ராம ராம ராம ராம !! - வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிசனம்ஈச்சங்காடு கோதண்டராமர்  கோவிலில்  எனக்கு அர்ச்சகர் வேலை. ’ நீ  வைஷ்ணவனேயில்லை.பெறகு ஒரு பெருமாள் கோவில்ல உனக்கு என்னப்பா  வேலை’  யாரும் கேட்கத்தான் செய்வார்கள். அப்படியெல்லாம்  கிழக்கு  மேற்கு பார்த்து    அந்தந்த வேலைக்கும்  அந்தந்த  ஆட்களை அமர்த்திய அந்தக்காலம் விடைபெற்றுக்கொண்டுவிட்டது.  கிராமப்பகுதிகளில்  கோவில் பூஜைக்கும் புரோகிதத்திற்கும் அய்யன்மார்கள் எங்கே கிடைக்கிறார்கள்.  சடங்கும்  சம்பிரதாயமும் சுருங்கிக்   காமா சோமா என்றுதான்  காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

என் மகள்  காமு என்கிற காமாட்சியை  சென்னை அம்பத்தூரிலேதான்  கல்யாணம் செய்து  கொடுத்தேன். மாப்பிள்ளை ஒரு ஃபேப்ரிகேஷன் கம்பெனியல் சூபர்வைசராய்  வேலை பார்த்தார்.  மெக்கானிகல்  டிப்ளமோ படித்திருந்தார்.  அந்தக்கம்பெனியில் அவருக்கு வேலை கிடைத்ததே  பெரிய சமாஜாரந்தான்.  அந்த ஃபேக்டரியில் மெயின்  கேட் திறந்ததும்  ஒரு விநாயகர் கோவில். அந்தக்கோவிலுக்குப் பூஜை செய்ய நிரந்தரமாய்ப் பூசாரியில்லை. என் மாப்பிள்ளைதான் அந்த பூஜையைச் செய்யவேண்டும்.  பின்னரே  மாப்பிள்ளை  தன் குருக்கள் வேஷத்தைக்கலைத்துக்கொண்டு தொழிற்சாலையின் உள்ளே  செல்வார். அவருக்கு  அங்கே  வேறு  வேலை ஒதுக்கப்பட்டிருக்கும்.   விநாயகர் கோவில் பூஜைக்கு என்று அவருக்கு தனியாகச் சம்பளம்  ஏதும் கிடையாது. எப்படி இருந்தால் என்ன பார்க்கின்ற  எல்லாமும் அந்த வேலை நேரத்திற்குள்ளேயே தான் அடக்கம்.

நானும் என் மனையாளும் இந்த ஈச்சங்காடு குக்கிராமத்தில் தான்  குப்பை கொட்டிக்கொண்டிருந்தோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு  இது இப்படியே போகும்  சொல்லமுடியாது. தற்காலம் இது  சாத்தியப்படுகிறது  உடல் ஒத்துழைக்கிறது. எப்படியிருந்தால் என்ன   கட்டிக்கொடுத்த  பெண் வீட்டிற்குத்தான்  கடைசியாய் சென்றாக வேண்டும். அது தான் எங்கள் கணக்கு. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில்தான் எங்கள் இருவரது  அந்திம  வாழ்க்கை அதில் மட்டும் உறுதியாக இருந்தோம்.

ஈச்சங்காட்டில்தான் எங்களுக்கு என்ன இருக்கிறது. கோவில் தருமகர்த்தா நாங்கள்  குடியிருக்க ஒரு  ரயில் ஓடு ஓட்டு வீட்டைக்கொடுத்து இருக்கிறார்.  ஸ்வாமிக்கு  நிவேதனமாய் வைக்கப்படும் திருத்தளிகைதான் எங்கள் இருவருக்கும் ஆகாரம். இண்டு இடுக்கில் ஈச்சங்காடு  கிராமத்தில் புரோகித வேலை ஒன்றிரெண்டு அவ்வப்போது வரும்.  சிலர்  குழந்தை பிறந்த  புண்யகாவசனம் என்று அழைத்துப்போவார்கள். தாயாருக்குத் திதி  வீட்டுக்கு  வாருங்கள் என்றழைப்பார்கள். கல்யாணம் கருமாதி என ஏதேனும் சுப அசுப காரியங்களுக்குமே  போய் வருவேன்.  ஜீவனத்திற்குக் கஷ்டம் என்பதில்லை. என் பெண்ணை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படிக்க  வைத்தேன்.  குருவின் சாதகப்பார்வை அவளுக்குத் திருமணம்  கை கூடியது.  சென்னை அம்பத்தூருக்கு   அவளை அனுப்பி வைத்தேன்.  ஒரு பேரன் பிறந்திருக்கிறான்.    அந்தக்கடவுள்   கோதண்டராமர்  யாரையும் கை விட்டு விடவில்லை.

 என்ன இருந்தாலும் மூட்டைக்கட்டிக்கொண்டு இந்த ஈச்சங்காட்டை விட்டுப் புறப்பட வேண்டியவர்கள்தான்   அது மட்டும் நிச்சயம். இந்த கிராமந்தான் எத்தனைப்பட்டிக்காடாய் இருந்தது.  ஈச்ச மரங்களின் காடுதானே. வெள்ளாறு   ஊரின் வடக்குப்புறமாக  ஓடுகிறது  ஆற்றில் ஒரே  மணல் மணல்தான். எப்போதேனும் செம்பட்டைத்  தண்ணீர் வெள்ளமாய்  கோபித்துக்கொண்டு ஓடி வரும். மற்றபடி  காலத்துக்கும் வறண்டே கிடக்கும்.

 இந்த பூமியில் சுண்ணாம்புக்கல் இருப்பது கண்டு பிடித்தார்கள். அதனைத்தொடர்ந்து இங்கு   ஜோடியாய்  சிமெண்டு  தயாரிக்கும் ஆலைகள்  வந்தன.  வானைத்தொட்டுக்கொண்ட வெள்ளைப்புகை கக்கும் அசுரக்குழாய்கள் வெளியை ஆக்கிரமித்தன. இரண்டுமே தனியார் ஆலைகள்தான்.  தெய்வமே என்று கிடந்த ரயில்வே நிலையம் விஸ்தாரமாகியது. தயாராகும்  சிமெண்ட் மூட்டைகள் தேசம் முச்சூடும் பயணித்துச் சென்றாகவேண்டுமே.  நூற்றுக்கணக்கில்   லாரிகள் .   வால் நீண்ட எட்டு சக்கர பதினாறு  சக்கர  ராட்சத லாரிகள் திணறித்திணறி,  இந்த ஊர் ஆலைக்கு வந்து வந்து போகின்றன. எத்தனையோ வண்ணத்தில் அசுரக்குருவி  சைசில் கியா  கார்கள் தொழிற்சாலைக்குள் தேவுடு காக்கின்றன. லாரி ஷெட் கள் டீக்கடைகள்  டண் டண் என்று ஓசை எழுப்பித் தயாராகும் ரொட்டிக்கடைகள், பலானது விற்கும் பொட்டிக்கடைகள்  அடக்க ஒடுக்கமாய்ச் சில சைவ உணவகங்கள் என  ஊர்  சமீபமாய்ப் பெருத்துத்தான்போனது.

கோதண்டராமருக்கு சேவார்த்திகள் கூடிப்போனார்கள். குடியிருப்புகள் ஆயிரமாயிரம் கட்டப்பட்டன. பெரிய பெரிய பள்ளிக்கூடங்கள் எல்லாம்  ஈச்சங்காட்டிற்கு வந்து விட்டன. முழுக்கை சட்டையோடு  கழுத்தில்  டை கட்டிக்கொண்ட ஆசிரியர்கள் பள்ளியில் அமர்த்தப்பட்டார்கள்.  மஞ்சள் வண்ண மின்சார விளக்குகளின் ஆட்சியை வீதியெங்கும் உணரமுடிந்தது.

என் மனைவி கூட அவ்வப்போது  புலம்புவாள்.’ சித்த அவசரப்பட்டுட்டம்.  ஈச்சங்காட்டுக்கு சிமெண்ட் ஆலை வரும் அங்கங்கேந்தும் இங்க  ஜனங்க வருவாங்க. இந்த  ஊரே மாறிப்போயிடும்னு தெரியாமப்போச்சு. இல்லன்னா  நம்ப பொண்ணுக்கு இந்த  சிமெண்ட்  ஆலையிலயே ஒரு நல்ல  வரனைப்பாத்து  கட்டி  வச்சிருக்கலாம். நாமளும்  இந்த கோதண்டராமர வுட்டுட்டு பரதேசம் போகவேண்டாம்’

நாம் நினைக்கிறமாதிரியெல்லாமா நம்  வாழ்க்கை அமைகிறது. காலம் நமக்குப்புரியாத மர்ம முடிச்சுக்களை  அவ்வப்போது  அவிழ்த்து அவிழ்த்துவிடுகிறதே.  நீங்களும் நானும் என்ன  செய்ய.  ‘ நடப்பதை  நீ வேடிக்கை மட்டுமே   பாரப்பா’ என்கிறதே  இயற்கை.

யார் எதிர் பார்த்தார்கள்  வந்தது  உலகம் தழுவிய   கொரோனாக் காலம்.  அம்பத்தூரில்  இருக்கும் என் பெண்ணிற்கு ஒரு பையன் இருந்தான். அப்படிச்சொல்வது தவறு. எனக்கு ஒரு பேரன்,  அவனுக்கு   இரண்டு  வயதிருக்கலாம்.   ஒரு நாள்  மாலை பேரனுக்கு  நல்ல ஜுரம்.  பார்மசியில்  எந்த மருந்தும் வாங்கத்தான் முடியுமா. வீட்டில் மீதமாய்க்கிடந்த  பாரசிடமால்  சொல்யூஷன் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள், அது  ஜுரத்தைக் கேட்டால்தானே. பேரனை  என் மாப்பிள்ளை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் தனியார் மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறார். குழந்தையை  மருத்துவர் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார்.  மாப்பிள்ளை அந்த நேரம் பார்த்துத்   தலை சுற்றிக் கீழே சாய்ந்திருக்கிறார். டாக்டர் அதிர்ந்து போய் என் மாப்பிள்ளையை நிமிர்த்தி உட்காரவைத்தார்.   இரத்தத்தில் ஆக்சிஜன் எவ்வளவுக்கு இருக்கிறது என்று  ஆக்சோ மீட்டர் வைத்துப்பார்த்திருக்கிறார். அது  காட்டிய விடை அந்த  டாக்டருக்குத் திருப்தியாகவே இல்லை.

மருத்துவ மனை வாயிலிலேயே  செவிலியர்கள் உள்ளே  சிகிச்சைக்கு வருகின்ற ஒவ்வொருவரையும் நன்றாக பரிசோதித்துத்தான்   அனுப்புகிறார்கள். பின் எப்படி இவர் உள்ளே வந்தார். மருத்துவருக்கு  விளங்காமல் இருந்தது. இதனில் இனி பேசுவதற்கும் என்ன இருக்கிறது.

மயங்கிக்கிடந்த  என் மாப்பிள்ளையே  தட்டுத்தடுமாறி  டாக்டரிடம் தனது மொபைலைக் கொடுத்து விட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.  ஜுரத்தில் இருக்கிற என் பேரன் திரு திரு என்று விழித்துக்கொண்டு  டாக்டர் முன்னே பரப்பிரம்மமாய் அமர்ந்திருக்கிறான். டாக்டர் என் மாப்பிள்ளையின் மொபைலில் என் பெண்ணின்  தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டிபிடித்து விட்டார்.  அதுவும் அதனில் சேமிக்கப்பட்டிருந்ததே  அதுவே பெரிய  அதிர்ஷ்டந்தான். என் பெண்ணுக்குப் போன் போட்டு,

, ‘  டாக்டர் பேசுகிறேன். நீங்க  காமாட்சிதானே  பேசறது.  உங்க  குழந்தையும் கணவனும்  இந்த மருத்துவ மனையில் இருக்காங்க . நீங்க  சட்டுனு  மருத்துவமனைக்கு    புறப்பட்டு வரணும். உங்க கணவரின் ஆதார் கார்டு காப்பியோடு வரணும். அது முக்கியம்’ இவ்வளவே சொல்லியிருக்கிறார்.

’ கணவரின் ஆதார் கார்டு நகல்  டாக்டர் கேட்டிருக்கிறார். எதற்காக அது?   காமு குழம்பிப்போனாள். எப்படியோ அதனைத்தேடி எடுத்துக்கொண்டாள்.

 மாஸ்க் போட்டுக்கொண்ட  டிரைவர்  ஓட்டும்  ஆட்டோ  ஒன்றைத் தேடிக்கண்டுபிடித்து  அந்த மருத்துவமனக்கு  உடன்   விரைந்திருக்கிறாள். வாயிலில் தயாராக நின்றிருந்த செவிலியர்  அவளை டாக்டரிடம் கூட்டிப்போனார். அந்த  மருத்துவமனையில்  என் மாப்பிள்ளையோ   டாக்டர் அருகிலிருந்த பெஞ்சில் சவமாக நீட்டப்பட்டுக் கிடந்தார்.  பச்சை ஸ்க்ரீன் ஒன்று   சவத்தைச்சுற்றி நின்றது. என் பேரன் கோதண்டம்  சுற்றும் முற்றும் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அதே  நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்.

‘நான்  உங்கள் குழந்தையைப் பரிசோதித்துக்கொண்டு இருந்தேன். அவனுக்கு  கடுமையான ஜுரம். ஊசி போட்டிருக்கிறேன். குழந்தை சரியாகி விடுவான்.   குழந்தை அருகே  அமர்ந்திருந்த  உங்கள் கணவர்தான்  அப்படியே சாய்ந்துவிட்டார். அவருக்குக் கொரானா.  கொள்ளை நோய் இருந்திருக்கிறது. அந்த நோய்  அவருக்குத்தெரியாமலேயே இருந்திருக்கிறது. அதுவே  அவரைப் பலியும் கொண்டு விட்டது. அவ்வளவுதான். ’

பெஞ்சில் கிடத்தப்பட்டுக்கிடக்கும் என் மாப்பிள்ளையின்  அவளுக்குச் சவத்தைக்காட்டினார்.

 காமு   தரையில் விழுந்து விழுந்து  புலம்பி அழுதிருக்கிறாள். ’ கொடுமடா இது என் தலையில  இடி விழுந்துட்துடா தெய்வமே’

‘அழக்கூடாது. அழவேக்கூடாது.  மீண்டும் சொல்கிறேன். படித்தவர்கள்தானே நீங்கள்.இதையும் தாண்டிச்செல்லுங்கள். டாக்டர்கள் செவிலியர்கள் இன்னும் எத்தனையோ ஊழியர்கள் இங்கே  இரவு பகலாய்ப் பணியாற்றுகிறோம்’  சற்றுக் கடிந்தே  சொல்லியிருக்கிறார் டாக்டர்.  சூழல் அப்படி. டாக்டர் அப்படித்தான் சொல்லவும் முடியும்.  அங்கே   டாக்டரைப்பார்க்க  நோயாளிகள்  காத்துக்கிடந்தார்கள். மருத்துவப் பணி மலையாக   பாக்கி  இருந்தது.

என் பேரனைத் தூக்கிய காமு   அவனை  அவள் மடியில் வைத்துக்கொண்டாள். ஜுரம் சற்றுக்குறைந்திருந்தது. தான் எடுத்து வந்த   தனது கணவனின் ஆதார் கார்டு நகலை  மருத்துவரிடம் ஒப்படைத்தார். அதனை வாங்கிக்கொண்ட  டாக்டர்,   காமுவிடம்,

’  நீங்க  கொழந்தயை தூக்கிகிட்டு வீட்டுக்குப்போங்க. உங்க கணவர் டெத் சர்டிபிகேட் மற்றதெல்லாம்  நா ஏற்பாடு செய்யறேன். உங்க கணவர்  டெட்பாடிய அதற்கான  பாலிதீன் பையில போட்டு தனியா ஒரு எடத்துல வச்சிடுவம். நாளைக்கி  அதுக்கு   மொறப்படி டிஸ்போசல்  எல்லாம் நடக்கும். நீங்க இனி இங்க வரவேணாம்.  நீங்க போயிகிட்டே இருங்க. உங்கள பாத்துகுங்க. உங்க  கொழந்தய  பத்திரமா பாத்துகுங்க.  இப்பக்கி  இதுதான் விதி. சட்டம், நல்லது. இதுல யாருக்கும்  இனி பேசிக்க ஒண்ணும் இல்ல’  முடித்துக்கொண்டார்.

 மாஸ்க் போட்ட மருத்துவர்  சொல்லியதைக் காதில் வாங்கிய  என் பெண்  எனக்குப் போன் செய்தாள்.   மருத்துவ மனையில் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். நான் கதி கலங்கிப்போனேன். என் மனைவி  சுவரில் மோதிக்கொண்டு அழுதாள்.  ஊர்  எங்கும் கொள்ளை நோயின் ஆட்சி. முற்றாய்ப் பேருந்து வசதியில்லை. ரயில் வசதியில்லை.

 உன்னைப்பிடி என்னைப்பிடி  என்று முயற்சித்தோம். முட்டி மோதி  ஈ பாஸ் வாங்கிக்கொண்டோம். தனிக்காரில் சென்னைக்குப் போனோம். பெண்ணைப் பேரனை  ஈச்சங்காடு அழைத்து வந்தோம். அங்கே  சுவரில் மாட்டியிருந்த   மாப்பிள்ளையின் போட்டோ ஒன்றோடுதான்  ஈச்சங்காடு திரும்பினோம். இனி மாப்பிள்ளையை  எங்கே பார்ப்பது. அவரின் சடலத்தைக் கூட பார்க்க முடியாத பாவிகள் நாங்கள். இயற்கைத்தாயின்  கோர விளையாட்டு.  கொள்ளை நோயின்  கொடுக்குப்பிடியில்  அல்லவா இப்பூமியே  சுழன்றது.  எங்கெங்கோ லட்சம் லட்சமாய்  மக்கள் மடிந்து போனார்கள். நாமும் இந்த மக்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தானே.

என் மாப்பிள்ளையின் தந்தையும் தாயும்,  அவர்கள் மகள் வீட்டில் இருந்தார்கள்.  கொரானாக் கொள்ளை நோய் கொஞ்சி விளையாடிய  கோயம்புத்தூரில்தான் வாக்கப்பட்டு  இருந்தாள்  சம்பந்தியின் பெண். எப்பவோ  மகள் வீடு போனவர்கள்  அந்த சம்பந்திமார்கள்.  ஒரே நாளில்  இருவரும் கொரானாவில் போய்ச்சேர்ந்ததாய்த் தகவல் மட்டுமே என் பெண்ணுக்கு வந்தது. நாங்கள் எங்கள் பேரப்பிள்ளையோடு   வெள்ளாற்று  ஊற்றுக்கிணறொன்றில் தலைமுழுகி முடித்தோம். தலையைத் தொங்க போட்டபடி  ஆற்று  மணலில் நடந்தோம். அவ்வளவே.

இதோ இந்த  சிமெண்ட் ஆலைத்  தனியார் பள்ளியில் காமாட்சிக்கு ஒரு வாத்தியார் உத்யோகம் கொடுத்திருக்கிறார்கள். அவள் படித்த படிப்பு  மட்டுமே அவளுக்குத் துணை. என் பேரனை அந்தக்  குழந்தை கோதண்டராமனை என் மனைவிதான் பார்த்துக்கொள்கிறாள். நான் கோதண்டராமர் சந்நிதிக்கு  தளிகைத்தூக்கோடு  தள்ளாடி  மட்டுமே நடக்கிறேன். ’இனி உன்னோடு தானப்பா  என்  சொச்ச வாழ்க்கை’  சொல்லிக் கனக்கிறது மனம்.

எங்கோ உயரத்தில்,  சிமெண்ட் ஆலை கக்கிய  வெள்ளைப்புகை கண்ணில் படுகிறது. ‘கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக்கொடுத்ததே’  அவை  நீல வானில் எழுதிச்செல்கின்றன