முன் கதைச் சுருக்கம்
வீனஸ் தேவதையின் மகனும் டிராய் நாட்டு அரச குடும்பத்தையும் சேர்ந்த மாவீரன் ஏனீயஸ் , டிராய் நகர வீழ்ச்சிக்குப் பிறகுத் தப்பிய வீரர்களுடன் கடலில் பயணம் செய்யும் போது கடவுள் ஜூனோவின் கோபத்தால் புயல் ஏற்படுகிறது. வீனஸின் வேண்டுகோளுக்கிணங்கக் கடவுளர் நெப்டியூன் புயலை அடக்குகிறார்.
ஏனீயஸ் தனது கப்பல்களுடன் கார்தேஜ் நகரத்தை அடைகிறான் . அங்கே ராணி டிடோ வரவேற்று விருந்தளிக்கிறாள். கார்த்தேஜ் அரசி டிடோ கேட்டதிற்கு இணங்கத் தன் பயண விவரத்தைக் கூறத் தொடங்கினான் ஏனியஸ்.
ஒடிஸியஸின் குதிரை வஞ்சகத்தால் டிராய் நகரம் எவ்வாறு வீழ்ந்தது என்பதையும் மனைவியை இழந்து, தந்தை மகனுடன் கடலில் பயணம் மேற்கொண்டதையும் விவரித்தான். இந்தக் கடல் பயணத்தில் இதுவரை சந்தித்த ஆபத்துகளை விவரமாகச் சொல்லத் தொடங்கினான்.
ஏனிட் – புத்தகம் 3 – “கடல் பயணங்கள்”
டிராய் நாட்டின் அழிவுச் சின்னங்களை எங்கள் கண்ணீரின் ஊடே பார்த்துக் கொண்டு எங்கள் கடற் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்கள் கையில் எஞ்சியது – சில பிம்பங்கள், சில ஆயுதங்கள் மட்டுமே. ஆனால் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
கப்பல்களை அமைத்து, எஞ்சிய வீரர்களோடு புறப்பட்டோம்.
முதல் பயணம் எங்களை த்ரேஸ் என்ற நிலத்துக்குக் கொண்டு சென்றது. அங்கு கரையின் அருகே நிலத்தில் ஒரு கோயிலைக் கட்ட நினைத்தேன். தெய்வங்களுக்கு பலியிடுவதற்காக ஒரு கொடியை நாட்டும்போது மண்ணிலிருந்து குபு குபு என்று இரத்தம் பொங்கியது. அத்துடன் அசரீரியாக குரல் ஒன்றும் கேட்டது:
“ஏனியாஸ்! நான் ட்ராய் அரசர் பிரியத்தின் மகன். கிரேக்கர்கள் என்னை வஞ்சித்துக் கொன்றனர். என் ரத்தம் இந்த நிலத்தில் ஊறியுள்ளது. ”
நாங்கள் நடுங்கினோம்.அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உடனே அந்த நிலத்திலிருந்து விலகி, கப்பல்களைத் தள்ளி பயணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்து நாங்கள் இன்னொரு தீவில் உணவிற்காக இறங்கினோம். அங்கு அப்பல்லோவின் கோயிலில் இருந்தது. அங்கேயும் என் செவியில் தேவனின் குரல் கேட்டது.
“உன் பூர்விக நிலத்திற்குச் செல்; அங்குதான் உன் பேரரசு மலரும்.”
என் தந்தை ‘நமது முன்னோர் வசித்த இடம் கிரீட் தீவு; அங்கே செல்லலாம்’ என்றார். அதன்படி கிரீட் சென்றோம்.
கிரீட்டில் நாங்கள் குடியிருப்புகளை அமைத்தோம். ஆனால் புதுவித நோய் ஒன்று பரவியது. மக்கள் பலர் உயிரிழந்தனர். அப்போது கனவில், தெய்வம் மீண்டும் தோன்றி ,
“உன் உண்மையான பூர்விக நிலம் இத்தாலி. அங்கேயே உன் பேரரசை நிறுவுவாய்”என்று வாழ்த்தியது.
எனவே மீண்டும் புறப்பட்டோம்.
அடுத்து உணவிற்காக பக்கத்தில் இருந்த குட்டித் தீவிற்குச் சென்றோம். அங்கே ஆட்டுக்குட்டிகளைப் பிடித்து விருந்தைச் சமைத்தோம். ஆனால் அங்கே வானத்திலிருந்து குரூரமான ஹார்பிகள் என்னும் பறவைப் பெண்கள் பறந்து வந்து உணவைக் கெடுத்தன. அவைகளின் தலைவி என்னிடம் “ஏனியாஸ், நீ இறுதியாக இத்தாலியை அடைவாய்! ஆனால் அதுவரைக்கும் உனக்கு அமைதி கிட்டாது” என்று சாபம் போலக் கூறினாள்.
என் வீரர்கள் பயந்தனர். ஆனால் நான் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.
சில நாட்கள் பயணம் செய்த பின், நாங்கள் எபிரஸ் என்ற நாட்டை அடைந்தோம். அங்கே நாங்கள் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு திகைத்தோம். பெரிதும் போற்றப்பட்ட ஹெக்டரின் மனைவி அங்கே அடிமையாய் வாழ்ந்து கொண்டிருந்தாள். எங்களால் அதைத் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் எங்களுக்கு ஆசி கூறி விரைவில் அந்த இடத்தை விட்டுச் செல்லும்படிக் கூறினாள். அவளுடன் இருந்த டிராய் நாட்டு குரு தீர்க்கதரிசன சக்தியுடன் அறிவுரைகள் கூறினார்.
“இத்தாலி தான் உங்கள் இலக்கு. ஆனால் அதற்கு முன், சிர்சேயின் மந்திர தீவைத் தவிர்த்து செல்லுங்கள். முக்கியமாக, சிசிலியின் கடலில் சில்லா மற்றும் சாரிப்டிஸ் எனும் இரண்டு பேராபத்துகளைக் கவனமாகத் தாண்ட வேண்டும்.”
அவருக்கும் எங்கள் வணக்கத்தை உரித்தாக்கிவிட்டு கண்ணீருடன் விடைபெற்றோம்.
எங்கள் பயணம் முடிவில்லாமல் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. சிசிலியின் அருகே, எங்கள் கப்பல் கரையோரம் தங்கியது. அங்கே ஒரு கிரேக்க வீரன் கண்ணீரும் கம்பலையுமாக ஓடிவந்தான் .

“என்னைக் காப்பாற்றுங்கள்! இந்த மலைக்குள் ஒர் ஒற்றைக்கண் அரக்கன் பாலிபீமஸ் வாழ்கிறான். அவன் மனிதர்களைக் கொன்று தின்றுவிடுகிறான்.”
அந்த நேரத்தில், மலைகள் அதிர்ந்தன . பாலிபீமஸ் தானே வெளிவந்தான். இவ்வளவு பெரிய உருவத்தைப் பார்த்ததே இல்லை. பயம் எங்களை ஆட்டிப் படைத்தது. வந்த வீரனையும் அழைத்துக் கொண்டு எங்கள் கப்பலுக்கு ஓடினோம். பாலிபீமஸ் கற்களை எறிந்து எங்களைத் தாக்க முயன்றான். ஆனாலும் எப்படியோ தப்பினோம்.
பிறகு நாங்கள் அகிலீஸின் கல்லறையைக் கண்டோம். அவர் பகைவராக இருந்தாலும், அவர் வீரத்தை மதித்து வணங்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
நாங்கள் இத்தாலியை நோக்கிச் செல்லும்போது – கடல் திடீரென கோபித்தது. காற்று கப்பல்களைப் பிளந்தது. அலைகள் எங்களை அலைக்கழித்தன. புயல் எங்களை சிசிலியின் கரைக்கு ஒதுக்கியது. புயலின் உக்கிரம் அதிகமாக இருந்தபடியால் அங்கேயே சில மாதங்கள் தங்க வேண்டியதாயிற்று.
அங்கே என் வாழ்வின் மிகக் கொடூர சம்பவம் நடந்தது. என்னைப் பெற்று வளர்த்த தந்தை எனக்கு வழிகாட்டியாக இருந்த மாமனிதர் திடீரென மரணமடைந்தார். நான் என் உயிரையே இழந்தது போல உணர்ந்தேன். ஆன்மாவை இழந்தவனாய் உணர்ந்தேன்.
அவரை மரியாதையுடன் தகனம் செய்து விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
(தொடரும்)
