நாவல் அறிமுகம்
நாவலின் பெயர்: நீ வரவில்லையெனில்
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம், சென்னை
பக்கம் :190; விலை ரூ.230/-
முன்னம் அவன் நாமம் கேட்டாள்
மிகச்சிறந்த எழுத்தாளரும், பிரான்சில் வாழ்பவரும், புதுச்சேரியை சேர்ந்தவரும், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் ‘அக்ஷரா’ விருதை முதலாம் ஆண்டே பெற்ற அறிஞரும் ஆகிய நாகரத்தினம் கிருஷ்ணா 2025ல் எழுதி வெளியிட்டுள்ள அற்புதமான நாவல் இது.
ஆசிரியரைப் பற்றி
மூன்று கவிதை தொகுப்புகள், ஒரு அறிவியல் சிறுகதை தொகுப்பு உட்பட ஆறு சிறுகதை தொகுப்புகள், 7 நாவல்கள், 11 கட்டுரை தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்புகள், பிரெஞ்சில் இருந்து தமிழுக்கு மூன்று நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், மூன்று கட்டுரை நூல்கள் என்று அசத்தும் ஆசிரியர், தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு அம்பையின் சிறுகதை தொகுப்பை கொண்டு சேர்த்திருக்கிறார். இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதை பிரஞ்சு மொழியிலும், ஆங்கிலத்தில் ஒரு நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன.
சிறப்பு
நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனிச்சிறப்பியல்பு என்று சொல்வதென்றால் புதிய புதிய களங்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்குரிய தகவல்களை, தரவுகளைக் கண்டெடுப்பது, அதில் தனது புனைவை அழகாகப் புகுத்தி நல்ல வடிவத்தில் வாசகருக்கு அளிப்பது என்ற மூன்றையும் சொல்லலாம்.
நாவலின் மையம்
மனித நேயம் என்று எதைச் சொல்வோம்? அன்பு, பாசம், பரிவு, இரக்கம், கருணை. ஆசிரியர் சொல்கிறார் கருணை என்பது, வாடும் மனிதர்களைத் தேடி நாம் சென்று அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவது.
நாவல் சுருக்கம்
இந்த நாவலில் முக்கியமாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் மூன்று ஆண் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறார்கள். நாவல், சோபியா என்ற பெண்ணை மையமாக வைத்து, ஜெய்சல்மேர் , ராஜஸ்தான் அருகே புழுதி படிந்துள்ள, எந்த வசதிகளுமற்ற கிராமத்தில், அவர் நடத்தும் ‘அன்னை தெரசா – அமிர்தா தேவி சமூகத் தொண்டு நிறுவனம்’, ஆதரவற்றோரைக் காக்கும் கரங்களாகச் செயல்படுவதை விவரித்து, மனித நலத்தை மேம்படுத்தும் ஒரு பண்பட்ட மனநிலைக்கு வாசகரை அழைத்துச் செல்கிறது.
பிரான்சில் பிறந்து இந்தியாவின் ‘மருஸ் தாலி’ என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடரில் வடமேற்குப் பகுதியில் வறண்ட தார்பாலையில் அவள் கருணை ஊற்றாகச் சுரக்கிறாள்.
அந்தப் பெண், காஞ்சி மனையில் காரியதரிசியாக இருந்த கட்சியப்ப சிவாச்சாரியார் வம்சத்தைச் சேர்ந்த தேவயானி என்ற அம்மாவிற்கும், பிரெஞ்சு நாட்டவரான பியர் ரிஷார் என்பவருக்கும் பிறந்தவள். அம்மா தேவயானி பரதநாட்டியத்திலும் சமையல் கலையிலும் வல்லவள். காதலாகிக் கசிந்து பியரைக் கைபிடித்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த அவளுக்கு கணவர் பெயர் மாறாட்டம் செய்து தன்னைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வரும்போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். பியரும் சட்டத்தின் பிடிகளில் சிக்கி சிறைவாசம் ஓராண்டு அனுபவித்து பின்னர் திரும்பி தன் மனைவியான தேவயானியுடன் இல்லறம் நடத்த விழையும்போது தேவயானி அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. சோபியா இந்த தம்பதிகளுக்கு பிறந்த போது அவளது அப்பாவான பியர் இன்னமும் ஆறு மாசம் சிறையில் கழிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறார். 10 வயதில் தன் தந்தையும் தங்களுடன் தங்க வேண்டும் என்ற பிடிவாதம் மகளுக்கும், முன்னர் பெர்னார் ஃபோந்த்தென் என்ற பெயரைக் காதலித்த தேவயானி, மணம் செய்து கொண்ட பியரை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் ஒரு அழகிய முடிச்சு. மனித மனமானது எத்தனை விசித்திரமாக செயல்படுகிறது! ஒரு பெயர், அது கொண்டு வந்து தரும் நெருக்கம், அந்தப் பெயரிலேயே உள்ளூரக் கிளைக்கும் மோகம், அந்தப் பெயரில் இருக்கும் மாறாத காதல், தேவயானியை அலைக்கழிக்க, தன் தவறை பியர் உணர்ந்தாலும், பத்து வயது சிறுமியான சோபியாவிற்கு அம்மாவை மன்னிக்க முடியவில்லை. தந்தையுடன் வசிக்கப் போய்விடுகிறாள். எத்தனையோ கடன் அட்டைகளையும் பாஸ்போர்ட்களையும் ஆள் மாறாட்டம் செய்த பியரும் அவ்வளவு மோசமான ஆசாமி இல்லை; தன் வீட்டில் தேவயானி தொடர்ந்து தனித்து இருப்பதற்கும், சோபியாவின் பெயரில் அந்த வீட்டை எழுதி வைப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. அதே போல தேவயானி அவரை கணவனாக ஏற்கவில்லையே தவிர அவரை பின்னர் துன்புறுத்துவதில்லை. தான் விவாகரத்து கூட கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறாள்.
பெர்னார் தன் திருமண வாழ்வில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தவர், அவமானப்பட்டவர். அவர் நண்பர் வேலுமணி, பெர்னார் தம்பதியர் வீட்டிற்கு, தன் மனைவியுடன் விருந்திற்கு வந்த போது, குடிபோதையில், ஒரு விருந்தாளி ,ஒரு பெண்ணிடம் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்ல, பெர்னாரின் மனைவியான கௌசல்யா, விருந்தினர் என்றும் பாராமல் அவர்களை அவமானப்படுத்திவிட்டு தன் அறைக்குள் போய்விடுகிறாள். அந்த வேதனை தாங்காமல் தன் மனைவியை பெர்னார் முரட்டுத்தனமாக அடிக்க அவர்களுக்குள் நிரந்தரப் பிரிவும் ஏற்பட்டு விடுகிறது. வளர்ந்த மகளும், மகனும், அவரவர் பாதையைப் பார்த்துக் கொண்டு போய் விட்டார்கள். தன் தவறை உணர்ந்து வேலுமணி கௌசல்யாவிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறார் ; இருவரையும் இணைத்து வைக்கப் பாடுபடுகிறார் ஆனால் கௌசல்யா மனம் மாறவில்லை. அந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஊர் ஊராகச் சுற்றி மலேசியா வந்து அங்கே ‘பெட்ரோனாஸ்” இரட்டைக் கோபுர உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெர்னார் முடிவு செய்கிறார். உளவியலும் கட்டிடக்கலையும் படித்த சோபியா, அவரை KLCC பூங்காவில் சந்தித்து, உங்களைக் காட்டிலும் கூடுதலான சோகத்தில் இருக்கும் மனிதர்களை அரவணைப்பது தான் துன்பச் சிறையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள எளிய வழிமுறை என்று அவரை தேற்றுகிறாள்.
பெர்னாரும் சோபியாவின் அம்மா தேவயானியை சந்தித்து இருக்கிறார். காஞ்சிபுரத்தில். தன் பெயரை உபயோகித்து தன் நண்பன் மணம் செய்து கொண்டது நண்பரின் இறப்பிற்கு சில காலங்களுக்குப் பிறகு தான் அவருக்குத் தெரிய வருகிறது வாழ்க்கையின் கணக்குகள் எங்கே எப்படி சுழித்துக் கொண்டு இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்? அவருக்கு இந்தியா, இந்திய இலக்கியம், தமிழ் இலக்கியம் எல்லாவற்றிலும் ஈடுபாடு இருந்து கௌசல்யாவைக் கை பிடித்தார். ஆனால், அந்தத் திருமணம் ஏமாற்றமாக இருக்கிறது. அம்மாவின் நுணுக்கமான உணர்வுகளை புரிந்து கொள்ளாத சிறு வயது சோபியா என்ற மணிமேகலை பரதம் கற்றுக் கொண்டிருந்தும் அரங்கேற்ற மறுக்கிறாள்; கட்டிடக்கலை படித்திருந்தும் சமூகத் தொண்டில் ஈடுபடுகிறாள் ;ஆதரவற்ற முதியோரையும், அனாதைகளையும் அரவணைத்து அவர்களுக்காகத் தன் வாழ்க்கையைச் செலவிடுகிறாள்; ஆனால் தனிமையில் வாடும் அம்மாவை அவளால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அம்மாவிற்கும் மகளுக்கும் இடையே ஒரு சுமுக உறவை ஏற்படுத்த பெர்னாரும் வேலுமணியும் முயற்சி செய்கிறார்கள்.
அந்த முயற்சி வெற்றி பெற்றதா, சோபியா நடத்தும் நிறுவனத்தில் அமிர்தா தேவி என்ற ஒரு பெயர் வருகிறதே, யார் அவர் ,சோபியாவின் வாழ்க்கை ராஜஸ்தான் பாலைவனத்தில் எவ்வாறிருந்தது, அவளுக்கு திருமணம் ஆயிற்றா, அவள் அன்னையைப் புரிந்து கொண்டாளா என்று அனைத்தையும் முன்னும் பின்னுமாக அழகாக அடுக்கி சிறந்த ஒரு நுட்பமான உளவியல் படைப்பைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஈர்த்தவை
மன அவசங்களைச் சொல்லும்போது கூட வார்த்தைகள் நாகரீகமாக அமைந்திருக்கின்றன. உணர்ச்சிகளைக் காட்டும் போது கதாபாத்திரங்கள் வாயிலாகவே அதைச் சொல்கிறாரே தவிர, ஆசிரியரின் குரலில் அவர் சொல்லவில்லை.
அவருடைய வர்ணனைகள் படித்து அனுபவிக்க வேண்டியவை. நிலக்காட்சியாகட்டும் மனிதர் முகங்களாகட்டும் அவர்கள் நடையுடை பாவனைகளாகட்டும், அந்தப் பகுதியின் இசையாகட்டும், அவர்கள் பேசும் மொழியாகட்டும் ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் கண்முன்னே எழும்பி வருகின்றது.
‘மானுடம் பல கண்ணிகளில் பின்னப்பட்ட ஒரு சங்கிலி எனில், இது ஒரு தனித்துவமான கதை கொண்ட கண்ணி. ‘
‘சோபியாவின் நிழல் நடமாடும் திசை எதுவாயினும் தாயைப் போலவே மகளிடமும் வெளிப்படும் மின்காந்த அலைகள் கால தூர பட்டகத்தை எளிதாக ஊடுருவும் ஆற்றல் கொண்டவை. நிஜம் எப்படியோ, நிழலும் இப் பிரபஞ்சத்திற்கு அவசியமானது.’
இயற்கை வர்ணனைகள்
இயற்கை எழிலை இவர் மொழியில் படிப்பது ஆனந்தம் .’பூங்காவில் ஒரு பெரிய குளம், கரையோரங்களில் நன்கு வளர்ந்த விழல்கள், சுற்றிலும் புல்நடை, அகன்ற நடைபாதை, இருமருங்கிலும் தகுந்த இடைவெளிகளில் ஆண்டுகள் பலவாக வரிசையாக நிற்கும் ஆல், அரசு, ரப்பர், பலா , பனை வகை மரங்கள். குளத்தில் மீன்பிடி விளையாட்டில் ஈடுபட்டிருந்த தாரா பறவைகளும் சற்று தள்ளி அவைகளுடன் நமக்கேன் வம்பு என்பது போல் அமைதியாக நீராடிக் கொண்டிருந்த சாம்பல் நிற குள்ள வாத்துகளும்…. காட்சி கண்முன்னே விரிகிறது அல்லவா?
உவமைகளும் புதியதாக இருக்கின்றன-‘பதியமிட்ட கன்றை பிடுங்குவது போல்’
‘சன்னமான பொன்னிறத் தவிடு போல பாலை மணல்’ ‘இமைக்க மறந்த மையிட்ட கண்கள், நெற்றியின் மத்தியில் தழல்சிவப்பில் ஒரு பொட்டு, ரோஜா மொக்காய் நாசி, மல்லிகை மொட்டாய் ஒற்றை மூக்குத்தி, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிற சிவந்த அதிரங்கள்.’
இந்த இளமை எப்படி மாறுகிறது பாருங்கள்? ‘இமைக்க மறந்து மை தீட்டாத கண்கள், நெற்றியின் மத்தியில் நேர்வகிட்டில் குங்குமம், சற்று பருமனான மூக்கு, காதுகளில் கல் பதித்த கம்மல், ஒற்றைக்கல்லில் ஒரு மூக்குத்தி, தளர்ந்த முகவாய், மேகம் சூழ்ந்த வானத்தின் சாயலில் சோர்ந்த முகம், ஈரமற்ற வறண்ட அதரங்கள் நரைத்ததலை, முகத்தில் வயதின் சுருக்கங்கள்.’
எண்ணங்கள்
நீலக்கடல் என்ற அற்புதமான நாவலில் அவர் பெர்னார், தேவயானி என்ற இருவரும் காஞ்சிமனையில் சந்திப்பதாக எழுதி இருக்கிறார் .அதுவும் நிஜம் இதுவும் நிஜம் ; இல்லையெனில் ஒன்றின் நிழலாக மற்றொன்று; நிஜங்கள் தங்களை மறுபடியும் நிகழ்த்திக் கொள்கின்றன நிழல்களுடன்.
படிக்க வேண்டிய நாவல் என்று பரிந்துரைக்கிறேன்.
‘



வாழ்கநலம்! நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களே,
நீ வரவில்லையெனில் மனதில் சொல்லவும் வேண்டுமோ,எழுத்துலகமாய் வாழ்பவர் ஸ்ராஸ்பூர்க்கில் சிறந்த சிந்தனையும் தெளிவும் நம்மையும் ஊக்கப்படுத்தும் நல்ல மனிதனிதர் பணிதொடர வாழ்த்துக்கள். ஆசை அன்பர்.
LikeLike