புத்தகம் : தமிழதிகாரம் ( குறுங்காப்பியம்) – குவிகம் பதிப்பகம்
எழுதியவர் : “தமிழ் இலக்கிய மாமணி” துரை.தனபாலன்
பக்கங்கள் : 130
விலை : ரூ.150
நான் தமிழ் இலக்கியம் படித்தவனில்லை. அறிமுகம் மட்டுமே பெற்றிருக்கிறேன். தமிழ் இலக்கணம் படித்ததும் பள்ளிப் பருவத்தோடு முடிந்த கதை. கவிதை இலக்கணத்தின் அறிமுகம் மட்டுமே அப்போது பெற்றேன். அதுவும் கால வெள்ளத்திலும், தொடர்ந்து முறையான தமிழ்ப் பயிற்சி இல்லாததாலும் அழிந்தொழிந்து விட்டது. எஞ்சியது தமிழ் மேல் ஒரு தலைக் காதலும், இருக்கும் தமிழை வைத்துக்கொண்டு எழுதிப் பார்க்கும் தைரியமான பழக்கமும் மட்டுமே.
அதனால் துரை தனபாலனது காவியத்தைப் படிக்கவே தகுதியுடையவனில்லையோ என்ற பயத்துடன்தான் “தமிழதிகாரம்” என்ற இந்த உயரிய படைப்பை படிக்கத் தொடங்கினேன். எவ்வளவு உயர்ந்த காவியமாக இருந்தாலும், என் போன்றோர்க்குப் புரிய வேண்டுமே !
ஆனால் இந்த படிப்பனுபவம் முற்றிலும் எதிர்பாராத ஆனந்த அனுபவமாக இருந்தது.
இலக்கியம் என்றால் உயரிய இலக்கை நோக்கி பயணிக்கும் படைப்பாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை மனதினில் வைத்து, மிக அருமையான இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் நண்பர் துரை தனபாலன். இதைப் பதிப்பித்ததில் குவிகம் நிச்சயம் மிதமிஞ்சிய பெருமிதம் கொள்ளலாம்.
ஒரு கனமான விஷயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, என் போன்றோருக்கும் புரியும் விதம் மிக எளிமையான மொழியிலும் நடையிலும் வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இதற்கே நிச்சயம் சபாஷ் போடலாம்.
கவிதை நயமும் அழகும் கருத்தாழமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. பேருவகை தருகிறது. தேர்ந்த ஒரு சிற்பியைப் போல கலைநயம் மிளிர செதுக்கியிருக்கிறார் “தமிழரசி” காவியத்தை.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் அவர்கள் இந்நூலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“பொதுமக்கள் நலன் நாடிப் புதுக்கருத்தைச் சொல்க” என்று புரட்சிக் கவிஞர் கூறியது போல் கவிஞர் துரை.தனபாலன் நூறாண்டு வாழ்ந்த தமிழரசியின் அறக்கருத்துக்களைத் தேனருவி போலக் கொண்டு செல்லும் சொல்லோவியங்கள் கருத்தோவியமாகின்றன. ஒவ்வொரு பாடலும் ஒரு தங்கச் சுரங்கம்”.
உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.
துரை,தனபாலனின் “தமிழரசி” காவியம் தமிழ் இருக்கும் வரை மங்காத புகழ் பெற்று ஒளிர்ந்து கொண்டே இருக்கும் என்பதே என் கணிப்பு.


