Ambujammal, a Life - Madras Heritage and Carnatic Music

S. Ambujammal – The PSW Weblog

 

(நமது குவிகம் நேரடி நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று  ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் இருக்கும் ஶ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறுகிறதல்லாவா?

அந்த நிலையத்தை நிறுவிய அம்புஜம்மாள் அவர்களின் சுய சரிதம்)  

 

 

நான் கண்ட பாரதம்

        (சுயசரிதம்)

எஸ் .அம்புஜவல்லி

நூல் அறிமுகம்; எச் ராஜாமணி

The India I Saw: An Autobiography eBook : Ambujammal, S., V., Sriram: Amazon.in: Kindle स्टोर2025ல் இரண்டாம் பதிப்பாக ஸ்ரீநிவாசா காந்தி நிலையத்தார் வெளியிட்ட அம்புஜம்மாள் அவர்களின் சுயசரிதையைப்  படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

முதல் பதிப்பு 1973ல் அம்புஜம்மாள் அவர்களின் 70 வது ஆண்டு விழாவில் அவராலேயே வெளியிடப்பட்டது. திரு எம் .பக்தவச்சலமும்,  வசுமதி ராமசாமி அவர்களும் அணிந்துரை எழுதி இருக்கிறார்கள்.

அம்புஜவல்லி என்ற இவரது பெயர் நீளமாக இருப்பதால் காந்திஜி அவர்கள் அம்புஜம் என்று அழைத்தார்.

1899 ஜனவரி 8-ல் பிறந்த இவரது சுயசரிதையைப் படிக்கும் பொழுது அன்றைய சென்னை, இவரது  செல்வச்  செழிப்பான குடும்ப பின்னணி, காந்திஜியின் தென்னக வருகை,  அதைத்தொடர்ந்து தேச நிர்மாணப் பணியிலும், விடுதலை  இயக்கத்திலும் இவர் ஆற்றிய பங்கு .…… அனைத்தையும் நாம் அறியலாம்.

அன்றைய சென்னை

எஸ். அம்புஜம்மாள் - Tamil Wikiநம்மவர்கள் அதிகமாக வாழ்ந்த வடசென்னையை (  ஜார்ஜ் டவுன், ராயபுரம்…. பகுதிகள்) ஆங்கிலேயர்கள் பிளாக் டவுன்(BLACK TOWN) என்று அழைத்தார்கள். அங்கு வாழ்வது தங்கள் கௌரவத்திற்குக் குறைவு என்று நினைத்து மயிலாப்பூர், ஆழ்வார் பேட்டை.. போன்ற பகுதிகளில் மாளிகைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள் . ஒரு சமயம் போர்ச்சுகீசியர்கள்  கடல் கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது, மயிலாப்பூர் பகுதியில் இருந்து ஒரு  ஜோதி தெரிய , சாந்தோம் கடற்கரையில் ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஜோதியைப் பார்த்த இடத்தில் கன்னி மேரிக்கு ஒரு தேவாலயம் கட்டினார்கள். அதுதான் லஸ் சர்ச்.( போர்ச்சுக்கீசிய மொழியில் லஸ் என்றால்  ஒளி என்று பொருளாம்) அதற்கு முன்பு காட்டுக் கோவில் சாலை என்றுதான் பெயர்.

போர்ச்சுக்கீசியர்களும் அந்தப் பகுதிகளில் பங்களாக்களைக் கட்டிக்கொண்டு குடியேறினார்கள் .  பிரபல வக்கீல்களும் ,நீதிபதிகளும்  மயிலாப்பூரில் பங்களாக்களை வாங்கியும் புதிதாகக் கட்டிக் கொண்டும் வாழ்ந்தார்கள்.

அன்றைய மயிலாப்பூரில் மின்சார வசதி இல்லை .ஒளிமயமான மின்விளக்குகள் கிடையாது.  பங்களாக்களைச் சுற்றி மூங்கில் புதர்கள், பளார் தோப்பு ,வாழை தோப்பு, கொடுக்காய்ப்புளி ,கருவேல  மரங்கள் நிறைந்த  ஒரு காடு போல காட்சி அளிக்கும். வயற்காடுகளும் ஏரிகளும் நிறைந்திருந்தன . பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் கிடையாது. அன்றைய அல்லி குட்டை தான் இன்றைய நாகேஷ்வர ராவ் பூங்கா.

குடும்பப் பின்னணி

S. Ambujammal - Tamil Wikiலஷ்மி விலாஸ் ( காமதேனு திரையரங்கம் இருந்த இடம்) என்ற பங்களாவில் வாழ்ந்தவர் தான் அம்புஜம்மாள் அவர்களின் தாத்தா பிரபல வக்கீல் மற்றும்  உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக இருந்த பாஷ்யம் ஐய்யங்கார். பாஷ்யம் ஐயங்கார் தங்க தம்ப்ளரில்தான் குங்குமப்பூ ,பச்சைக் கற்பூரம் போட்டு  சுண்டக் காச்சியப் பாலைக் குடிப்பார் .  லேடி பாஷ்யம் ஐயங்கார்( பாட்டி அம்புஜவல்லி. அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்தார்கள்) தினமும் பெங்களூர் பட்டுப்புடவை, உடல் முழுக்க வைர நகைகள் அணிந்துதான் பகல் பொழுதில் இருப்பார். பாஷ்யம் ஐயங்கார்  ஊட்டி சென்ற பொழுது பித்ரு காரியம் வந்ததால், சென்னையிலிருந்து 50 பிராமணர்களையும் ,ஒரு கூண்டில் ஐந்தாறு  காக்கைகளையும் எடுத்துச் சென்றிருக்கிறார் .

குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகம்.

அரசாங்கம் நடத்தும் தோட்டத் தேநீர் விருந்திற்கு லேடி பாஷ்யம் ஐயங்கார் அடிக்கடி போய்வருவார் ..அவரது முயற்சியாலும் பாஷ்யம் ஐயங்காரின் செல்வாக்கினாலும் சென்னை நகரில் மூன்று பொதுநல ஸ்தாபனங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கான நேஷனல் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்( இன்றைய சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளி),  கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட, இன்றைய கஸ்தூரிபாய் மருத்துவமனை,  ஐஸ் ஹவுஸ் அருகில் பெண்களுக்கான ஒரு பொழுதுபோக்குப் பூங்கா.

நான் கண்ட பாரதம் எம். அம்புஜம்மாள் Naan Kanda Bharatham M. Ambujammal Nan Kanta Baratham Bhaaradham Baradham Baratam Baaratam Baaradham Baradh அம்புஜத்தம்மாள் Ambujathammalஇராமநாதபுரம் சமஸ்தானத்தின் வழக்கு ஒன்றை சமஸ்தானத்தின் வக்கீலான சேஷகிரி ஐயங்கார்  சென்னை பாஷ்யம் அய்யங்காரிடம் கொடுத்தார். சென்னைக்கு அடிக்கடி தன் மகன் சீனிவாச ராகவனுடன் வந்த சேஷகிரி ஐயங்கார், பாஷ்யம் ஐயங்கார் வீட்டில்தான் தங்குவார். இந்தப் பழக்கத்தின் காரணமாகவே தனது ஐந்தாவது பெண் ரங்கநாயகியை சீனிவாசராகவனக்குத் திருமணம் செய்து வைத்தார். பால்ய  விவாகம்தான். இந்த சீனிவாச ராகவன் தான்  பிற்காலத்தில் எஸ். சீனிவாச ஐயங்கார் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்.

1899 ஜனவரி 8ஆம் தேதி இந்த தம்பதியர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தவர்தான் அம்புஜம்மாள்.  மூன்றாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால்  தாய்க்கு மிகுந்த வருத்தம் .அது மட்டுமில்லாமல் இவருக்கு முன்னால் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் இறந்து போய்விட்டன. எனவே  இவரை’’அக்காக்களை முழுங்கிய எமன்’ ‘ என்று சொல்லி வெறுத்தார். சித்தி கல்யாணிதான் பால்யப் பருவத்தில் வளர்த்திருக்கிறார். தாயாரின் உடல்நலக் குறைவால், தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், சீனிவாசா ஐயங்கார்  வாடகைத் தாயை ஏற்பாடு செய்திருந்தார்.  குழந்தை அம்புஜத்திற்கு உடல்நிலை சரியில்லாததால்  சுமார் ஒரு வருட காலம்  ஆங்கிலோ இந்திய நர்சுடன்  பெங்களூரில் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்து சிகிச்சை அளித்தார். பார்த்தசாரதி என்ற இவரது சகோதரருக்கு ஏழாவது வயதில் தாய் வழிபாட்டனாரின் சீர்வரிசைகளோடுயோடு, மேள தாளங்களுடன் மயிலாப்பூர் பி எஸ் ஹைஸ்கூனலில் சேர்த்தார்கள். ஆனால் அம்புஜம்மாவிற்கு அஷராப்பியாசம் கூட நடைபெறவில்லை. காரணம் முன்பெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் காதுக்குத்தல், அஷராப்பியாசம்  ஆகிய சடங்குகள் கிடையாது. பெண்களுக்கு என்று தனி பள்ளிக்கூடமும் இல்லை. இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக் கொண்டு கல்வி கற்பிக்கச் செய்திருக்கிறார்.

12 வயதில்அம்புஜம்மாளுக்கு தேசிய ஆச்சாரி என்பவரை மணம் முடித்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டார் சீனிவாச ஐயங்கார். தொழிலில் பிரபலமாகி சி ஐ ஈ விருது பெற்று, அட்வகேட் ஜெனரலாக  பதவி வகித்தார். இவரது தந்தை மதுரையில் மறைந்த பொழுது சென்னையில் இருந்து மதுரைக்குத் தனி ரயில் ஏற்பாடு செய்து பயணித்தவர். பயணித்தவர்

1915 காந்திஜி சென்னை வந்த பொழுது இவரது இல்லத்தில் ஒரு நாள் விருந்து கொடுத்திருக்கிறார். வீட்டின் பின்புறத்தில் இருந்த அம்புஜம்மாளையும் அவரது தாயாரையும் கஸ்தூரிபா சென்று சந்தித்திருக்கிறார் . நகைகள் எதுவும் அணிந்து கொள்ளாமல் மிக எளிமையாக இருந்த  கஸ்தூரி பாவை,வைர நகைகளோடு  பார்த்தது அம்புஜம்மாளுக்குச் சங்கடமாக இருந்திருக்கிறது.

சீனிவாசா ஐயங்கார் ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு , தனது பதவியையும், பட்டத்தையும் துறந்து காங்கிரஸில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார் .கதர் ஆடைக்கு மாறியது மட்டுமில்லாமல்,  வீட்டில் இருந்த அந்நிய துணிகளைத்  தீயிட்டு கொளுத்தியிருக்கிறார். சத்தியமூர்த்தி மற்றும் பல வடநாட்டுத் தலைவர்கள் இவரது இல்லத்தில் அடிக்கடி கூடுவார்கள். சுபாஷ் சந்திரபோஸ் கூட 1938 இவரது இல்லத்தில் நீண்ட நேரம் தங்கி ஆலோசனை நடத்தியுள்ளார். காந்திஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக  சீனிவாசய்யங்கார் தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.

1921 இல் மூன்று நாட்கள் காந்திஜி இவரது இல்லத்தில் தங்கியிருந்த பொழுது, அம்புஜம்மாளுக்குக் காந்தியின் மீது ஈடுபாடும், அகிம்சை மீது பற்றும் ஏற்படத் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். கதர் ஆடைக்கு மாறியது மட்டுமில்லாமல் சுதேசி பிரச்சாரம்… அன்னியப் பொருள்கள் பகிஷ்கரிப்பு ….எனத் தொடர்ந்து செயல்படத் தொடங்கி ஆறு மாத காலம் வேலூர் சிறையிலும் இருந்திருக்கிறார்.சொந்தக் குடும்ப வாழ்க்கையில் கடுமையான சோதனைகளையும் ,துன்பங்களையும் சந்திக்க வேண்டி இருந்த நிலை.  கணவருக்குப் புத்தி  சுவாதீனம் இல்லாமல் ஆறாண்டுகள் சிகிச்சை பெற வேண்டிய  நிலையிலும் தனது பொது வாழ்க்கையில் தீவிரமாகவே செயல்பட்டது மட்டுமில்லாமல், தந்தையோடு போராடித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து, பிறகு தந்தையின் அனுமதி பெற்று, வார்தா ஆசிரமத்திற்குச் சென்று காந்தியுடன் சில மாதங்கள் தங்கி இருந்திருக்கிறார்.

திரும்பி வந்த பிறகு  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ,சிஸ்டர் சுப்புலட்சுமி, ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகளோடு இணைந்து மாதர் சங்கம் அமைத்து பெண்கள் மேம்பாட்டிற்கான பல செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்திருக்கிறார். சிஸ்டர் சுப்புலட்சுமி தொடங்கிய பள்ளியில் ஹையர் கிரேடு தேர்வு பெற்று , ஆறு மாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார் .தந்தை மற்றும் கணவரின் மறைவிற்கு பிறகு  தனது வைர நகைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி காந்திஜியிடம் நேரில் சென்று கொடுத்துவிட்டார் .அவரது பெயரால் பெண்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுப்பதற்கான ஏற்பாட்டை  காந்திஜி செய்தார். தன் சொத்துக்களை விற்று ஒரு கட்டிடத்தைக் கட்டி அதைச் சமூக சேவைக்காக அர்ப்பணித்தார். அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் காந்தி மரணம் அடைகிறார் . அவரது உடலை எரித்த இடத்திலிருந்து நண்பர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த கருகிய புஷ்பமும், துளசியும் கலந்த மண்ணை  ஒரு கங்கைச் சொம்பில் வைத்து தான் கட்டிய கட்டிடத்திற்கு முகப்பில் புதைத்து அதன் மேல் ஒரு துளசி மாடம் எழுப்பினார். பிறகு அந்த கட்டிடத்திற்கு தன் தந்தையின் பெயரையும் காந்தியின் பெயரையும் இணைத்து சீனிவாசா காந்தி நிலையம் என்று பெயரிட்டார்.  அந்த நிலையத்தில் தான் குவிகம் அமைப்பின் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை நேரடிநிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது என்பது பெருமைப்படக்கூடிய செய்தியாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முத்துலட்சுமி ரெட்டி வகித்த சமூகநல போர்டின் சேர்மன் பதவியை உடல்நிலை காரணமாக அவரால் தொடர முடியாத நிலையில் அம்புஜம்மாள் அந்தப் பதவியிலிருந்து, தமிழக முழுவதும் பயணம் செய்து  பெண்களின் முன்னேற்றத்திற்கான சமூக நல அமைப்புகளுக்கு மானியம் கிடைக்கும் படி ஏற்பாடு செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு  காமராஜ் ,ராஜாஜி  வற்புறுத்தலுக்கு இணங்க வரவேற்பு குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அம்புஜம்மாள் பிற்காலத்தில் ஒரு துறவி போல வாழ்ந்து சமூகப் பணியாற்றியது போற்றுதலுக்குரிய செயலாகும். அவர்கள் சொந்தவாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆற்றிய சேவைகள்,தியாகங்கள்…… இன்னும் சுவாரசியமான பல விஷயங்களை இந்தச் சுயசரிதையை படிப்பதன் மூலம் நண்பர்கள் அறிந்து கொள்ள முடியும் .

கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு சுயசரிதை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

(https://bookwomb.com/naan-kanda-bharatham.html?srsltid=AfmBOootRBI2yfecoQWOZyc_Bx2c4dTBhQCZvbEx0jniRn5cAnyjxQEd_)

நன்றி புக்வாம்ப்

எஸ். அம்புஜம்மாள் - Tamil Wikiஆசிரியர் குறித்து:அம்புஜத்தம்மாள் (Ambujathammal, சனவரி 8, 1899-1993) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் ஆவார். இவரது தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் தாய்வழி பாட்டனார் வி. பாஷ்யம் ஐய்யங்கார் ஆகியோர் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆவார். அம்புஜத்தம்மாள் 1899 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் வசதியான குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம் ,இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளையும் கற்றார். அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இவரும் எளிமையாக வாழ்ந்தார். பிற்போக்கு சிந்தனைகளுடைய குடும்பச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார். வை. மு. கோதைநாயகி, ருக்குமணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராகப் போராடினார். பாரதியாரின் பாடல்களைப் பாடி மக்களிடையே விடுதலையுணர்வைத் தூண்டினார் ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் போராட்டம் நிகழ்த்தியதனால் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், தான் கற்ற மொழிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தார். காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்ற செல்லப் பெயர் பெற்றார். தனது தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் ”சீனிவாச காந்தி நிலையம்” என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். 1964 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஶ்ரீ  விருது வழங்கப்பட்டது.

1955 ஆம் ஆண்டு, சென்னை, ஆவடியில் நடைபெற்ற சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராக இருந்து அம்புஜம் அம்மையார் அரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

வகித்தப் பதவிகள்:-

மாநிலத் துணை தலைவர் – தமிழ்நாடு காங்கிரஸ் குழு [1957 – 1962]; மாநில சமூக நல வாரியம் (சேர்மன்) [1957 – 1964].

நூல்:-

நான் கண்ட பாரதம் என்ற நூலை எழுதியுள்ளார். அம்புஜம்மாள் சிறந்த எழுத்தாளரும் கூட.

காந்தி குறித்து ‘மகாத்மா காந்தி நினைவு மாலை’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

பல முன்னணி இதழ்களில் நிறையக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

ஆன்மீக நாட்டமும் அதிகம் உண்டு. சித்த மார்க்கத்தில் விருப்பம் கொண்டிருந்தவர். தன் குருவாகக் கருதிய ‘காரைச் சித்தர்’ பற்றி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

கே.எம்.முன்ஷி எழுதிய நூலை ‘வேதவித்தகர் வியாசர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

‘சேவாசதன்’ என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. எம்.எஸ்.சுப்புலட்சுமி நாயகியாக நடித்திருந்தார்.

தினமணி வெளியிட்டு வந்த இலக்கிய நூல்களுக்கு ஆலோசனையாளராகவும் திகழ்ந்திருக்கிறார்.

ஹிந்தி பிரச்சார சபாவின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பலருக்கு ஹிந்தி போதித்திருக்கிறார்.

இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 1964ல் ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் வசுமதி ராமசாமி ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தமிழக அரசு சாலை ஒன்றிற்கு இவரது பெயரைச் சூட்டி சிறப்பித்துள்ளது.