வாழ்க்கையிலோ அல்லது சொந்தபந்தங்களிடமோ அதிக பற்று வைக்காதீர்கள். உள்ளதை உள்ளபடி எடுத்துக்கொண்டு அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..”

இதுபோன்ற வியாக்யான உபதேசங்களை நாம் நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த உபதேசங்கள் எதையும் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.

சுவாமி ராமகிருஷ்ணாநன்தா மேற் சொன்ன கருத்தை வலியுறுத்தி ஒரு சுவாரஸ்யமான கதையைக் கூறியிருக்கிறார். (சுவாமி ராமகிருஷ்ணாநன்தாதான் சென்னையில் ராமகிருஷ்ண மடம் உருவாக சுவாமி விவேகாநன்தரால் நியமிக்கப்பட்டவர்.)

சுவாமிஜி கதையில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் புரிதலுக்காக நான் கதாப்பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.

ஒரு கிராமத்தில் அழகப்பன் என்பவர் சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி நாச்சியம்மை. எட்டு வயதிலும் பத்து வயதிலும் சரவணன் வேலப்பன் என்று இரண்டு மகன்கள்.

பெட்டிக்கடையில் ஓரளவு சுமாரான வியாபாரம். அது அவர்கள் குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தது.

அழகப்பனுக்கு தயாள குணம். தினமும் யாருக்காவது ஏதாவது உதவி செய்வதை ஒரு தவமாகவே மேற்கொண்டிருந்தான். அதுவும் சாமியார்கள், யோகிகளைக் கண்டால் விரைந்தோடிச்சென்று அவர்களுக்கு பணி செய்வான்.

இப்படியிருக்க ஒரு நாள் அவனுடைய பெட்டிக்கடை இருந்த தெரு வழியே யோகி ஒருவர் சென்றுக் கொண்டிருந்தார். சுமார் எழுபத்தைந்து எண்பது வயதிருக்கும். மெலிந்த் தேகம். தலையில் நீண்ட வெள்ளிக் கம்பிகள். முகத்தை மறைக்கும் நீண்ட வெண்ணிர தாடி, அவர் அணிந்திருந்த காவியுடை ஆங்காங்கே கிழிசல் கண்டிருந்தது.

அழகப்பன் சந்தோஷத்துடன் யோகியை நோக்கி விரைந்து சென்று காலில் விழுந்து வணங்கினான்.

“ஐயா.. உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யவேண்டும்.. என்ன உதவி வேண்டும் என்று கூறுங்கள்”

அழகப்பன் சொன்னதைக் கேட்டு அந்த யோகி புன்னகைத்தார்.

“அப்பனே.. எனக்கு எந்தத் தேவையும் கிடையாது. அதனால் எந்த உதவியும் வேண்டாம்”

யோகி சொன்னாலும் அழகப்பன் விடுவதாக இல்லை.

“இல்லை ஐயா.. உங்களுக்கு ஏதாவது உதவி செய்தே ஆக வேண்டும்.. இல்லாவிட்டால் என் மனது ரொம்பவே வேதனைப்படும். என்ன உதவி வேண்டும் என்று கேளுங்கள்..”

அழகப்பனின் பிடிவாதத்தைத் தட்டமுடியாத யோகி சிறிது யோசித்து..

“சரி.. கிழிந்திருக்கும் என்னுடைய உடைகளை தைத்துத் தர முடியுமா?”

யோகி சொன்னதைக் கேட்டு அழகப்பனுக்கு ஒரே சந்தோஷம்.

“தாராளமா.. வாருங்கள்..”

என்று யோகியை தன்னுடைய பெட்டிக்கடைக்கு அழைத்துச் சென்றான். கடைக்குப் பின் பக்கத்தில்தான் அவனுடைய வீடும் இருந்தது.

யோகி அணிந்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்து அவருடைய உடைகளைப் பெற்றுச் சென்று நாச்சியம்மையிடம் கொடுத்து…

“வந்திருக்கும் யோகிக்கு முதலில் ஏதாவது சாப்பிடக் கொடு. பிறகு அவருடைய இந்த உடைகளில் இருக்கும் கிழிசல்களை கவனமாகத் தைத்து பிறகு துவைத்து காய வைத்து எடுத்து வா”

அழகப்பன் சொன்னதுபோலவே நாச்சியம்மை யோகிக்கு கனிகளை சாப்பிடக் கொடுத்தாள்.

பிறகு அவருடைய உடைகளிலிருந்த கிழிசல்களை கவனமாகத் தைத்து முடித்தாள்.

துணிகளை துவைத்து சுத்தப்படுத்திக் காயவைத்து அழகப்பனிடம் கொடுத்தாள்.

அழகப்பன் கொடுத்த உடைகளை வாங்கி அணிந்துகொண்ட யோகி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

“நன்றி.. நன்றி.. ஆனல் நீ எனக்குச் செய்த இந்த உதவியால் நான் உனக்குக் கடன்பட்டுவிட்டேன். உனக்கு ஏதாவது தர வேண்டும். ஆனால் உனக்குத் தருவதற்கு என்னிடம் பொன்னோ பொருளோ இல்லை. ஒன்று பண்ணுகிறேன்.. ஞானிகளும், முனிவர்களும், மகான்களும் பல வருடங்கள் தவமிருந்து நேரிடையாக மோட்சத்தை அடையும் வரத்தைப் பெற்றிருப்பார்கள். நீ எனக்குச் செய்த உதவிக்கு பிரதிபலனாக நான் உன்னை நேரிடையாக மோட்சத்தை அடையச் செய்கிறேன். நீ உடனே கிளம்பி என்னுடன் வா..”

யோகி சொன்னதைக் கேட்டு அழகப்பனுக்கு சந்தோஷம்தான்.

இருந்தாலும் அவன் சற்று யோசித்தான். பிறகு..

“ஐயா.. நேரிடையாக மோட்சத்தை அடையும் பாக்கியம் கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இளம் மனைவி இருக்கிறாள். எட்டு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டியது என் கடமை. அதனால் ஒரு பதினைந்து வருடங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் என்னுடைய மகன்கள் நல்ல நிலமைக்கு வந்து விடுவார்கள். அப்போது கண்டிப்பாக நான் உங்களுடன் வருகிறேன்”

யோகி அழகப்பனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஏதேதோ கேள்விகள் இருந்தன. ஆனால் எதுவுமே அழகப்பனுக்குப் புரியவில்லை.

“ம்.. சரி.. அப்படியே ஆகட்டும்”

சொல்லிவிட்டு யோகி கிளம்பிவிட்டார்.

பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.

அழகப்பன் சொன்னபடியே யோகி அந்தப் பெட்டிக்கடைக்கு முன் ஆஜர் ஆனார். ஆனால் கல்லாவில் அழகப்பன் இருக்கவில்லை. ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்..

“தம்பி.. அழகப்பன்..”

யோகி ஆரம்பித்ததும் கல்லாவில் உட்கார்ந்திருந்த இளைஞன் உடனே..

“அது என் அப்பா. நான் அவருடைய மூத்த மகன் சரவணன்.. என் தம்பி வேலப்பன் அதோ அந்த வயலில் உழுதுக் கொண்டிருக்கிறான்.. வயக்கட்டு ஓரமாக கட்டிலில் படித்திருப்பதுதான் எங்களுடைய அப்பா”

யோகி அழகப்பன் அருகில் சென்றார்..

“அழகப்பா.. நீ சொன்னபடியே பதினைந்து வருடங்கள் கழித்து வந்து விட்டேன்.. வா.. என்னுடன் கிளம்பு.. உன்க்கு நேரிடையாக மோட்சம் கிடைக்கச் செய்கிறேன்”

கட்டிலில் படுத்திருந்த அழகப்பன் மெதுவாக எழுந்து நின்றான்.

“ஐயா வணக்கம்.. நான் கேட்டுக்கொண்டபடியே நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வந்து விட்டீர்கள். ஆனால் என்னுடைய மகன்கள் இன்னும் வாழ்க்கையில் முன்னெரவில்லை. அவர்களுக்கு சாமர்த்தியம் போதாது. பெரியவன் வியாபாரம் பண்ணத் தெரியாமல் பெட்டிக்கடையை நஷ்டத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறான். இளையவனோ தொழில் புரியாமல் உழவம் செய்துக் கொண்டிருக்கிறான். என்னுடைய அறிவுரைகளும் ஆதரவும் இன்னமும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பாவம்.. நான் இல்லாமல் அவர்கள் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். அதனால் இன்னும் ஐந்து வருடங்கள் அவகாசம் கொடுங்கள். ஐந்து வருடத்துக்குள் இவர்களுக்கு நல்ல வழி காட்டிவிட்டு நான் உங்களுடன் வந்து விடுகிறேன்”

யோகி எதுவும் பேசாமல் அழகப்பனையேப் பார்த்தார். இந்த முறையும் அவர் பார்வையில் இருந்த கேள்விகளை அழகப்பனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

“ம்.. அப்படியே ஆகட்டும்”

யோகி கிளம்பிவிட்டார்.

ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் வந்தார்.

அழகப்பன் இறந்துவிட்டதாக கல்லாவில் அமர்ந்திருந்த சரவணன் கூறினான். யோகி கடையை நோட்டமிட்டார். ரொம்பவே ஷீண நிலையில் இருந்தது.

திரும்பி சென்றமுறை அழகப்பன் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். இப்போது அங்கு ஒரு நாய் படுத்திருந்தது.

ஞானதிருஷ்டி அறிந்த யோகிக்கு அந்த நாயின் உள்ளே இருப்பது அழகப்பனின் ஆன்மா என்று புரிந்தது. இறந்துவிட்டாலும் பந்த பாசத்தைத் துறக்க முடியாமல் ஆன்மா அந்த இடத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறது.

உடனே அந்த நாயின் அருகில் சென்று தன் கமண்டலத்திலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து அதன்மேல் தெளித்தார்.

உடனே அந்த நாய்க்கு பூர்வஜென்ம நினைவு வந்தது.

“என்ன அழகப்பா.. இப்போது நீ இறந்து விட்டாய்.. ஆன்மாவாக சுழன்றுக் கொண்டிருக்கிறாய். இப்போதாவது நேரிடையாக மோட்சத்தை அடைய என்னுடன் வருகிறாயா?”

உடனே நாய் ரூபத்திலிருந்த அழகப்பன் சொன்னான்..

“ஐயா.. என் மூத்த மகனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கடையில் இருக்கும் பொருட்களையெல்லாம் ஒன்றொன்றாக கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறான். நான் காவலுக்கு இருப்பதால்தான் இந்த அளவுக்காவது மிஞ்சியிருக்கிறது. பாவம்.. அவன் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடாது.. அதனால் இன்னும் இரண்டு வருடங்கள் தாருங்கள்.. என் மகனுடைய பாதுகாப்புக்கு ஆவன செய்துவிட்டு வருகிறேன்”

மீண்டும் யோகியிடமிருந்து அதே பார்வை.. மீண்டும் அந்த பார்வையின் பொருளை நாய் வடிவில் இருந்த அழகப்பன் புரிந்துக்கொள்ளவில்லை.

“ம்.. அப்படியே ஆகட்டும்”

யோகி கிளம்பிவிட்டார்.

இரண்டு வருடங்கள் கழித்து யோகி வந்தபோது அந்த நாயும் இறந்திருந்தது. இளைய மகன் வேலப்பன் நிலத்தில் உழுதுக் கொண்டிருந்தான். அவன் ஓட்டிச்சென்ற மாட்டை யோகி பார்த்தார். அதனுள் இருப்பது அழகப்பனின் ஆன்மா என்று அவருக்குப் புரிந்தது.

அந்த மாட்டின் மீது கமண்டல நீரைத் தெளித்தார்.

மாட்டுக்குள் இருக்கும் அழகப்பனின் ஆன்மா விழித்துக் கொண்டது.

“நீ சொன்னபடி வந்திருக்கிறேன்.. என்னுடன் வருகிறாய்தானே?”

யோகி கேட்டதும் அழகப்பனின் ஆன்மாவுக்கு மீண்டும் தயக்கம்.

“ஐயா.. மன்னிக்கணும். என் இளைய மகனுக்கு சரியாக உழத் தெரியவில்லை. இவன் சரியாக உழாமல் விட்டுவிட்டால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் ஏற்படும். அதனால் நான் மாடாக இருந்து இவனை சரியாக உழச் செய்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் என் இளைய மகனை பக்குவப்படுத்திவிடுவேன்.. அதன் பிறகு கட்டாயம் வருகிறேன்”

அழகப்பன் சொன்னதைக் கேட்டு இந்த முறை அந்த யோகி அவனைப் பார்த்ததோடு மர்மமாகச் சிரித்தார்.

“ம்.. அப்படியே ஆகட்டும்”

கிளம்பிவிட்டார்.

ஒரு வருடம் கழித்து யோகி மீண்டும் வந்தபோது அழகப்பனின் மூத்த மகன் சரவணன் ரொம்பவே கோபமாக..

“நீங்கள் ஒவ்வொருமுறை வரும்போதும் இங்கே ஏதாவது துர்சம்பவம் ஏற்படுகிறது. முதல் முறை வந்து சென்ற சில நாட்களில் எங்கள் அப்பா இறந்து போனார். அடுத்தமுறை எங்கள் நாய் இறந்தது. நீங்கள் சென்றமுறை வந்து சென்ற பிறகு எங்கள் மாடும் இறந்துவிட்டது. நீங்கள் துக்கிரி.. அபசகுனம்.. அடுத்த துர்சம்பவம் நிகழ்வதற்குமுன் உங்களை நான் கொலை செய்யப் போகிறேன்”

இரும்புக் கம்பி ஒன்றை எடுத்துக்கொண்டு யோகியை அடிக்க வந்தான்..

ஆனால் யோகி அவனைத் தடுத்து..

“நில்.. இந்த முறை நான் உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல வந்திருக்கிறேன். உங்களுடைய நிலத்தில் புதையல் இருக்கிறது.. நிறைய பொன்னும், பொருளும் இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு நீங்கள் பல தலமுறைகளுக்கு சந்தோஷமாக வசதியாக வாழலாம்”

யோகி சொன்னதைக் கேட்டு சரவணனுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்.

உண்மையா.. யோகி சொல்வது உண்மையா?

அவன் மனதில் சந்தேகம் எழுந்தது.

“நீங்கள் சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது? என்னுடைய அடியிலிருந்து தப்பிக்க நீங்கள் என்னை திசைதிருப்புவதுபோல் இருக்கிற.தே.. என்னை ஏமாற்ற முடியாது”

கொஞ்சம் உரத்த குரலிலேயே சொன்னான்.

உடனே யோகி அவனிடம்..

“அப்படி சந்தேகமிருந்தால் உன் நிலத்தை நான் சொல்லும் இடத்தில் ஆழமாகத் தோண்டிப்பாரு”

சரவணனும் அதற்கு சம்மதித்தான்..

“சரி.. வாருங்கள்.. அப்படிப் புதையல் கிடைக்காவிட்டால் அந்த இடத்துலேயே உங்களைக் கொன்று அதே குழியில் புதைத்து விடுவேன்”

இதற்கு யோகி சம்மதித்து அவனுடன் வயலை நோக்கிச் சென்றார். சரவணன் அவனுடைய தம்பி வேலப்பனையும் உடன் அழைத்துக் கொண்டன்.

நிலத்தில் யோகி ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி அங்கே தோண்டச் சொன்னார்.

சகோதரர்கள் இருவரும் தோண்டினார்கள்.

முதலில் எதுவும் கிடைக்காவிட்டாலும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டியதில் உண்மையிலேயே அங்கே பெரிய பானையில் புதையல் இருந்தது.

ஆனால் அந்தப் புதையலுக்குக் காவலாக அதன்மேல் ஒரு நாகம் படையெடுத்துக் கொண்டிருந்தது.

அந்த நாகத்துக்குள் இருக்கும் ஆன்மா அழகப்பனுடையது என்று யோகிக்குப் புரிந்தது.

ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சகோதரர்கள் இருவரும் முதலில் நாகத்தைக் கண்டு பயந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்த கழியினால் அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.

இறந்து கிடந்த அந்த நாகத்தின் மீது யோகி கமண்டல நீரைத் தெளித்தார்.

அழகப்பனின் ஆன்மா இப்போது அவர்முன் வந்து நின்றது.

யோகி எதுவும் பேசாமல் அதைப் பார்த்தார்.

இப்போது அவர் பார்வையின் அர்த்தம் அழகப்பனின் ஆன்மாவுக்குப் புரிந்தது.

குரலில் ரொம்பவே வருத்தத்துடன்..

“தப்புப் பண்ணிவிட்டேன்.. நீங்கள் முதல் தடவை என்னைக் கூப்பிட்டபோதே நான் உங்களுடன் வந்திருக்க வேண்டும். ஏதோ நான்தான் என் மகன்களைக் காப்பாற்ற வேண்டும்.. அவங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது ரொம்பவே அபத்தம். நாம் இல்லாவிட்டாலும் நடக்க வேண்டியது எதுவுமே நிற்காது. கடவுளின் ஆஞ்ஞைபடி அது நடந்துக் கொண்டேதான் இருக்கும்.. நம் கையில் எதுவும் இல்லை.. இது புரியாமல் வாரிசுகளின் மீது அளவுக்கதிகமான பாசத்தை வைத்து அவர்களை அடை காப்பதாக நினைத்தது எவ்வளவு பெரிய அறிவிலித்தனம்.. இறுதியில் அவர்கள் என்னை புதையல் அருகிலிருந்து விரட்டி விடாமல் கொஞ்சம்கூடக் கருணை காட்டாமல் கொன்று விட்டார்கள். அளவுக்கு அதிகமாக அக்கரைகொண்டு பாசம் காட்டியதற்கு எனக்குக் கிடைத்த பரிசு.. போதும்.. நான் அனுபவித்தது போதும்.. என்னை உடனே அழைத்துச் சென்று மோட்சத்தைக் காட்டுங்கள்”

“இப்போதாவது ஞானம் ஏற்பட்டதே” என்று நினைத்து அழகப்பனின் ஆன்மாவுக்கு மோட்சத்துக்கு யோகி வழி காட்டினார்.

இந்தக் கதையை சுவாமி ராமகிருஷ்ணாநன்தா பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.

அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியது..

வாழ்கையில் பந்தம், பாசம் இதெல்லாம் ஓர் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். நாம் எதையும் இயக்குவதில்லை. கடவுள்தான் எதையும் இயக்குகிறான். அளவற்ற பந்தமும் பாசமும் இறுதியில் மனக்கவலையைத்தான் கொடுக்கும்.

வாழ்க்கையில் பற்றை அளவுகடந்து போக விடாமல் தடுத்து பற்றற்று இரு..

நடப்பதை இயல்பாக எடுத்துக்கொள்..

நடப்பது எல்லாமே ஈசன் செயல் என்ற பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்..

உன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமிழக்காமல் நிம்மதியாக இருக்கும்..

 

                                            (கிறுக்கல்கள் தொடரும்)