நீர்வழிப் படூஉம்நீர்வழிப் படூஉம் புத்தக விமர்சனம் -பா.முத்துக்குமரன்
ஆசிரியர்-தேவிபாரதி, பக்கங்கள்-224, விலை-ரூ.220, பதிப்பகம்-தன்னறம் நூல்வெளி,குக்கூ காட்டுப்பள்ளி,புளியானூர் கிராமம், சிங்காரப் பேட்டை-635 307,கிருஷ்ணகிரி மாவட்டம், முதல் பதிப்பு-2022.
வாழ்க்கை எந்த படைப்பையும் விட மகத்தானது என்கிறார் நூலாசிரியர்.
வாழ்க்கையே படைப்பாக்கி அவர் தந்துள்ள நாவல் இது.குடிநாவிதர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட புதினம்.கதையின் மாந்தர்களை வறுமை வாட்டுகிறது, வாழ்க்கைச் சுழலில் சிக்கி அலைக்கழிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வாழ்வை அதன் போக்கில் (ஆற்றின் வேகத்தோடு மிதந்து செல்லும் படகு போல) எதிர்கொண்டு சிறு சிறு சந்தோஷ அனுபவங்களையும் பெறுகிறார்கள்.
கதைச் சுருக்கம்:
கோவை மாவட்டத்திலுள்ள உள்ள உடையாம்பாளையத்தில் வாழ்ந்து கெட்டு ஒருதனி மனிதனாய் இறந்து போன காரு மாமாவின் இறுதிச் சடங்குச் செல்கிறான் ராஜசேகரன் (ராஜன்).காரு மாமாவின் காரியங்கள் வரை நீளூம் கதையில் கடைசி வரைப் பயணிக்கிறான்.பெரியம்மா, அம்மா (பெரியம்மாவின் தங்கை), அத்தை. அத்தை மகன், மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களது ஆசாபாசங்களை அவர்களது மொழியில் பேச வைத்து கதையை தொய்வின்றி நகர்த்துகிறான். ஓடிப்போன காரு மாமாவின் மனைவியும் ராஜனின் அத்தையுமான ராசம்மா, மகன் சுந்தரம், மகள் ஈஸ்வரியுடன் இறப்பு வீட்டுக்கு வருகிறாள். குடும்பத்தினர் ஆரம்பத்தில் முகம் சுளித்து ஆளுக்குஆள் திட்டிதீர்ந்தாலும் இறுதியில் ராசம்மாவை அன்போடு அரவணைத்துக் கொள்கின்றனர். காரு மாமா விட்டுச் சென்றிருந்த உலோகத் தண்டுகள் (தாயக் கட்டை) கிடைக்கிறது. குடும்பத்தார் தாயம் விளையாடுகின்றனர். ராஜனின் அம்மாவும் அத்தையும் ஓரணி. விளையாட்டின் ஒரு கட்டத்தில், ‘நீ ஒரு ரண்டப் போட்டு ஆட்டத்தச் செயிச்சுக்குடு.எம் பயனுக்கு ஈஸ்வரியக் கட்டி வெச்சு எம்பட ஊட்டுக்கு மருமகளா கொண்டு போயி வெச்சுக்கறெ’ என்கிறாள் ராஜனின் அம்மா முத்து.அந்த சிறு உலோகத் தண்டுகளின் மீது தன் முழு வாழ்வையும் பணயம் வைத்து அவற்றை உருட்டி வீசினாள் ராசம்மா என்று முடிகிறது நாவல்.
கருத்தின் ஆழம்: கதை மாந்தர்களிடம் மனிதர்களிடம் இயல்பாய் காணப்படும் வன்மம், கோபம், குரோதம் ஆகிய குற்றங்கள் இல்லாமல் இல்லை.யாரும் அபூர்வப் பிறவிகளாய் அவதாரப் புருஷர்களாய் படைக்கப்படவில்லை. நாவலில் வருவோர் அவர்களின் அத்தனை தவறுகளுக்கும் மன்னிக்கப் படுகிறார்கள். அனைத்துக் குறைகளோடும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆழமான இக் கருத்து நாவலில் எதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காரு மாமாவின் குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் இதுதான்.
 நடையின் தனிச்சிறப்பு:
1. கண்களை மூடி அடியாழங்களில் மண்டியிருந்த காலத்தில் கொழகொழப்பான சேற்றில் புதைந்து கிடந்த நினைவுகளைத் தேடத் தொடங்கினாள் அம்மா. 2. உடையாம்பாளையத்தில் யாருமற்ற அந்த வீட்டில் யாருமற்றதாகக் கிடந்தது காரு மாமாவின் சடலம். 3.செலம்பாள் பெரியம்மா கிழித்துப் போட்ட (பிரசவம் பார்த்த) குழந்தைகளை அவர்களது நாற்பது ஐம்பதுகளில் கூட அவளால் அடையாளம் காண முடியும். 4.’எங்கு மச்சானுக்கு திமுறப் பாத்தீங்களா மாமா! நா சாவித்திரியாமா, நீங்க செமினிகணேசனாமா’ என ராஜனிடம் சொல்லிவிட்டு வெட்கம் தாளாமல் தவித்தாள் சாவித்திரி. 
 முக்கிய சிறப்பம்சங்கள்:

கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் வரும் ‘நீர்வழிப் படூஉம் புணைபோல’ என்ற வரியின் முன் பாதியைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நாவல். ராசம்மாவின் தாயக்கர உருட்டலில் அவளுக்கு ‘ரெண்டு விழுந்தா’ என்று சொல்லாமலே நாவலை நிறைவு செய்துள்ளார் ஆசிரியர். வாழ்க்கையே நம்பிக்கையில்தானே நகர்கிறது! சாதிய அடக்குமுறைகள், பூசல்களுக்கு நாவலில் இடமிருந்தும் அது போன்ற நிகழ்வுகளை நூலாசிரியர் மறந்தும் எந்த இடத்திலும் காட்சிப்படுத்தவில்லை.சமூகத்தில் நிஜத்தில் இது சாத்தியேமே இல்லை,திட்டமிட்டு தவிர்க்கப்பட்டது என்று ஒருசாரார் விமர்சனம் செய்துள்ளனர். குடிநாவிதன்-பண்ணையக்காரர்கள் இடையிலான உறவின் வலுவை நாவலில் இரு இடங்களில் சுட்டிக்காட்டி விமர்சனங்களுக்குஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்பதே என் கருத்து.

அந்த இடங்கள் வருமாறு காருவுக்கு பெரிய தேர் கட்ட வேண்டும். ‘செலவப் பத்தியெல்லாம் ஒருத்தனுங் கவலைப் பட்டுகிட்ட இருக்காதீங்கடா. அது எங்க மொறதான பின்ன’ என்றார் தெக்குவளவுப் பண்ணாடி. இதையடுத்து காருவை காடு சேர்க்கும் சடங்குகள் பெரும் கொண்டாட்டமாக மாறின.கால்நடையாகவே காரு மாமாவின் தேரைப் பின் தொடர்ந்து காடு வரை வந்து அடக்கம் முடியும் வரை இருத்து விட்டுப் போனார் கொற்றவேல் கவுண்டர். உடையாம் பாளையம் தவிர்த்து பழநி, வெள்ளக்கோயில், தாராபுரம், ரங்க பாளையம், நாச்சிபாளையம், வேம்படிதாளம், லோகநாதபுரம், மயில் ரங்கம், கஸ்பாப் பேட்டை உள்ளிட்ட கொங்கு மண்டல ஊர்களில் நாவல் பயணம் செய்கிறது. வழக்கொழிந்து போன வட்டார வழக்கு பேச்சு மொழியை ஆங்காங்கே நுட்பமாகக் கையாண்டுள்ளார் ஆசிரியர். உதாரணம்-ஈயக்குண்டா, ஈர்க்குச்சி, ஓட்டாஞ்சில், ஒரத்தெண்ணெய்,பொடக்காணி, தொரப்புக் குச்சி. 2023-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது இந்த நாவலுக்கு கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பு.
படாத கதைகளையே (சிரித்து மகிழும்) கேட்க விருப்பம் உள்ளவரும் பெரியம்மாவிடம் நூற்றுக்கணக்கான படாத கதைகளைக் கேட்டவருமான நூலாசிரியர் நமக்கு தந்திருப்பது பட்ட கதை (வாழ்வின் துயரம் தோய்ந்த அனுபவங்கள்).