வாழத்தானே வாழ்க்கை.

Ananyas Nana Nani Homes on X: "Mr A.K. #Varadarajan presented a #LiteraryTalk on #Kamba #Ramayanam on 9th November at #NANANANIHOMES, Coimbatore. #kambaramayanam #ramayanamstory #kambar #Literary #DevotionalTalk #DevineTalk #NanaNaniLifestyle ...

 

 சீனியர் சிட்டிசன் குடியிருப்பு ஒன்றிற்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தனர்.அங்கு எல்லோருமே 60 வயதைத் தாண்டியவர்கள். சில பேர் 90க்கும் மேல்!  சுமார் அறுபது,அறுபத்தைந்து பேர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். சிலர் தனியாகவும்,சிலர் தம்பதியினராகவும்! எல்லாமே பிளாட் மாதிரி இருந்த குடியிருப்புகள். சிலர் சொந்தமாக வாங்கியும் சிலர் வாடகைக்கும் இருந்தார்கள். கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அங்கு இருப்பதாகச் சொன்னார்கள். க்ளப்,யோகா, மருத்துவ வசதி, உணவு வசதி, விளையாட்டு, இப்படி இன்றைய காலத்தில் சீனியர் ஹோம்ஸ்க்கு என்ன வசதிகள் தேவைப்படுகின்றனவோ எல்லாமே அங்கு இருந்தன.எல்லோரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

Onam 2023 in Phase 4, Ananya’s Nana Nani homes, Coimbatore.ஒரு மணி நேரக் கூட்டம் முடிந்த பிறகு, அங்கே அவர்களுடன் கொஞ்ச நேரம் செலவழிக்க முடிவு செய்து தனித்தனியாகப் பலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அநேகமாக அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அல்லது இங்கேயே வெளிமாநிலத்தில் சில பிள்ளைகள். சிலருக்கு பிள்ளைகளின் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போக முடியவில்லை. இந்த காரணங்களுக்காக பிள்ளைகள் செலவழித்தோ, அல்லது தங்கள் பணத்திலேயோ இப்படி சீனியர் லிவிங்கில் வசிப்பதை இவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

 ஆனால் மொத்தமாகப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தவர்கள் பலர் தனியாகப் பேசும் போது வேறு மாதிரி இருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் பேச்சில் அடி மனதில் ஒரு கோபம் வருத்தம் இருந்தது. பிள்ளைகள் தங்களுடன் இருந்து தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லை. அல்லது பெற்றோருடன் இருப்பதைவிட, வெளிநாடு, பணம், தன் வாழ்க்கை, தன் சுகம் இவை தான் அவர்களுக்கு முக்கியமாகப் போய்விட்டது என்கிற மனத்தாங்கல் இருந்தது. நேரிடையாகச் சொல்லவில்லையே தவிர பொதுவாக, அல்லது கிண்டலாக, அல்லது ஜோக் அடிப்பதைப் போன்று இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் பேச்சில்  வந்து விழுந்தன.

 இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் மனதில் தான் சுமையாக அழுத்துமே என்று எனக்குள் தோன்றியது. சரியா தவறா என்கிற மனதைத் தாண்டி நாம் வளர்த்த பிள்ளைகள் நம் ரத்தம் நம்முடைய பந்தம் பாசம் இவற்றை முன்னிறுத்தி பார்த்தால் இவ்வளவு வருத்தமும் கோபமும் வராது என்றும் தோன்றியது.

அன்பு, பாசம், பந்தம் இவற்றிற்கெல்லாம் முழுப் பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதை நம்மை நாமே ஒரு தரம் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிள்ளைகளிடம் அன்பு என்கிறோம்.  கணவன் மேல் பாசம் என்கிறோம்.பிரிக்க முடியாத பந்தம் என்கிறோம்.  ஆனால் ஒரு கருத்து வேறுபாடு அல்லது முரண்பாடு வந்தவுடன் எல்லா உணர்வுகளையும் கடந்து கோபமும் குரோதமும் தான் முன்னே நிற்கிறது.

     நீ செய்தது தவறு என்கிற குற்றச்சாட்டு தான் மேலோங்கி நிற்கிறது.  மன்னிக்கும் மனம் வருவதில்லை.  விளைவு, உறவுகள், நட்புகள் பிரிகின்றன.  அன்பும் பாசமும் காணாமல் போய் விடுகிறது.  நாம் எல்லோருமே மனிதர்கள், கடவுள் இல்லை.  ஏற்ற இறக்கங்கள் கொண்டது தான் வாழ்க்கை.  அன்புக்கும் பாசத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மனம் வந்தால் உறவுகள் நீடிக்கும்.  நட்பு பலமாகும்.  செயலைத் தாண்டி உள்ளத்தைப் பார்க்கத் தெரிந்து கொள்ளும் போது தான் வாழ்க்கை அமைதியாகிறது.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் மேல் ஒரு ஸ்தோத்திரம் சொல்வோம்.

 நீதான் எல்லாம் நீயே எல்லாம் என்னும் சரணாகதி ஸ்தோத்திரம்

त्वमेव माता च पिता त्वमेव ।
त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।
त्वमेव विद्या द्रविणं त्वमेव ।
त्वमेव सर्वं मम देवदेव ॥

இதன் பொருள்:
நீயே என் தாய், நீயே என் தந்தை, நீயே என் உறவினர், நீயே என் நண்பன், நீயே என் அறிவு, நீயே என் செல்வம்; நீயே எல்லாம், பகவானே!!

பகவான் மீது  நிபந்தனையற்ற அன்பு,  எனக்கு நீ என்ன கொடுத்தாலும் உன் விருப்பம் என்கிற சமர்ப்பணம் இந்த ஸ்தோத்திரம்.

 இதே பாவத்தை நம்முடைய பிள்ளைகள் மேலும் கொண்டு வந்து விட்டால் எண்ணங்களில் வருத்தமும் கோபமும் இருக்காது. நம்முடைய எண்ணங்கள் தான் வார்த்தைகளாகவும் செயலாகவும் வெளிப்படுகின்றன. எண்ணத்தையே சம நிலையில் வைத்துக் கொண்டால் மனக் கிலேசங்கள் எல்லாம் மறைந்து போய் அன்பும் பாசமும் மேலோங்கும்.

 நமக்கும் மனது பாரமில்லாமல் லேசாக்கி விடும். எஞ்சிய நாட்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழியும்.

சொல்லப் போனால் எந்த வயதாக இருந்தாலும், இப்படிப் பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கை சிக்கலில்லாமல் தொடரும்.

வாழத்தானே வாழ்க்கை. அதை மகிழ்ச்சியாக வாழ்வோமே!!!