இஸ்லாம் ஆட்சி துவக்கம்

சேர, சோழ, பாண்டியர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் முற்றுப்பெற்ற இந்தத் தருணத்தில், நாம் தமிழ்நாட்டுக்கு விடை கொடுத்து, வடநாட்டுக்குப் சரித்திரப் பயணம் செல்வோம். அத்துடன், காலச்சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிச் செல்வோம். ‘நான்-லீனியர்’ முறைப்படி என்றும் சொல்லலாம். இந்திய சரித்திரத்தைச் சொல்லும் போது, இஸ்லாமிய அரசுகளைச் சொல்வது அவசியமல்லவா? நிற்க.
இஸ்லாமின் வரலாற்றுப் பயணம், முகம்மது நபி (570–632 கி.பி.) ல் இருந்து ஆரம்பிக்கிறது. கி பி 570ல் அரேபியாவில், மெக்காவில், முகம்மது நபி பிறந்தார். அவர் தமது கடவுட் கொள்கையைப் பற்றிக் கூறியவை குரான் என்ற வேதப்புத்தகமாயிற்று. அல்லாவின் ‘ஒரே கடவுள் வழிபாட்டை’ அறிவித்து, மனித சமத்துவம், கருணை, நீதி ஆகியவற்றை போதித்தார். அது இஸ்லாம் என்ற மதமாயிற்று. அவரது சீடர்கள், அவர் மனைவி கதிஜா, மகள் படிமா, மருமகன் அலி, நண்பர் அபுபக்கர். 622 கி.பி.யில் மதீனாவுக்கு நடந்த ஹிஜ்ரத், இஸ்லாமிய காலக் கணக்கின் தொடக்கமாக அமைந்தது. பின்னர் மெக்கா கைப்பற்றப்பட்டு, அரேபியாவெங்கும் இஸ்லாம் பரவியது. கி பி 631ல் அவர் இறந்தார். அதற்குள், அரேபியா முழுவதும், இஸ்லாம் பரவிவிட்டது.
அவருக்குப் பின், அபுபக்கர் முஸ்லிம்களின் தலைவரானார். காலிபு ஆனார். காலிபு என்றால் மன்னர் மற்றும் அரசியல்- சமயத்தலைவர் ஆவார். அபுபக்கருக்குப் பின் முகம்மதுவின் மைத்துனர் உமார், காலிபு ஆனார். அந்தக்காலங்களில், எகிப்து, சிரியா, பாரசீகம் நாடுகள் கைப்பற்றப்பட்டது. அங்கெல்லாம் இஸ்லாம் மதம் பரவியது.
காலிபாக்கள் (ரஷீதுன், உமய்யா, அப்பாசியா) வழிநடத்திய இஸ்லாமிய பேரரசுகள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய ஆசியா வரை விரிந்தன. உமய்யாக்கள் (661–750) தமது தலைநகரை டமாஸ்கஸில் அமைத்து, சிரியா, எகிப்து, ஈரான், ஸ்பெயின் வரை வெற்றிகொண்டனர். அப்பாசியர்கள் (750–1258) பாக்தாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இந்தியாவுக்கு இஸ்லாம் 8 ஆம் நூற்றாண்டிலேயே வந்தது. 711 கி.பி. யில் முகமது பின் காசிம் சிந்து பகுதியை கைப்பற்றினார். அடுத்த சில நூற்றாண்டுகளில் குஜராத், மல்வா போன்ற இடங்களில் வணிகர் வழியாகவும், சூஃபி பண்டிதர்களின் போதனைகளாலும் இஸ்லாம் பரவியது. இப்பொழுது அந்த முதல் இந்தியப் படையெடுப்புக் கதை கேட்போம்.
முஹம்மது பின் காசிம் (கிபி 711 – 715)
ஒரு பின்னணி: இதே சமயம், தென்னிந்தியாவில், பல்லவர் – சாளுக்கியர் ஆட்சிகள் கொடிகட்டிப் பறந்தன. பேரரசர்கள் ராஜசிம்ம பல்லவன் – சாளுக்கிய விஜயாதித்யன் இருவரும் தென்னிந்தியாவில், கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். அதே நேரம், இந்தியாவின் வடமேற்கில் ஒரு போர்ப்புயல் சூழ்ந்தது. இந்தியாவை நோக்கி முதல் முறையாக ஒரு இஸ்லாமியப் படையெடுப்பு நடந்தது.
சிந்துஸ்தானை உதயவீரன் ஆண்டு வந்தான். அருகேயுள்ள சிற்றரசர்களைப் பணியவைத்து சிந்துஸ்தானின் எல்லைகளை விரிவாக்கினான்! அதன் பின் அவன் பார்வை பாரசிகத்தை நோக்கியது, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கிழக்கெல்லைவரை சென்றான்.
இந்த செய்தி டமாஸ்கஸில் காலிபாவான வலீது இப்னு அப்துல் மாலிக் காதுகளுக்கு எட்டுகிறது. உதயவீரனுக்கு பாடம் புகட்ட 18 வயதான ‘முகம்மது பின் காசிம்’ தலைமையில் பெரும் படை ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டது! காலிபாவுக்கு காசிமின் போர்த்திறமை மீது பெரு மதிப்பும், அவன் மீது அன்பும் இருந்தது. காலிபின் மகன் இளவரசன் சுலைமானுக்கும் அதே வயது. அவனுக்குக் கோபம் தாங்கவில்லை. தன்னை விடுத்து காசிமை தந்தை அனுப்புகிறாரே என்று கடுப்பு.
ஆராயிரம் பேரோடு படை புறப்பட்டது. இத்தோடு பஸ்ராவில் 3000 ஒட்டகப்படை, ஜீராஜ் முக்ரான் பகுதிகளில் இருந்து 3000 பேர் என பெரும் படையுடன் 500 பேர் கொண்ட (கல் எறியும்) பீரங்கியுடனான கடற்படையும் வந்து சேர்ந்தது! போர் மூண்டது. முதலில் தேபல் கோட்டை, அடுத்து நேருன் நகர் அடுத்தடுத்து பிராமணபுரி கோட்டை, ராவட் என தொடர் வெற்றி!
முகமது பின் காசிம் வந்தபோது சிந்து நாடுகளை ராய் தஹிர் என்ற இந்து மன்னன் ஆண்டுவந்தான். ரவார் என்ற இடத்தில் நடந்தது அந்தப் போர். பூனைகளை வைத்து யானைகளை வெல்லும் கதை கேட்க ஆசையா? தொடர்ந்து படியுங்கள்.
தற்கொலைப் படைகளை ஏவி யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். பூனைகளை திடீரென மூட்டைகளில் இருந்து அவிழ்த்துவிட்டனர். பன்றிகளையும் போர்க்களத்தில் விரட்டிவிட்டனர். தீயைக் கக்கும் அம்புகளை யானைகள் மீது எய்தனர். வெடிச் சப்தங்களை உண்டாக்கினர்.
இந்தக் காரணங்களினால் யானைகள் மிரண்டு, சொந்தப்படைகளையே மிதித்து அவர்களைச் சின்னாபின்னமாக்கின. பல யானைகள், நதிகளையும் நீர் நிலைகளையும் நோக்கி ஓடியவுடன் அராபியர்கள அவர்களை எளிதில் சுற்றி வளைத்தனர். சிந்து நதிக்கரையில் இந்தச் சண்டைகள் நடந்தன.
அராபியப் படைகள் தீ அம்புகளை ராஜாவின் யானை மீது எறிந்தவுடன் யானைக்கு காயங்கள் ஏற்பட்டன. அதன் மீதிருந்த அம்பாரி தீப்பிடித்தவுடன் யானை நதிக்குள் இறங்கியது. அராபிய வீரர்கள் சூழ்ந்து கொண்டு ராஜாவின் மார்பு மீது அம்பு வீசினர். அவர் வீழ்ந்தவுடன் அவரது தலையைச் சீவி முகமது பின் காசிமிடம் ஒப்படைத்தனர். ராஜா இறந்த செய்தி அறிந்தவுடன், இந்தியப்படைகள் பின்வாங்கின. பல இடங்களில் பூனைகளையும் ஏவியவுடன் ஏது செய்வதென்று அறியாமல் யானைகள் குழப்பம் அடைந்து பின்வாங்கின. தோல்வியடைந்த உதயவீரன் தப்பி ஓடிவிட்டான்.
ராஜா தஹிர் இறந்த பின், காசிம் படைகள் தஹிரின் இரு பெண்களைக் கைப்பற்றின. அந்த இளவரசிகள்: சூர்யதேவி, பரிமளதேவி. சூர்யதேவியின் பேரழகு பெரும் பிரசித்தமாகி இருந்தது. இருவரையும் காசிம் அரண்மனையில் சிறை வைத்திருந்தான். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், சுதந்திரத்தைத் தவிர. இளவரசிகள் கொதித்துக் கொண்டிருந்தனர். ஆளுநராக முகமது பின் காசிம் ஆளத்துவங்கினான்! மூன்றரை ஆண்டுகால ஆட்சி தொடர்ந்தது.
டமாஸ்கஸில், காலிபா இறந்தான். அவன் மகன் சுலைமான் அடுத்த காலிபாவானான். எற்கனவே முகம்மது பின் காசிமின் புகழ் பெருகியிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அழகிய இளவரசிகள் அவன் சிறையில் இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டு, அவர்களை தன்னிடம் அனுப்புமாறு காசிமுக்கு கடிதம் எழுதினான்.
இளவரசிகள் காசிமிடம் கெஞ்சினர். “எங்களை காலிபாவிடம் அனுப்பாதே” என்று. காசிம், “கலிபாவின் ஆணை மீறத்தக்கதல்ல.” என்று சொன்னான். இளவரசிகள் கோபமும், துயரமும் கொண்டனர். இளவரசிகள், டமாஸ்கஸுக்கு, வேகமாகச் செல்லும் தேரில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சுலைமான் காலிபா, இந்தப் பெண்களைக் கண்டான். சூர்யதேவியின் அழகில் அவன் விழுந்தான். படுக்கை அறைக்கு அவளை அழைத்தான். சூர்யதேவி, “காலிபா! நான் எளிய அடிமை, உங்கள் இணைப்புக்குச் சற்றும் தகுதியுடையவள் அல்லள். நீங்கள் எங்களை அழைப்பது தெரிந்த பின், மூன்று நாட்கள் என்னையும், என் சகோதரியையும் வைத்து, அனுபவித்த பிறகே, காசிம் எங்களை உங்களுக்கு அனுப்பியுள்ளான். உங்கள் கலாசாரம் அதுதானோ, என்னவோ, நானறியேன். ஆனால், அரசனுக்கு இது உகந்ததல்ல” என்று கூறினாள்.
காலிபா சுலைமான் வெகுண்டான். காசிமிடம் ஏற்கனவே கோபத்திலிருந்தவன், பொங்கினான். தன் உபதளபதி ‘யசீத் இப்னு அபி கம்சா’ வை அழைத்தான். “நீ இந்தியா சென்று, காசிமை, மாட்டுத்தோலில் கட்டி இங்கு வரசொல். நீ, அங்கே அவனுக்கு பதில், ஆளுனராக இரு. அவன் இன்கு திரும்பி வரும் வழியில், அவனை முடித்துவிடு. அது சாதரணமான மரணமாக இருக்கக்கூடாது. மேனியில், சதா ரணமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, காசிம் இங்கு திரும்பி வரும்போது பிணமாக வரவேண்டும். சென்று வா” என்று அனுப்பினான்.
உதய்பூரில், காசிம், மன்னனின் ஆணையைக் கண்டு, அதன்படி, தன்னை மாட்டுத் தோலில் கட்டச்செய்து, தேரில் டமாஸ்கஸ் செல்லப் பயணம் தொடங்கினான். வழியில், திட்டப்படி, காலீபின் ஆட்கள், காசிமைச் சித்திரவதை செய்து கொன்றனர்.
காலிப் அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்திருந்தான். சூர்யதேவியை அழைத்தான். “அங்கே பார்! இந்தத் தேர்ஊர்வலத்தைக் கண்ணால் பார். ஒரு துரோகியின் முடிவை கண்டு களித்துப் பார்”, என்றான். காசிமின் உடலுடன், தேர் மெல்ல வந்து நின்றது.
சூர்யதேவியின் கண்கள் பனித்தன. “காசிம் எங்களை தொடவில்லை. ஒரு அண்ணனைப் போல எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், எங்கள் குலத்தை வேரறுத்து, இளவரசிகளாக இருந்த எங்களை அடிமையாக்கி, இந்த கயவன் காலிபிடம் அனுப்பி வைத்ததற்கு பழி வாங்க வேண்டுமென்றல்லவா அப்படிச் சொன்னேன். அவனுக்கு இப்படி ஒரு முடிவா” என்று மனதிற்குள் எண்ணிக் கசிந்தாள்.
இப்படி, இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி தொடங்கியது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள துறைமகமொன்று முகம்மது பின் காசிம் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முகம்மது நபியின் போதனையிலிருந்து தொடங்கிய இஸ்லாம், மேற்கு ஆசியா முதல் இந்தியா வரை விரிந்து, புதிய அரசியல், சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றை உருவாக்கியது.
இனி வருவது என்னவென்று பொறுத்திருந்து காண்போம்.
