புத்தக வாசிப்பு:

தலைமறைவான படைப்பாளி (உலகை அதிரவைத்த படைப்புகள்) – வாஸந்தி (காலச்சுவடு நவம்பர் 2024).

மூத்த எழுதாளர் வாஸந்தி, உலக இலக்கியங்களில், ‘சர்ச்சைக்காக’ அதிகமாக அறியப்பட்டுள்ள இருபது படைப்புகளைப் பற்றி, அலசி, ஆராய்ந்து எழுதியுள்ள 20 கட்டுரைகளின் தொகுப்பு, ‘தலைமறைவான படைப்பாளி’.  ஒவ்வொரு படைப்பினைப் பற்றியும் விமர்சனம் செய்திருந்தாலும், அந்தப் படைப்பு ஏன் எதிர்க்கப்பட்டது, எதற்காகத் தடை செய்யப்பட்டது, பின்னர் எப்படி உலகின் உயர்ந்த விருதுகளைப் பெற்று, புகழ் பெற்றது என்பதையும், அந்த படைப்பினைப் பற்றிய தன் சொந்த கருத்துக்களையும் சொல்லி ஒவ்வொரு கட்டுரையையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். 

இலக்கிய உலகில், எதற்கெல்லாம் படைப்புகள் தடை செய்யப்படுகின்றன என்பது வியக்க வைக்கும் செய்தி. ஓர் இனம் குறித்தது, பாலியல் வக்கிரம் குறித்தது, குழந்தைகளின் மனதைக் கெடுக்கக்கூடியது, பழக்கத்திலிருக்கும் சமூகச் சிந்தனைகளைக் கட்டுடைத்து எதிர்ப்பது போன்ற பல காரணங்கள்!  நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் கலாச்சாரப் போக்கு, எப்படி தடைசெய்யப்படுகின்ற ஒரு படைப்பை (படைப்பாளியையும்) வித்தியாசமாகப் பார்க்கின்றன என்பதைச் சிறப்பாக அலசியுள்ளார்.

“மதங்கள், குருபீடங்கள், அரசிஅல் சாசனச் சட்டங்கள், தனிமனிதனின் இயல்பு வாழ்க்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தார்மீகக் கட்டுப்பாடுகளின் விளைவாகப் பாலியல் விவரணைகள் வக்கிரங்களின் கற்பனைச் சித்திரங்கள் எழுத்தில் வெளிப்படும்போதெல்லாம், இன்றைய வெட்ட வெளிச்சக் காலக்கட்டத்தில்கூட ஆபாசமான எழுத்தாகக் கண்டனப் படுத்தப்படுவதோடு, பொது வாசிப்பிற்கு ஏற்கப்பட முடியாதவையாக நிராகரிக்கப்படுகின்றன; தடை விதிக்கப்படுகின்றன. அவற்றில் பல மிகச் சிறந்த இலக்கியமாகக் கண்டனத்துக்குள்ளான காலகட்டத்திலேயே விமர்சகர்களால் சொல்லப்பட்டதும் விசித்திரமான யதார்த்தம்” என்கிறார் வாஸந்தி. 

கட்டுரைகளின் தலைப்பே, சொல்லப்போகின்ற செய்தியினைத் தெரிவித்துவிடுகின்றன! 

‘விளாடிமர் நோபொகோவின் ‘லோலிடா’ இலக்கியமா, ஆபாசமா?’ என்ற கட்டுரை, புத்தகம் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் மகா ஆபாச எழுத்து என்று பிரசுரிக்க மறுக்கப்பட, ஃப்ரான்ஸ் நாட்டில் சத்தமில்லாமல் வெளிவந்தது! மூன்று ஆண்டுகள் கழித்து, நியூயார்க்கிலும், பின்னர் லண்டனிலும் வெளிவந்து, ஆச்சரியமாக செவ்வியல் அந்தஸ்த்தைப் பெற்றது! ‘லோலிடா’வின் அபார வெற்றியினால், ருஷ்யாவில் இழந்த சொத்துக்களைவிட அதிகமாகச் சம்பாதித்தார் நோபொகோவ் என்று சொல்லப்படுகின்றது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதால், ஆங்கிலத்தில் அவரது எழுத்து சொல்வளமும், கவிதை நடையும் கொண்டு விளங்கியது. ஓர் எழுத்தாளர், ‘லோலிடா’ இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நாவல் என்றார்; அதே சமயம் டைம் பத்திரிகையின் விமர்சகர், ‘இத்தனை அசிங்கமான ஆபாசமான நாவலை நான் படித்ததில்லை’ என்றார்! அந்த நாவலின் சுருக்கத்தைக் கூறிப் பின்னர், “நடு வயது ஆண் ஒருவனுக்குப் பதின்வயதைத் தொடாத பாலகியிடம் ஏற்படும் தகாத காம இச்சை என்கிற கருப்பொருள் மட்டுமே ஆபாசத்துக்கு உரியதாக்கப்படுமே தவிர, அதன் இலக்கியத் தன்மைக்காக அல்ல; ஏனெனில் நாவலைப் படிக்கும்போது, ஆபாசம் என்று சொல்லும்படியாக ஒரு வார்த்தையும் தென்படவில்லை” என்கிறார் வாஸந்தி.  இக்கட்டுரையை வாசித்த பிறகு, அந்த நாவலை வாசிக்கத் தோன்றுவது, வாஸந்தியின் விமர்சனப் பார்வையினால் என்றால் அது மிகையில்லை. 

“ஹார்ப்பர் லீயின் இரண்டு புத்தகங்கள்” கட்டுரையில், ஓர் எழுத்தாளரின் இரண்டு நாவல்கள் பற்றியது.  1960 ல் வெளிவந்த உடனேயே உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்ற புத்தகம், ஹார்ப்பர் லீயின் “To Kill A Mocking Bird”. 2006ல், பிரிட்டிஷ் நூலகர்களால் அந்தப் புத்தகம் பைபிளுக்கும் மேலாக வைத்துப் போற்றப்பட்டது! அமெரிக்கப் பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. அமேசான் விற்பனையில் முதல் பத்து புத்தகங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. 89 வயதாகும் லீ யின் இரண்டாவது புத்தகம் – Go Set A watchman – இப்போது வெளியாகி, மாபெரும் எதிர்பார்ப்பையும், அளவில்லாத ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது!

இரண்டாவது நாவலைப் பற்றிய விமர்சனங்களும், எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த விவாதங்களும் சுவாரஸ்யமானவை. ‘இரண்டு புத்தகங்களையும் வாசித்த எனக்கு, இரண்டாவது புத்தகம் நிச்சயமாக முன்னதன் தரத்தைத் தொடவில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது – இருந்தும் சில இடங்களில் ஹார்ப்பர் லீயின் கூர்மையான பார்வையும், ஹாஸ்யமும் பளிச்சிடுகிறது’ என்கிறார் வாஸந்தி.

தந்தை ஆட்டிகஸ், மகள் ஸ்கெளட் இருவருக்கும் இடையே, நிறவேற்றுமை பற்றித் தோன்றும் மாறுபட்ட கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல்கள். முதல் நாவலில் அமெரிக்கர்களின் ஆதர்சமாக விளங்கும் ஆட்டிகஸ், இரண்டாவது நாவலில், நம்மை நாமே உள்நோக்கிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துபவனாக இருக்கிறான் – வாசகர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை! நாவல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது!.

‘சீற்றத்தில் பிறந்த காவியம்’ – ‘The Grapes of Wrath’ by John Steinbeck.  முப்பதுகளில் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியைப் பின்புலமாகக் கொண்டு, விவசாயிகளின் இயலாத நிலை, அதைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்த வங்கிகளில் நில ஆக்ரமிப்பு, வாழ்ந்த நிலத்தை விட்டு, வேலை தேடி வெளியேறும் மக்கள் மேற்கொள்ளும் அசாதாரணப் பயணம் எனச் செல்கிறது கதை. இந்தக் கதையில் மனிதநேயம் மிக்கவர்களாகப் பஞ்சப்பரதேசிகளாக வாடும் தொழிலாள வர்க்கம் இருப்பதாயும், நில அதிபர்களே இரக்கமற்றவர்கள் என்பதாயும் எழுதியிருப்பதால், அதிபர்கள் சமூகத்திலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விமர்சனங்களையும், விவாதங்களையும் தாண்டி, 4,30.000 பிரதிகள் விற்றுப்போயினவாம்! புத்தகத்திற்கு ‘புலிட்சர்’ விருதும், ஆசிரியருக்கு ‘நோபல் பரிசு’ம் கிடைத்தது!

ஒரு சுய சரிதை இலக்கியப் படைப்பாக இருக்கவே முடியாது என்ற சவாலை ஏற்று, மாயா ஆஞ்சிலோ தன் சுயசரிதையை ‘I know why the caged bird sings’ என்ற தலைப்பில் எழுதினார்!  ஒரு கறுப்பினப் பெண், தனது வாழ்க்கை அனுபவத்தை, தனக்கு ஏற்பட்ட பாலியல் வமுறையை, ஓரினச் சேர்க்கைக் குழப்பங்களைக் கூச்சமில்லாமல் எழுதியிருந்ததால், அதிக கவனம் பெற்றது. ஏழு பாகமாகப் பின்னர் வெளிவந்த சுயசரிதையின் முதல் பாகம் வந்தபோது, அமெரிக்காவின் பல மாகாணங்களில் தடை செய்யப்பட்டது. பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனாலும் அமெரிக்கச் சுயசரிதை எழுத்துக்கு மாயா ஆஞ்சிலோ புதிய இலக்கியப் பரிமாணத்தைக் கொடுத்திருப்பதாகப் பாராட்டப்படுகிறார். “அது ஒரு கூண்டுப் பறவையின் இதயத்தின் வலி; ஒரு பிரார்த்தனை, மானுடத்தை நோக்கி” என்கிறார் வாஸந்தி.

காப்காவின் ‘உருமாற்றம்’ (குறுநாவல் – ஒரு குறியீட்டுக் கதை – பயங்கர ஜந்துவாக உருமாற்றம் அடைபவனைப் பற்றியது), மார்க் ட்வைனின் கண்டனத்துக்குள்ளான சிறுவர் இலக்கியம் (நிற வேற்றுமை பற்றியது), ஜார்ஜ் ஆர்வெல்லின் ’The Animal Farm’ (மிருகங்களின் புரட்சி – உருவகக் கதை – ஹாஸ்யமும், கூர்மையும், சோகமும் இழையோடும் சரளமான நடையில்!மனிதன் மிருகங்களைச் சூறையாடுகிறான், பணக்காரன் ஏழையைச் சூறையாடுவதைப் போல என்ற கருத்தில் எழுதப்பட்ட கதை), உலகப் புகழ்பெற்ற சிறுமியின் நாட்குறிப்பு (by Anne Marie Frank – இரண்டாம் உலகப்போரின்போது ஆன் ஃப்ராங்கின் யூதக் குடும்பம் எவருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்தபோது எழுதப்பட்டது), பறவைகளைப் பற்றிய குழந்தை இலக்கியம் (சர்ச்சைக்குக் காரணம் – இரண்டு ஆண் பெங்குவின்கள் சேர்ந்து வாழ்ந்து, ஒரு குஞ்சுப் பறவையை வளர்க்கும் கதை – ஓரினச் சேர்க்கை குறித்த குறியீட்டுக் கதை), ஜேம்ஸ் ஃப்ரேயின் “Million littlie pieces’ (தலைமறைவான படைப்பாளி – தன் சுய சரிதையை (மதுவின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த கதை) எழுதி, பெரும் சர்ச்சைக்குள்ளான புத்தகம்!), டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ போன்ற புத்தகங்கள் சர்ச்சைக்குள்ளான காரணங்களையும், பின்னர் அவை எவ்வாறு உலகப் புகழ் பெற்ற படைப்புகளாகின்றன என்ற செய்திகளையும் ஒரு கதை சொல்வதைப்போல எழுதிச் செல்கிறார் வாஸந்தி. நூல்கள் குறித்த அவரது நுணுக்கமான பார்வையையும் அவர் குறிப்பிடுவதால், சுவாரஸ்யம் மேலும் கூடுகிறது – வாசிக்கத் தூண்டும் அறிமுக, விமர்சனப் பார்வை!

வாசிக்க வேண்டிய தொகுப்பு!