அலமாரியில் மடித்து வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து உதறினார் முத்துச்சாமி. விரிந்து முழு வடிவத்தைப் பெற்ற அந்தச் சட்டையிலிருந்து ஏதோ கீழே விழுந்தது. குனிந்து பார்த்தார். சட்டையின் ஒரு பட்டன் கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்து மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு மீண்டும் சட்டையைப் பார்த்தார்.

சட்டையின் முன்பக்கத்தில் இருந்த ஐந்து பட்டன்களில் சரியாக நடு பட்டன் இல்லை. அலமாரிக்குள் வேறு சட்டை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். முத்துச்சாமியின் துணிகள் வைக்கப்படும் இடம் வெற்றிடமாக இருந்தது. இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்குத் துவைத்துக் காயப்போட்டால்தான் திங்கள் கிழமை போட்டுக்கொள்வதற்குத் துணி என்பது புரிந்தது.

ஊக்கு எடுத்துக் குத்திக்கொண்டு சமாளித்து விடலாம் என்று மேஜையின் மீது பார்த்தார். ஒரு ஊக்கு கூட இல்லை.

“அமுதா…!” என்று சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தார்.

டிஃபன் பாக்ஸில் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்த முத்துச்சாமியின் மனைவி அங்கிருந்தபடியே “வாறேன்” என்று சொன்னார்.

“ஊக்கு இருந்தா ஒண்ணு கொண்டு வா…” என்று முத்துச்சாமி சொன்னதைக் கேட்டதும் எப்போது விழலாம் என்று காத்திருந்த பட்டன் விழுந்து விட்டது என்பதை உணர்ந்துகொண்டாள் அமுதா.

வேகமாக டிஃபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு வந்தபடியே செல்ஃபில் ஊக்கு இருக்கிறதா என்று பார்த்தாள். எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. டிபன் பாக்ஸை முத்துச்சாமியின் ஆஃபீஸ் பேக்கில் வைத்துவிட்டு, சுவரைப் பார்த்துத் திரும்பி நின்றாள். சேலையை விலக்கி ஜாக்கெட்டிலிருந்த ஊக்கு ஒன்றைக் கழற்றிக் கொண்டுபோய் முத்துச்சாமியிடம் கொடுத்தாள்.

ஊக்கை வாங்கி, சட்டையின் மேலே தெரியாமல் உள்ளே வைத்துக் குத்தினார் முத்துச்சாமி.

கடிகாரத்தில் மணி ஒன்பது அடித்தது. ஒன்பதரைக்குள் விரலைப் பதித்தால்தான் அட்டெண்டன்ஸ். ஏற்கெனவே இரண்டு நாள் காலையில் அனுமதி எடுத்தாகிவிட்டது. இன்றைக்குத் தாமதமாகப் போனால் அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்.

முன் அறையில் ஸ்டூலின் மேல் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு நின்றபடியே சாப்பிட்டார். இரண்டு இட்லிதான் சாப்பிட்டார்.

“போதும்….! இந்தா!” என்று மனைவியின் கையில் கொடுத்துவிட்டு ஆஃபீஸ் பேக்கை எடுத்தார். மேஜை டிராயரை இழுத்து டி.வி.எஸ். 50 யின் சாவியைத் தேடினார். காலையில் கைக்குழந்தை அழுததால் அதன் கையில் அந்தச் சாவியைத்தான் அமுதா கொடுத்தாள். அது கட்டிலில் கிடக்கும் என்று ஓடிப் போய் எடுக்கப் போனாள்.

அதற்குள்ளாக முத்துச்சாமி நடையை விட்டுக் கீழே இறங்கிவிட்டார். டி.வி.எஸ்.50க்கு அருகில் அவர் போகும்போது சாவியுடன் வந்தாள் அமுதா.

சாவியைப் போட்டு வண்டியை மிதித்தார். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இரண்டு மூன்று மிதி கொடுத்த பிறகும் அது மக்கர் பண்ணியது. பலம் கொண்டமட்டும் வேகமாக மிதித்தார் முத்துச்சாமி. இப்போது அது லேசாக உறுமியது. உறுமல் நிற்பதற்குள்ளாக ஆக்சிலேட்டரை முறுக்கினார். வேகமாக எழுந்த சத்தத்தில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை பாலன் அழுதான்.

உள்ளே ஓடினாள் அமுதா.

வண்டியைத் திருப்பிவைத்துவிட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தார் முத்துச்சாமி. அமுதாவின் இடுப்பில் பாலன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தனது கவலை எல்லாம் கரைந்து போவதாக உணர்ந்தார் முத்துச்சாமி. அமுதாவின் கையசைப்பை வாங்கியபடி விரைவாக வண்டியை ஓட்டினார்.

முத்துச்சாமி 2006ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அப்போதே மைசூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சி அலுவலர் வேலை கிடைத்தது. தமிழ் இலக்கியம் படித்த தனக்கு மத்திய அரசு வேலை கிடைத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்து போனார். மானச கங்கோத்ரியில் இருந்த அந்த நிறுவனத்திற்கு அருகிலேயே ஓர் அறை எடுத்துத் தங்கினார். ஆரம்பத்தில் கன்னடம் தெரியாமல் அங்கே தடுமாறினாலும் காலப்போக்கில் கன்னடத்தைத் தப்புத் தப்பாகப் பேசுவதற்குப் பழகிக்கொண்டார்.

2008இல் அந்த நிறுவனத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டுவந்து விட்டார்கள். அப்போது முதல் தரமணியில் இருந்த அவரது வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போனார்.

மத்திய அரசு வேலை என்று அறியப் பட்டதால் அவருக்குப் பெண் கொடுப்பதற்கு முத்துச்சாமி குடும்பத்தில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்க முன் வந்தார்கள். அரியலூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் தான் முத்துச்சாமியின் தந்தையாருக்கு. வேளச்சேரியில் உள்ள ஒரு கம்பெனியில் அவருக்கு வேலை கிடைத்ததால் குடும்பத்தைத் தரமணிக்கு அழைத்து வந்துவிட்டார்.

அரியலூரில் உள்ள முத்துச்சாமியின் தாய்மாமாவின் மகளைத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் ஆன புதிதில் முத்துச்சாமி வாங்கிய சம்பளம் போதுமானதாகத்தான் இருந்தது. குழந்தைகள் பிறந்த பிறகுதான் பற்றாக்குறை ஏற்பட்டது.  சம்பளப் பற்றாக்குறையைப் பற்றி அமுதா, தன் தந்தைக்குச் சொல்லும்போது அவர் புலம்பத் தொடங்கிவிட்டார்.

மத்திய அரசு வேலை என்பதால் நிரந்தரம் ஆகிவிடும் என்ற நம்பிக்கை, முத்துச்சாமிக்கு இருந்தது. ஆனால் இன்று வரை ஒப்பந்தப் பணியாளராகவே வேலை பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது. பதினெட்டு வருடமாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒப்பந்தத்தைப் புதுப்பித்து வருகிறார்கள். ஆறுமாதம் முடிந்ததும் ஒரு நாள் கட்டாய விடுப்புக் கொடுத்துவிட்டு அடுத்த நாளிலிருந்துதான் அடுத்த ஒப்பந்தத்தைப் போடுகிறார்கள்.

மைசூரிலிருந்த அலுவலகம், சென்னைக்கு வந்ததும் நம்ம தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டோம் என்று முத்துச்சாமி உட்பட அங்கே வேலை பார்த்த ஐம்பதுக்கு மேற்பட்டவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனத்தில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்களை எப்படிக் குறைப்பது என்று அரசு திட்டம் தீட்டத் தொடங்கிவிட்டது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை கழுத்தை நோக்கி, கத்தி வந்துவிடுமோ என்னும் பயம் வந்தது. மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஃபீஸ் கட்டுவது, துணி மணி எடுப்பது என்று தடுமாற்றத்திற்கு இடையிலேயே குடும்பம் நடக்கிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு நாளும் அமுதா வாய்திறந்து வருத்தப்பட்டதில்லை. கவலைகளை எல்லாம் மனத்திற்குள் புதைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகிறாள்.

வேகமாக வண்டியை ஓட்டிய பிறகும் ஒன்பதரைக்குள் வரமுடியவில்லை. கடிகாரம் ஒன்பது நாற்பது என்று காட்டியது. முத்துச்சாமிக்கு உடல் எல்லாம் வியர்த்தது. இன்றைக்கு அரைநாள் சம்பளம் போய்விடும் என்று நினைக்கும்போது பட்ஜெட்டில் விழும் துண்டினை நினைத்து ஏற்பட்ட நடுக்கத்தால் வியர்வை இன்னும் அதிகமாக வடிந்தது.

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்போல் அன்றைக்கு விரலைப் பதிக்கும் மிஷின் ரிப்பேர் ஆகியிருந்தது. கண்காணிப்பாளர் அறைக்கு வந்து நின்றார் முத்துச்சாமி.

“பரவாயில்லை சார் கையெழுத்து போட்டிடுங்க…” என்றபடி கணினிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டார் அவர்.

நிம்மதிப் பெருமூச்சுடன் கையெழுத்தைப் போட்ட முத்துச்சாமி, கண்காணிப்பாளர் அறையை விட்டு வெளியே வந்தார். அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் முத்துச்சாமிக்கு அன்று மார்ச் 31 என்பது நினைவுக்கு வந்தது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டிய நாள். ஏப்ரல் இரண்டாம் தேதிதான் அடுத்த ஒப்பந்தக் கடிதத்தை வழங்குவார்கள்.

மார்ச் 31ஆம் தேதி என்றால் சாயங்காலம் வரை திக்…திக்…. என்று எல்லோரது மனமும் அடித்துக் கொண்டே இருக்கும். ஏறத் தாழ இருபது வருடமாக மத்திய அரசு வேலையில் ஒப்பந்தப் பணியாளராகவே வேலை பார்க்கும் வருத்தம் இருந்தாலும் இதற்குமேல் வேறு வேலை தேட முடியாது என்ற  நிலைக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். ஒப்பந்தம் என்றைக்கு முடிகிறதோ அன்றைக்குச் சாயங்காலத்தில் யாருக்கெல்லாம் கடிதம் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் அன்றைக்கே வீட்டிற்குப் போய்விடவேண்டும். எத்தனை ஆண்டு வேலை பார்த்திருந்தாலும் இதுதான் நிலை.

யாருக்கு ஓலை வரப் போகிறதோ என்று எல்லோரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் எல்லோரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்தான். பல சுயநிதிக் கல்லூரிகளில் கிடைத்த வேலை வாய்ப்பை உதறிவிட்டுத்தான் மத்திய அரசு வேலை என்று இங்கே வேலை பார்க்கிறார்கள். எல்லோரும் ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருந்தார்கள். இதற்கு மேல் வெளியே எங்கே போய் வேலை தேடுவது என்னும் அச்சம் அவர்களது வாயை அடைத்துவிடுகிறது.

முத்துச்சாமிக்கு அதிக கவலை. ஏனென்றால் அந்த அலுவலகத்தில் அதிக நாள் விடுப்பு எடுத்த ஆள் அவர்தான். என்ன நடக்குமோ என்னும் திகிலில் யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் போய் உட்கார்ந்தார்.

ஏப்ரல் மாதம் செய்யவேண்டிய திட்டப் பணிகளைத் தொடங்குவதா, வேண்டாமா என்னும் ஊசலாட்டத்திலேயே மனம் அலை பாய்ந்தது. எப்படியோ மத்தியானம் வந்துவிட்டது.

இரண்டாம் மாடியில் உள்ள சாப்பாட்டுக் கூடத்தில் எல்லோரும் வந்தார்கள். முத்துச்சாமி யாரிடமும் பேசாமல் தனது டிஃபன் பாக்ஸைத் திறந்து சாப்பிடத் தொடங்கினார். அவருக்கு அருகில் ஞானதாஸ் வந்தார்.

ஞானதாஸிடம் பேசுவதற்கு எல்லோரும் பயப்படுவார்கள். ஏனென்றால் நிர்வாகத்தை எதிர்த்தும் ஒப்பந்தப் பணியை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் ஞானதாஸ். அவரிடம் பேசினால் நமது சீட்டு கிழிந்துவிடும் என்று எல்லோரும் அவரைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். ஆனால் ஞானதாஸ் யாரையும் விடுவதில்லை. வலிய வந்து பேச்சுக் கொடுப்பார். அப்படி வலிய வந்து பேசினாலும் அவரது எண்ணம் முழுவதும் ஊழியர்களின் பொது நன்மையை முன்வைத்தே இருக்கும்.

ஞானதாஸை நிமிர்ந்து பார்த்த முத்துச்சாமி, “உட்காருங்க….! சாப்பாடு கொண்டுவரல்லியா?” என்றார்.

“சாப்பாடு கெடக்கட்டும். இன்னைக்கி நம்ம துணைத் தலைவர் வாறாராம்” என்றார்.

“ஒப்பந்தம் போடும்போது துணைத்தலைவர் வரமாட்டேரே! இயக்குநரே கொடுத்துவிடுவாரே! துணைத்தலைவர் எதுக்கு வாறார்?” என்று கேட்டபடி ஞானதாஸின் முகத்தைப் பார்த்தார்.

“அதனால தான் எல்லாருக்கும் வயித்துல புளியைக் கரைக்குது….! பாதிக்கு மேல உள்ள எம்ப்ளாயீக்கெல்லாம் இன்னைக்கு ரிலீவிங் ஆர்டர் கொடுக்கப்போறாங்க…” என்று ஞானதாஸ் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “அப்படியா…?” என்று வாயைத் திறந்தார் முத்துச்சாமி. அதற்குமேல் அவரால் சாப்பிட முடியவில்லை. அப்படியே டிஃபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டார்.

“அதனால்தான் முற்றுகைப் போராட்டம் நடத்தலாமான்னு திட்டம் போட்டுக்கிட்டிருக்கோம். நீங்களும் வரணும்” என்றார் ஞானதாஸ்.

முத்துச்சாமிக்கு ஞானதாஸ் இப்போது சொன்னது எதுவும் கேட்கவில்லை. ‘எனக்கும் ஓலை வந்துவிடுமோ?’ என்னும் கவலையில் ஆடிப் போயிருந்தார்.

மூன்று மணிவாக்கில் துணைத் தலைவரின் கார் வந்தது. அவரைத் தொடர்ந்து கூடுதல் பொறுப்பாக இயக்குநர் பொறுப்பிலிருப்பவரும் வந்தார். நான்கு மணிவாக்கில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். பத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ஓலை கொடுத்துவிட்டார்கள். தங்கள் தலையின் மேல் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார்கள்.

“முத்துச்சாமி சார்…..” என்று அழைக்கும் குரல் கேட்டது. துணைத் தலைவரின் அறைக்குள் போனதும் பணி விடுவிப்பு ஆணையை எடுத்துக் கொடுத்தார் துணைத் தலைவர். என்னநடக்கிறது என்று முத்துச்சாமிக்குப் புரியவில்லை.

மத்திய அரசு வேலை என்று மைசூருக்கு அவர் பதினெட்டு ஆண்டுக்கு முன்னால் போன அந்த நேரத்தையும் பதினெட்டு ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியில் இருந்து இன்றைக்கு ஆட்குறைப்பு என்ற காரணத்தைக் காட்டி, வழங்கிய பணி விலக்க ஆணையையும் பார்த்த முத்துச்சாமிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. வீட்டில் இருக்கும் அமுதாவின் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று நினைத்தபடி நடந்தார்.

பாதிக்கு மேற்பட்ட பணியாளர்கள் அந்த அலுவலகத்தின் முகப்பில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஓலை பெற்றவர்கள்தான். அவர்கள் எழுப்பிய குரல் முத்துச்சாமிக்கு மட்டும் அல்ல, யாருக்குமே கேட்கவில்லை.