
- உத்தம தானம் ஈந்தே ஒண்பொருள் உவந்து நல்ல
உத்தமர்க்கு உவந்து முன்னே உத்தம தானம் ஈந்தே
உத்தம நெறிநின் றார்க்கு உவமையொன் றில்லை யாகும்
உத்தம குருவும் புத்தேள் உலகமும் உடையர் அன்றே
நல்ல உத்தமர்க்கு விருப்பமுடன் உயர்ந்த ஆசனம் அளித்து உபசரித்து உயர்ந்த பொருளை அவர்க்கு எதிரில் விரும்பி, மேலான தானமாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பவர்க்கும் மேலான இல்லற நெறியினில் நின்றவர்க்கும், சமம் ஒன்றும் இல்லை. அவர்கள் உயர்ந்த போகபூமியாகிய உத்தர குருவையும், தேவலோக பதவியையும், உடையவர் ஆவார்.
முன் செய்யுள்களில் கூறியபடி தவத்தைச் செய்ய வேண்டும்; அங்ஙனம் தவஞ்செய்ய முடியாவிடில் இல்லறத்திலிருந்தேனும் உத்தமர்களுக்கு உத்தமதானம் ஈந்து சன்மார்க்கத்தில் நின்று வாழ வேண்டும். அங்ஙனம் ஒழுகுவார்க்கு எந்த உயர்ந்த பொருளும் உவமையாகாது; அவர்கள் உத்தரகுருவென்னும் போக பூமியையும், தெய்வலோக பதவியையும் அடைவார்கள் என்பது இதன் கருத்து. இவர்கள் இங்ஙனம் நற்பதவிகளைப் பெறினும் நாளடைவில் துறவடைந்து முத்தியின்பத்தையும் எய்துவர்.
- மறுவிலாக் குணத்தின் மிக்க மறுவறு தவத்தி னார்க்கு
மறுவறு தான மீந்தே மறுவிலாப் போக பூமி
மறுவிலாப் பயன் கொடுத்து மறுவில ராவர் மாதோ
மறுவிலா மண்ணும் விண்ணு மறுவின்றி விளங்க வன்றே
[மறு=குற்றம்; தீமை;கெடுதல்; போக பூமி=நல்ல உலகம்]
மனிதர் இல்லறத்திலிருந்துகொண்டு குற்றமில்லாத நல்ல ஒழுக்கங்களினாலே மிகுந்த குற்றமற்ற, தவத்தினையுடைய ஏதிலிகளுக்கு தீங்கற்ற உத்தமமான தானத்தைக் கொடுத்து கெடுதல் இல்லாத உத்தரகுரு என்னும் நல்ல உலகமானது குற்றமில்லாத, நற்பயனைக் அவருக்குக் கொடுத்து அவர்கள் குற்றமில்லாத இம்மண்ணுலகத்திலும், தேவர் உலகத்திலும் குற்றம் இல்லாத தம்முடைய பெயர் விளங்க முடிவில் நாற்கதித்துன்பமாகிய கேடில்லாதவர்களாய் முத்தி இன்பத்தை அனுபவிப்பவராவார்கள்.
மனிதர் இல்லறத்திலிருந்து கொண்டே குற்றமற்ற தவத்தைச் செய்யும் துறவிகளுக்கு நல்லதானத்தைச் செய்ய வேண்டும். அத்தானப் பயனால் இவ்வுலகத்திலும் தேவருலகத்திலும் தம்பெயர் விளங்கப் புகழை நிலை நிறுத்துவார்கள். மேலும் மறுபிறப்பில் போக பூமியிற் பிறந்து, அங்குள்ள இன்பங்களை எல்லாம் அனுபவித்து முடிவில் பிறப்பு இறப்பின்றி முத்தி இன்பத்தைக் கைக்கொள்வர்” என்பது இதன் கருத்து.
இங்ஙனம் இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் புகழையும் போக பூமியின் இன்பத்தையும், முத்திப் பேற்றையும் அளிக்கும் என்பதால் இவற்றிற் கெல்லாம் முதற்காரணமாகிய இல்லறம் யாவற்றிலும் சிறந்ததென்பது பெறப்படும்.
43 நடரிடைப் பட்ட நாளும் நாற்கதி நவையை நீக்கி
இடரிடை உய்த்த லின்றி நீண்மணத் தொகுப்பின் ஆர்க்கும்
சுடர்கொள்பூம் பிண்டி நாதன் தொல்லறந் துணிந்து முன்னே
படர்கள்பூஞ் சிந்தை வைத்தார் பவக்கடல் எல்லை காண்பார்.
[நடர்=நடுக்கம்; நவை=துன்பம்;இடர்= துன்பம்;உய்த்தல்=செலுத்தல்;ஆர்க்கும்=நிறைக்கும்; சுடர் கொள்=மூன்று பிரபை வளையம் பொருந்திய; பிண்டி நாதன்=அசோக மரத்தடியில் இருக்கும் அருக தேவன்; பவக்கடல்=பாவக்கடல்; படர்கள்=தொண்டர்கள்]
நடுக்கத்தின் இடமாகத் தோன்றுகின்ற நான்குகதிகளாகிய துன்பத்தை, தினந்தோறும் விலக்கி அழகிய சித்தத்தைத் துன்பமாகிய வழிகளினிடத்தே செலுத்துதல் இல்லாமல், அதிகரித்த வாசனைச் சேர்க்கையுடைய, நிறைக்கும் மலர்கள் பொருந்திய, அசோகமரத்தடியில் வீற்றிருக்கின்ற, பிரபா வளையம் மூன்றினையுடைய, அருகக்கடவுளின், பழமை யாகிய, தருமமார்க்தத்திலே, துணிவு கொண்டு தொண்டர்களாய்ச் சேர்ந்தவர்கள், பாவக்கடலின் கரையைக் காண்பவர்களாவார்கள்.
44, உள்ளறப் பற்று நீக்கி உத்தம தானம் ஈந்தே
கள்ளவிழ் கோதை மாதர் கதிர்முலைக் கரத்தல் ஒன்றோ
புள்ளுறைந்து இனிது நீண்ட தவவனம் புரிந்து போகி
எள்ளற் நோற்றல் செய்யார் இடும்பைநோய்க்கு இரைகள் ஆவார்.
[பற்று=ஆசை; கோதை=மாலை; கரத்தல் மறைதல்; புள்=பறவை; எள்ளல்=இகழ்தல்; நோற்றல்=தவம் செய்தல்; இடும்பை=துன்பம்]
மனத்தில் ஆசையை அடியோடு விலக்கி, சற்பாத்திரத்தில் இடக் கூடிய நல்ல தானத்தைக் கொடுத்து, தேன் ஒழுகுகின்ற மாலையை அணிந்த இல்லக் கிழத்திகளாகிய பெண்களின் பிரகாசம் பொருந்திய தனங்களில் அழுந்தி மறைந்து இன்பம் நுகர்ந்து இல்லறம் நடத்துதலாகிய ஒரு காரியமோ, பறவைகள், தங்கி, இனிமையான தவம் செய்தற்குரியதாகிய காட்டை விரும்பிச் சென்று இகழ்ச்சி நீங்க, தவஞ் செய்தலாகிய ஒரு காரியமோ செய்யாதவர்கள். துன்பமாகிய வியாதிக்கு இரைகளாவார்கள்.,
தாமரையிலைத் தண்ணீர்போல இல்லறத்திலிருந்தாலும் பற்றற்றிருந்து உத்தம தானங்களைப் பற்றற்றுச் செய்து இல்லக் கிழத்திகளோடு கூடி இல்லறம் நடத்துதலாகிய ஒரு காரியத்தையோ வனத்தில் சென்று இகழ்ச்சி நீங்கத் தவஞ் செய்தலாகிய ஒரு காரியத்தையோ செய்யாதவர்கள் துன்பமாகிய நோய்க்கு இரை களாவார்” என்பது இதன் கருத்து. இச்செய்யுட் கருத்தும், 84, 85, 87, 88, 89 ஆம் செய்யுள்களின் கருத்தும் ஒன்றே.
இல்லறம் நடத்தினாலும் தான தர்மங்களைச் செய்து மனிதர் தமக்கென எதையும் கருதாத தன்மையுடையவர்களாய் எல்லாவற்றையும் பகவனுக்கே அர்ப்பணஞ் செய்து நடத்தவேண்டும்; அங்ஙனம் தடத்தப்படும் இல்லறத்தாலும் முக்தியே உண்டாகும்; எதனாலெனின் , இதில் உள்ளத்துறவு அமைதலான் என்க. இல்லறத்தை நீத்துச் செய்யும் துறவறம் பழிப்பற்றதாய் இருத்தல் வேண்டும்; தான் அப்படி இருந்தால்தான் அதற்கு நற்பயன் கிடைக்கும். இது பற்றியே, “உள்ளறப் பற்று நீக்கி உத்தமதான மீந்து கள்ளவிழ் கோதை மாதர் கதிர்முலைக் கரத்தல்” என்றும், ”எள்ளற நோற்றல்? ”என்றும் கூறினார் ஆசிரியர். இவ்விரண்டும் நற்பயனை அளிக்கக் கூடியனவாகும்.
- கோறல் ஓம்புமின் கொன்றபின் ஊன்தடி
மேறல் ஓம்புபின் மெய்ப்பொருள் அல்லன
தேறல் ஓம்புமின் தீயவை யாவையும்
கூறல் ஓம்புமின் நற்குண மல்லன ,
[கோறல்=கொல்லுதல்; ஓம்புதல்=நீக்கி விடுங்கள்; தடி=தசை; மேறல்=மென்று தின்னல்; தேறல்=நிலையென்று உணர்தல்]
மனிதர்களே ! நீங்கள் நற்கதியடைய வேண்டின் உயிர்களைக் கொல்லுதலை நீக்கிவிடுங்கள்; ஒரு ஜீவனைக் கொலை செய்த பிறகு, அதன் உடலிலுள்ள, தசையை, மென்று தின்னுதல நீக்கி விடுங்கள்; உண்மைப் பொருள்களல்லாதனவாகிய பொய்ப் பொருள்களை நிலையுள்ளன என்று உணர்தலை நீக்கி விடுங்கள்; தீங்கானவைகள் எல்லாவற்றையும் சொல்லுதலையும், நற்குணமல்லாத தீக்குணங்களையும், அகற்றுங்கள்.
மனிதர் நற்கதியடைய வேண்டுமாயின் உயிர்க் கொல்லுதலையும், கொன்றபின் அதன் ஊனைத் தின்னுதலையும், பொய்ப்பொருள்களை உறுதிப்பொருள்கள் என்று உணர்தலையும், தீயன கூறுதலையும், துர்க்குணங்களையும் ஒழித்தல் வேண்டும். ஆதலின் இவற்றை நீக்குமாறு கூறினார் ஆசிரியர்.
- விட்டு நீங்குமின் பற்றுளம் இன்மையால்
கட்டும் எண்வினை கால்தளை கட்டலால்
ஒட்டி இன்னுயிர் கோறல் பிறர்மனை
விட்டு நீங்குமின் கற்றறிந் தீர்எலாம்.
[எண்வினை=வசியம் [ஒருவரை ஈர்ப்பது]; மோகனம் [கூட்டத்தையே ஈர்ப்பது]; ஆக்ருஷணம் [ஒரு பொருளைத் தன்னை நோக்கி வரச் செய்வது]; ஸ்தம்பனம் [இயற்கைச் செயலை நிறுத்துவது]; பேதனம் [ஒற்றுமையாய் இருப்பவரைப் பிரிப்பது]; வித்துவேஷணம் [ ஒருவர் ஒன்றை வெறுக்கச் செய்வது]; உச்சாடனம் [மந்திரங்களைப் பிரயோகிப்பது]; மாரணம் [இறப்பை ஏற்படுத்துவது]
அறிஞர்களே! உறுதியான வழியைக் கற்றுணர்ந்த நீங்களெல்லாரும் நெஞ்சில் உலக ஆசையை விட்டு அகலுவீராக; அங்ஙனம் விட்டுவிட்டால் இருவினைகளும் நீங்கி வீடெய்துவீர்கள். இவ்வாறு இல்லாமல் அதாவது பற்றுடன் இருந்தால் எண்வினைகளும் [அஷ்டகருமங்களும்] உங்களை வந்து கட்டிப்போடும். ஆதலின், அவசியம் பற்று நீங்கவேண்டும். இன்னும் ஒரு பிராணியின் சமீபத்தில் சேர்ந்து, அதன் இனிய உயிரைக் கொல்லுதலும், அன்னியர் மனைவியின் சேர்க்கையை விரும்புதலும், விலங்காக அவற்றையுடையாரைப் பிணிந்து நரகத்தில் வீழ்த்தும். எனவே அச்செயல்களையும் விட்டு விலகுவீராக.
மனிதர், எத்தகைய விவேகிகளாயிருப்பினும், பற்று நீங்காத உள்ளத்தையுடையவர்களாயிருந்தால் அவர்களை எண்வினைகளும் சூழ்ந்து பாதிக்கும். கொலையும், பிறர்மனை விரும்புதலும் உடையவர்களாயிருந்தால், அப்பாவங்களே அவர்கட்குக் கால்விலங்காய் அவர்களைப் பிணித்து நரகத்தில் வீழ்த்திவிடும், ஆதலின் நரகத்தைச் சாராமல் எண்வினைகளையும் விட்டு நீங்கி முத்தியடைய விரும்புவோர் கொலை, பிறர்மனை நயத்தல், பற்றுளம் ஆகியவற்றை நீக்கவேண்டும் என்பது தோன்ற ஆசிரியர் இங்ஙனம், “பற்றுளம் விட்டு நீங்குமின்; உயிர்கோறல் பிறர்மனைவிட்டு நீங்குமின்?” என்று கூறினார்.
- ஊக்கி ஒண்பொருள் எள்துணைத் தாயினும்
ஆக்கி நல்லறம் செய்வர்பொய் யாக்கொளின்
நீக்கி நல்லற நிற்ப நில்லாவிடில்
தேக்கும் மேல்துணைச் செல்கதி யில்லையே.
[ஊக்கி=பொருள்தேடும் முயற்சி செய்து;எள்துணை=சிறிதளவு; மேல்கதி=சுவர்க்கப் பதி]
நற்கதியடைய விரும்புவோர் பொருள்தேடும் முயற்சியைச் செய்து சிறிதேனும் சிறப்பான பொருளைத் தேடி, அதுகொண்டு இல்லறத்தைச் செவ்வனே நடத்தி, நல்லதருமங்களைச் செய்வார்கள். இப்படிச் செய்யாமல் சிலர் யாக்கை முதலான செல்வங்களைப் பொய்யாகக் கொண்டால், (அதாவது : நிலையற்றனவெனக் கருதினால்), அவற்றிலுள்ள ஆசையைவிலக்கி, நல்லதருமத்தில், அதாவது துறவறத்தில் நிற்பார்கள், (இவ்வாறு இந்த இரண்டு அறங்களுள் ஒன்றில் நிலைத்து நிற்காவிட்டால், (அவர்க்கு), தேக்கும் இன்பங்களை நிறையச் செய்கின்ற, மேற்கூறிய தருமங்கள் துணையாகச் செல்கின்ற, மேலானகதி, (அதாவது : சுவர்க்கப்பதவியேனும் முத்திப்பதவியேனும்) இல்லையாம்..
நற்கதியடைய விரும்புவோர் இல்லற தர்மத்திலிருந்தாவது நியாயவழியில் பொருள்தேடும் முயற்சியைச் செய்து சிறிது பொருளையாவது தேடி இல்லறத்தில் செய்யத்தக்க நல்ல தருமங்களை இயற்றவேண்டும். இவ்வாறு செய்தால் சுவர்க்காதி பதவிகளையேனும் அடையலாம், இங்ஙனமடையும் இல்லறவின்பமும், சுவர்க்கப் பதவிகளின் இன்பமும் நிலையற்றனவெனத் தெரிந்தால், இவற்றின் மீது உண்டாகும் பற்றினை ஒழித்துத் துறவெய்தி பற்றற்ற தவத்தைச் செய்தல் வேண்டும். இதனைச் செய்யின் எப்பொழுதும் நிலைத்த இன்பமாகிய முத்திப்பேற்றை அடையலாம். இங்ஙனம் இரண்டில் ஒன்றைச் செய்யாவிடில் ஒரு நற்கதியும் இல்லாமல் போகும்; ஆதலின்,
இவ்விரண்டு தருமங்களில் ஒரு தர்மத்தையேனும் செய்யவேண்டுமென்பது இதன் கருத்தாம்.
48, திருத்தம் ஒன்றலிர் தேர்ச்சி இலா
நரி விருத்தம் கேட்டலும் மெய்யென ஓர்ந்து உள
வருத்தம் உற்றவர்க்கு ஈந்தருள் செய்திரேல்
வருத்தம் ஒன்றில செல்கதி மாடு எலாம்,
[திருத்தம்=நல்லொழுக்கம்; தேர்ச்சி=நல்லுணர்ச்சி; ஓர்ந்து=அறிந்து; மாடு=வழி]
நல்லொழுக்கமாகிய தர்மத்தைப் பொருந்தாதவர்களே! நல்லுணர்ச்சியில்லாத, நரியினது சரித்திரமடங்கிய விருத்தப் பாக்களாலாகிய இந்நூலைக் கேட்ட உடனேயே இதில் கூறப்பட்ட நீதியானது உண்மை என்று, அறிந்து வறுமையினால் மனவருத்தம் உடையவர்களுக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து, அருளைக் காட்டினால் நீங்கள் இப்பிறவி நீங்கிச் செல்கின்ற வழிகளில் எல்லாம், உங்களிடத்தே துன்பங்கள் பொருத்தமாட்டா,
நல்லொழுக்கம் இல்லாதவர்களும், இந்த நரி விருத்தம் என்னும் நூலைக்கேட்ட பின்னராவது இதில் சொல்லிய நீதியை மெய்யென உணர்ந்து, தருமம் செய்தலே தகுதி என்பதைச் சிந்தித்து வறுமையால் வருந்தியவர்களுக்குப் பொருளைக் கொடுத்து உதவி செய்து அவர்களுடைய வருத்தத்தை நீக்கினால் இப்புண்ணியத்தினாலே தாங்கள் செல்கின்ற வழிகளிலெல்லாம் துன்பத்தை அடையாமல் இன்பமுறுவார்கள் என்பது இதன் கருத்து ஆகும்.
இந்நூலில் உடலும் வாழ்வும் நிலையானதென்று எண்ணி வீணான ஆசைகளை வளர்த்துக் கொண்டு வாழ்பவர்கள் உயிர் துறந்த கதைகள் கூறப்படுகின்றதாதலின் இது, நல்லொழுக்கம் இல்லாதவர்க்கும் தருமத்தால் உயர்வுண்டு என்னும் நீதியை வற்புறுத்திக் கூறி அவர்களை நல்வழிப் படுத்துமாதலின் அவர்களை அழைத்து ”ஒழுக்கமற்றவர்களே! இந்நூலைக், கேட்டவுடன் தருமஞ் செய்தால், நீங்கள் செல்லும் வழிகளில் துன்பமடைய மாட்டீர்கள்” என்று இவ்வாறு கூறினார் ஆசிரியர். இல்லார்க்கு ஒன்று ஈதலே எல்லாத் தருமங்களிலும் சிறந்ததாதலின், வருத்தமுற்றவர்க்குக் கொடுத்துக் கருணை காட்டினால் என்று அது சிறப்பித்துக் கூறப்பட்டது.
- வரைத்த நாளன்றி வாழ்பவர் இன்மையால்
உரைத்த மாட்சி இலாநரி உற்றகோள்
திறத்தின் ஒன்றிலன் ஊனுடை உண்டி உண்டு
இறப்ப வும்நர கத்திடை எய்தினான்.
[வரைத்த=விதிக்கப்பட்ட; மாட்சி இலா=பெருமை இல்லாத; கோள்=குற்றம்; திறம்=தன்மை;
கடவுளால் ஒருவர்க்கு இவ்வளவுதான் என்று அளவுபடுத்தி விதிக்கப்பட்ட, ஆயுள் நாள் அல்லாமல், வேறு அதிகமான நாள்கள் உலகத்தில் இல்லாதபடியால், இந்நூலில் கூறப்பட்ட, அறிவின் சிறப்பில்லாத, நரியானது பேராசையால் அடைந்த குற்றத்தின் தன்மையினால் (அதாவது : நரி நெடுநாளைக்கிருப்பதாக நினைத்தது போல நினைத்ததால்) நல்வழியிற் பொருந்தாத ஒருவன் “புலால் சேர்ந்த உணவை உண்டுத் தானுண்டு பிறர்க்குமிட்டு ஆயுள் குறுகி இறந்தவுடனேயே, நரகத்திடை சேர்ந்தான்.
இதனால், தேகம் நிலையாமையைக் கருதி, மானிடர் தீய ஒழுக்கங்களில் சேராது நல்லொழுக்கத்தை நாட வேண்டுமென்பது பெறப்படும்.
அஸ்தினாபுரத்தரசன் பிரீதிபத்திரனுக்கும் மனைவி வசுந்திரிக்கும் பிறந்தவன் பிரீதிங்கரன் ஆவான். மந்திரி சித்திரமதிக்கும் மனைவி கமலைக்கும் பிறந்தவன் விசித்திரமதி என்பவன் ஆவான். விசித்திரமதி இளமையிலேயே துறவு பூண்டு தருமருசி என்னும் சாது பால் தருமங்கேட்டு அயோத்திக்கருகில் தங்கி யிருந்தான். பிரீதிங்கரன் அப்போது அயோத்திக்குள் புகுந்து புத்திசேனை என்னும் தாசியிடம் பிக்ஷையேற்று அவளுக்குத் தருமோபதேசம் செய்து வந்தான்.
பிரீதிங்கரன் விசித்திரமதியிடம் புத்திசேனை பற்றிக் கூறினான். அதைக் கேட்ட விசித்திரமதி அவள்மீது மோகமுற்றுத் தவத்தைவிட்டு அவளிடம் சென்று தன் எண்ணத்தைத் தெரிவித்தான். அவள் அதற்கு இணங்காததால், மாமிச உணவை உண்ணும் அந் நகர மன்னனுக்காகப் புலால் உணவு சமைத்துத் தானும் உண்டு அவனுடன் நட்பு பூண்டான். பின் மன்னன் உதவி கொண்டு அத்தாசியைச் சேர்ந்து அவளின் ஒழுக்கத்தைக் கெடுத்து இறந்தான். அவன்.நரகம் எய்தி மிருககதியில் சுழன்றான். இக்கதை மேரு மந்தர புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
- மற்றுஇம் மண்மிசைப் பற்றுஉளத்தால்கிளை
உற்ற மாந்தர் உரைபல உண்மையால்
குற்ற மாய்க்கொண்டு உலோப எனும் பாவியைக்
கற்ற மாந்தர் கடிந்தனர் என்பவே.
[மற்று=பின்னரும்; கிளை=சுற்றத்தார்; உலோப குணம்=பேராசைக் குணம்; கடிந்தனரரே=நீக்கினர்]
பின்னரும் இப்பூவுலகில் ஆசை கொண்ட மனத்தினாலே, சுற்றத்தார்களைப் பொருந்திய மனிதர்களுடைய பல வரலாறுகள் இருக்கின்றதால் [அதாவது, பேராசைக் குணம் பொருந்திய பல மனிதர்கள் சுற்றத்தாரோடு பொருந்தியிருந்தும் தருமம் செய்யாமல் உலோப குணம் பொருந்தி அச்சுற்றத்தாரோடு அழிந்துபோன வரலாறுகள் இருக்கின்றதால்) நீதிநூற்களைப் படித்துணர்ந்த மனிதர்கள், பேராசை எனும் பாவியை, குற்றமாக மனத்திலெண்ணி நீக்கினார்கள் என்று அறிவுடையோர் கூறுவர். இதனால், யாவரும் தேகநிலையாமையை நோக்கி விரைவில் தான தருமங்களைச் செய்து நற்கதியடைய வேண்டுமென்பது பெறப்படும்.
நரிவிருத்தம் மூலமும் உரையும் முற்றும்
