புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தி. ஒன்றிணைந்த, விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழலை, வாய்ப்பாட்டு போன்று மாற்றியதுடன், வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்திய பெருமை கொண்டவர் மாலி அவர்கள்.

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழல் இசை மேதை மாலி அவர்களின் ( டி ஆர் மகாலிங்கம்) அவர்களின் 60 ஆண்டு நிறைவு விழாவை அவருடைய சிஷ்யர்களும் ரசிகர்களும் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள்.

மாலியின் இசை வாழ்க்கையில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கு கொள்ளாமல் இருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஒன்று வராமலே இருந்து விடுவார் அல்லது வந்தாலும் ஈடுபாட்டுடன் கச்சேரி செய்ய மாட்டார் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமன் ஒரு முறை திரு மாலியிடம், ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏன் ரத்து செய்து விடுகிறீர்கள்?  கச்சேரி செய்ய முடியாது என்றால் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்டாராம். ஒப்புக்கொள்ளாவிட்டால் எப்படி ரத்து செய்ய முடியும் என்று ஜோக்கடித்துவிட்டாராம்.

அந்த வழக்கத்தை ஒட்டிய எண்ணமோ தெரியவில்லை, அறுபதாம் ஆண்டு விழாவில் இருந்து தப்பித்துக் கொள்ள முன்னாலேயே அவர் நிரந்தரமாக இசை உலகை விட்டு பிரிந்து விட்டார் .இந்த நூற்றாண்டின் 30 ,40,50 களில் மாலி அவர்கள் கொடி கட்டிப் பறந்தார்.

தமிழ் நாட்டில் அப்போது மூன்று மாலிகள் (மகாலிங்கம்) புகழுடன் விளங்கினார்கள். புல்லாங்குழல் மாலி, ஓவியர் மாலி மற்றும் பாடகர் மற்றும் நடிகர் மாலி. என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதக் கலைஞர்களில் மாலியும் ஒருவர்.

தலைஞாயிறு என்ற ஊரில் பிறந்த மாலி இளம் வயதில் திருவிடைமருதூரில் இருந்தார். ஜால்ரா Mali- 7 years old | Laya Lokaகோபால் ஐயர் என்பவரிடம்  அவர் சகோதரர் மற்றும் சகோதரி பாட்டு கற்றுக் கொண்டபோது இவரும் அங்கு சென்றார். ஆனால் மாலிக்கு வாய்ப்பாட்டை விட புல்லாங்குழல் மீது ஈடுபாடு அதிகமானது. அப்பா விரும்பாவிட்டாலும் , குரு சொன்னதன் பேரில் மாலி புல்லாங்குழல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஒருமுறை சொன்னால் போதும் அப்படியே பிடித்துக் கொள்ளும் அடிப்படையில் ஞானம் மாலிக்கு இருந்தது .மாலி ஒரு பிறவி மேதை என்பதில் சந்தேகமே இல்லை.

அதே போல மாலிக்கு வயது 12 ஆக இருக்கும் போது அவரும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையும் கச்சேரி செய்ய வேண்டும் .அசாத்திய கூட்டம் உள்ளே புகுந்து மேடையை அனுப்புவது சிரமமாக இருந்தது.ராஜமாணிக்கம் பிள்ளை மாலியை  இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு மேடைக்கு சென்று விட்டார்.

சங்கீத உலக இசைக் கலைஞர்கள் மாலியின் திறமையை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் ரசிகர் உலகம் ஒரு ஏற்றுக்கொண்டது .மயிலாப்பூரில் 1933ல் நடந்த தியாகராஜ உற்சவத்தில் மாலி வாசித்த வேணு கானத்தில் மக்கள் மயங்கிப் போனார்கள். அந்த சபையில் இருந்த பரூர் சுந்தரம் அய்யர்,  முசிறி சுப்பிரமணிய அய்யர், இடையில் வெளியே போனவர்கள் சற்று நேரத்தில் திரும்பிய சுந்தரம் ஐயர் கையில் ஒரு பொன்னாடை எடுத்துக்கொண்டு வந்து மாலிக்கு அதை போர்த்தி வாழ்த்திப் பாராட்டினார்.

சிறிய வயது  என்பதால் பல பக்கவாத்தியக்காரர்கள் வாசிக்க முன்வரவில்லை. ஆனால் பின் நாட்களில் ராஜமாணிக்கம் பிள்ளை,சவுடைய்யா,பாப்பா வெங்கட்ராமய்யா, டி என் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன்  என்று பலரும் மாலிக்கு வயலின் வாசிக்க ஆரம்பித்தார்கள் அதேபோல மிருதங்கத்திற்கு தட்சிணாமூர்த்தி பிள்ளை,வேலூர் பாலக்காடு மணிஅய்யர், பழனி சுப்ரமணியபிள்ளை, முருகபூபதி, வேலூர் ராமபத்ரன் என்று பலரும் வாசித்தார்கள். நன்றாக வயலின்  வாசிப்பதிலும் மாலி தேர்ச்சி அடைந்தவர் என்று சொல்வார்கள். இன்னும் சொல்லப்போனால் புல்லாங்குழலை விட வயலின் மிகச் சிறப்பாக வாசிப்பார் என்று சொல்லுவார்கள்.

 மாலிக்கு பல சிஷ்யர்களை  உருவாக்கிய பெருமை உண்டு.  என். ரமணி, பிரபஞ்சம் சீதாராம், என் கேசி ,கே எஸ் நாராயணன் ,டி எஸ் சந்திரன் சீனிவாச மூர்த்தி என்று பட்டியல் நீளும்.

1939இல் காலம் சென்ற தன் தமக்கை தேவகியின் நினைவாக ரத்து செய்தது தான் முதல் கச்சேரி என்பார்கள். அதன்பிறகு பல காரணங்களில் அவர் கச்சேரி ரத்து செய்யும் வழக்கம் தொடர்ந்தது. குடிப்பழக்கம் அவரின் கலை வாழ்க்கையை பாழ்படுத்தியது .பக்க வாத்தியக்காரர்களுக்கு கூட மாலி என்றாலே நடுக்கம் தான் அவர் பிரயோகம் செல்லும் திடீர் திருப்பங்கள் , சங்கதிகள் சிறந்த மிருதங்கக்காரர்களையும் தாளம் பிசகச்செய்யும்.

மாலிக்கு  மதுரை மணி ஐயர், பாப்பா வெங்கட்ராமையா, துவாரம் நாயுடு, ராஜமாணிக்கம் பிள்ளை இவர்களிடம் மிகுந்த மரியாதை உண்டு.  மதுரை மணியின் கல்பனா ஸ்வரங்களை மாலி பெரிதும் விரும்புவார்.

 தமிழ்நாட்டில் அப்போது மதுவிலக்கு அமலில் இருந்தது. 1955 களில் பெங்களூர் சென்றவர் இரண்டு மூன்று வருடங்கள் கச்சேரிகளை ஒப்புக்கொள்ளவில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கச்சேரிகள் செய்தார். கடைசியாக அவர் வாசித்த கச்சேரி கிருஷ்ணகான சபாவில் 1985 டிசம்பர் மாதம்.

விருதுகள் பாராட்டுக்கள் பட்டங்கள் எதையுமே அவர் ஏற்கவில்லை சங்கீத நாடக விருது பத்மஸ்ரீ இரண்டை மட்டும் ஏற்றுக் கொண்டார் .பொதுமக்களின் ஆதரவு மட்டும் போதும் என்று இருந்துவிட்டார்.

அமெரிக்க ரசிகையைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்டார் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்தார். அப்போதும் அதிக கச்சேரிகளில் ஒத்துக் கொள்ளவில்லை.

1974 இல் அமெரிக்கா சென்றவர் 1985 இல் இந்தியா திரும்பிய போது இங்கேயே தங்கி நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார் .கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே அவருக்கு எல்லா உதவிகளும் செய்வதாக இருந்தார். ஒரு இசை மையத்தைத் தொடங்க வேண்டும் , ஆராய்ச்சி நூல்கள் எழுத வேண்டும், தன் வாழ்க்கையை பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் மாலிக்கு பல திட்டங்கள் இருந்தன ஆனால் அவரது திடீர் மறைவில் எல்லாமே நின்று விட்டன.

என்ன சொன்னாலும் மாலி என்ற இரண்டு வார்த்தை இசை உலகை அன்றும் இன்றும் என்றும் கட்டிப்போட்டு வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை