
நட்பெனும் நந்தவனம்
கட்டுரைகள்
ஆசிரியர் இறையன்பு
கற்பகம் புத்தகாலயம்
இரண்டாம் பதிப்பு மார்ச் 2020
பக்கங்கள் 448
ஆசிரியர் இறையன்பு சிறந்த புத்தகங்கள் பல எழுதி இருந்தாலும் இந்த புத்தகம் தனியான சிறப்புடையது. ஏனெனில் அவரின் முதல் கட்டுரையில் முதல் வரியே இப்படி எழுதுகிறார்.
” நட்பு மனிதத்தின் உச்சம். உறவுகளின் உச்சம்” என்று.
முழுக்க நட்பைப் பற்றியே அலசும் முதல் நூல் இதுவாகவே இருக்க முடியும் என்று அனுமானிக்கிறேன் என அவரே முன்னுரையில் எழுதி இருக்கிறார். இந்த நூலை வாசித்த பிறகு நண்பர்களை இன்னும் நெருக்கமாக தங்கள் தோள்களோடு இறுக்கிக் கொண்டால் அதுவே இதற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும் என்கிறார்.
நம்மால் தேர்ந்தெடுக்கப் படும் பெருமைக்குரியது நட்பு மட்டுமே . திருமண உறவு கூட பெற்றோர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு. அப்பேர்ப்பட்ட நட்பு எப்படி இருக்க வேண்டும்?. யார் சிறந்த நண்பர்? எப்படித் தேர்ந்தெடுப்பது ? என்று மிக எளிமையான வார்த்தைகளில் சிறப்பாக 70 கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரைக்கு முன்பும் ஒரு அழகான , மனதைக் கவரக்கூடிய மேற்கோள்கள் சொல்லி பிறகு நட்பினைப் பற்றி எழுதுகிறார். அடுத்தடுத்து நாம் படிக்கப் படிக்க இதுபோல் நட்புடன் நாம் இருக்கிறோமா என்று யோசிக்கவும், எக்காலத்திலும் நட்பை தொடர வேண்டும் என்ற உறுதியையும் ஒவ்வொரு கட்டுரையும் ஆணித்தரமாக எடுத்துச் சொல்கிறது.
நட்பைப் பற்றி அவர் சொல்லும் வாசகங்கள்
நட்பு எந்த கும்மிருட்டையும் விடிய வைக்கும் வெளிச்சக் கீற்று. எந்தத் தடையையும் உடைய வைக்கும் துணிச்சல் காற்று.
நட்பு பார்வையால் மலர்ந்து சொற்களால் முதிர்ந்து செயல்களால் உதிர்ந்து சுவை கூட்டும் அமுதக் கனி.
நட்பு ஆயுளை அதிகரிக்கும் அபூர்வ லேகியம். அளவின்றி உண்டாலும் உபத்திரவம் செய்யாத உன்னத மாமருந்து.
நட்பு நாமாகத் தேர்ந்தெடுக்கும் அட்சய பாத்திரம். அதற்கு நம் இதயமே சாட்சி, புன்னகையே சடங்கு, பகிர்தலே சம்பிரதாயம், பாசமே அட்சதை, நல்லெண்ணமே கெட்டி மேளம், உதவியே பதிவுப் பத்திரம்.
எளிய மனிதர்கள் தோழன் என்று சொன்னால் உருகிப் போய் விடுவார்கள். அது பொதுவுடைமையின் அடையாளம் , ஒற்றுமையின் சாசனம்.
நல்ல நண்பர்கள் இருப்பவர்களுக்கு மனவியல் வல்லுநர்களைத் தேடி போகிற அவசியம் ஏற்படுவதில்லை. அவர்கள் நம் கவலைகளை போக்கும் மருந்தாவார்கள்.
நண்பன் அருகில் இருந்தால் போதும், அசுர பலம். அவன் மௌனமாக இருந்தாலும் உள்ளத்தை வாசிக்க முடியும். அவன் வெறுமனே தோள்களைத் தொட்டாலே நம் கவலைகள் கரைந்து போய் நம்மை இளைப்பாற வைத்து விடும்.
நான் ரசித்த சில மேற்கோள்கள்.
உனக்கு நீயாகவே இருக்க முழு சுதந்திரம் அளிப்பவனே நண்பன்.
ஐம்பது எதிரிகளுக்கு மாற்று மருந்து ஒரு நண்பன்.
நட்பு எப்போதும் இனிய பொறுப்பு. ஒரு போதும் வாய்ப்பு அல்ல.
இயற்கையின் தலைசிறந்த படைப்பு நண்பன்.
நண்பன் உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் பரிசு.
இந்த உலகத்தில் நம்மைச் சூழும் தனிமையை நட்பால் நிரப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகின்றது என முடிக்கிறார்.
