
இந்த ஆடல்களும் பாடல்களும் எவ்வாறு அவற்றின் போக்கிலேயே சென்று இறை வழிபாடாகவும் பரிணமித்தன என்பது வியப்பிற்குரிய செய்தி. பாமர மக்களும் பொருள் தெரிந்து பாடும் பாடல்களைப் பல புலவர்கள் பக்திரசம் ததும்பப் பாடினார்கள். பக்தி இயக்கம் என ஒன்று துவங்கி தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் என்பன முகிழ்த்தெழுந்த காலம் அது. இறைவன் மீதான திருப்பாடல்களை சமயக்குரவர்கள் (அதிலும் முக்கியமாக மாணிக்கவாசகர்) இந்த நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவியே அமைத்தார் எனலாம்.
சிறு பெண்கள் முதல் பருவமங்கையர் வரை பறவைகளுடன் விளையாடுவார்கள், அவற்றை வளர்ப்பார்கள், அவற்றை உற்ற தோழமையாகப் பாவித்துப் பேசவும் செய்வார்கள்.
சுந்தரமூர்த்தி நாயனார் காட்டும் தலைவி வேண்டுகிறாள்: இவள், “கிள்ளைகளே! நாகணவாய்ப் பூவைகளே! எனது வளைகள் கழன்று ஓடுகின்றன; கண்கள் உறக்கம் கொள்ளவில்லை. ஏனென்றால், என்னுள்ளத்தில் குடிகொண்டுவிட்ட திருவாரூர் ஈசனை என்னால் மறக்க இயலவில்லையே! என்றென்றும் அவரை உள்ளத்தில் நினைத்தபடியே இருக்கிறேன்.
பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே?” என்கிறாள்.
(சுந்தரர் தேவாரம்)
‘நம் ஆன்மாக்கள் பெண்தன்மை உடையவை. ஆகவே அவை எப்பொழுதும் தமக்குக் கொழுகொம்பாகிய இறைவனையே பற்றிக்கொள்ளுதல் வேண்டும்’ எனும் கருத்தில் அமைந்தவை இப்பாடல்கள். குயிலும் கிளியும் அன்னமும் பெண்களுக்கு விளையாட்டுத் தோழர்கள் மட்டுமல்லாது உள்ளத்து உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் வடிகாலாகவும் என்றென்றும் இருந்துவருவதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே அடியார்கள் பறவையினங்களை ஈசனிடமும் தமது ஆன்மாவின் தாபத்தை எடுத்துரைக்க வேண்டிக்கொள்வதில் வியப்பொன்றுமில்லைதானே?
மானிடத்தோழிகளுக்குரிய சில குறைகள் வாய்திறந்து அதிகம் பேசாத இப்பறவைகளுக்கு இருக்காதல்லவா? சொல்வதனை நன்கு கேட்டுக்கொள்ளும். தம் கருத்தை அதிகப்பிரசங்கித்தனமாக வெளியிடாது!
ஞானசம்பந்தரின் நாயகி! ஈசனிடன் காதல் கொண்டு தனது தாபத்தைக் கிளியிடம் கூறுவதாக அமைந்த பாடல். அவள் எப்போதும் அவனுடைய திருநாமங்களை ஓதும்போது அது கேட்டிருக்குமல்லவா? சொன்னதைக் கிளிப்பிள்ளை சமர்த்தாகத் திரும்பக் கூறுமல்லவா? கூறியிருக்கிறது; இவளும் கேட்டு மகிழ்ந்திருக்கிறாள். ஆகவே, “சிறையாரு மடக்கிளியே, இங்கே வா, உனக்குத் தேனும் பாலும் உண்ணத் தருவேன். கீற்றுநிலாவைத் தன் சடையில் சூடிக்கொண்டிருக்கும் தோணிபுரத்து ஈசனின் பெயரை (திருநாமத்தை) எனக்குவேண்டி இன்னும் ஒருமுறை கூறுவாய்,” என்று வேண்டிக் கொள்கிறாள். அவள் வேண்டுதலை அது கட்டாயம் நிறைவேற்றியிருக்கும்தானே!
சிறையாரும் மடக்கிளியே! இங்கேவா
………………………..
துறை யாரும் கடல்தோணி
புரத்தீசன் துளங்கும் இளம்
பிறை யாளன் திருநாமம்
எனக்கு ஒருகால் பேசாயே (சம்பந்தர் தேவாரம்)
இவ்வாறு பறவைகளை முன்னிலைப்படுத்திப் பாடிய பாடல்கள் நமது தேவாரத்தில் நிறைய உண்டு.
‘வள்ளிக்கணவன் பேரை
வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
ஊனும் உருகுதடி- கிளியே!’
எனும் கிளிக்கண்ணிகள் காதில் ஒலித்துச் சிலிர்ப்பூட்டவில்லையா?
——————–
அந்நாட்களில் கிராமத்து வீடுகளின் முன்பு விவசாயம் தொடர்பான வேலைகளும் அன்றான வாழ்க்கை நிகழ்வுகளினூடே நடந்து கொண்டே இருக்கும். அறுவடை தானியங்களை வெயிலில் உலர்த்தி, வீட்டுப் பெண்கள் அவற்றை முறம், சுளகு இவற்றால் புடைத்து, கொழித்து, தூற்றி வைப்பார்கள். மாலைவரை ஓயாமல் இவ்வேலைகள் நடக்கும். அப்போது வேலையின் பளு தெரியாமலிருக்க பலவிதமான பாடல்களைப் பாடுவார்கள். அதனையே வேலையாகச் செய்யும்போது சலிப்பும் அலுப்பும் தட்டாமலிருக்க, தாம் செய்யும் செய்கைகளின் தாளகதிக்கேற்ப மனதில் தோன்றியவாறு பாடல்களை இயற்றியும், பாடியும் வந்தார்கள். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காதல்லவா?
இளம்பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இது ஒரு விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் அமைந்தது; ஏழெட்டு வயதுச் சிறுமிகளும் தங்கள் கையில் ‘முச்சில்’ எனப்படும் அழகான சிறிய முறங்களை வைத்துக்கொண்டு பெரிய பெண்களைப்போல் புடைக்கவும், நேம்பவும், தெள்ளவும், கொழிக்கவும் முயல்வார்கள். அப்போது பாடும் பாடல்களில் இறைவன் பற்றிய தொன்மங்களையும் செய்திகளையும் தொகுத்துப் பாடினார் மாணிக்கவாசகர். முறத்தைத் தட்டும் ஒலிக்கேற்ற பாடல்களாக ஈசனின் கருணையைப் பாடினார்.
“பெண்களே! உங்களுக்குத் தெரியுமா? திருமாலும் பிரமனும் எல்லா தேவர்களும் எம்பெருமானின் சிவசொரூபத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை! அப்படிப்பட்டவன் என் மனதை உருக்கினான்; என்னுடைய பணிவிடைகளை ஏற்றுக்கொண்டான் என்று அறிந்ததும் இந்த உலகத்தார்கள் ஆச்சரியப்படுகிறார்கள்,” எனத் தன்னைப்பற்றிய செய்தி ஒன்றினை அவர்களுக்குக் கூறுபவர், “வாருங்கள், நாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் கூடப்பாடித் தெள்ளேணம் கொட்டலாமே!” என்கிறார்.
‘அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும்,
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம், வந்துநம்மை
உருக்கும், பணிகொள்ளும், என்பதுகேட்டு, உலகம்எல்லாம்
சிரிக்கும் திறம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ!’
தெள்ளேணம் என்பது பெண்கள் விளையாடும் ஒருவிதமான விளையாட்டு; ஏணம் என்றால் மென்மையான மான்தோல் எனவும் ஒருபொருள்; மான்தோலால் செய்த சிறுபறை போன்ற ஒருகருவியை தட்டிக்கொண்டு பாடும் விளையாட்டு எனவும் பொருள்கொள்ளலாம். இளம்பெண்களும் முதிய பெண்களும் தாளலயத்துடன் முறத்தில் தானியங்களைத் தெள்ளியும், புடைத்தும், உடன்சேர்ந்து பாடுகின்றனர்.
இவ்வாறு பலப்பல கிராமிய விளையாட்டுகள். ஒவ்வொன்றுக்கும் பாடல்கள். அம்மானை எனவொரு விளையாட்டு. சிறுபெண்களாக நாங்கள் இவற்றை அச்சாங்கல், ஏழாங்கல் என விளையாடி இருக்கிறோம். மிகப் பண்டைக் காலத்தில் இது இன்னும் புத்திசாதுர்யத்துடன் விடுகதை போலப் பாடல் புனையும் திறமை, கண்களும் கையும் இணைந்து இயங்கும் செயல்பாடு, எப்போதும் மிகுந்த கவனத்துடன் சிந்திக்கும் முறை, ஆகப் பல முனைகளில் ஒளிரும் திறனைக் கொண்டது. மரத்தால் வழுவழுப்பாகச் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்ட உருண்டைக்காய்கள் மூன்றினை வைத்துக்கொண்டு பெண்கள் விளையாடுவது அம்மானை எனப்படும். மூன்று பெண்கள் விளையாடுவது மூவர் அம்மானை; எண்ணிக்கை கூடவும் குறைந்தும் இருக்கலாம். செல்வந்தர் வீட்டு அம்மானைக்காய்கள் உலோகத்தால் செய்யப்பட்டு, முத்து, வைரம், நவரத்தினங்கள் பதிக்கப்பட்டும் இருக்கும்!

மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை, அல்லது இறைவன் கதையை அல்லது அவன் புகழைப்பாடி வினா – விடையாக அம்மானைக்காய்களை வீசி விளையாடும் விளையாட்டே அம்மானை. முதலாமவள் பாட்டுடைத்தலைவனை மனதில்கொண்டு பொதுவான ஒரு செய்தியைக்கூறிக் காயை வீசிப்பிடித்து ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக்கேட்டுக் காயைவீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இருபொருள்படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக்கொண்டே அம்மானையை வீசிப்பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். இந்த வினாக்களும் அவற்றிற்குண்டான விடைகளும் அம்மானையை வீசும் சிலநொடிகளில் நிகழவேண்டும். சமயோசிதமும், உள்ளறிவும், புத்திக்கூர்மையும் கொண்டு புராணங்களில் நல்லதேர்ச்சியும் உள்ள பெண்களால்தான் இவ்வாறு இருபொருள்படப் பாடமுடியும். அல்லது அவர்கள் அவ்வாறு பாடியபடி அம்மானை ஆடுவதாகப் புலவர்கள் பாடலெழுதி உள்ளனர். ‘அம்மா,’ ‘அம்மானாய்,’ எனக்கூறிக்கொண்டு பாடி விளையாடுவதனால் அம்மானை விளையாட்டு எனப் பெயர்பெற்றது எனலாம்!
ஒருத்தி ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர்போடுவதுபோல ஒருசேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ பெண்ணே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள்.
‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்
நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’
அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால் வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத் தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.
‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை
வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’
அதற்கு மூன்றாமவள், “அந்தப்பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மா! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடைகூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும்பொருள் மறைந்துநிற்கிறதல்லவா?
‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’
‘பேரூரின் சிவபிரான் வேட்டுவனாகவும், வலைவாணனாகவும், பள்ளனாகவும் எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முக்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! (திருப்பேரூர்க்கலம்பகம்) பேரூர் முக்தித்தலம் ஆகும்!
இதுபோலப் பலப்பல பாடல்கள் அம்மானை ஒரு இலக்கிய வகையாகவே வளர்ந்தது. இவை உண்மையாகப் பெண்களால் புனைந்து பாடப்பட்டனவா அல்லது பெண்கள் அம்மானை ஆடும்போது பாடுவதாகக்கூறிப் புலவர்களால் புனையப்பட்டதா என அறியவாய்ப்பில்லை. நாம் அறிந்த பாடல்கள் பெண்கள் பாடுவதாகப் பல்வேறு இலக்கியங்களில் காண்பவைதாம். ஆனால் பெண்கள் இவ்வாறு ஒரு விளையாட்டைப்பாடி ஆடி மகிழ்ந்திருக்காவிட்டால் புலவர்களுக்கும், அவற்றைக் கண்டு, கேட்டு எழுத்தில் பதிவுசெய்ய வாய்ப்புக் கிடைத்திருக்காது அல்லவா? ஆகவே விளையாடும் பெண்களே இவற்றைப் புனைந்தார்களெனக் கொள்ளவேண்டும்.
வாசனைப்பொடி எனப்படும் பொற்சுண்ணத்தை இடிப்பது மற்றொரு செயல்.
சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் வீடுகளில் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகுந்த மலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, சண்பக மலர்கள், மல்லிகை, மகிழம்பூ, செம்பருத்திப்பூ, மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள். பலவிதமான சுண்ணங்கள் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடு திரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.
பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது.
ஒருவித தாளகதியுடன் இலங்கும் இப்பாடலை ஐயனுக்குப் பொற்சுண்ணம் இடிப்பதாகக் கருதி நாமும்கூட பாடிப்பார்க்கலாமே!
சுண்ணம் இடிக்கும்போது கைகால் உடல், தலை எல்லாம் ஆடுகின்றது; மார்பில் அணிந்துள்ள முத்துமாலைகள் கொங்கைகளுடன் சேர்ந்து ஆடுகின்றன; கருங்குழல் புரண்டாடுகிறது. அதில் சூடியுள்ள மலர்களை மொய்த்துத் தேனருந்தும் வண்டுகள் உடனாடுகின்றன; இதையெல்லாம் இப்பெண்கள் பொருட்படுத்தாமல் அத்தனுக்குச் சுண்ணம் இடிப்பதிலேயே கருத்தைச் செலுத்தி இருக்கிறார்கள். அவர்கள் சித்தம் சிவனோடு ஆடுகின்றது – ஆகா! பெருமானுக்குச் சுண்ணம் இடிக்கிறோம் என்னும் நினைப்பில் அவன்மேலான அந்த அன்பினால், பக்தியில் திளைத்துத் தன்னையும் மறந்து புளகாங்கிதம் கொண்டுவிட்டார்கள் இந்தப்பெண்கள். பேரானந்த அனுபவத்தில் இறைவனுடன் தனது சித்தத்தில் சிவம் நிறைந்ததால் பக்திப்பெருக்கில் கண்ணீர் துளிர்க்கின்றது. தம்மையும் மறந்து பித்தாகி இறைவனோடு உள்ளம் கலந்துவிட்டார்கள் இவர்கள்.
‘முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆட
சித்தம் சிவனொடும் ஆட ஆட
செங்கயல் கண்பனி ஆட ஆட
பித்தெம் பிரானொடும் ஆட ஆட’ என உலக்கையை உரலில் போட்டுப்போட்டு எடுக்கிறார்கள் இப்பெண்கள். இதைப்பார்ப்பதும் ஒரு அனுபவம். இதில் பங்கெடுப்பதும் மற்றோர் அனுபவம்.
இவ்வாறு சாழல் என்றொரு வினா- விடை விளையாட்டு, பூக்களைப் பறிக்கும்போது பாடும் பாடல்கள், உந்தி பறத்தல், திருத்தோள் நோக்கம், ஊசல் ஆடும்போது பாடும் பாடல்கள், கும்மி, கோலாட்டம் இன்னும் பல உள்ளன.
[அடுத்த இதழில் நிறைவுறும்]
