ஐயனாரின் மௌன வெளி!

*********************************

நூலின் பெயர் : அய்யனாரின்  மௌன வெளி

 

எழுதியவர்        : அனந்த் ரவி

பதிப்பகம்           :பிறகு பிரசுரம்(A unit of Zero  egree publishing)

வெளியிட்ட ஆண்டு :2024

விலை                   :₹260

பக்கங்கள்           : 210பக்கங்கள்.

 

 

தலைப்பே  ஒரு கனத்தை ஏந்திக் கொண்டு நிற்கிறது. இதனுடைய நடை பழைய எழுத்துலக பிரம்மாக்களை நினைவூட்டியது. 

இரவுநேர நதியின் அசங்காத நீரோட்டம் போல அலுங்காத நடை.

ஆசிரியர்  அனந்த் ரவி  (ARavi )  நமக்கு மிகவும்  பரிச்சயமானவர்.  இவருடைய ஸீரோ டிகிரீ இவக்கியவிருது பெற்ற நாவல் தான் இது .ஆசிரியரின்  இசையார்வமும் வாசிப்பின் மீதான காதலும் நாவல் முழுக்க திவலைகளாக தெறிக்கின்றன.  

வாசகன் யூகிக்காத முடிவைத் தந்து தானொரு தலைசிறந்த எழுத்தாளர் என்று முத்திரையை பதித்துக் கொண்டு விட்டார்.

  சுருக்கமாய் ஒரு பறவை.பார்வை …!      

                ரம்யா – புதுயுகப் பெண்.அரவிந்தன் –  பாரம்பரியத்தை எதிர்க்கும் கர்னாடக பாடகன்இவர்கள் எப்படி எங்கே சந்திக்கிறார்கள்?  இவர்களுக்கிடையே காதல் மலருகிறதா? ரம்யாவின் தங்கை வேற்று மதத்துக்காரனை மணக்க விரும்பும்போது  ரம்யா அதை ஏற்றுக் கொள்கிறாளா? இறந்தே பிறந்த ரம்யாவின் அண்ணனைப் புதைத்த மௌனவெளி தனக்கான பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வை சொல்லிவிடும் என்று நம்பும் ரம்யாவின் நம்பிக்கை ஏற்புடையதா? நம்பிக்கை வெல்கிறதா  ? கூடவே கிளைக்கதையாக பயணிக்கும்  ராணுவ வீரனான பாலுவின் கதை என்ன? இதற்கான தீர்வுகளை தாழையின் மடலாய் அவிழ்க்கிறது இந்த நாவல்.

தஞ்சையில் வாழும் தாசிப்பரம்பரையின் கடைசிக்கணுவான தாசி நாகமணியினோடான சந்திப்பு ..ரம்யாவின் நேர்காணல் இயல்பாய் அமைந்து நெஞ்சைத் தொடுகிறது.அங்கே நடக்கும் இசைவேள்வி ..நாட்டியாஞ்சலி.. அந்த வயது முதிர்ந்த நாட்டியமணியின் ஆதங்கம்..அடுத்து நிகழும் பாலுவின் தாயாரின் மறைவு ரம்யாவின் தங்கையின் காதல் இப்படி உணர்ச்சிகளை  சுழற்றியடிக்கிறது இந்த நாவல். ரம்யா தன் பிரச்னைகளுக்கான முடிவுகளை இந்தப் பெருவெளியில்தான் எடுக்கிறாள் என்பதை  நாவலாசிரியர் பட்டுத்துணியின் மென்மையாய் மேன்மையாய் காட்டுகிறார்.

கூடவே மின்மினி போல வர்ணனைத் தூவல்கள் கவர்ச்சியாய் மின்னுகின்றன.

“அப்போதுதான் பூத்த காட்டுமலரைப் போலிருந்தான் அரவிந்தன்…”//மீண்டும்இந்தவரியை  படித்தேன். சாதாரணமாக பெண்ணை வர்ணிக்கும் வரியை ஆணுக்கு எழுதியதும் அம்சமாய்த்தானிருந்தது.

“விற்பதற்கு என்னைத் தவிர வேறு ஏதுமில்லையே”

ஒரேவரியில் அத்தனை   அவலமான சோகமும் கையாலாகத்தனமும் சுயபச்சாத்தாபமும் போட்டிபோடுகிறது .

“மௌனம் ஒரு பேயைப் போல தொம்மென்று கால் பரப்பி உட்கார்ந்திருந்தது.”

 வாவ்.! 

“”எப்போதுமே ஒரு வாசகன் தான் படித்ததைப்பற்றி யாரிடமாவது விவாதிக்கவே விரும்புவான் ” பாலுவின் கூற்று ஒப்புக் கொள்ளக் கூடியதே. 

வாசகன் மட்டுமல்ல படைப்பாளிக்குமே அந்த ஏக்கம் உண்டு

கதை முழுதுமே ஒரு கதாபாத்திரம் போலவே அந்த மௌனவெளி தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நாமுமே அந்த வெளியில் அமர்ந்து ஆசுவாசம் கொள்கிறோம்.என்னால் அந்த மௌனப்பெருவெளியை உணர்ந்து உருக முடிந்தது. 

இதுவே ஆசிரியரின் பெரும் வெற்றியல்லவா?

கர்நாடகப்பாடகர்கள் ஒரே வரியை ஏன் பத்து பன்னிரண்டும.முறை பாடுகிறார்கள் என்ற கேள்வி என்னைப் போன்ற ஞானசூன்யங்களுக்கு இருக்கும் ஐயத்தை போக்குகிறது ரம்யாவின் வினாவும் அரவிந்தனின் விடையும். 

விஜயா /பாலுவின் உறவை மனித நேயத்தோடு அதே நேரம் தார்மீகப் பொறுப்பும் கலந்து அவளுக்கான ஏற்பாட்டை செய்வதாக்காட்டியதில் சிறுகதையொன்று அழகியலோடு தலைகாட்டுவதை நுகர முடிந்தது.

கட்டுக்கோப்பான நடை கதையை அழகாக நகர்த்துகிறது. 

இந்த நாவல் சட்டென்று கலக்கி குடித்துவிடும் இன்ஸ்டண்ட் காபி அல்ல. 

அருமையான காபித்தூள் சூடான நீரில்கரைந்து டிக்காஷன் சொட்டுசொட்டாய் இறங்குவது போல 

இந்த நாவலும் துளித்துளியாய் மனதிலிறங்கி தண்ணீர் விடாது காய்ச்சிய பாலின் வெண்மையில் கலந்து நிறம்மாறி மணக்கும் பில்ட்டர்  காபியைப் போல இந்த ஐயனாரின் மௌனவெளி மனசுக்குள் கசப்பும் இனிப்புமாய் ப்ரமிப்பாய் கரைகிறது.

வாழ்த்துகளும் நன்றியும். 

அருமையான எழுத்தை தரிசித்த அலாதியான அனுபவத்தை தந்தமைக்கு. 

மனமார்ந்த பாராட்டுகள்.