‘டிங் டிங்’
‘ஹலோ யார் சார் வீட்டிலே? புவனா மாதவனுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது’
‘புவனா இங்கே இல்லை, அவள் நம்பருக்கு போன் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்’
‘ஆனால் இந்த முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது, வெளியே பெயர் பலகையும் உள்ளது’
பெயர் பலகையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ‘இப்போது சரியா’
என்று மாதவன் கேட்டான்.
குரியர் ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை. கீழே வந்து வாட்ச்மேனிடம், ‘பி1 இல் இருக்கும் மேடம் எங்கே போயிருக்கிறார்கள்? இந்த முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் சார் இங்கே இல்லை என்கிறார், மேடம் எங்கே?
‘மேடமுக்கும் அவர்கள் கணவருக்கும் எப்போதும் சண்டைதான், எலியும் பூனையுமாகதான் இருப்பார்கள், ஒரு நாள் பயங்கரமான சத்தம் கேட்டது, அதன் பிறகு மேடம் கோபமாக தன் பையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள், அநேகமாக பிறந்தகம் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன், டைவர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் மேடம் சென்ற பிறகு சார் மிகவும் கவலையோடு இருக்கிறார், சிடுசிடுவென்று எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், மேலும் பகலிலேயே குடிக்க ஆரம்பித்து விட்டார், மேடம் இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை, இரண்டு பேர் நடுவிலும் மிகவும் அன்பு இருந்தது, யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, வருத்தமாக இருக்கிறது’
‘ஹலோ புவனா மேடம் உங்களுடைய பார்சலை நான் எங்கு தர வேண்டும்?’
‘நான் உங்களுக்கு என்னுடைய லொகேஷன் அனுப்புகிறேன் அங்கே கொண்டு வந்து கொடுக்கவும்’
‘சரி’
‘இந்தாருங்கள் உங்களுடைய பார்சல், நான் உங்களது பழைய வீட்டுக்குச் சென்றிருந்தேன், அப்பொழுது வாட்ச்மேன் சொன்னான் நீங்கள் அங்கே இருப்பதில்லை என்று’
‘ஏன் வீட்டில் யாரும் தென்படவில்லை?’
‘உங்களது கணவர் இருந்தார், மிகவும் கவலையோடு இருந்தார், பகலிலும் குடிக்கிறார் போலும், மிகவும் கோபப்படுகிறார், யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை, எல்லாரோடும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று வாட்ச்மேன் சொன்னான், உங்களை விட்டுப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்’
‘சரி இந்தாருங்கள் நான் கையெழுத்து போட்டு விட்டேன், எடுத்துக் கொண்டு போங்கள்’
‘மேடம் நான் ஒன்று சொல்லலாமா? நான் சொல்லலாமா கூடாதா என்று கூடத் தெரியவில்லை, ஆனால் சொல்ல ஆசைப்படுகிறேன், தன்முனைப்பு மிகவும் கொடியது, அது ஒரு ஆளை கீழே தள்ளி விடுகிறது, யாருடைய தவறாக இருந்தாலும் சரி, மன்னிப்பு கோரலாம் அல்லது தரலாம், மன்னிப்பவர் பெரியவராக ஆகிவிடுகிறார், சரி நான் செல்கிறேன்
யோசித்துக் கொண்டே புவனா தன் கணவர் வீட்டிற்குச் சென்று விடுகிறாள்.
சாயந்திரம் வீட்டுக்கு வந்த மாதவன் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து திகைத்துக்கொண்டே உள்ளே வருகிறான், பாட்டில் எல்லாம் குப்பையில் எறியப்பட்டு, வீடு மிகவும் சுத்தமாக இருப்பதைப் பார்க்கிறான்.
‘உங்களுக்குப் பிடித்த பன்னீர்சப்ஜி செய்து இருக்கிறேன், கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள், சேர்ந்து சாப்பிடலாம்’
மாதவன் சிரித்துக்கொண்டே அவள் பின் சென்று அணைத்துக் கொண்டே ‘சாரி’ என்றான்.
