தெலுங்கில் முனைவர் என். கோபி
தமிழில் நலிமெல பாஸ்கர்.
பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கோபி. தனது இன்னொரு கவிதை நூலுக்காக சாகித்ய அகதமி விருது பெற்றவர்.
முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்டது தொகுப்பு ‘நாநீ கவிதைகள்’ இந்நூலைத் தமிழாக்கம் செய்துள்ளவர் திரு நலிமெல பாஸ்கர். இவர் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகதமி பரிசு பெற்றவர். பதிமூன்று இந்திய மொழிகளிலிருந்து நேரடியாகத் தெலுங்கிற்கு மொழியாக்கம் செய்துள்ளார்.
தெலுங்கில் இந்தக் குறுங்கவிதை அமைப்பினை உருவாக்கி ‘நாநீலு’ என்று பெயரிட்டு அருமையான கவிதைகளைப் படைத்ததோடு எண்ணற்ற கவிஞர்களை எழுதச் செய்தும், புதிய கவிஞர்களை உருவாக்கியுள்ளார், முனைவர் கோபி.
குறுகிய வடிவம் இலக்கினைக் கூர்மையாக தாக்க வசதியானது. மேலும் வாசிப்பவர் தன் அனுபவ மற்றும் கருத்தாக்கப் பின்னணியில் பொருள்கொள்ள வைக்கிறது. அழகியல், தத்துவார்த்தம், காட்சிப் படுத்துதல், நயம்பட உரைத்தல் என்னும் கவிதைக் கூறுகளையும் இந்நூலில் காணலாம்.
எடுத்துக்காட்டாக சில கவிதைகள்
அனுபவமா?
இப்போது கிடைத்தென்ன பயன்?
அறுபட்ட விரலுக்கு
மோதிரம் எதற்கு?
என்னும் கவிதை வாழ்வியலை நயம்படச் சொல்கிறது.
பின்வரும் இரண்டு கவிதைகள் நாம் நம்பும் நடைமுறையைக் கேள்விகுள்ளாக்குகிறது.
- திட்டித் தீர்பதற்குப் போனேன்
அவனோ ‘என்னை அடி’ என்றான்
வென்றது
அவனா நானா?
- பழிவாங்குவது
காட்டுமிராண்டித்தன நியாயம் அல்லவா?
அதனினும்
காயப்படுவதே மேல்
நம் பார்வையையும் அணுகுமுறையையும் பரிசீலிக்க வைக்கின்றன இந்த இரு கவிதைகள்
- வானத்தில் மட்டுமல்ல
அதிசயங்கள்
பாதங்கள் சொல்வதைக் கேட்டால்
பூமிக்குள்ளும் ஆயிரமாயிரம்
- குருவி என்னிடம்
ஏதோ சொல்லவேண்டும் போலும்
இல்லாவிட்டால்
இத்தனைமுறை வட்டமடிக்காது
சமரசம் என்பது உடன்படுதல்தானா? பலசமயங்களில் அது பாசாங்காக இருக்கிறது அல்லவா? அதனை இப்படிச் சொல்கிறார்.
ஏதோ ஒரு வகையாய்
சமரசமாவார்கள் என்றாலும்
அது
பாசாங்குதான்
இந்தக் கவிதையைப் பாருங்கள்
பிளாட்பாரம் நெடுக
அலைந்துகொண்டிருக்கிறேன்
எந்தப் பழைய காதலியாவது
அடையாளம் காண்பாளென
கடைசி வரி தென்படுவாளென என்று இருந்துவிட்டால் புலப்படாத பரிமாணத்தை ‘அடையாளம் காண்பாளென’ என்னும் சொற்கள் காட்டுகின்றன
புலம்பலிலும் ஒரு அழகான சொல்லாடல் தென்படும் கவிதை ஒன்று
என்ன படைப்பு படைத்திருக்கிறான்
இந்த பிரம்மன்
நான்கு முகங்களையும்
பிடித்து உலுக்கவேண்டும்
போராட்டம் என்றாலே சமூக, தொழிற்சங்க மற்றும் அரசியல் போராடம்தானா?
இறுதியாக, சுஜாதாவின் ‘பாலம்’ சிறுகதையையும், மதுவந்தியின் ‘ரத்து’ கவிதையையும் நினைவுபடுத்தும் ஒரு கவிதை
போராட்டங்களில்
கற்களுக்கு இறைக்கைகள் முளைக்கின்றன
கண்ணீருடன்
குறிபார்க்கிறார்கள்
என்னை ஈர்த்த சில கவிதைகளைச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு வேறு கோணம் தெரியலாம். நீங்கள் படித்தால் உங்களை வேறு பல கவிதைகளும் ஈர்க்கலாம்.
புத்தகம் வாங்க : Smt. N Aruna, H.No.13/1/5B, Srinivaasapurwm, Ramanthapur, Hyderabad 500 01. mobile 9391028496 email :- prof.ngopi@gmail.com


