மான வேல்மன்னன் மாதவத் தார்க்குஉண்டி
தானம் ஈயுழிச் சத்திய பாமையும்
ஊனம் இல்மனத் தால்உடன் பட்டனள்
ஈனம் இல்குரு வத்திடை எய்தினாள்.
[மானம்=பெருமை; மாதவத்தார்=சிறந்த தவத்தை உடையவர்; உணவு=உண்டி; ஈயுழி=கொடுக்குமிடத்து; ஊனம்=குற்றம்; ஈனம்=குறைவு;குருவம்=உத்தரகுரு]
பெருமை பொருந்திய வேலாயுதத்தைக் கொண்ட மன்னன் ஸ்ரீ ஷேண மகாராஜன் சிறந்த தவத்தினைச் செய்பவர்க்கு உணவைத் தானமாகக் கொடுக்கும்போது அவன் மனைவி சத்தியபாமை என்பவளும், குற்றம் இல்லாத உள்ளத்துடன் அதற்கு இசைந்தாள். அப்புண்ணியம் செய்ததால் குறைவு இல்லாத உத்தரகுரு என்னும் சிறப்பான பூமியை அடைந்து சுகம் பெற்றாள்.
”ஸீஷேண மகாராஜனால் கபிலன் என்னும் தாசி புத்திரனுக்குத் திருமணம் செய்யப் பெற்ற சத்தியபாமை என்பவள், ௮ம் மகாராஜன், தவம் செய்பவர்களுக்குத் தானத்தினைச் செய்யுங்காலத்தில் தானும் அதற்கு உடன்பட்டிருந்ததால் உத்திரகுரு என்னும் சிறப்பான் பூமியைச் சார்ந்து நலமாக வாழ்ந்தாள்” என்பது ஸ்ரீ புராணக் கதை. இது சாந்தி தீர்த்தங்கரர் மான்மியத்தில் உள்ளது. [பக் 289]
- கயக்குஇல் கற்புடைப் பார்ப்பனி போசனம்
வியக்கப் பட்டவள் வேதியற்கு இல்வழி
மயக்குஇல் மாதவத் தாற்குஉண்டி ஈந்தவள்
இயக்கி யாயினள் என்பதும் கேட்டுமால்
[வியக்கப்பட்டவள்= வியந்து கொண்டாடப்பட்டவள்; கயக்கு இல்=வெறுத்தல் இல்லாத, கற்புடை- பதிவிரதா தருமத்தையுடைய, போசனம்=உணவு; வேதியற்கு=கணவனுக்கு; இல்வழி=இல்லாத போதும்; மயக்கு இல்=மயக்கம் இல்லாத; மாதவத்தார்க்கு=சிறந்த தவத்தை உடைய முனிவனுக்கு; இயக்கி=தருமதேவதை
எல்லோராலும் வியந்து கொண்டாடப்பட்டவளாகிய, வெறுத்தலில்லாத பதிவிரதா தருமத்தையுடைய ஒரு பிராமணப் பெண்ணானவள் தன் கணவனாகிய பிராமணனுக்கு உணவு இல்லாத போதும், மயக்கம் இல்லாத சிறந்த தவத்தையுடைய முனிவனுக்கு, உணவைக் கொடுத்தாள். அப்புண்ணியத்தால் தருமதேவி என்ற யட்சியாகிப் பிறந்தாள் என்ற வரலாற்றையும் கேட்டிருக்கின்றோம். ஆதலினால் பிறருக்கு உணவைக் கொடுப்பதைச் செய்வோமாக.
இதில் கூறப்படும் பார்ப்பனியின் கதையாவது: திருமலை நகரில் சோமசன்மா என்னும் ஒரு பிராமணனுக்கு அக்னிலா எனும் மனைவி இருந்தாள். அவள் ஒரு நாள் தன் கணவனுக்கு உணவில்லாத போதும், வரதத்தாசாரிய ஜைன முனிவர் வீதியில் வரக் கண்டு அவரை எதிர்கொண்டழைத்தாள். அவருக்கு உணவளித்துப் பணிவிடைகள் செய்தாள். அதைப் பார்த்த சோமசன்மா சில பிராமணர்களுடைய தீய பேச்சைக்கேட்டு அவளை துன்புறுத்தினான். அத்துன்பத்தைச் சகியாத அவள், தன் மகன்கள் இருவருடன் திருமலைக்குச் சென்றாள். அங்கே தன்னிடம் தானம் பெற்ற முனிவர் இருப்பதைக் கண்டாள். அவரிடம் நடந்ததைக் கூறிச் சம்சாரபந்தம் நீங்கும் மார்க்கத்தினைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்ட அவர் அவ்வாறே அம்மார்க்கத்தினை உபதேசித்தார்.
அவள் அந்த உபதேசங்களைப் பெற்று அங்ககேயே இருந்தாள். அப்போது அவளுக்குத் தீங்கு செய்யச் சோமசன்மாவைத் தூண்டிய பிராமணர் அக்கிரகாரங்கள் தீப்பட்டு வெந்தன. சோமசன்மன் இல்லம் மாத்திரம் அவனுடைய மனைவி முனிவர்க்கு ஆகாரதானங் கொடுத்த புண்ணியத்தால் எரியாமல் இருந்தது. இந்த அதிசயத்தைச் சகல பிராமணர்களும் கண்டு ஆச்சரியமுற்றுச் சோமசன்மாவின் மனைவி, முனிவர்க்கு இட்டு மிகுதியாயிருந்த ஆகாரத்தை உண்டார்கள். அத்தனை பேரும் உண்டபின்பும் அது சிறிதும் குறையாமல் இருந்தது. அதனால் அவர்கள் ”இது உணவுதானம் செய்ததால் நிகழ்ந்த மகிமையே” என்று அக்னிலாவைப் புகழ்ந்து அவளைத் தேடி அழைத்து வரும்படி சோமசன்மனுக்குக் கூறினார்கள்.
சோமசன்மன் அவளைத் தேடிச் சென்றான், அப்போது, சூரியன் மறையும் காலமாய் வந்துவிட்டதால் வரதத்தாசாரியர் என்ற அந்த முனிவர் தம்மிடமிருந்த அக்னிலாவை நோக்கி, “இப்போது இரவு வரப்போகிறது. நீ இங்கிருந்தால் உலகம் பலவகையில் பேசும்; ஆதலின், நீ செல்க? என்றனர். அக்னிலா அவ்வீடத்தை விட்டு நீங்கி வந்து, வழியில் தனது தானபுண்ணிய வசத்தால் உலர்ந்த மரமானது செழித்துக் கனிகளை உடையதாயிருக்கவும், நீர் வற்றியிருந்த சுனை ஒன்று நீர் சுரக்கவும் கண்டாள். தன்னுடைய பிள்ளைகளுக்கு அம்மரக் கனிகளைப் பறித்துக் கொடுத்து அவர்களை உண்ணச்செய்தாள். ௮ச்சுனை நீரையும் குடிக்க வைத்தாள்.
அந்த இடத்திலேயே பஞ்ச நமஸ்கார மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்; அவளைத் தேடி வந்த சோமசன்மா, மிருக பயத்தினால் கையில் வாளேந்தி மறுநாள் உதயத்தில் அங்கே வந்தான். அக்னிலா அவனைக் கண்டதும், அவன் தன்னைக் கொல்ல வருவதாகக் கருதி, ஸ்ரீநேமி பகவானைத் துதித்து அச்சுனையிற் குதித்தாள். உடனே உடலை நீத்து யட்சியாய் மாறினாள். தன் பிரிவுக்காக அழுதிருந்த பிள்ளைகளைத் தேற்ற முன் வடிவங்கொண்டு அவர்களைத் தேற்றியிருந்தனள், அப்போது சோமசன்மன் அவளைக் கண்டு “நான் செய்த குற்றத்தை மன்னித்து நீ என்னுடன் வருக” என்று அவள் கையைப் பிடிக்கப்போனான்.
உடனே அவள் யட்சியின் வடிவத்துடன் ஆகாயத்தில் எழும்பினாள். “உன் மனைவியாய் இருந்த யான் தான புண்ணியத்தால் யட்சியாக ஆகிவிட்டேன். நீ இனி என்னை விரும்பாது உன் மக்களுடன் இல்லம் சேர்வாயாக” என்று கூறித் தனக்குரிய இடத்திற்குச் சென்றாள். பின்பு சோமசன்மனும் மனைவியை இழந்த சோகத்தால் தன் பிள்ளைகளுடன் அச்சுனையில் வீழ்ந்து உயிரை விட்டான். யட்சி தேவிக்கு வாகனமாய்ப் பிறந்தான். பிள்ளைகள் அவளுக்கு மகன்களாகப் பிறந்து நற்கதி பெற்றனர். இது ஸ்ரீசைல மகாத்மியத்திற் கண்டது. தர்ம தேவதை கதையிலும் உள்ளது.
33.சந்தனை என்னும் மாதர் சாரணர்க் கண்டு முன்றில்
வந்தனை செய்து பேணி வரகுநீர்ப் புற்கை ஈந்தாள்
இந்திரர் உவந்து நோக்கி எல்லையில் செம்பொன் மாரி
அந்தரத்து அமரர் ஆர்ப்பச் சொரிந்துவந்து அருச்சித் தாரே.
[சாரணர்=வர்த்தமானர்; முன்றில்=வீட்டின் முன்; பேணி=விரும்பி; வரகு நீர்ப்புற்கை=வரகுக்கூழ்]
சேடக மகாராஜன் புத்திரி யாகிய சந்தனை என்கின்ற பெண்ணானவள், துன்பத்தை அடைந்திருந்த காலந்தில் ஸ்ரீவர்த்தமான சுவாமிகளைப் பார்த்தாள். வீட்டின் முன்னே, அவருக்கு வணக்கம் புரிந்து விரும்பி அவர் தரிசன மகிமையினாலே நெல் அன்னமாகமாறிய நீரோடு கலந்த வரகுக் கூழை, அவர்க்களித்துத் தன்துன்பம் நீங்கப் பெற்றாள். அப் புண்ணியத்தினாலே இந்திரர்கள் மகிழ்வுற்று அவளைப் பார்த்து, அளவில்லாத சிவந்த பொன் மழையைப் பொழிந்து, பொன்னுலகத்தில் உள்ள தேவர்கள் தேவ துந்துபியை முழக்கிக்கொண்டு வந்து மலர்களைத் தூவி அவளுக்கு அர்சசனை புரிந்தார்கள். அதனால் அவள் மிக்க நன்மையடைந்தாள்.
சந்தனை ஆகாரதானத்தால் நன்மையடைந்த கதையாவது:- சந்தனை என்பவள், சேடக மகாராஜனுக்குப் மகளாகப் பிறந்து பருவமடைந்திருந்தாள். அப்படி இருக்கும்போது ஒரு வித்தியாதரன் ஒரு நாள் இவளை உறவினர்களிடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு சென்றான். தன் இருப்பிடத்திற்கு இவளுடன் சென்றால் தன்மனைவி கோபிப்பாள் என்றெண்ணி, ஒரு காட்டிலே இவளைப் போட்டுவிட்டுப் போக, ஒரு வேடன் கண்டு அழைத்துக்கொண்டு போய் வத்ஸ விஷய கெளசாம்பி நகரத்திலே விருஷசேனன் என்னும் வைசியனிடத்தே பணம் பெற்றுக்கொண்டு கொடுத்தான். அவன் இவளைப் பெற்ற மகள் போலப் பாராட்டி வளர்த்து வந்தான்.
அப்போது அவ்வைசியன் மனைவியாகிய ஸாப்பிரபை யென்பவள் தன் கணவன், சந்தனையிடம் தவறான எண்ணம் கொண்டிருக்கிறான் என்று சந்தேகமுற்று, சந்தனைமேல் வெறுப்புக் கொண்டாள். சந்தனைக்கு வரகு உணவை மட்டமான பாத்திரத்திலே அளித்தும், கால்களிலே விலங்கிட்டும், நீல வண்ணத் துண்டை உடையாகக் கொடுத்தும் அவளை வருத்தி வந்தாள்.
அக்காலத்தில், பகவான்-ஸ்ரீ வர்த்தமான சுவாமி அங்கே எழுந்தருளினார்.அவரின் வருகையை உணர்ந்த ௪ந்தனை அவரை எதிர்கொண்டழைக்க வேண்டுமென்று மிகுதியும் நினைத்தாள். அங்ஙனம் நினைத்த பொழுதே அவளுக்கிடப்பட்டிருந்த விலங்கு தானே கழன்றது; சிதைந்த கூந்தலும் அழகு பெற்றது; நீல வண்ணத் துண்டும் உயர்ந்த பட்டு ஆடையாயிற்று; உடல் முழுவதும் அணிகலன்கள் நிறைந்தன. வரகுக்கூழும் சிறந்த நெல்லன்ன மாயிற்று; பாத்திரமும் பொன்னாலான பாத்திர மாயிற்று, உடனே சந்தனை அதிக மகிழ்ச்சியால் நவ புண்ணியக் கிரமத்தால் சுவாமிகளை எதிர் கொண்டழைத்து, முன் வரகுக்கூழாயிருந்து நெல்லன்னமாக மாறிய சிறந்த உணவை அவருக்களிக்க அந்தத் தான மகிமையால் பஞ்சாச்சரியத்தை அடைந்து, தன் உறவினர்களிடம் போய்ச் சேர்ந்து மேன்மைபெற்றாள். இக்கதை, ஸ்ரீ புராணம் [பக், 814-15] ஸ்ரீ வர்த்தமான தீர்த்தகர புராணத்திற் கண்டது.
- பற்றுளம் என்றோர் பாவை பாவமும் பழியும் ஆக்கிச்
சிற்றுள மிலேச்சர் பொல்லா நாற்கதி நவையை நூக்கிச்
சொற்றுள வாய துன்பம் பயத்தலின் துறந்து போகிக்
கற்றறி வுடைய மாந்தர் கடிந்தனர் அதனை அன்றே.
[பற்று=ஆசை; சிற்றுளம்=அற்பமான எண்ணம்; மிலேச்சர்=தீயவர்; நவை=குற்றம்; நூக்கி=அடைய; பயத்தல்=கொடுத்த; நாற் கதிகளாவன:- தேவகதி, மனுஷகதி, திரியக்கதி, நரககதி என்பனவாம்.
ஆசை பொருந்திய உள்ளத்தை உடையவளாகிய ஒரு பெண்ணானவள், பாவமும் பாதகத்தையும், நிந்தையையும், செய்ய அவை அவளுக்குத் தீய எண்ணத்தையுடைய, சண்டாளர்க்குரிய, கெட்டனவாகிய, நான்குகதிகளாகிய குற்றங்களைக் கொண்டு வந்தன. அவை அறிவுடையோர் கூறிய துன்பங்களைக் கொடுத்தன. அதற்கஞ்சி சிறந்த நூல்களைப் படித்து அதனாலே நல்ல ஞானங்களைப் பெற்ற, மனிதர்கள் மிகுந்த ஆசையானது பாவத்தையும், பழியையும் உண்டாக்குமென்று கருதி அவற்றை விலக்கித் தவத்திற்குச் சென்று, அந்நாற்கதித் துன்பத்தை நீக்கினார்கள், ஆதலின் வீட்டின்பம் பெற விரும்புவோர் உலகப் பற்றுகளைத் துறந்து தவஞ்செய்க.
உலக ஆசை மிகுந்த மனத்தையுடைய ஒரு பெண், பாவமும், பழியுமாகிய காரியங்களைச் செய்து, சண்டாளர்க்குரிய நாற்கதித் துன்பத்தை அனுபவித்தாள்; அது கண்டு அறிவுடையோர் அக்கெட்ட கர்மங்களை விட்டு நீங்கித் துறவடைந்து அந்நாற்கதித் துன்பத்தை நீக்கி முத்தி யடைந்தனர்; ஆதலின், முத்தியடைய விரும்புவோர் இங்ஙனம் உலகப் பற்றினை ஒழித்துத் தவஞ்செய்க என்பது இதன் கருத்தாம்.
35.ஓங்கிய தவத்தின் மிக்க உறுதவர்க்கு உறுதி நாடின்
ஈங்கிரண்டு அல்லது இல்லை இசைகொடா நிற்ப மண்மேல்
பாங்கமை செல்வ ராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே.
[ஓங்கிய=உயர்ந்த; உறுதவர்=மேன்மையான தவம் செய்பவர்; இசை=புகழ்;
உயர்ந்த தவத்தினாலே நல்ல வழியில் பொருந்தி இருக்கின்ற தவத்தினை உடையவர்க்கு, இவ்விடத்திலே ஆராய்ந்து பார்க்குமிடத்து நிச்சயமான பொருள் இப்பூமியில் அவர்கள் அழகு பொருந்திய செல்வத்தை உடையவராகித் தம்பொருளைப் பலருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தாமும் உண்டு அனுபவித்து வாழ்தல் ஒன்று ஆகும். மேற்கொண்ட தவத்தால் வந்த பூர்வ புண்ணியத்தினலே மிகுந்த, தவநிலையில் நிற்பது மற்றொன்று ஆகும். இல்லறம் துறவறம் என்னும் இரண்டல்லாமல் புகழை கொடுக்கக் கூடியவை வேறில்லையாதலால் அறிஞர் இரண்டில் ஒன்றைச் செய்யவேண்டும்.
தவம் உடையவர்க்கு உறுதிப் பொருள், முறையோடு செய்யும் இல்லறமும் துறவறமுமாகிய இரண்டுமே ஆகும். மனிதர் இவ்விரண்டில் ஒன்றைச் செய்யவேண்டும் என்பது இதன் கருத்து. ஆசிரியர் துறவையே சிறப்பித்துக் கூறிவரினும், இங்கு இல்லறத்தையும் அவசியமானதெனக் கூறி உள்ளார். பகுத்துண்டு வாழ்தலாகிய இல்லறமும் நற்கதி அளித்தற்கு உதவும் என்பதால் கூறி உள்ளார்.
- இல்லறத்து இயல்பு குன்றா வேந்துபூண் முலையி னார்தோள்
புல்லற புல்லி மண் மேல் பூவணை பொருந்தல் ஒன்றே
நல்லறத்து இறைவன் சொன்ன நாற்கதி நவையை நீக்கும்
தொல்லறத் துணிவு இலாதார் துன்பத்தைத் துணிந்து நின்றார்.
[பூண்=அணிகலன்; புல்லி=தழுவி; பூவணை=பஞ்சணை; நவை=துன்பம்]
இல்லறததின் நல்ல இயல்பு என்பது அணிகலன்களை அணிந்திருக்கும் தனங்களையுடைய மனைவியின் தோள்களைத் தழுவி இல்லற தருமத்திற் கேற்பக்கூடி பூமியில் மலர்ப் பஞ்சணையில் சேர்ந்து வாழ்தலாகிய ஒரு செய்கையே ஆகும். நல்ல தருமத்தையுடைய அருகக் கடவுள் கூறிய நான்கு வகைக் கதிகளின் துன்பத்தை விலக்கும் பழமையாகிய, இல்லறத்தை உறுதியாகக் கடைப்பிடிக்காதவர் வாழ்வில் துன்பத்தை உறுதி கொண்டு செய்து அதன் வழியிலே நின்றவர் ஆவார்.
இல்லற தருமம் என்பது குறைவு படாத இல்லாளுடன் கூடி, முறைப்படி இல்லறம் நடத்துதலே ஆகும். அதுவே இறைவனால் கூறப்பட்ட நான்கு வகைத் துன்பங்களை நீக்கி நற்கதியை உண்டாக்கும். ஆதலின் முறைப்படி இல்லறத்தை நடத்துவோர் நற்கதி அடைவர். என்பது இதன் கருத்து. முறைப்படி செய்யும் இல்லறமும், பிறப்பினை நீக்கி முத்தி இன்பத்தை உண்டாக்கும். நாற்கதி என்பது நால்வகைப் பிறப்புகளைக் குறிக்கும். தேவகதி, மக்கள்கதி, விலங்கு கதி, நரக கதி என்பனவே அவை.
”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை?” என்ற திருக்குறள் இங்கு நினைக்கக் கூடியதாகும்.வள்ளுவர் வாக்கின்படி, இல்லறத்தான், மற்றைய மூன்று சிரமத்தார்க்கும் துணையாயிருந்து, அறங்களை வழுவாது புரிந்து தாமரையிலைத் தண்ணீர்போல் இல்லறத்திலிருந்தாலும் அதில் பற்றின்றியிருந்து வீடுபெறுதலின், இல்லறத்தைத் துறவறத்திறும் சிறந்ததெனக் கூறுவர் பெரியோர்.
37 ஈகைநல் தானம் ஈந்தார் இணையிலாக் குருவின் மிக்க
போகத்தைக் கொடுத்துப் புத்தேள் உலகமும் கொடுத்து மண்மேல்
ஏகநல் இன்ப மாக்கி இறைவன்நல் காட்சி ஈயும்
மேகத்து மின்னோடு ஒக்கும் விழுச்செல்வம் மதிக்க வேண்டா.
[புத்தேள் உலகம்=தேவ உலகம்; மின்=மின்னல்; விழுச்செல்வம்=விரும்பத்தக்க செல்வம்]
இரப்பவர்க்குக் கொடுத்தலாகிய கொடையையும், பெரியோர்க்கு இடும் தானங் களையும் கொடுத்தவர்க்கு அருகக் கடவுள் ஒப்பில்லாத உத்தர குருவென்னும் மிகுதியாகிய சுகத்தை அளித்து, தேவலோகப் பதவியையும் கொடுத்து இந்தப் பூமியின் மேல் ஒரே தன்மைத்தாகிய நல்ல சுகத்தை, உண்டாக்கி நல்லதாகிய தரிசனத்தையும் கொடுப்பான்., ஆதலால் பொருளை ஈகையிலும் தானத்திலும் செலவிட வேண்டும்; அங்ஙனம் செலவிடாமல் புதைத்துக் காப்பாற்றி வைத்தால் விரும்பத்தக்க அச்செல்வமானது மேகத்தில் தோன்றி மறையும் மின்னலைப் போலத் தோன்றி மறையும் .ஆதலால் அதை நிலையுள்ளதென நம்புதல் கூடாது.
நிலையற்ற செல்வத்தைப் பெற்றவர்கள், அஃதிருக்கும் போதே நல்ல தானதருமங்களாச் செய்ய வேண்டும். அங்ஙனம் செய்வார்க்கு, இறைவன் உத்தர குருவின் போகத்தையும், தேவ லோக பதவியையும் அளித்து இவ்வுலகத்திலும் இருக்கும்வரையில் சுகத்தை அளித்து முடிவில் அனந்த தரிசனத்தையும் ஈவான். ஆதலின், செல்வப் பொருள் உள்ளவர்கள் விரைந்து தான தர்மங்களைச் செய்ய வேண்டும்; அப்பொருளோ மின்னலைப்போலத் தோன்றி மறைவது அகும். அதனை நிலையுள்ளதென மதித்துத் தானம் முதலியவற்றைச் செய்யாமல் மறத்திருக்கலாகாது என்பது இதன் கருத்து.
- பற்றுளம் அகல நீக்கிப் பாசிழைப் பரவை அல்குல்
பொற்றொடி மகளிர் தங்கள் புணர்முலைக் குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்தல் அன்றெனில் துறந்து போகி
நற்றவம் புரிவில் லாதார் நடலைநோய்க் கடலுள் ஆழ்ந்தார்;
[பாசிழை=அலங்கரிக்கப்பட்ட பெண்; நடலை=துன்பம்;
மனத்திலே பற்று நீக்கி, ஆசையை அகற்றி அலங்கரிக்கக்கப்பட்ட பெண்ணின் பரந்த அழகிய அல்குலையும், பொன்னாலாகிய வளையலையும் உடைய இல்லக்கிழத்திகளின், இணையாகிய தனங்களென்னும் மலைகளின் மேல், சேர்ந்து (அதாவது மனைவியரோடு கூடி இல்லறம் நடத்தி), உறவினர்கள் தம்மைச்சூழ, இல்லறத்தில் வாழ்தல், அஃதில்லாவிடில், துறந்து இல்லறத்தைவிட்டு நீங்கிக் காட்டிற்குச் சென்று, நல்ல தவத்தைச் செய்தல், (ஆகிய இவ்விரண்டில் ஒன்று), இல்லாதவர்கள், துன்பமாகிய கடலில் மூழ்கினவராவார்.
துறவறத்தைக் காட்டினும், இல்லறம் அதிலிருந்தபடியே அகத்தில் பற்றின்றி ஒழுக வேண்டியதாதலின் கடைப்பிடிக்க மிகவும் கடினமானதாகும். ஆகையால் அதனை முதலில் கூறி அதைச் செய்ய முடியாதபோது துறவையேனும் செய்தல் வேண்டும் என்று துறவறத்தைப் பின்னால் கூறினார். மனையாளோடு மனமொத்து வாழ்தலும், சுற்றந்தழுவுதலுமே இல்லறத்திற்குச் சிறந்தவை. ஆகவே பற்றற்ற இல்லறத்தை யேனும், துறவறத்தை யேனும் நடத்தினோரே நற்கதி யடைவார். மற்றையர் பிறந்திறந்து துன்பக் கடலுள் மூழ்குவர் என்பது இச்செய்யுளால் உணரப்படும்.
39, கலையெலாம் நிறைத்தல் ஒன்றோ கதிர்நகைப் பவளச் செவ்வாய்
அலைகடல் அமிர்து அனாரோடு அகிற்புகை அளாய சேக்கை
முலையுற முயங்கல் ஒன்றோ முனிவனம் புகுதல் ஒன்றோ
கொலை களவோடு ஒன்றிப் பொழுது அவம் கழிப்பர் அன்றே.
கலை=பலவகைக் கலைகள்; கதிர்=ஒளி பொருந்திய; நகை=பல்வரிசை; அளாய= கலந்த; சேக்கை=படுக்கை; அவம் கழிப்பர்=வீணே போக்குவர்]
அறிவற்ற மனிதர் பலவகைகள் எல்லாம் பிரமசரிய நிலையிலிருந்து கற்று மனத்தில் அவற்றை நிறுத்திக் கொள்ளுதலாகிய ஒரு காரியமும் செய்யார். ஒளி பொருந்திய, பல் வரிசைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயையும் உடைய, அலைபொருந்திய கடலில் கிடைத்த அமிழ்தத்தை நிகர்த்த இனிமை வாய்ந்த இல்லக் கிழத்திகளோடு, அகிலின் புகையானது கலந்த படுக்கையில், அவர்தம் கொங்கைகளிற் பொருந்திச் சேர்ந்து இல்லற இன்பத்தை அனுபவித்தலாகிய ஒரு காரியமும் செய்யார். முனிவர்கள் வசிக்கும் காட்டில் புகுந்து, புகுதல் தவம் செய்தலாகிய ஒரு காரியமும் செய்யார். ஊன் தின்னுதலாகிய கொலைத் தொழிலும், களவோடு சோரத்தொழிலிலும், பொருந்தித் தம் நேரத்தை வீணே போக்குவர்.
அறிவற்ற மனிதர், பிரமசரிய நிலையினராய்ப் பலவகைச் சாஸ்திரங்களைக் கற்றலையோ, மனைவியரோடு கூடி இல்லற தர்மத்தை நடத்துதலையோ காட்டிற்குச்சென்று தவம்புரிதலையோ செய்யார். புலை, கொலை, களவு ஆகிய இவற்றைச் செய்து வீணே காலத்தைக் கழிப்பர் என்பது இதன் கருத்து.
ஆகவே, மக்களாய்ப் பிறந்தோர் பிரமசரிய நிலையிற்சார்ந்து சாஸ்திரம் பயில்தலையோ இல்லாளோடு கூடி இல்லறத் தர்மத்தை நடத்துதலையோ, காட்டிற்குச்சென்று முனிவரின் தருமத்தைக் கடைப்பிடிப்பதையோ செய்யவேண்டும் என்பதும், அங்ஙனம் செய்வோரே நற்கதியடைவார் என்பதும், இவற்றைச் செய்யாமல் புலை, கொலை, களவு முதலியவற்றைச் செய்து காலத்தை வீணே கழிப்பவர் துன்பம் அடைவர் என்பதும் இதனால் வலியுறுத்தப்படுகிறது.
40 இருந்தவர்க்கு இசைவ தொன்றோ கரப்பில தாக ஈந்து
கருந்தடங் கண்ணி னார்தோள் கதிர்முலைக் கரத்தல் ஒன்றோ
பொருந்திய சுற்றமென்னும் நிகளத்தைப் பரித்து போகி
அருந்தவ முயற்சி இல்லார் ஆசையுள் அழுந்து கின்றார்
[கரப்பிலதாக=ஒளித்தல் இல்லாமல்; கருந்தடம் கண்ணி=கரிய விசாலமான கண்களை உடையவர்; கரத்தல்=மறைத்தல்; நிகளம்=பாசம்; பரித்து போகி=அறுத்துச் சென்று]
மிக்க தவமுடைய முனிவர்க்கு ஒளித்தல் இல்லாமல் ஈந்து தானத்தைக் கொடுத்து இணங்கி உபசரித்தலாகிய ஒரு செயலையோ, கரிய விசாலமாகிய கண்களை உடைய இல்லாளின் பிரகாசம் பொருந்திய கொங்கைகளிடத்தே, தங்களுடைய தோள்களை அழுத்தி மறைத்து வைத்தல் என்னும் இல்லறவின்பம் நுகர்தலாகிய ஒரு செயலையோ செய்யார். அங்ஙனம் இல்லறத்தை நடத்தா விடினும் துறவறத்தையேனும் பற்றவேண்டும். அவ்வாறு பொருந்திய தம்மைச் சார்ந்த உறவுகள் என்கின்ற பாசத்து அறுத்துச் சென்று தவத்தைச் செய்யும் முயற்சியில்லாதவர்கள் உலக ஆசையிலே அழுந்துகின்றார்.
“பெரிய தவத்தையுடையவர்க்கு வேண்டுவன நல்கி அவரை உபசரித்தலையோ இல்லறத்திலிருந்து மனைவியரோடு கூடிக் முறைப்படி இல்லறம் நடத்துதலையோ மனிதர் செய்யார். இவ்வாறு நடத்தாவிடினும் உலக பந்தத்தை விட்டு நீங்கித் துறவறத்தையேனும் பற்றவேண்டும். அங்ஙனம் துறவுக்கும் அவர் முயற்சியில்லார். இப்படி இரண்டும் கெட்டவர்களாய் உலக ஆசையில் மூழ்கிப் பிறறந்திறந்து உழல்பவராகின்றார்” என்பது இதன் சுருத்து ஆகும். இல்லற தர்மத்தை ஒழுங்காக நடத்தினாலும், துறவறத்தை முறைப்படிக் கடைப்பிடித்தாலும் முத்தி யின்பம் கைகூடும்: இரண்டையும் விட்டவர்களுக்கு மாயை அதிகரித்துத் துன்பமே கிடைக்கும், முந்தின செய்யுள் கருத்தே பெரும்பாலும் இதிலும் அமைந்தது.
