தேவசேனைக்கு அரண்மனை கிடைத்து விட்டது
எஸ்.எம்.டில்லி
ஆசிரியரின் பெயர்: எஸ்.எம்.டில்லி (பெயர்தான் டில்லியே தவிர
முழுக்க சென்னைவாசிதான்.
முதல் பதிப்பு: 2006
பக்கம்: 128
பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம்
எண்.1, 3 வது மாடி,
புதூர், 13-வது தெரு,
அசோக் நகர், சென்னை-83

 

 

 

விமர்சன கட்டுரை:

கதை சுருக்கம்: காஞ்சனாவிற்கு மூன்று ஆண் மகன்கள். மூத்தவன் சரியில்லை, திருமணம் செய்வித்து வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் குடியால் சீரழிந்து கொண்டிருக்கிறான். இடையவன் பரவாயில்லை ரகம், எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டு கரயேறிவிடுவான் வாழ்க்கையில் என்னும் நம்பிக்கை உண்டு காஞ்சனாவிற்கு. மூன்றாமவன் உயர்நிலை பள்ளி வரை அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து ஒன்று விட்ட சகோதரி சுலோச்சனா என்பவள் மூலம் தத்து எடுக்கப்பட்டு முறையான தொழிற்படிப்பு, தகுதியான வேலை பெற்று கொடுத்து காஞ்சனாவிடமே ஒப்படைத்தாள். அதன் பின் ரியாத் சென்று மூன்று வருடம் உழைத்து சம்பாதித்து கொண்டு வந்த பணத்தில் வீடு கட்ட நினைக்கிறான்.

காஞ்சனா மூத்தவன் பெயரில் வாங்கியிருக்கும் நிலத்தில் வீட்டை கட்ட சொல்கிறாள், மனிவி தீபா யோசித்து செய்ய சொல்கிறாள். காஞ்சனா மருமகளிடம் சங்கடப்படுகிறாள். ஆனாலும் அந்த நிலம் மூன்றாமவன் பெயருக்கு மாற்றப்பட்டு வீடு மற்றும் கடைகளுடன் கட்டப்படுகிறது.
கட்டிடமேற்பார்வை மூத்தவன் என்றாலும் அவன் மனைவி தேவசேனை யின் கண்காணிப்பில் இருக்கிறது. இதனால் அவள் கட்டுமானத்தில் செய்யும் தில்லுமுல்லுகள், கட்டிடம் முடிந்தபின் அதில் மாமியாரால் குடியேற்றப்பட்டு அங்கு அவளும் மகள்களும், தம்பிகளும் ராஜாங்கம் செய்ய, மூத்தவன் தம்பிக்கு துரோகம் செய்யவேண்டாம் என்று சண்டையிட்டு விரட்டப்படுகிறான்.
காஞ்சானாவலேயே அந்த வீடு தேவசேனையிடம் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் கடைசி மகனிடமே ஒப்படைக்க, அவனோ விபத்தில் அடிபட்டு உடல் உறுப்புக்களை இழந்து விட்டு வந்திருந்தாலும், அண்ணியான தேவசேனையிடமே அந்த வீட்டு பத்திரத்தை ஒப்படைக்கிறான். தேவசேனை மன உறுத்தலால் அதை கிழித்து எறிகிறாள்.

இந்த போராட்டங்களுக்கிடையில் காஞ்சனாவின் இரயில்வே பணியில் அவள் செய்யும் துணை மருத்துவ பணிக்கான கல்வி அறிவே பெறாமல் அவள் அந்த பதவியில் பணி செய்து கொண்டிருப்பது தெரிய அவளுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என்று இரயில்வே நிர்வாகம் கலந்தாலோசித்து கொண்டிருக்கும்போது காஞ்சனா மரணமடைந்து விட்டாள் என்னும் தகவல் வருகிறது.

சிறப்பு: காஞ்சனா என்னும் பெண்ணின் போராட்டம், நல்ல ஆண்மக்கள் மூவரை பெற்றிருந்தும், அவர்களை ஒன்றிணைத்து கொண்டு செல்ல நினைப்பது, மூத்த மருமகள் முரண்டு பிடிப்பது, நல்ல உள்ளங்கள் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் இன்னல்களை அழகாக வீட்டை கட்டிபார்க்கும் போது காட்டுகிறார் ஆசிரியர்.

அது மட்டுமல்ல, தாய்மைக்கு ஈடானதொரு மாற்று ஜனனம் நம் மனித குலத்தில் இனி இல்லை. அவளின் மற்ற பரிமாணங்களை அளந்து விடலாம்.தாய்மைக்கு அந்த அளவுகோள் இல்லை என்பதுதான் அனைவ ராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடுகிறார்.

தாய்மையின் சிறப்பாக இந்த நாவலை வடித்திருக்கிறார். புவி.உமா சந்திரன், இந்த நாவலுக்கு அணிந்துரை செய்திருக்கிறார்.