கண்கள்.. கண்கள்.. கண்கள்
ஜேசுதாஸ் இதழ் தயாரித்தபோது என்ன ஆயிற்று தெரியுமா?
என்ற கொக்கியுடன் சென்ற அத்தியாயத்தில் கமா போட்டிருந்தேன். அதைச் சொல்வதற்கு முன் சில சிறு துளிகள்.
என் கணவர் பாமாகோபாலனுக்கு ஒரு ராசி உண்டு. அவருக்குச் சற்றும் பரிச்சயமில்லாத துறையில் பிரபலமாக உள்ளவர்களைப் பேட்டி காணும்படி மேலிடத்தில் சொல்வார்கள்.
மேலிடம்? எடிட்டர் திரு எஸ் ஏ பி, திரு ரா கி ரங்கராஜன், திரு ஜ ரா சுந்தரேசன் (பாக்யம் ராமசாமி), திரு புனிதன், திரு பிரியா கல்யாணராமன்(பிரகாஷ்).
கர்நாடக இசை, டென்னிஸ், கிரிக்கெட் இவற்றில் பாமாஜிக்கு அதிக ஆர்வம் கிடையாது. இசையை ரசிப்பார். மூன்று ராகங்கள் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார். என்றைக்காவது அபூர்வமாக “ஸ்கோர் என்ன? எந்த நாடு விளையாடுகிறது?” என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்.
இப்படி இருந்தவர்தான், எம் எல் வசந்தகுமாரி, ஜேசுதாஸ், கிரிக்கெட் ஸ்ரீகாந்த், குன்னக்குடி, லால்குடி, மகாராஜபுரம் சந்தானம், வீணை சிட்டிபாபு, டென்னிஸ் வீர்ர் விஜய் அம்ருதராஜ் ஆகியோரிடம் மிகச் சிறந்த பேட்டிகள் வாங்கினார். இதில் குமுதம் இதழ் தயாரித்த பிரபலங்களும் உண்டு.

நடிகை ஸ்ரீவித்யா குமுதம் இதழ் தயாரித்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட பக்கங்களில், அவர் தாயார் எம் எல் வசந்தகுமாரி பற்றி உயர்வாக நிறையக் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீவித்யா இதழின் அட்டைப்படத்தை மிகப் புதுமையாக வடிவமைக்க வேண்டும் என்று அந்த இதழின் பொறுப்பாளரான ஜ ரா சு சார் முடிவுசெய்துவிட்டார். அட்டைப் படம் என்ன தெரியுமா? இணைத்திருக்கிறேன் பாருங்கள்! அபூர்வ ராகங்கள் படம் வந்தபோது, “கே பாலசந்தர் ஸ்ரீவித்யாவின் கண்களிலேயே செட் போட்டுவிட்டார்” என்ற வித்தியாசமான ஒற்றை வரியையேமெனக்கெட்டு (தமிழகம் முழுவதும் இன்றளவும் பிரபலமாகப் பேசப்படும் வரியை) எழுதியவராயிற்றே ஜ ரா சு. அட்டைப்படத்தை ஏனோ தானோ என்று வைத்துவிடுவாரா என்ன?
புகைப்பட நிபுணர் கே எஸ் அருணாசலத்திடம், ஸ்ரீவித்யாவின் முகத்தை மட்டும் மி…க க்ளோஸ் அப்பில் வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்து வரச் சொல்லியிருந்தார். அப்படியே பிரசுரமாகப் போகிறது என்று நினைத்துத்தான் அருணாசலம் போட்டோ எடுத்தார். அவற்றை லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டிடம் கொடுத்து எடிட் செய்யச் சொல்லி .. அட்டைப்படம் முழுக்க வித்யாவின் கண்கள், கண்கள், கண்கள் மட்டுமே என்று ஒட்டி.. அற்புதமான, வித்யாசமான அட்டை ஒன்றைத் தமிழகமே பேசும்படி அமைத்துவிட்டார்.
இந்த இஷ்யூவுக்காக ஸ்ரீவித்யாவின் அம்மா எம் எல் வசந்த குமாரியிடம் பேட்டி வாங்கும் பொறுப்பை என் கணவரிடமே விட்டுவிட்டார்கள் ஜ ரா சுவும், எடிட்டரும்.

வருத்தம் என்னவென்றால் அப்போது எம் எல் வி அம்மா நோய்வாய்ப்பட்டிருந்தார். உதவிக்கு ஒரு பெண்ணைப் போட்டிருந்தார்கள்.
ஸ்ரீவித்யா ஷூட்டிங் கிளம்பிப் போய்விட்டார். ஒரு நோயாளியைத் தொந்தரவு செய்கிறோமே என்று இவருடைய இளகிய மனம் மிகவும் வேதனைப்பட்டது.
பொறுமையாகக் கேள்விகள் கேட்டார். அந்த அம்மாள் மிகவும் தீனமான குரலில் தன்னால் இயன்ற அளவுக்கு நிறையத் தகவல்கள் தந்தாலும், இடையிடையே சோர்ந்து அயர்ந்து கண்களை மூடிக்கொண்டுவிடுவார். இவர் காத்திருந்து.. டேப்ரெக்கார்டரை ஓடவிட்டு பதில்கள் பெற்றார். நல்ல நிலையில் இருந்தால் அரை மணி நேரத்துக்குள் முடிய வேண்டிய பேட்டி. அந்த அம்மாள் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பேட்டி கொடுத்ததால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆயிற்று.
மாலையில் வந்து வழக்கம்போல் என்னிடம் டேப்பைக் கொடுத்தார். நான் என் காட்ரெஜ் டைப்ரைட்டரில் ஃபூல்ஸ்கேப் தாளைச் செருகி, டைப் செய்யத் தயாரான நிலையில் டேப்பை ஆன் செய்தேன்.
இரண்டு வாரங்களுக்கு முன் பதிவு செய்திருந்த வி ஐ பியின் பேட்டி ஒன்று ஒலித்தது. ஃபார்வேட் செய்து பார்த்தேன். திருப்பிப் போட்டுப் பார்த்தேன். ஊஹூம். அதே வி ஐ பி.
காஸட் மாறிவிட்டதோ என்று என் கணவரின் பையைக் குடைந்தேன். நோ வே. காஸட்டை கவனமாக ஒரு கவரில் போட்டி எம் எல் வி அம்மா பேட்டி என்று மேலே எழுதியதைத்தானே என்னிடம் கொடுத்தார்? இவர் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ எதுவுமே செய்ய மாட்டார். அதிலும் குமுதம் பேட்டி என்றால் பத்து மடங்கு ஜாக்கிரதை உணர்வு வந்துவிடும்.
இவரை எழுப்பி விவரத்தைச் சொன்னேன். பையில் வேறு ஏதாவது கோஸட் உள்ளதா என்று பார்த்தார். இல்லை. தூக்கமே வரவில்லை. கவலையாகிவிட்டது.
மறுநாள் காலையில் ஆபீசுக்குப் போய் நிலைமையை விளக்கிச் சொன்னார்.
குமுதம் சப் எடிட்டர்கள் தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்து தினம் அதற்கு ஒரு தீர்வு கண்டு வென்றவர்கள்.
இவர் எத்தனைக்கெத்தனை நடுங்கிக்கொண்டே சொன்னாரோ அத்தனைக்கத்தனை இயல்பாய் பதில் சொன்னார் ஜ ரா சு. “நீங்க சொல்றதைப் பார்த்தால் ஒரு முறை அவங்களைத் தொந்தரவு செய்ததே மகா பாபம்னு தோணுது. ஆகவே மறுபடியும் போய் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அதைவிட..”
அச்சோ. பேட்டியே பிரசுரமாகாதோ? என்று நினைக்கையில்
”உங்க நினைவில் பதிஞ்சிருக்குமே? என்னென்ன நினைவிருக்கோ அதையெல்லாம் எழுதிக்குடுங்க” என்றாராம். சில நுணுக்கமான புள்ளி விவரங்கள் தவிர அனேகமாக எழுதிக்கொடுத்துவிட்டார். நல்ல வேளையாக முதல்நாள்தான் பேசியிருந்தார் என்பதால் எல்லாமே நினைவில் இருந்தன.
ரெகார்ட் ஆகாததற்குக் காரணம்?
காஸட்டின் பின்புறம் சின்னதாக ஒரு சதுரத் தடுப்பு இருக்கும். அதில்தான் ரெக்கார்ட் செய்யும் பின் அழுத்தி ரெக்கார்டரை ஆன் செய்யும். இந்த காஸட்டில் அந்தச் சதுரத்தை நான்தான் உடைத்துவிட்டிருந்தேன். அந்த வி ஜ பியின் பேட்டி அழிந்துவிடக்கூடாதே என்று.
அதை கவனிக்காமல் கொடுத்துவிட்டிருக்கிறேன் போலும். (அதன் பிறகு ஒவ்வொரு பேட்டியையுமே புத்தம்புது காஸட்டில்தான் பதிவு செய்வது என்று உறுதி செய்து கொண்டோம். ஒவ்வொரு முறையும் அந்தச் சதுரத்தைச் சரிபார்த்துத்தான் காஸட்டைப் பொருத்துவார்).
அந்த இதழில் எம் எல் வி யில் பேட்டி பெஸ்ட் என்று ஏராளமான கடிதங்கள்.
ஜேசுதாஸ் விஷயத்துக்கு வருவோம்..

ஒரு குறிப்பிட்ட நாளில் ஜேசுதாஸிடம் பேச அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தார் என் கணவர். காலை பத்திலிருந்து பன்னிரண்டு மணி வரை டைம் கொடுத்திருந்தார்.
ஆனால் திடீரென்று அந்த நாளில் பந்த் அறிவிக்கப்பட்டுவிட்டது.
தன்னால் வர இயலாது என்றும் வேறு ஒரு நாள் வருவதாகவும் பாமாஜி போன் செய்து சொன்னபோது ஜேசுதாஸ் என்ன தெரியுமா சொன்னார்.
“காலை ஆறு மணிக்கு பந்த் ஆரம்பம். அதற்கு முன்பே வந்துடுங்க. மாலை ஆறு மணி வரை பேசி முழு இஷ்யூவுக்குமே பேட்டி வாங்கிடுங்க” என்றார். அற்புதமான வந்திருந்தது அவர் தயாரித்த இதழ்.
ராதா ரவி தயாரித்த குமுதம் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.. என்ன தெரியுமா?
என் குமுத நாட்கள் தொடரும்..
