
ஆகஸ்ட் 2025 மாதச் சிறுகதையாகத் தேர்த்தெடுக்கப்பட்ட சிறுகதை அகிலாக்கா – வாசகசாலை: ஆசிரியர் – பிறைநுதல் (ஆகஸ்ட் 2025)
==============================================================================
கிட்டத்தட்ட 108 சிறுகதைகளை படிக்கவைத்து சென்ற ஆகஸ்ட் மாதம் எனக்கு புண்ணியத்தை தேடிக்கொடுத்து விட்டார் அன்பர் திரு.கிருபானந்தன் அவர்கள். நன்று, மிக நன்று, பிரமாதம் என்று மூன்று தரத்தில் கதைகளை பிரித்தபோது தலை சுற்றியது. பெரும்பாலான கதைகள் மிகநன்றாகவே இருந்தன. இதில் 15 கதைகளை பிரமாதம் என்று தேர்ந்தெடுத்தேன். அந்த பதினைந்து கதைகளையும் மறுபடி பரிசீலனை செய்து 5 கதைகளுக்கு கொண்டு வந்தேன். இதற்குள் மஞ்சுளா என்கிற எழுத்தாளர் முற்றிலுமாக களையப்பட்டு மஞ்சுளா என்கிற வாசகர் வெளிவந்திருந்தார். இந்த ஐந்தில் ஒன்றை தேர்ந்தெடுத்தது தான் பெரிய சவாலாக இருந்தது. ஐந்தும் அதனதன் பாணியில் சிறந்த கதைகள். இரண்டு நாட்கள் இந்த ஐந்து கதைகளையும் மனதில் அசை போட்டபோது, அகிலாக்கா தானாக வந்து முதலிடத்தை எடுத்துக்கொண்டது.
அகிலாக்கா – வாசகசாலை: ஆசிரியர் – பிறைநுதல் (ஆகஸ்ட் 2025)
பள்ளியிலிருந்து நடந்தே செல்லும் தூரத்தில் வீடு இருந்தும் விடுதியில் தங்கி படிக்கும் ஒரு ஏழை மாணவன். அவனும் அவனது விடுதி நண்பர்களும் ஏரிக்கரை சமாதியில் தான் விடுமுறை நாட்களில் மற்றும் ஓய்வு நேரங்களில் தஞ்சம் புகுவது வழக்கம். அந்த சமாதிக்கு அருகில் மலைக்கோயில் குருக்கள் வீடு. அந்த குருக்களின் மகள் அகிலாண்டேஸ்வரியும், மாணவனின் ஒன்றுவிட்ட சகோதரி கவிதாவும் தோழிகள். அவர்கள் மூவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அகிலா நாளடைவில் மாணவனுக்கு உற்ற தோழியாக, அகிலாக்காவாக மாறுகிறாள். ஒரு முறை சகோதரியைக் காணாமல் குருக்களின் வீட்டிற்கு சென்று மாணவன் நிற்க, “ டேய், ஒங்கொக்காவக் காணோம்னா ஒங்கத் தெருவுல பொறுக்கி எவனாவதும் காணாமல் போயிருப்பான். அங்க போயி தேடுறா. இங்க நிக்காத. போடா மொதல்ல இங்க இருந்து.” என்று அவர் கோபிக்கிறார்.
அக்கா கவிதா வீட்டிற்கு வந்துவிட, அந்த சம்பவத்தை நினைத்து மாணவன் அகிலாவிடம் கூறி வருத்தப்படுகிறான். “எங்கக்கா ஒன்னும் ஓடிப்போற பொண்ணுல்ல. அப்படிப்பட்ட குடும்பத்தில் அவ ஒன்னும் பொறக்கல.” என்கிறான். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலத்தில் காட்சி மாறுகிறது. அகிலாவைக் காணாமல் அவளது அண்ணன் இவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றான்.
அக்கவைக் காணவில்லை என்று கண்கலங்கி நிற்கும் ஒரு சிறுவனை நிர்தாட்சண்யமாய் ‘எவனோடாவது ஓடிப்போயிருப்பா’ என்று உதாசீனப்படுத்திய அந்த குருக்களின் வார்த்தைகள், அதன் விளைவாக எனக்குள் எழுந்த கோபம், என்னை இக்கதையை இம்மாதத்தின் சிறந்த கதையாக தேர்வு செய்ய வைத்தது. கதையில் ஒரு இடத்தில் கூட சாதி என்கிற வார்த்தையை பயன் படுத்தாமல், ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கும், அகிலா அக்காவிற்கும் இருக்கும் அழகிய நட்பின் மூலமாக இத்தனை கடினமான கருவை கையாண்ட ஆசிரியர் பிறைநுதல் அவர்களுக்கு பாராட்டுகள்.
தப்புக் கணக்கு – தினமணி கதிர் (ஆசிரியர் – சரயு)
“கெட்டவன்னு பேரு வாங்குனதுக்கப்புறம் நல்லவன்னு பேரு வாங்குறது ரொம்பக் கஷ்டம்மா. நான் இப்ப திருந்திட்டேன். ஆனா யாரும் என்னை நம்புறது இல்லை.”
தன் குடும்பத்திடமும், சமுதாயத்திடமும் இழந்த பெயரை மறுபடியும் சம்பாதிக்க முயலும் ஒருவனின் உணர்வுப்பூர்வமான கதை. மனதை நெகிழ வைத்தது.
தாழப்பறா – வாசகசாலை (ஆசிரியர் – மூங்கில்)
“என் அகம் என்னைவிட பணிமுதிர்ச்சியற்ற ஒருவனை என்னினும் மேலான ஒரு பணியில் இருப்பதைக் கண்டு பொசுங்கியது. இயலாமையையும் மீறி சுயம் என்னை ஊத்தை நோக்கி உந்திக்கொண்டே இருந்தது. நான் இரண்டாக பிளவுப்பட்டு என்னுள் மோதிக்கொள்வதை உணர்ந்தேன். ஆனால், பெருமை என்பது தடித்த பார்வை. அது அசட்டையை உருவாக்கியது.”
வெள்ளிப் பட்டறையில் வேலைசெய்யும் ஓர் திறமையான கைவினைஞரின் கதை. அவனின் சுயத்திற்கும் மது போதைக்கும் நடக்கும் போராட்டமே கதையின் மூலம். கதையில் வெளிப்பட்டிருந்த வெள்ளிப்பட்டறை தொழில் குறித்த புரிதல், நுணுக்கம், கதாநாயகன் செந்திலின் மனப்போராட்டங்களை கதாசிரியர் விளக்கிய விதம், இவரின் படைப்புகள் பிறவற்றை படிக்கத் தூண்டுகிறது.
குமாரின் கோபம் – அமுதசுரபி (ஆசிரியர்: சேஷசாயி)
“எப்படியானாலும் எந்த விவாதத்திலும் குமாருக்குத்தான் வெற்றி!”
பெரிய கம்பெனியில் பலநூறு மனிதர்களை கட்டியாண்ட ஓய்வுபெற்ற மேலாளர் குமாருக்கு இப்போது வழக்கத்தை விட அதிக கோபம் வருகிறது. அதில் எப்போதுமே காயமடைவது அவரது மனைவி சீதா. இப்படித் துவங்கும் ஒரு யதார்த்தக் கதையில், ‘ கோபத்திற்குக் காரணம் ஒருவரது ஈகோ தான்!’ என்று குரு ஒருவரின் மூலம் அறியும் குமார், மனைவியிடம் சென்று அதை கூறி, நீ அந்த குருவைப் பின்பற்றினால் உனது கோபம் குறையும் என்கிறார். அதற்கு சீதா, “என்னுடைய குருவே நீங்கள் தான்!” என்று அந்தர் பல்டி அடிக்கிறார்.
வீட்டிலும் மேலாளராக வலம் வரும் ‘குமாரின் கோபம்’ கதை நம்மை பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. கதைகளில் மலிந்து வரும் நகைச்சுவையுணர்வு இக்கதையில் அதிகம் இருப்பதால் இது தனியாக மின்னுகிறது!
தலைமுறை – அந்திமழை ( ஆசிரியர் : Dr. சோம வள்ளியப்பன்)
“என்னைய விட்டுட்டா லிஃப்ட்டுல வந்த! இரு… இரு… இவுங்க போகட்டும் உனக்கு இருக்கு!” என்று நிதித்துறையில் பெரிய பதவி வகித்து ஓய்வுபெற்ற தனது தாத்தாவை மிரட்டுகிறாள் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரம்யா. அவரும் அதற்கு பயந்தார் போல நடிக்கிறார்.
பள்ளியிலிருந்து தனது பேத்தியை அழைத்து வரும் ஒரு தாத்தாவின் பல நாட்களில் ஒரு நாள் அனுபவம் . தாத்தாவை தனது குறும்புகளாலும், சுட்டிப் பேச்சாலும் கட்டிப்போடும் ரம்யா குட்டி நம்மையும் நமது பள்ளி நாட்களுக்கு இட்டுச் செல்கிறாள். அருமையான ஃபீல் குட் கதை. என்னதான் ஒருவர் பணியிடத்தில் பெரும்புள்ளியாக இருந்தாலும், வீட்டில் அவர் பேத்திக்கு பயப்படும் தாத்தா தான் என்று மிகவும் யதார்த்தமாக காட்டியிருக்கும் கதை. நாம் வீட்டிலும் வெளியிலும் நமது பாத்திரங்களை புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை இனிதாக இருக்கும் என்கிற முக்கிய கருவையும் உள்ளடக்கியது.
*

மிக்க நன்றி.இந்தக் கதையை மிகச் சரியாக புரிந்துகொண்டு தேர்ந்தமைக்கு
அன்புடன்
பிறைநுதல்
LikeLike