![Routemybook - Buy Kottaipurathu Veedu [கோட்டைப்புரத்து வீடு] by Indra Soundarrajan [இந்திரா சௌந்தர்ராஜன்] Online at Lowest Price in India](https://routemybook.com/uploads/productImage/product1515044647.jpg)
புத்தகம் : கோட்டைப்புரத்து வீடு
ஆசிரியர் : திரு. இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் : திருமகள் நிலையம்
பக்கங்கள் : 272
விலை : ரூ.205/-
பதிப்பு ஆண்டு : 2015
ஆனந்த விகடனில் பிரபலமான தொடராக வெளியாகி திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது “கோட்டைப்புரத்து வீடு”.
சமஸ்தானங்களின் செயல்பாடுகள், ராஜாக்களின் அடக்குமுறைகள், அடிமைப் பரம்பரைகள், பெண்கள் அனுபவித்த சித்திரவதைகள், விடுதலைப் போராட்ட காலம் என அனைத்தையும் கண்முன்னே விவரிக்கும் நாவல்.
கோட்டைப்புரத்து சமஸ்தானத்திற்கு ஒரு வினோதமான சாபம் உண்டு. அதன்படி சமஸ்தானத்திற்கு பெண் வாரிசுகள் பிறப்பதில்லை. பிறக்கின்ற ஆண் வாரிசுகளும் அவர்களது முப்பதாவது வயதில் இறந்து விடுவர்.
விசு என்ற விஸ்வநாத ரூபசேகர கோட்டைப்புரத்தான் சமஸ்தானத்தின் இளைய வாரிசு. கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா என்ற அழகான இளம்பெண்ணை காதலிக்கிறான். அர்ச்சனா கோடீஸ்வரர் காசிநாதனின் ஒரே மகள். தன் காதலன் விசுவும் முப்பது வயதாகும் போது இறந்து விடுவான் என்று அறிந்த அர்ச்சனா அதிர்ச்சியடைகிறாள்.
சமஸ்தானத்தின் சாபத்தையும், அதன் பின்னிருக்கும் மர்மங்களையும் ஆராயத் தொடங்குகிறாள். விஷ்ணுசித்தன் மூலமாக சாபத்தின் பின்னணியை அறிந்து கொள்கிறாள். அதைத் தொடர்ந்து நடக்கும் சதிகள், சூழ்ச்சிகள், மரணங்கள் ஆகியவற்றைக் கடந்து, மர்ம முடிச்சுகளை அவிழ்த்து சமஸ்தான வாரிசான தன் காதலனைக் காப்பாற்றுகிறாள். அழகு, அறிவு, தைரியம் நிறைந்த நாயகி அர்ச்சனாவின் துணிகர செயல்களால் ஈர்க்கப்பட்ட கல்லூரி மாணவிகள் அனைவரும் விரும்பி வாசித்த தொடர் கோட்டைப்புரத்து வீடு.
சமஸ்தானத்தின் வரலாறு, பொருத்தமான பெயர்களுடன் கூடிய கதாபாத்திரங்கள், விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த கதையின் ஓட்டம் ஆகியவற்றில் வாசகர்களின் மனம் லயித்துப் போவதில் ஆச்சரியமில்லை.
நூறுகுடி கூட்டத்தின் அடிமை வாழ்க்கை முறை, வீர நாட்டாருக்குத் தரும் மரியாதை, பெரிய திருமேனித்தேவரின் ராஜ விசுவாசம், கார்வார் கருணாகரமூர்த்தி, தில்லைநாயகம், நண்டுவடாகன், வஞ்சியம்மா ஆகியோரின் உளவியல் அழுத்தங்கள், ரத்னாவதி, பாண்டியம்மாள், திவ்ய மங்களாம்பிகை, வளையாம்பிகை என வரிசையாக சமஸ்தான ராணிகளின் நிலை, மரணபயத்தில் தவிக்கும் நாயகன் விசு, அவனைக் காப்பாற்றப் போராடும் அர்ச்சனா என நூறு வருட வரலாற்று உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள நாவல்.
ஒவ்வொரு அத்தியாயமும் திடுக் திருப்பங்களுடன் வாசகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறது. பெண்ணின் சாபத்தால் வீழ்ச்சி அடையும் சமஸ்தானத்தை ஒரு பெண்ணே காப்பாற்றுகிறாள் என்பதுதான் நாவலின் சிறப்பு. பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் கோட்டைப்புரத்து வீடு.
அதிகமான கதாபாத்திரங்கள், மர்மங்கள் இருந்த போதிலும் குழப்பமின்றி, வாசிப்பவர்கள் எந்த இடத்திலும் யூகிக்க முடியாதபடி கதையை மிகச் சாமர்த்தியமாக நகர்த்திச் செல்கிறார் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். இது அவருக்கே உரிய சிறப்பான பாணியாகும்.
“மனிதனை மனிதன் அடிமைப்படுத்துதல் கூடாது. பெண்ணை போகப் பொருளாக நினைத்தல் கூடாது” என்ற இரண்டு ஆழமான கருத்துகளை வலியுறுத்தி விறுவிறுப்பான மர்ம நாவல் எழுதுவது அசாதாரணமான காரியம். திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் கோட்டைப்புரத்து வீடு நாவல் .
இரா. சைலஜா சக்தி
