
ஆயிரத்தித்தொள்ளாயிரத்து எண்பதுகளில் இருந்து இரண்டாயிரம் வரை நான் கவியரங்க மேடைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய காலம். வாரக் கடைசி நாளெல்லாம் கவியரங்கம்தான். பலவிதமான கவிதைத் தலைப்புகள்; சரித்திரம், ஆன்மீகம் ,சமுதாயம், தேசியம் ,தெய்வம் என்று நூற்றுக் கணக்கான தலைப்புகள். தீபாவளி , பொங்கல், தேசத் தலைவர்களின் பிறந்த நாட்கள் என்று பாப்புலர் இதழ்களில் கவிதைகள் பிரசுரமாகும் காலம்.
நம்புங்கள்! பல தமிழ் அன்பர்கள் இல்லத் திருமணங்களில் ரிஸப்ஷனுக்கே கவியரங்கம் வைத்ததுண்டு. இன்னும் சில அன்பர்கள் நகைச்சுவைக் கவியரங்கங்கள் அமைப்பதுண்டு. பல ஊர்களில் இவை நிகழும். சென்னை பாரதி கலைக் கழகத்தின் உறுப்பினர்களான கவிஞர்கள் இலந்தை இராமசாமி, இளையவன், மதிவண்ணன் ,இளந்தேவன் ஆகியோரோடு நானும் இணைந்து பல ஊர்களுக்கு கவிதை பாடச் செல்வதுண்டு. பல இடங்களில் என் தலைமையில்தான் கவியரங்கம் நடைபெறும்.
இவ்வாறு எண்பதுகளில் தொடங்கி இருபதாண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான தலைப்புகளில் பாடல்கள் எழுதியுள்ளேன். இன்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எனது முதல் கவிதைத் தொகுப்பு “தொடமுயன்ற தொடுவானம் “ நூலில் உள்ள பல கவிதைகள் கவியரங்குகளுக்காகத்தான் பாடப்பட்டவை. உண்மையிலே கவியரங்கங்கள்தான் எங்களை அக்காலத்தில் வெவ்வேறு தலைப்புகளில் பாட வைத்தன.
அதுவும் எங்கள் குழுவில் எனக்குத்தான் கடினமான தலைப்புகள் வரும். பூக்கள் என்ற பொதுத் தலைப்பு இருந்தால் எனக்கு “அவரை பூ” என்று வரும்; வண்ணங்கள் தலைப்பில் எனக்கு “ஊதா” வரும்; நானா சளைப்பவன் !
அவரைப், பூ வாங்கிவர அனுப்பி வைத்தால்
அவரைப்பூ வாங்கி வந்தார் அப்பாவி மாப்பிள்ளை”
என்று எழுதி அரங்கில் சிரிப்பை உண்டாக்கினேன்
முந்திவரும் வண்ணங்கள் அத்தனையும் சாதா !
முதலிடத்தைப் பெறுவதுவோ என் வண்ணம் ஊதா
என்று படித்து வண்ண அரங்கில் வெற்றி பெற்றேன்.
ஒரு கலியாணக் கவியரங்கில் பெண்பார்த்தல், நிச்சயதார்த்தம், ஜானவாஸம், மாப்பிளை வரவேற்பு, ஊஞ்சல் , கன்னியாதானம், முதலிரவு என்றெல்லாம் தலைப்பு கொடுத்த அமைப்பாளர் எனக்கு “ வளைகாப்பு” எனத் தலைப்பு கொடுத்தார்.
இந்தத் தலைப்பில் என்ன எழுதப் போகிறாய் ? தலைப்பை மாற்றிக் கொள் என்றனர் நண்பர்கள். நான் மாட்டேன் என மறுத்துவிட்டேன். காரணம் அந்த நேரத்தில்தான், கருவுற்றிருந்த என் மனைவிக்கு வளைகாப்பு நடந்தது. அருகிருந்து பார்த்தவன் நான். என் தொகுப்பில் சிறந்த கவிதை அதுவாக ஆனது. அந்த நீண்ட கவிதையிலிருந்து ஒரு சில அடிகள்..
“நெஞ்சில் ஆசைகளை நேரமெலாம் சுமக்கின்றாள்
பிஞ்சுக் காலுதைப்பில் பீறிட்டு எழும் முலைப்பால்
உதிரத்தில் ஊறுகின்ற உணர்வுகளைச் சுமக்கின்றாள்
அதிர நடக்காமல் அன்றாட வேலைகளை
மாற்றம் இல்லாது மறுபடியும் சுமக்கின்றாள்
மாற்றம் காட்டுகின்ற மடி வயிற்றைச் சுமக்கின்றாள்
இந்தச் சுமையெல்லாம் போதாது என்றா நீர் –
தந்தக் கரங்களுக்கு வளைச்சுமையும் தருகின்றீர்
பரவாயில்லை இவள் பராசக்தி உருவமன்றோ !
உறவாகும் உரிமைக்கே உலகிதையும் சுமந்திடுவாள்”
இன்னொரு கவியரங்கம். புனித அனுபவம் .ஷண்மதங்கள் பற்றியது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் நடைபெறுகின்ற து. மஹா பெரியவா அமர்ந்து கேட்ட கவியரங்கம். கணபதியைப் போற்றும் காணபத்யம், முருகனைப் போற்றும் கௌமாரம், சிவனைப் போற்றும் சைவம், விஷ்ணுவைப் பாடும் வைணவம், சக்தியைப் போற்றும் சாக்தம், இறுதியில் எனக்குக் கிடைத்த தலைப்பு சூரியனைப் போற்றும் “சௌரம்” . மற்ற தெய்வங்கள் போலல்ல; இதில் தகவல்கள் கிடைப்பது கடினம். அன்றும் குருவருளால் கவிதை சிறப்பாக அமைந்தது.
இல்லை கடவுள் என்று நாத்திகம் பேசுவோர்க்கு
இருக்கிறான் இதோவென்று காட்டுகின்ற சௌர மதம்
இரவென்று இங்கே நாம் கண்மூடி உறங்குகையில்
பகலென்று கதிரவனின் பணி எங்கோ தொடர்ந்திருக்கும்
நானாவித இடங்களிலும் நாம் காணும் அருணனுக்குக்
‘கோனார்’ க்கில் மட்டும்தான் கோவில் இருக்கிறதாம்
என்ற வரிகளை மகாசுவாமிகள் மிக இரசித்தார். பிறகு அவரை சந்தித்து பிரசாதம் பெறுகையில்
“ சூரியன் பற்றிப் பேச தகவல் சேகரிக்க ரொம்ப கஷ்டப் பட்டாயா? ஆமாம் கோனார்க் கோவில் பத்தி சொன்னியே .. இனிமே நம்ம ஊர் பக்கம் இருக்கிற “தலைஞாயிறு “ பற்றியும் சேத்துக்கோ “ என்று அறிவுரை தந்தார். வேறு எவருக்கும் கிடைக்காத ஆசீர்வாதம்.
அதுபோல “கம்பம்” என்ற ஊரில் நிகழ்ந்த கந்தசஷ்டித் திருவிழாவில் நான் பாடிய முருகன் தாலாட்டு மிகப் பிரபலமானது. கோவில் நடை சாத்தும் போது இப்போதும் பாடுகிறார்கள் என நண்பர் சிலர் சொன்னதுண்டு. நான் கேட்டதில்லை.
கார்த்திகைத் திங்களிலே சரவணப் பொய்கையிலே
பாரத்துன்னை அரவணைத்தோம் பால்வடியும் ஆறுமுகா !
என்று தொடங்கும் பாடலில்
“பத்துவிரல் போதவில்லை பன்னிருகண் மையெழுத
முத்திரைப்பொன் போதவில்லை புன்னகைக்கு மொய்யெழுத
என்ற வரிகள் என்றும் பலர் பாராட்டும் வரிகளாக அமைந்துவிட்டன.
இது போலப் பல கவியரங்கங்கள். பல இனிமையான அனுபவங்கள். 1999-ல் கார்கில் போர் நிகழ்ந்த நேரம். ஒரு மாலை தொலைக்காட்சியில் கார்கில் போரில் வீரமரணம் எய்திய வீரன் ஒருவனின் சவப் பெட்டியை அவன் இல்லத்துக்கு கொண்டு சேர்க்கும் காட்சியைக் காட்டினார்கள். வடஇந்திய மாநிலம் ஒன்றில் நிகழ்ந்தது. இடம் , பெயர் எதுவும் நினைவிலில்லை. ஆனால் அன்றிரவே “பெட்டி” என்ற தலைப்பில் ஒரு கவிதை உருவானது.
பெட்டி
பெட்டி ஒன்று வந்தது-மனம்
பேதலித்து நின்றது;
எட்டிப் பார்த்த பெண் விழியின்
இமையும் நீரில் கனத்தது.
சுற்றி நின்ற பெரியவர்கள்
சொல்லிழந்து நின்றனர்
உற்றவர்கள் ஓலமிட்டு
ஒரு குரலில் அழுதனர்.
பெட்டி மீது அலங்காரம்
பெட்டியோ ஆறடி நிளம்;
கட்டி வைத்த மாலை மீதும்
களை இழந்த பூக் கோலம்.
உடுப்பணிந்த வீரர்கள்
ஓரணி வகுத்தனர்
எடுத்து வந்த பெட்டியை
எதிர் இறக்கி வைத்தனர்.
அன்னை கையைப் பற்றி நின்ற
ஐந்து வயதுச் சிறுவனோ
அன்னை கை விலக்கியே
அருகு சென்று பார்த்தனன்.
தந்தை விட்டுச் சென்ற தொப்பி
தனை எடுத்துத் தலையிலே
வைத்துப் பார்த்து மகிழ்ந்தனன்
வாழி அன்னை பாரதம்
சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில் தேச வீரரைப் போற்றும் நிகழ்ச்சி ஒன்றில் இதைப் படித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய போது, எனது நண்பர் பேராசிரியர் மின்னூர் சீனிவாசன் அவர்கள், அரங்கில் அமர்ந்துகொண்டு கேட்கும் பொழுதே என் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்னிடம் அளித்தார். அக்கணம்தான் எத்தனை பரவசம் என் உள்ளத்தில் ! இதோ அந்த மொழிபெயர்ப்பு
The Proud Coffin
To my great dismay
There came the coffin proud
Bearing Martyr’s frame in shroud
Dear Mistress of the Martyr brave
Stood
Heavy with tears brimming in
Her eyelids
All the elders around
The agony knowing no bound
Stood speechless, pensive!
Kith and kin of the soldier
Were sobbing helpless
The six feet coffin
In the annals entering in
Was decked in garland, ceremonial,
One withered finally colorless
The soldiers in uniform
Stood in solemn state.
Stood the Martyr’s wife still in
Wordless agony
Her five-year-old son
Of the soil brave
Looked at his father’s body
Embodying fame and sacrifice
Took the cap and put on
His head!
We hail Mother India !
( Translated by Mr.Minnur Srinivasan )
கவிதைகள் எழுதி அவை இதழ்களில் பிரசுரிக்கப்படும் போதும் அவற்றைப் பிறர் பாராட்டும் போது நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் கவியரங்கங்களில் கண்ணெதிரே பெரும் கூட்டமாக இரசிகர்கள் கேட்டு இரசித்து கரவொலி எழுப்பும் கணங்கள் ஒப்பற்றவை. அதில் கிடைக்கும் பரவசம் போல வேறேதும் கிடையாது.
இரசிகர்களோடு நேரில் கலந்து உறவாடும் இந்த சூழலின் இன்ப மயக்கம்தான் என்னை ஒரு பேச்சாளனாக மாற்றியதோ என்று இப்போது நினைக்கிறேன். பேச்சோ எழுத்தோ இலக்கிய இரசனை என்பது இரசனைகளின் மணிமகுடம்.
