பல்வேறு கோணங்களில் சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை என்றார் அவர். மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேச ஏனோ சற்றுக் கூச்சமாக இருப்பதையும் பகிர்ந்தார். அதாவது தனக்கு, சிறுவயதிலிருந்து இப்போது சுய தொழிலில் இருக்கையிலும், மற்றவர்களைப் போல தனக்கு ஏன் அடிக்கடி சிறுசிறு உடல் உபாதைகள் நேர்வதில்லை என்ற கேள்வியை விடுத்தார் முப்பது வயதான மதன்.
இந்த நிலையைப் பலர் வியந்து பார்க்கிறார்களாம். ஒருசிலர் கேலியும் செய்கிறார்கள் என்றார்.
தன்னைப் பற்றி விவரிக்கையில் மதனின் தாராள மனசும், இயல்பான மனிதாபிமானமும், அகம்பாவமின்றி தனித்திருந்த கொள்கைகளும் வெளிப்படையாகத் தெரிந்தது.
மனதிற்கு அலாதி திருப்தி வருவதால் மீண்டும் மீண்டும் பரோபகாரங்கள் விரும்பிச் செய்வதாகக் கூறினார். இந்தக் குணத்தைக் கவனித்த விருந்தா, கவர்ந்து போனாள். மதனைத் திருமணம் செய்து கொண்டாள்.
இவ்வாறு இருந்த விருந்தா சமீபகாலங்களில் தன்னுடைய பரோபகாரத்திற்குச் சலித்துக் கொள்வதை மதன் கவனித்தார். விருந்தா எப்போதெல்லாம் சலித்துக் கொள்கிறாளோ அப்போதெல்லாம் தலைவலி, ஜூரம், ஜலதோஷம் போன்ற ஏதோவொரு உடல்நல உபாதை அவளுக்கு நேர்கிறது என்றார். நேர்மாறாகத் தனக்கு அபார உடல் நலம் இருப்பதைச் சொல்லிச் சொல்லிச் சலித்துக் கொள்வதையும் கூறினார்.
இந்த எதிர்-புதிர் அதிகரிக்க, காதல், பரிவு மங்குகிறதோ என்று உணருவதாக மதன் கூறினார்.
ஸெஷன்கள் தொடர்ந்தன. விருந்தா-மதன் குழப்பத்தின் மூலகாரணமான மதனின் உடல் நலன் சம்பந்தப்பட்ட நிலையை எடுத்துக் கொண்டேன்.
இருவரும் விவரித்ததிலிருந்து அவர்களது வாழ்க்கையிலிருந்தே பல உதாரணங்களை வைத்து விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில ஸெஷன்களுக்குப் பிறகு தாம் அன்பளிப்பைத் தரும் போதும், பெரும் போதும் கூட மனதிற்கு அலாதி திருப்தி உணருவதாக விருந்தா ஒப்புக்கொண்டாள்.
அடுத்த கட்டமாக அவள் அன்பளிப்பு தரும் தருணத்தில், தன்னுள் ஏற்படும் அனுபவங்களைக் கூர்ந்து கவனிக்கும் படி பரிந்துரைத்தேன். செய்தாள்.
ஆச்சரியமாக இருந்தது என்றாள். அவளிடம் படிக்கக் கொடுத்திருந்த ஆராய்ச்சியில் கூறியது போலவே உடலின் மாற்றங்களைக் கவனித்தாள். மதனும் தான்.
ஆராய்ச்சியில் கூறியது, இப்படி மற்றவருக்கு நலம் செய்யும் சமயங்களில் மூளையை இணைப்படுத்தும் ந்யூரோமோடுலேடர்ஸ் (neuromodulators) டோபமைன் (dopamine) மற்றும் என்டார்ஃபின்ஸ் (endorphins) ரசாயனங்களைச் சுரப்பிக்கும். இந்த ரசாயனங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களில் ஒன்று, சுறுசுறுப்பாக உணர்வோம். புத்துணர்ச்சி ஏற்படுவதால் மனதிற்குச் சந்தோஷ நிலை நேரும். உடலும் மனமும் இதை நீடிக்கும் வழிமுறைகளை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கும். அதனால் தான் மீண்டும் மீண்டும் மதனின் மனம் தாராளமாகக் கொடுக்கச் செய்தது.
விளைவு, ஆய்வாளர்கள் கூறுவது போலவே மதனுக்கு இன்னல்களைச் சந்திக்கும் விதம், பதட்டம், பயந்த நிலை இவற்றிலிருந்து மாற்றங்கள் காணப்பட்டது. உடல் மற்றும் மனநலம் காக்கப்பட்டது என்ற விளக்கத்தை மதனும் புரிந்து கொண்டார். விருந்தாவும் சற்று தெளிவு பெற்றாள்!
மெதுவாக விருந்தா தன் மனதை நச்சரித்து வந்த இன்னொரு சந்தேகத்தையும் வெளிப்படுத்தினாள். மற்றவர்களுக்கு எதைக் கொடுக்கையிலும் மதன் தனக்கு இருக்கிறதா என்று பார்ப்பதில்லை, பகிர்ந்து கொள்வார். அவருடைய பால்ய தோழர்களான ராமு, ஜித்தன், ஸுகேஷா, ஸாம் அவர்களுக்கும் இதே குணாதிசயங்கள் உள்ளதாகக் கூறினாள்.
விருந்தா தான் தரும் போது பல சமயங்களில் தனக்கு அதிகமாக வைத்துக் கொள்வேன் என ஒப்புக்கொண்டாள். வெளிப்படையாகப் பகிர்ந்ததைப் பாராட்டினேன். அவள் கேட்டாள், தாராளமாகத் தரும் நிலையில் சந்தோஷமா? பெறுபவர்களுக்கும் இப்படியா என்று.
மதனாலும் அவர் நண்பர்களாலும் தரப்படும் பொருட்கள் நீண்ட காலம் பழுதுபடாமல் இருப்பதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள் என்றாள். இந்தத் தனித்துவத்தைப் பற்றி ஸெஷனில் புரிந்து கொண்டார். முழு மனதோடு தரும் பொருட்கள் பெரும்பாலும் நன்றாகச் செயல்படும், பழமை அடையாது.
தான் மற்றவர்களுக்குக் கொடுத்த அனுபவங்களைப் பற்றி விருந்தாவை நினைவு கொண்டு எழுத வைத்தேன். செய்ததும்,
பல்வேறு ஆராய்ச்சி தாள்களையும் படிக்காக் கொடுத்து அவற்றுடன் ஒப்பிடச் சொன்னேன்.
தனக்கு நேர்ந்ததும் ஆராய்ச்சியில் கூறுவதும் கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது என்றாள். அதில் கூறியது போலவே பகிரும் போதெல்லாம் அவளுக்கும் இரக்கமும், நல்லெண்ணமும் தன்னுள் மேலோங்கியதை உணர்ந்ததாகக் கூறினாள். மீண்டும் அன்பளிப்பு ஏதேனும் தர மனம் தேடியதையும் கூறினாள்!
இந்த மனோபாவம் நிலைத்திருக்கையில் அவளுடைய உடல் மன நலம் மேம்பட்டதைக் கவனித்தாள்.
ஆனால் முழு மனதோடும், எதிர் பலன் எதிர்பார்க்காமல் செய்தால் மட்டுமே இந்த நலனை அனுபவிக்க முடிந்தது! மதன் தன்னுடைய நலனின் மூலகாரணத்தைப் புரிந்து கொண்டார்.
இதனாலேயே தான் மதனிடம் ஈர்ப்புக் கொண்டதை அடையாளம் கண்டாள் விருந்தா. இதற்குக் காரணம் உண்டு. இந்தக் கொள்கையினால், பெரும்பாலும் அமைதி சுபாவமாகவும் எளிதாக அணுக முடியும் என்றே பார்ப்பவர்களுக்குத் தோன்றும், அதுவும் விருந்தாவை ஈர்த்திருக்கக் கூடும். இந்த அழகு, ஒரு பொழுதும் உள் நோக்கத்துடன் செய்யாததால் வருகிறது!
விருந்தாவின் மற்றொரு சஞ்சலம், ஏதோவொரு நாள், ஏதேனும் பண்டிகையின் போது பொருள் தானம் கொடுக்கலாம். மதன் எப்போதும் தருவது புரியவில்லை என்றாள். ஸெஷனில் இதைப் பற்றி மேலும் தெளிவு பெற, இந்த எண்ணமே மனஸ்தாபத்தின் மூலகாரணம் எனப் புரிந்து கொண்டாள். இதனால் தனக்கு ஏற்பட்ட வித்தியாசம் அடையாளம் கண்டாள். மதனின் உதவுவதைப் பார்த்து ஈர்ப்பு கொண்டவள், இப்போது இவ்வாறு யோசிப்பது தமக்கு மனவேதனை தருகிறது என்றாள் விருந்தா.
இதைப் பற்றி செஷன்களில் அலசியபோது விருந்தாவிற்குத் தன்னுடைய பாதுகாப்பின்மை பற்றிய புரிதல் விளங்கியது. இது துளிர்விட்டு வளர்ந்த விதத்தை அடையாளம் கொண்டாள். திருமணம் ஆனதும் தாம் இருவரைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது. தன்னலம், வரவு செலவிற்குப் பணப்பற்றாக்குறை நேரிடுமோ என்ற வேதனை துளிர்விட, மதனிடம் கலந்து பேசி தெளிவு பெறாமல், சந்தேகமும் கவலையும் வளர்ந்தது. பற்றாக்குறை நேர்ந்துவிடும் என்ற வேர் நாளடைவில் திடமாக, பயம் மட்டுமே மிஞ்சியது. இது உடலில் வலி ரூபத்தில் காட்டியது. மதனை நேசித்தபோது இந்த அவல நிலை இல்லை. மாறாக, மதன் போலவே தானும் பெருமகிழ்ச்சியில் மிதந்தாள். அப்போதெல்லாம் தன்னலம் இல்லாமல் இருந்ததை உணர்ந்தாள்.
மதன், வரவு செலவை விளக்கம் அளிக்க, விருந்தா தெளிவு பெற்றாள். ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைய ஆரம்பித்தன!
தொடர்ந்து, மதன் தன்னுடைய குணத்தை மேலும் புரிந்துகொள்ள விரும்பினார். விருந்தாவிற்கும் புரிய வேண்டும் என்றதால் சேர்த்துக் கொண்டு செஷன்களைத் தொடர்ந்தேன்.
முன்பின் தெரியாதவர்களுக்கு முகம் பார்க்காமல் தந்தபோது அனுபவித்ததைப் பற்றிப் பகிரச் செய்தேன். ஆராய்ச்சியில் சொல்லியிருந்ததைப் போலவே, தயை, பச்சாதாபம், இரக்கம் எழுந்ததால் மனம் நெகிழ, கரங்கள் உதவியது என்றார்கள். சில ஸெஷன் பிறகு சந்தேகம் தெளிவடைந்தது.
மதன் தன்னுள் குடிகொண்டிருக்கும் இரக்கக் குணம், நன்மை செய்யத் தூண்டுகிறதைப் புரிந்து கொண்டார். அடுத்தவரின் தவிப்பைச் சிறுதுளியாவது தணிக்கப் பார்த்தது புரிந்தது. அக்கறை கண்ணோட்டத்தினால் மற்றவரின் இயலாமையைப் போக்க நினைப்பது வழிமுறையானது. ஆரம்பத்தில், மற்றவருக்குத் தந்த பொருள் அவர்களுக்கு உபயோகமாக இருப்பதைக் கண்டதும், துன்பம் குறைந்ததும், அலாதி இன்பத்தை அளித்தது என்றார். செய்யச் செய்ய முழுமனதோடு செய்யவேண்டும் என்று விருந்தா புரிந்து கொண்டாள். அதாவது, ‘நமக்கு’ எனத் தோன்ற வேண்டுமே தவிர ‘எனக்கு” என அல்ல.
இந்த அறிதலுக்கு மதன் கூறினார், தனக்கு இத்தனை வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று! இந்த நிலையைப் பற்றி உளவியல் அதிகாரியான ஏப்ரஹம் மேஸ்லோ விரிவாக விவரித்திருக்கிறார்!
உளவியல் துறையில் தருபவர்கள் பெறும் மகிழ்ச்சி ஒரு மாற்றுமனப் பரிசு (“vicarious reward”)! செயல், உணர்வு கைகோர்த்து வேலை செய்வதால் இவ்வாறு நேர்கிறது என்றார். இந்தத் தகவலைப் படித்ததும் மதன் அந்தத் தருணங்களில் செய்வதைக் குறித்து துளியும் கர்வம் ஏற்படாததைக் கூறினார்.
உதவுவது மட்டும் அல்ல, நல்ல செயலை எங்குப் பார்த்தாலும் பாராட்டத் தோன்றியது. தெரிந்தவர்கள், உறவினர்கள் நம் வாழ்வில் எத்தனை முக்கியம் என்பதைப் பழகும் விதத்திலும், தோளோடு நின்று காட்டவும் செய்தது என்றார்.
விருந்தா தனக்குப் பயன் எதிர்பாராமல் செய்வதால் மட்டுமே இந்த நிலை நேர்ந்தது என்றாள். நலனை எண்ணிச் செய்தால் அது நலனைக் களவாடிவிடும்!
அழகு,
அலாதி திருப்தி!
அன்பு
உள் நோக்கமின்றி
தாராளமாகத் தருவதே!
