Language தமிழ்
Publisher Pustaka Digital Media
Release date Jan 27, 2024
ISBN 6580173110626
தீபன் (டி என் ராதாகிருஷ்ணன்) எழுதிய “கடைசி குரு” நூல்.
தீபன் ஒரு தமிழ்த்தச்சன். நேரம் ஒதுக்கி, திறமை பதுக்கி, தமிழைச் செதுக்கி வார்த்துள்ள வார்த்தை மாலை இந்த நூல்.
இவரைப் போல கவிதை நடையில் வரலாற்று நூல் எழுத நினைப்போர்க்கு இவர் முதல் குரு.
இனி இவர் படைப்புகள் பற்றி சில வரிகள். இந்த வரிகள் வருடும். நெஞ்சம் திருடும். அது திண்ணம். எல்லாம் தீபன் கைவண்ணம்.
நான் பூதனை பேசுகிறேன்:
“சந்தோஷ சாகரத்தின் சங்காகி விட்டேனடா! வைகுந்த லோகத்து வாசப் பரவலாக நான்! “
“கண்ணனைத் தவிர யாருக்கும் தெரியாது அன்று தான் நான் உயிர்த்தேன் என்று! “
இவருக்கு மட்டும் எப்படி எல்லாம் தெரிகிறது என்று முதல் கதையிலேயே தொடங்கியது எனது சந்தேகம்… ஆச்சரியம்…!!
இறுதிச் சந்திப்பு:
‘இங்கே இத்தனை வீடுகளிலும் நான் திருடித் திருடிக் கை நனைத்தவன். இல்லை நெய் நனைத்தவன்… (மைநேஹி மாக்கன் காயோ மய்யா மோரே) “
மை தடவி பின்னர் நெய் தடவி எழுதிய வரிகள்
தந்தை யார்:
“சந்ததிச் சரடை சாத்தியம் ஆக்கும் சந்நிதி அவரே,. தந்தை என்பவர்”
சீரிய விளக்கம்.
தேவகிக்கு வந்த தெளிவு:
“இவன் மனதைப் படிப்பவன். மறைக்கவே முடியாது எதையும் இவனிடம்” – மறைபொருள் பற்றி மறைக்காமல் சொல்கிறார்.
குசேல கீதை:
“வறுமையும் ஏழ்மையும் பொங்குமிடம்.. வயிறின் கேள்விகள் தொங்குமிடம்… வாழ்வின் ஒளியே மங்குமிடம் “
வேறென்ன வேறென்ன வேண்டும்…
தாய்மைப் பசி:
“பழியில்லாது வாழ வேண்டி வேறு வழியில்லாது நான் செய்த பாவமிது கர்ணா”
(நமக்குத் தெரிந்த சிவாஜி கணேசன் கண் முன்னே கண் சிவந்து)
“கபடு இல்லாத பாத்திரத்தில் விழுந்த கதிரவ அமுதம்”
கர்ணனை வர்ணித்த இவருக்கு கர்ண குண்டலம் தானே வரும்…
வார்த்தையில் வடித்தார் தீபன். தமிழ் கோர்த்ததைப் படிப்போர் இனி ஆயிரம். இந்நூல் இனி பாயிரம்.
மறை விழி:
“இனி நான் கண்ணழகியல்ல காந்தாரி’
ஒளி பாய்ச்சும் ஓவிய வரிகள்
கீதை பிறந்த கீர்த்திப் பொழுது:
” இவர்களின் பாடை நிழலில் நாங்கள் பட்டம் சூட்ட வேண்டும்’
தொடர்ந்து தொடுக்கும் கேள்விக் கணைகள்
அக(ழ்) விழி
“நெஞ்சத்தின் ஆழத்தில் நிறுத்தி வைத்ததை மூடிய விழிகளால் எப்படி மோப்பம் பிடித்தீர்கள் அக்கா”
முகவிழி தானே மூடிக் கொண்டது இதை வாசிக்கும் போது…
வியாச கீதை:
“சாவின் சாம்ராஜ்யம்
சவங்களின் சந்நிதானம்
சடலங்களின் சமுத்திரம்”
விவரணை மழையில் வயநாடு நிலச்சரிவு போல நாம் அமிழ்ந்து காணாமல் போகிறோம்.
“புதிர்கள் தாம் அந்தப் பூரணனின் வசீகரம்
அதை அவிழ்ப்பது தான் ஆன்மீக ருசிகரம்”
இவர் விளையடினால் நாம் தோற்போம். நமது நேரத்தை மனதை… இது உறுதி. தமிழ் கலந்து உள்ள இவர் குறுதி.
கடைசி குரு:
“சாயாத உறுதி சரியாத சத்தியம்
சஞ்சலப் படாத துல்லியம்
சம்சயத்துக்கு இடமளிக்காத பவித்திரம்” அது தானே பீஷ்மர்..
இதற்கு மேல் என்ன வேண்டும்?
ஓராயிரம் நாமம் உருவான நேரம்:
“அன்புப் படுக்கை அதன் மேல் அன்பின் கிடக்கை. குருதி வாசம் போல் கோவிந்த வாசம் குறுகுறுத்தது”
வாசிக்கும் போது மனம் பதைத்தது. தானே அது கதைத்தது… வேறென்ன சொல்ல..
“காமம் தெய்வீகம்
மனைவியும் கணவனும்
மனமொப்பி மடலவிழ்க்கும்
மகத்துவ மாண்பு அது”
இவர் எழுதிய எதற்கும் தேவையில்லை சென்சார். உள் வாங்கும் நமது சென்சஸ்.
தீப நகரம் திருவண்ணாமலையின் தீபம் – தீபன் ‘கடைசி குரு’ நூல் முழுவதும் தமிழ்த்தீபமாய் திரியாய் ஒளிர்கிறார்
நெஞ்சமெலாம் ஆன்மீகத் தமிழ் வெளிச்சம். ..அதன் பிரகாசம் குறைவதற்குள் ஏற்றினேன் இங்கே ஒரு கனிந்துரை தீபம். சுட்டும் விழிச்சுடர் பற்றி எரியட்டும் பாரெங்கும்
கவலையெனும் இருளில் மூழ்கி இருப்பவர் கண்ணனின் அருள் பெற்று ஒளிரட்டும்…
அவர்தம் வாழ்வு மிளிரட்டும்..
இந்த நூலின் சப்தரிஷி லாசரா அணிந்துரை மூன்று முறை வாசித்து பின்னர் தான் நூலுக்குள் சென்றேன்.
இது நூல் அல்ல. தமிழாடை. தமிழோடை.
நனைந்தவர்கள் துவட்டிக் கொண்டாலும் தமிழ் அங்கே ஒட்டிக் கொண்டு இருக்கும்.
இந்த நூலை வாங்கிப் படித்தோர் பாவம் தானே தொலையும். புண்ணியம் தேடி உங்களுக்காக அலையும்….
பாமரன்
பணிவன்புடன்
பாலசாண்டில்யன்

இந்தப் புத்தகம் நானும் படித்துச் சிலிர்த்திருக்கிறேன்.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike