குவிகம் ஆசிரியர் என்னை, நான் படித்த ஒரு புத்தகத்தைப்பற்றி இந்த இதழுக்காக எழுதக் கூறியபோதுதான் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத எப்படி விட்டுப்போயிற்று என எண்ணிப்பார்த்தேன். அதிசயமான பிரமிக்கவைக்கும் ஒரு புத்தகம் / எழுத்துதான் இது.
‘நம் முன்னோர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாய் வாழ்ந்து முடிந்த மண்ணின்மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை, வளர்ந்தோங்கி நிற்பவை’ என்கிறார் ஆசிரியர் தனது முன்னுரையில்.
ஆரம்பமே அற்புதம். ஆசிரியரின் எழுத்துவன்மை ஒரு குடும்பத்திற்குள் நம்மை இழுத்து உட்கார்த்தி விடுகிறது. பின்பு எங்கிருந்து கதையைப் ‘படிக்க’ முடியும்? அக்குடும்பத்துடன் இணைந்து ‘வாழ’த்தானே முடியும்? இவை வஞ்சனையற்ற கிராமத்து மக்களின் வாழ்வியல் செய்திகளல்லவா? விறுவிறுப்பு எனக் கூறக் கூடத் தோன்றவில்லை. கதை அப்படி நம்மைத் தன்னுள் இழுத்து ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுகிறது. நாமும் அந்த கிராமத்தில் வாழ்கிறோம். கதை மாந்தர்களுடன் கைகோர்த்து உலாவுகிறோம். என்ன மாதிரியான பிரமிக்கவைக்கும் எழுத்துவன்மை இது?
கோவிந்து – செல்லம்மாள் தம்பதியர் கிளிபோல வளர்த்த தமது செல்லப்பெண் காமு எனும் காமாட்சிக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். பக்கத்து கிராமத்தில் கிடைத்த ஒரு நல்ல மாப்பிள்ளையின் வீட்டிற்குச் சென்று பார்த்து வருகிறாள் செல்லம்மாள். திரும்பியவள் முகத்தில் சுரத்தேயில்லை. காமுவின் குட்டித்தம்பி முத்துதான் குட்டை உடைக்கிறான். மாப்பிள்ளை வீட்டில் தூளியில் ஒரு குட்டிப்பாப்பாவைப் பார்த்ததாக! மாப்பிள்ளை சுப்புணி எனும் சுப்பிரமணியம் மனைவியை இழந்தவர் எனத்தான் தெரியும், இப்படி ஒரு குட்டிப்பாப்பா இருப்பதைப் பற்றி அவர்களிடம் யாரும் சொல்லவில்லை.
அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். மெல்ல மெல்ல
மீண்டு ஒருவரையொருவர் சமாதானப் படுத்திக்கொண்டு திருமணமும் நடக்கிறது. மாப்பிள்ளை வீட்டுக்காரரான மாணிக்கம் பிள்ளைக்கு பெண்ணின் மனதைப் பற்றி உள்ளூர ஒரு கலவரம். ஆனால் திருமணத்தின்போது அழுத குழந்தையை எடுத்துவந்து மடியில் போட்டுக்கொண்ட சுப்புணியிடமிருந்து அதனை எடுத்துத் தன் மடியில் போட்டுக்கொண்டபோது ஊரே காமுவைப் பார்த்து அதிசயித்தது; நிம்மதிப் பெருமூச்சு விட்டது. புதுப்பெண் மீது குழந்தை வளர்ப்பைச் சுமத்தாமல் சுப்புணியின் குழந்தைகளற்ற அக்கா லட்சுமி அக்குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். குழந்தைவேலு எனப்பெயரிட்டு அன்போடு வளர்க்கிறாள்.
காமுவும் சுப்புணியும் அன்பான குடும்ப வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். காமு குடும்பம் நடத்தும் பாங்கைப் பார்த்து அவளுடைய பெற்றோரும் சுப்புணியுமே வியக்கின்றனர்.
இடையே சில கிளைக்கதைகள். மூலத்துடன் தொடர்பு கொண்டுதான்! நமச்சிவாயம் என்பவன் சுப்புணியிடம் வீணாக வம்பிழுப்பவன்; ஊரில் நல்லபெயர் அவனுக்கில்லை. இதனை சுப்புணியிடமிருந்தே அறிந்துகொண்ட காமு சிறிது மனக்கிலேசம் அடைகிறாள். நாட்கள் செல்கின்றன. சுப்புணி கடந்த காலத்தில் அவன் முதல்மனைவி அபயம் உயிருடன் இருந்தபோதே மீனாம்பா எனும் மீனவப் பெண்ணுடன் ஏதோ ஒரு பொழுதில் மயங்கித் தொடர்பு வைத்திருக்கிறான். அவள் ஒருநாள் ஊரைவிட்டுக் காணாமல் போகிறாள். இப்போது திடீரென மீனாம்பா ஒரு கைக்குழந்தையுடன் ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் மாமனைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அவனும் உடன் வந்துள்ளான். சுப்புணிக்கு ஏதோ பொறி தட்டுகிறது. காமுவின் மனக்கிலேசம் அதிகரிக்கிறது. பக்கத்து ஊரில் இருக்கும் மீனாம்பா அடிக்கடி வந்து இந்த ஊரில் அனைவரையும் சந்தித்துச் செல்கிறாள். மகனையும் நீலமேகம் எனப் பெயரிட்டு வளர்க்கிறாள். அவனும் சுப்புணியின் அச்சாகவே இருக்கிறான்!!
இது இப்படி இருக்க, காமுவும் கருவுற்று பிள்ளைப்பேறுக்காகத் தாய்வீடு செல்கிறாள். அவளுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. சந்தானம் எனப் பெயரிடுகிறார்கள்.
பல ஆண்டுகளாகக் கண்டறியாத பஞ்சம் ஊரில் வருகிறது. விவசாயிகள் தத்தளிக்கிறார்கள். காமு கருணையுடன் அவர்களுக்கு நெல்லை அளந்து அளந்து கொடுக்கிறாள்.
இதற்கிடையே ஊரில் காமன் பண்டிகை கொண்டாடப் படுகிறது. பூசை முறை பற்றிய வாக்குவாதத்தில் நமச்சிவாயமும் சுப்புணியும் கோபத்தின் உச்சிக்கே செல்கின்றனர். பிறகும் வாக்குவாதம் தொடர்ந்து வருகிறது. சுப்புணி ஒருநாள் ஊரைவிட்டுக் காணாமல் போகிறான். அடுத்தநாள் நமச்சிவாயம் கொலை செய்யப்பட்டது தெரியவருகின்றது. அனைவருக்கும் சுப்புணியின்மீது சந்தேகம் வலுக்கிறது. இச்சமயத்தில் காமு திரும்பவும் கருவுற்றிருப்பது தெரிய வருகிறது. அவளுடைய தந்தை அவளைத் தாய்வீடு வர வேண்டுகிறார், அவளோ மறுத்து விடுகிறாள். இங்கிருந்தே கணவனின் நிலபுலன்களைப் பார்த்துக் கொள்கிறாள். சுப்புணி மீது சந்தேகம் வலுப்பட்டு அவனுடைய குடும்பத்திற்கு உதவுவது கூடாது என்றும், அவனுடைய நிலங்களில் வேலை செய்யக்கூடாதெனவும் அக்கால பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிடுகிறது.
காமுவிற்குப் பெண்குழந்தை பிறக்கிறது. கமலம் எனப் பெயரிட்டு வளர்க்கிறாள்.
கிளைக்கதைகள் மூலம் நமச்சிவாயம் கொலையில் வேறேதோ சதி நடந்துள்ளது என நாமறிந்து கொள்கிறோம். ஆண்டுகள் உருண்டோட, கதையும் பலவிதமான சிக்கல்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. சுதந்திரப் போராட்டம், மறியல்கள், உப்புச்சத்தியாக்கிரகம் எனக் கதாபாத்திரங்களுடன் வேறு திசையில் மும்முரமாகப் பயணிக்கிறது. காமுவின் தம்பி முத்துச்சாமி இப்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளான். பெற்றோர் கவலைப் படுகின்றனர். அப்போராட்டத்தில் ஒரு கை அவனுக்கு ஊனமாகி விடுகிறது.
சுப்புணியின் அக்கா லட்சுமியிடம் வளர்ந்துவந்த குழந்தைவேலுவும் பெரியவனாகி, பலவிதமான பள்ளிக்கூட அனுபவங்களினால் மனம் குழம்பி, ஒருநாள் திடீரெனக் காணாமல் போய்விடுகின்றான். பல இடங்களிலும் அவனைத் தேடிக் கிடைக்காமல் காமுவின் ஊருக்கு வந்து செய்தி சொல்கிறாள் லட்சுமி. அந்த நாட்களில் ஒருநாள் சுப்புணி ஒரு நண்பருடன் அவ்வூருக்குத் திரும்பி வருகிறான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்காவில் வைரச் சுரங்கத்தில் வேலைபார்த்து வந்தவன் அவன், இப்போது தனது குடும்பத்தைச் சந்திக்கத் திரும்பியுள்ளான். குழந்தைகள் சந்தானமும், கமலமும் மெல்ல அவனிடம் ஒட்டிக் கொள்கின்றனர். ஆனால் காமுவோ தன் மனது இறுகிக் கிடக்கின்றதென்பதனைச் சொல்லாமல் சொல்லி விடுகிறாள். இது சுப்புணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
தன் ஊரான இலுப்பூரைவிட்டு நாகப்பட்டிணத்திற்குச் சென்று புகையிலை வியாபாரத்தைத் துவங்குகிறான். சுப்புணி தென்னாப்பிரிக்காவில் பாக்கியம் என்பவளை மணந்து கொண்டு வாழ்ந்திருந்தான். கதிர்வேலு, சகுந்தலா என இரு குழந்தைகளும் உண்டு. அவன் இங்குவந்த சமயம் பாக்கியம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே, ஒரு நண்பரின் துணையுடன் குழந்தைகள் சுப்புணியை வந்தடைகின்றனர்.
மீனாம்பாவின் மகன் நீலமேகம் ஒரு நாடகக் கம்பனியில் நடித்துக் கொண்டிருக்கிறான். தேசப்பற்றும் மிகுந்தவன். அவனையும் சந்தித்து தங்கள் உறவை அறிவித்துக் கொள்கிறான் சுப்புணி. காமு, சுப்புணியின் தென்னாப்பிரிக்கக் கதைகளையும் வாழ்க்கையையும் கேட்டு சிறிது மனம் இளகுகிறாள். தாயின்றி வளரும் வயதுவந்த மகளான சகுந்தலாவைத் தன்னிடம் அழைத்து வைத்துக் கொள்கிறாள். தன்னுடைய மகளான கமலத்தைத் தன் தம்பி முத்துசாமிக்கு மணம் செய்து வைக்கிறாள்.
இரண்டாம் உலகப்போரின்போது பர்மாவின் ரங்கூனில் இருக்கும் இந்தியர்களின் பரிதாப நிலையும் அவர்கள் நாடு திரும்பும் மதை உருக்கும் செய்திகளும் விலாவாரியாகக் கூறப்பட்டு நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. காணாமல்போன குழந்தைவேலு ரங்கூனில் ஒரு செட்டியாரிடம் சென்று சேர்ந்து வியாபாரத் தொழில் செய்யக் கற்றுக் கொள்கிறான். பின்பு கால்நடையாகவே வந்து நாட்டை அடைகிறான். ஊருக்கும் வந்து சேர்கிறான்.
இவ்வாறெல்லாம் நடைபோடும் அவர்கள் வாழ்க்கை, காமு, சுப்புணியின் மகன்களுக்குத் திருமனம் செய்து வைக்க முயன்று, குழந்தைவேலுவின் திருமணத்தை நிச்சயித்து, அவன் சுதந்திர தினத்தன்று சிறைப்பிடிக்கப் பட்டதனையும், விரைவில் விடுதலை பெறப் போவதையும், மணப்பெண் பார்வதி அவனுக்ககக் காத்து இருக்கப் போவதையும் அவளுடைய நெஞ்சுறுதியையும் சுட்டிக்காட்டி அறிவித்து நிறைகிறது.
———————-
இதனைக் கிராமிய மணம் கமழும் கதைக்காக மட்டுமே நான் போற்றவில்லை. ஒரு நவீனத்தைப் புனையும் வாயிலாக, நமது நாட்டுப் பழக்க வழக்கங்கள், கிராமிய வாழ்வின் நிதர்சனங்கள், வாழ்வியல் வழக்குகள், மக்களின் அன்னியோன்யம் ஆகியவற்றையும் நிறுத்தி நிதானமாக விளக்கியுள்ளார் ஆசிரியர். எடுத்துக்காட்டாக, கிராமத்தில் ஒரு சிறுபெண் சமைந்ததும், ஏகாலிக்குச் (வண்ணான்) சொல்லியனுப்புவதனையும், செய்யும் சடங்குகளையும் விளக்கும்போது அவற்றின்பின் உள்ள விளக்கங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. பல நாட்டுப்புறப் பாடல்களைக் கதைமாந்தர் வாயிலாக நமக்குக் கொடுத்துதவியுள்ளார் ஆசிரியர்.
காவிரியம்மனைப் பூசைசெய்யும் ஆடித்திருவிழாவில், பெண்களில் ஒருத்தி இன்னொருத்தியிடம், “காவேரியம்மா புருஷனைத் தேடிக் கடலுக்கு ஓடறாப்ல எப்பவும் புருஷன் நினைப்பாவே இருடி தாயே!’ என்று கழுத்தில் மஞ்சள் தடவின நூலைக் கட்டிவிட்டாள்,’ என்கிறார்.
கிராமங்களில் திருமணங்களுக்கு வண்டிகட்டிப் போகும் பெண்வீட்டார், “டாண், டாண்,’ என தூரத்தில் இருந்த சிக்கில் கோயிலில் இருந்து மாலைக்கான ‘காண்டாமணி’ நாத ஒலி உரத்துக் கேட்பது, சத்திரத்து ஆளோடியில் பலகாரக்கூடை இறங்கியது எல்லாம் ஒரு கடந்தகால அருமைவாழ்வை நினைவூட்டி ஏங்கவைக்கின்றன.
கல்யாணப்பெண் காமுவுக்கு அலங்காரம் செய்து மற்ற பெண்கள் பாடுவது சங்ககாலத் திருமணத்தையே நினைவூட்டுகிறது. வயதில் மூத்த சுமங்கலிகள் குடங்களில் நீர் கொண்டுவந்து அண்டாவில் நிரப்பினர். குழந்தைகள் அதிகம் பெற்றெடுத்த தாய்மாரில் நான்குபேர் அந்த நீரில் ரோஜா இதழ்களையும் நெல்மணிகளையும் போட்டனர். மணப்பெண்ணுக்குச் சந்தனம்பூசி, ‘தீர்க்க சுமங்கலியா இருக்கணும்,’ என வாழ்த்துகின்றனர்.
பாத்திரப் படைப்புகள் பிரமாதம். பலர் நம்மை பிரமிப்பின் உச்ச எல்லைக்கே கொண்டு செல்கின்றனர்.
காமு எனும் காமாட்சியின் பாத்திரப் படைப்பின் சூட்சுமத்தை, அதன் உயர்வை, நிகழும் செயல்களாலும், அவள் நடந்துகொள்ளும் முறைகளாலும், கூறாமல் கூறி, மிகச் சிறப்பாக நாவலின் தலைப்பினோடு பொருத்தியிருக்கிறார் எனவே எண்ணத் தோன்றுகிறது.
ஒரு விவசாயிக்கு நிலம் எனும் நல்லாள் நன்மையே செய்பவள். சில பொழுதுகளில் அவள் சோர்ந்து போனாலும் அவளுடைய ஆழ்மனதில் அன்பெனும் ஊற்றுப் பொங்கிக் கொண்டே இருக்கும் என அழகாகக் காமாட்சி மூலம் சுட்டுகிறார். இங்கு காமாட்சியே ‘நல்ல நிலம்’ ஆகிறாள்.
———————–
நாகப்பட்டினத்து நீலாயதாட்சி மேல் அகத்தியர் இயற்றிய ஒரு பாடலை ஓதுவார் பாடுகிறார்:
‘ஆய தடங்க ணம்மை திருப்பாதம்
பாய பிறவிப் பரவை கடப்பதற்கு –
நேய மலியு நெடுங்கலமே போலும்’-
ஆகா! என்ன அருமை. இத்தகைய பொக்கிஷங்களையும் உள்ளடக்கி வழங்கும் எழுத்துவன்மை!!
——
விதைவிதைப்பில் ‘விதைநெல் பாவுவது” என ஒரு சடங்கு- அதனை விவரிப்பதும் பிரமாதம் என்றால் சில விவரிப்புகளும் சத்தியமான வாசகங்கள்: ‘என்ன சொல்லியும், எதைச் செய்தும், ஆறாத கவலையெல்லாம் காலத்தின் இதமான தடவுதலினால் ரணம் ஆறிக் காய்ந்து போய்விடுகின்றது.” “நெருக்கடியான நேரங்களில் மௌனம் வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சில வேளைகளில் அதுவே மனதைக் குத்திக் குதறும் வேதனையாகவும் ஆகிப்போய் விடுகின்றது.”
—————–
இன்னோரிடத்தில் காமுவுக்கு வளைகாப்புச் செய்யும்போது பெண்டுகள் பாடிய அழகான பாடல்! புத்தகம் முழுதும் இப்படிப்பட்ட முத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. பின்பு கிராமத்தார் காமன் பண்டிகை கொண்டாடும் வைபவம், அது தொடர்பான கதைகள், பாடல்கள்; ஆசிரியர் எதையுமே நுனிப்புல் மேயவில்லை. விளக்கமாக ஒரு அறுசுவை விருந்தே படைக்கிறார்.
“ஓ! காமராஜேந்திரனே
ஓ! கருட வாகனன் தன் மகனே!
ஓ! கட்டழகு மம்முதரே!
எனத் தொட்டணைத்த கோமானே!” இப்படிச்செல்லும் நீண்டதொரு பாடல்….!! ஆகா! ஆகா!
—————-
எண்ணூறு பக்கங்களுக்கும் அதிகமான எழுத்தைக்கொண்ட இதனை, ஒவ்வொரு வரியாகப் படித்து உள்வாங்கிக் கொண்டால்தான் எழுத்தின் வீச்சும், வலிமையும், ஆழமும், அழகும், நயமும் புரியும். இதனை மூன்றுமுறை, ஒவ்வொரு முறையும் கீழே வைக்க இயலாமல் அனுபவித்துப் படித்திருக்கிறேன். படித்து முடித்ததும், படிக்கும்போதும் நெஞ்சில் ஒரு இனிய துயரத்தை, வலியை எழுப்பி, அதிலேயே நம்மை ஆழ்த்திவிடும் தன்மைகொண்ட ஆச்சரியகரமான எழுத்து. மிகச்சில நூல்களே என்னை இவ்வாறு பாதித்துள்ளன. படித்து முடித்துக் கீழே வைத்தபின் ஏற்படும் வெறுமை உணர்வு (கதை முடிந்துவிட்டதே என்பதாலா! இல்லை என எண்ணுகிறேன்.) தாள இயலாதது. எதற்காக அழுகிறோம் என உணர இயலாமல் விம்மியழ வைக்கும் உன்னதமான எழுத்து.
பசுமாட்டுடன் காமுவிற்கான உறவை, நட்பைக் கூறுவதா, சுப்புணி – காமுவின் அன்பு இழையோடும் உரையாடல்களிலும் செயல்களிலும் பொதிந்துள்ள பரஸ்பர காதலின் ஆழத்தை உணர்ந்து ரசிப்பதா, மாணிக்கம் பிள்ளையின் (சுப்புணியின் குடும்ப நண்பர்) யதார்த்தமான புரிதல்களைக் கொண்டாடுவதா, கொச்சையான உறவுகளாயினும், ஊர் அதனை ஏற்றுக்கொண்ட விதத்தை உணர்ந்து பிரமிப்பதா, எனத் தடுமாறுகிறோம். ஒன்று மட்டும் நிச்சயம்.
ஒரு ஆங்கிலக் கவிதை உண்டு. ‘ஒரு பெண் அன்பு செலுத்தும்போது அது முழுமையாக ஒருவனிடம் செல்கிறது. ஆனால் ஆணுக்கோ, அது அவனது நடவடிக்கைகளுள் ஒன்றாகவே கருதப்படுகிறது.’
காமு சுப்புணி மீது கொண்ட அன்பினால், பரிவினால், மதிப்பு – மரியாதையினால் தான் செய்யும் செயல்களனைத்திலும் அவனை முன்னிலைப் படுத்தியே செய்கிறாள். ஆனால் அவனோ, காமுவிடம் அன்பு கொண்டும், தன் வாழ்வைத் தன் எண்ணப்படித்தான் அமைத்துக் கொள்கிறான்; அவளைத் துயரப்படுத்தும் செயல்களைச் செய்யவேண்டாம் என எண்ணுவதே இல்லை!! இதனைக் கதாசிரியர் சொற்களால் கூறவில்லை, காமு – சுப்புணி பாத்திரப் படைப்பினால் அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தப் புதினத்திற்கு ஏன் சாகித்ய அகாதமி பரிசு கிடைக்கவில்லை என நான் பலமுறை சிந்தித்ததுண்டு. விடை இன்னும் கிடைக்கவில்லை. பரிந்துரைக்கச் சரியானவர்கள் அமையவில்லையோ என்னவோ? இது இந்திய கிராமிய வாழ்வியல் முறைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. என்னைப் பொறுத்தவரை, ஜான் ஸ்டயின்பெக், (John Steinbeck) பேர்ல் பக் (Pearl S. Buck) ஆகியோரின் எழுத்துடன் ஒப்பிடத்தக்கது. காலமே இதனை நிர்ணயிக்க வேண்டும். இதனைப் படிக்கும்வரை இவ்வாசிரியரைப் பற்றி நான் அறிந்து கொண்டதில்லை. படித்தபின் அவருடைய எழுத்துக்கு விசிறியாகி விட்டேன்.
நீங்களும் படித்துப் பாருங்கள். ஆமாம் என ஒப்புக் கொள்வீர்கள்.


