணிக்குப் பிறந்தவன்.

வாசகர்களே, நீங்களே சொல்லுங்கள், ‘யாருக்குப் பட்டம் கட்டலாம்?’. சரி, நம் கருத்தை வைத்தா, சரித்திரம் நடக்கிறது?

கி பி 1295: குலசேகரன் முடிவெடுத்தான். வீரபாண்டியனை தனது பட்டத்து இளவரசனாக்கினான். ஆட்சியை அவனுடன் பகிர்ந்து கொண்டான். இதை அறிந்த சுந்தரபாண்டியன் வெகுண்டான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. குலசேகரன் பலசேகரனாக இருந்தான். அவனை மீறி வேறு ஒன்றும் அந்த நாட்டில் நடக்க வழியில்லை. ஆண்டுகள் எட்டு சென்றது. சுந்தரபாண்டியன் நொந்து, வெந்து கொண்டிருந்தான்.

கி பி 1303: குலசேகரன், இரு இளவரசர்களையும் அழைத்தான். “சுந்தரா! நமது முன்னோர்கள் செயல்படி, உன்னையும் நாடாளும் இளவரசனாக நியமிக்கிறேன். நாட்டின் வடபகுதிக்கு நீ ஆளுனர்” என்றான். சுந்தரபாண்டியன் மகிழவில்லை. ‘மதுரை என்னும் மோகம்’ அவனை வாட்டியது. ஐந்து வருடங்கள் மெல்ல நகர்ந்தன. ‘மதுரை மோகம்’ அவன் மனத்தை ரணமாக்கியிருந்தது.

கி பி 1308. குலசேகரன் வயது முதிர்ந்திருந்தான். நோய்வாய்ப்பட்டிருந்தான். அரண்மனையில் படுக்கையிலேயே கிடந்தான். இளவரசன் வீரபாண்டியன், ஈழப்படையெடுப்புக்கான திட்டத்துக்காக ராமேஸ்வரம் சென்றிருந்தான். சுந்தரபாண்டியன் மதுரைக்கு வந்து அரண்மனையில் தந்தையைப் பார்த்து இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று முடிவு செய்தான். மதுரை அரண்மனையில், சுந்தரபாண்டியன், தந்தையைச் சந்தித்து நேரடியாகப் பேசினான். “பட்டமகிஷியின் மகனான எனக்கல்லவா இந்த பாண்டிய நாடு உரியது? அந்த ‘——‘ மகனுக்கா பாண்டிய அரசு” என்று கேட்டவுடன், மன்னன் கோபாவேசப்பட்டான். “சுந்தரா! இப்படிப்பேசியதற்கு உன் நாக்கை அறுக்கவேண்டும்” என்று சொன்னான். சுந்தரபாண்டியன், “எனக்கு சேரவேண்டியது மதுரை அரசாட்சி. அது உங்களுக்குப் பிறகு எனக்கு என்று இன்றே நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று சொன்னான். அதில் கெஞ்சல் இல்லை. ஒரு மிரட்டல் தோரணை இருந்தது.

மன்னன் ஒருகணம் திகைப்புற்றான். மறுகணம், “சுந்தரா, இது முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம். வீரபாண்டியன் தான் மதுரையை ஆளப்போகும் மன்னன். நீ நாமக்கல்லிலிருந்து கொண்டு அந்த பிரதேசங்களை ஆள்வாய். இது உறுதி” என்றான். அவன் குரல் அரச கட்டளையாக ஒலித்தது.

இளவரசன் சுந்தரபாண்டியன் காதில் அது ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. கடுஞ்சினமுற்றான். “எனக்கு தந்தையான நீங்கள் செய்வது துரோஹம்” என்று குரோதத்தில் குமுறினான்.

மன்னன் சொன்னான்: ‘சுந்தரபாண்டியா! பல தலைமுறைகளாக, நமது நாட்டில் பல இளவரசர்கள் வேறு வேறு பகுதிகளை ஆள்வது வெற்றிகரமாக நடந்து வந்திருக்கிறது. வீரபாண்டியன் உன் அண்ணன். அவன் மதுரையை ஆளட்டும். உனக்கு மற்ற பகுதிகளை அவன் தருவான். என் தந்தை, சக்கரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தன் அந்திமக் காலத்தில், நமது ஒற்றுமை எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்திச் சொன்னதை எண்ணிப்பார்” என்றான்.

“எனக்கு உங்கள் அறிவுரை தேவையில்லை. நான், ஏன் வீரபாண்டியனிடம் எனது நாட்டுக்காகப் பிச்சை எடுக்கவேண்டும். மதுரையை நான் தான் ஆளவேண்டும். இதைத்தவிர வேறு எதையும் நான் ஒப்புக்கொள்ள முடியாது” என்று ஆவேசத்துடன் திட்டவட்டமாகக் கூறினான்.

“சுந்தரா! இது நான் முடிவு செய்துவிட்ட விஷயம். இதற்கு மாற்று என்பது நான் உயிருடன் இருக்கும் வரையில் கிடையாது” என்றான்.

இப்படி குலசேகரன் தேவையில்லாமல் சொன்னது விபரீதமாயிற்று. சுந்தரபாண்டியனின் குழம்பிய மனது அவனுக்குக் குரூர எண்ணத்தை விதைத்தது. “இதற்கு ஒரே உபாயம் உள்ளது. அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். நீங்கள் உயிருடன் இருப்பது தான் இதற்குத் தடையாக இருக்கிறது” என்று சொன்ன அவன் சொற்கள் நெருப்பைக் கக்கின, கண்கள் விஷத்தைக் கொட்டின. கத்தியை வீசினான். தமிழகத்தின் கடைசிப் பேரரசனுக்கு அப்படி ஒரு இறப்பைத் தந்தான் தனயன்.

அமைச்சரைப் பார்த்து, “மந்திரியாரே, மன்னர் இறந்துவிட்டார். எனக்கு இன்றே பாண்டிய மன்னனாக முடி சூட ஏற்பாடு செய்யும்” என்று ஆணையிட்டான். மந்திரி துடிதுடித்து விட்டார். “மன்னன் மாண்டு விட்டாரா?” என்று பதைபதைத்தார். சற்றுத் தெளிந்ததும், “இளவரசே! மன்னர் வீரபாண்டியருக்குத்தான் மகுடம் என்று தெளிவாக ஆணையிட்டிருக்கிறார்” என்று தெளிவாகச் சொன்னார்.

வாளை உயர்த்திய சுந்தரபாண்டியன், “அமைச்சரே, உங்களைக் கொல்ல எனக்கு ஒரு நொடி தான் தேவை” என்று சொல்லி, ‘நானே முடி சூட்டிக்கொள்கிறேன்’ என்றான். அதற்குள், வீரபாண்டியன், மதுரையருகில் வந்து கொண்டிருக்கும் சேதி வந்தது. வீரபாண்டியன், தந்தை மறைந்ததையும், சுந்தரபாண்டியன் முடி சூட்டிக் கொள்ள ஏற்பாடு செய்வதையும் அறிந்தான். மக்களும், படைகளும், அவனுக்கு உதவ, வீரபாண்டியன் அரண்மனைக்கு வந்தான். சுந்தரபாண்டியன் அரண்மனையில் தனக்கு ஆதரவு இல்லை என்று உணர்ந்தான். வீரபாண்டியன் வேறு வந்துவிட்டான். ‘இந்த திட்டமும் தோல்வியாயிற்றே’ என்று தன் குதிரையில் ஏறி மதுரையை விட்டு காற்று வேகத்தில் நாமக்கல் நோக்கிப் பறந்தான்.

இரண்டு பாண்டியர்களும், தலைச்சி குளங்கரை என்ற இடத்தில் போர் புரிந்தனர். இதில் வீரபாண்டியன் படுகாயமடைந்தான். போர்க்களத்தில் வீரபாண்டியன் பனி நடுக்கத்துடன், மரணகாயத்துடன் கிடந்தான். சுந்தரபாண்டியன், அவனைப்பார்த்து, ‘செத்தான் வீரபாண்டியன்’ என்று அவனை விட்டு விட்டு, மதுரைக்குப் போய் முடிசூட்டிக்கொண்டான்.

வீரபாண்டியன் மாளவில்லை. தப்பித்துப் பிழைத்தெழுந்தான். உறவினர்களையும், படைகளையும் திரட்டினான். மதுரையை மீட்டு மீண்டும் முடிசூடினான்.

மீண்டும் நாடிழந்த சுந்தரபாண்டியன் செய்ததாகச் சொல்லப்படுவது, இன்னும் கொடுமையான சமாசாரம்.

அதாகப்பட்டது, சுந்தரபாண்டியன் வட நாட்டில் தில்லியில் ஆண்ட பேரரசன் அலாவுதீன் கில்ஜியிடம் உதவி கோரினான். அலாவுதீன் தன் படைத்தலைவன் மாலிக்காபூர் என்ற முரடனை தென்னிந்தியா அனுப்பினான்.

அந்தக் கொடுமையால் தமிழகம் கொள்ளையடிக்கப்பட்டது. முன்பு சரித்திரத்தில், சோழமன்னர்கள் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் போரிட்டு, மெல்ல மெல்ல சோழராட்சி அழிந்தது போல, பாண்டியர்களின் குடும்பப் பகையில், பாண்டிய ராஜ்யமும் சரித்திரத்திலிருந்து மெல்ல அழியத்தொடங்கியது.

‘ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’

இனி நடப்பதைப் பார்க்கலாம்.