Female Indian Teacher Stock Illustrations – 369 Female Indian Teacher Stock Illustrations, Vectors & Clipart - Dreamstimeபுஷ்பா சிறந்த ஆசிரியர் விருது வாங்கிய பின், கிடைத்த அங்கீகாரத்திற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும் என எண்ணினாள். கணவன் மாதவனின் ஆதரவு, ஊக்குவிக்கும் மாமியார், மாமனார் இவையெல்லாம் அவளை முழு வீச்சில் செய்யத் தூண்டியது!

முதல் படியாக ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறைகளைப் பற்றிப் படிக்கத் தொடங்கினாள்.  பொறுப்பாகவும் கடமைகளை முறையாகவும் செய்ய வேண்டும் என முடிவு செய்தாள் இந்த இருபத்தைந்து வயதான புஷ்பா!

புஷ்பா திட்டங்களைத் தீட்டினாள், செய்யப் போவதை வரைபடம் மூலமாகச் சக ஆசிரியர்கள், மாணவர்களுக்குத்‌ தெரிவித்தாள். ஒருசிலர் இதைக் கர்வம் என்றும், அவள் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்டது என்றும் கூறினார்கள். தோழிகளுக்குக் கூட உடன்பாடில்லை. திட்டமிட்டவை கேள்விக்குறியானது. 

இதையே சிந்தித்ததில், அச்சம் சந்தேகம் ஓங்கி நின்றன. நாளடைவில் எதைச் செய்யப் போனாலும் தன்னால் முடியுமா என்ற கேள்விக்குறி முன்வந்தது. தன்னம்பிக்கை சரிந்ததை உணர்ந்தாள்.

புஷ்பாவின் பள்ளிக்கூடத்திற்குக் கல்வி சார்ந்த மனநல ஆலோசகராக நான் வாரந்தோறும் போவதுண்டு. என்னைச் சந்தித்து விவரங்களைப் பகிர்ந்தாள்.

புஷ்பாவின் தற்போதைய கேள்வி மதிப்பெண் பற்றியது. எதனால் சிலர் மதிப்பெண் எடுப்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளார்கள், ஆனால் எடுக்காதவர்கள் மற்றும் பலர் தோல்வி அடைந்தாலும் மனம் தளர்வதில்லை என்று. 

வர்ணிக்கச் சொன்னேன். இடையிடையே கேள்விகளை எழுப்பினேன். கூர்ந்து கவனித்துப் பதிலளிக்க வேண்டியிருந்தது.

இதைத் தொடர்ந்து செய்வதே செஷனின் மைய பொருளானது. நாளடைவில் புஷ்பா தன்னைப் பற்றியும் வகுப்பில் சில மாணவர்களைப் பற்றியும் தெளிவு பெற்றாள்!

முக்கியமாக, அதிக மதிப்பெண் பெறுவோர் சிலர் தோல்வி அடையும் முறையில் ஒற்றுமையை அடையாளம் கண்டாள். மற்றவர்களிடமிருந்து சபாஷ்‌ கிடைக்க உழைப்பார்கள், தவறாகச் செய்தால் குறைவாக எடைபோட்டு விடுவார்கள் என்ற அச்சத்தாலேயே தானாக ஒன்றையும் செய்ய மாட்டார்கள். இவ்வித குணாதிசயங்கள் உள்ள பல மாணவர்கள் இருப்பதை விவரித்தாள்.

மாணவர்களும், ஆசிரியர்களும் இதைப் புரிந்து கொள்வதற்காக வர்க்ஷாப்பை அமைத்தேன், கருத்துகளை விவரித்தேன். மாணவர்கள் மற்றும் புஷ்பா தெளிவடைந்தார்கள்.

அவர்களின் நடத்தை external regulation (வெளிப்புறத்திலிருந்து ஒழுங்குமுறை) எனப்படும். பல செயல்பாடுகள் மூலமாக இதன் பொருளை அறிந்து கொண்டார்கள். புஷ்பா தன் ஆராய்ச்சிக் குறிப்புகளில் சொல்லப்பட்டதை மாணவர்கள் செய்வதுடன் ஒப்பிட்டுப் பொருந்துவதைக் கண்டுகொண்டாள். இப்படிப்பட்டவர்கள் சொன்னால் செயல்படுத்துவார்கள், நற்பெயர் எடுக்க மட்டும் செயல்படுவார்கள் என. தானாகவே எடுத்துச் செயல் பட மாட்டார்கள்.

புஷ்பா மனதில் மேலும் சில விஷயங்கள் தெளிவானது. அதாவது முன்பு கவனித்தபடியே, இந்தச் செயல்பாடு உள்ளவர்கள் எவ்வளவு ஊக்கம் தந்தாலும் ஏனோ புதுமைகளின் பக்கம் போவதைத் தவிர்கிறார்கள் ‌எனக் கண்டாள். அவர்களின் அச்சம் என்னவென்றால், தோல்வி நேர்ந்துவிட்டால் எல்லோர் கண்முன் தாழ்வு பட வேண்டிடும், அதனால் தன்மதிப்பு குறைந்து போகும். புஷ்பா இவர்கள் புகழைத் தேடிக்கொள்வதையும் கவனித்தாள். இதிலிருந்து அடிப்படை ஏக்கம் புரிந்தது.

இந்த நிலையை மேலும் ஸெஷனில் பரிசீலனை செய்ய, இதில் தன்னுடைய செயல்முறையும் அடங்குகிறது என அடையாளம் கண்டாள்!

புஷ்பா அங்கீகாரம் பெற்றதால் இந்த நிலையிலிருந்தாள். மற்றவரின் சொல்லுக்குத் தன்னைப் பலி கொடுத்து, தான் தீட்டியவை பூர்த்தி செய்ய முடியாததால் ஏற்பட்ட தவிப்பினால் உடல் மனநலம் பாதிக்கப்பட்டது, அவதிப் பட்டாள்.

இந்த மனப்போக்கைக் குறித்துத்தான் ஆராய்ச்சியாளைகள் ரயன், டீஸீ (Ryan, Deci) தங்களது சுய நிர்ணயித்தல் கோட்பாடு (Self Determination Theory) உருவாக்கினார்கள். மனிதர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவைகள் மூன்று என்றார்கள்: தானாகச் செயல்‌படுவது, திறன், மற்றவர்களுடன் பழகும் தன்மை என.

அடுத்த சில ஸெஷன்கள் புஷ்பா இவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வதிலும், இந்த கோட்பாட்டை அமல்படுத்துவது எப்படி என கணிப்பதிலும் சென்றன. அதற்கேற்ப சூழல் உருவாக்கும் வழிமுறைகளையும் செய்முறைகளையும் பார்த்தோம். வகுப்புகள் பயமின்றி செயல்படத் திட்டங்களைப் பட்டியலிட்டோம்.

திறன், மற்றவர்களுடன் பழகும் தன்மை இவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை சக ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விவரித்து, அவர்களுடன் கலந்தாலோசிக்கப் புஷ்பா துவங்கினாள். ஆரம்பத்தில் அவளிடம் தன்னுடைய உடல்மொழி பாவங்களைக் கவனித்து, குறித்து வைத்துக் கொள்ளச் சொன்னேன். பின்னர் செஷனில் ஆராய்ந்தோம். தான் செயல்பட வேண்டியது எப்படி எனத் தெளிவு பெற்றாள்.

செயல்படுத்தி வர, நாளடைவில் புஷ்பா தனக்குள் உற்சாகம் ஏற்பட்டதைக் கவனித்தாள். சூழல் மாற்றம், மாணவர்கள்-ஆசிரியர் உறவு மற்றும் சக மாணவர்கள் உறவும் மேம்படுவதை புஷ்பாவும் மற்ற ஆசிரியர்களும் கவனித்தார்கள். ஆராய்ச்சியில் இவ்வாறு நடக்கும் என்று கூறியிருப்பதைப் படித்து வியந்து போனாள்.

புஷ்பா இருவித ஊக்கம் உள்ளது என அறிந்து கொண்டாள். வெளியிலிருந்து வருவதோ சபாஷ், சம்பளம், மாணவர்களுக்குக் கொடுக்கும் மதிப்பெண்கள் போன்ற வெகுமானம். இது மற்றவர்களால் நாம் பெறும் ஊக்கமாகும்.

மற்றொன்று, மனதிற்குப் பிடித்தமானது செய்யும் போது வரும் திருப்தியும், கிடைக்கும் சந்தோஷமும். கவனத்தை ஈர்ப்பதினால் ஊக்குவிக்கிறது. புஷ்பா மற்ற ஆசிரியர்களுடன் இதைப் பகிர்ந்தாள்.

இதை மையமாக வைத்துப் பல வாரங்களுக்கு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வர்க்ஷாப் நடத்தினேன்.  இளமைப் பருவத்தில் தன்னைச் சுற்றியுள்ளவரிடமிருந்து கவனித்துக் கற்றுக் கொண்டு செயல்படுவார்கள் என்பதால் அதன்படி செயல்படச் சூழலை அமைக்கத் திட்டமிட்டோம்.

ஆசிரியர்களும் பெற்றோரும்  பிடித்துச் செய்யும் செய்முறைகளில் ஈடுபட, ஆர்வம் முன்னிலையில் நின்றது. சூழல் உருவானது! விளைவு வகுப்பிலும் தென்பட்டது. புஷ்பா, மற்ற ஆசிரியர்கள் கவனித்தார்கள், கவனம் மேம்பட்டது, மதிப்பெண்கள் கூடியது!

வேறொரு மாற்றத்தைக் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இதற்கு முன், மாணவர்கள் மதிப்பெண்களை எப்படியாவது பெறுவதற்குப் பல எதிர்மறை முறைகளைச் செய்தனர். ஏனெனில் எல்லோர் கவனமும் மதிப்பெண் மேல் மட்டும் வட்டமிட்டது.  இந்த நிலை மாறியது. ஆசிரியரும் பெற்றோரும் நேர்மறைக் கருத்துத் தருவதால், செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் தர, மாணவர்கள் நேர்மறை வழிமுறைகளை உபயோகித்து வந்தார்கள்.

வர்க்ஷாபில் விளக்கியது போல, மாணவர்கள் தாம் செய்ததைத் தானே கணித்துத் திருத்த முயல்வதில், சந்தேகத்தை விளக்கிக் கொள்வதில் தைரியம் திகழ்ந்தது.  பலர் தங்களது செயல்முறையைத் திருத்திக்கொள்ள, உறவுகள் நன்றானது.

இவற்றுடன் புஷ்பா வெவ்வேறு மாணவர்களுக்குக் குழு தலைமைப்பதவிகள் உருவாக்கிச் செய்ய வைத்தாள். பொறுப்பு ஒரு பக்கம் வளர, மறுபக்கம் மற்றவரைக் குறைகூறுவதற்கு முன் தங்கள் சொற்களைக் கவனத்துடன் உபயோகித்தார்கள். இரட்டைப் பலன்! சூழல் மாற்றத்தினால் உடல், மனநலம் மேம்பட்டது.

அடுத்தபடியாக, புஷ்பா பல புதுமை வழிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தாள்.

புஷ்பாவின் பரிந்துரையை நிராகரித்த ஆசிரியர்கள் நால்வரும், கேலி செய்த மூவரும் என்னைச் சந்தித்து புஷ்பாவைப் பற்றிப் பேசியதற்கு வருத்தப் பட, சில செஷன்களுக்குப்பின் புஷ்பாவுடன் கைகோர்த்துச் செய்ய வேண்டும் என்றதைத் தெரிவித்தார்கள். இந்தத் தருணத்தில் குழு அமைப்பில் (group work) செஷன் செய்தேன். இதுவரை செயல்பட்ட முறைகளைப் பற்றிப் படித்து, பாடத்திட்டங்களில் அமல் செய்யக் கலந்தாலோசித்தார்கள். இந்த நிலையில் புஷ்பாவையும் குழுவிற்குள் வர வைத்தேன். ஆக்கப்பூர்வமாகச் சென்றதால் பள்ளித் தலைமை ஆசிரியரும் இதை வரவேற்றார்.

புஷ்பாவுடன் ஸெஷன் தொடர்ந்தது. வர்க்ஷாப்பும். இரண்டிலும் பலவிதமான செய்முறை ஆராய்ச்சிகள், கட்டுரைகள், கதை, கவிதையை முழுவீச்சில் உபயோகித்தேன். எங்கள் துறையில் இந்த முறையை bibliotherapy என்போம். மிக வலிமையானது!

பலர் பயன் அடைய ஒரு யுக்தியைச் செய்தேன். மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி ஒரு பக்கம் எழுதி, வகுப்பில் பகிர்வது. ஒவ்வொருவரின் திறமை தென்பட்டது. அதேபோல ஆசிரியர்களுக்கும் செய்ய, படித்தது பலருக்கும் உபயோகம் ஆகும் என்றால் பகிர்வது வழக்கமாயிற்று. இதைக் குறிப்பிட்ட இடத்தில் செய்ய வைத்தேன், “கம்யூனிட்டீ ஆப் லேர்நிங்” (“Community of Learning”) என்ற சமூகக் கற்றல் ஆனது!

அனைத்து யுக்தியும்  தைரியத்தை வளர்த்தது, சுமுகமாகப் பேசினார்கள், தன் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள், உணர்வுகளை மதித்தார்கள். அலட்சியம் செய்வது,  ஏளனமாகப் பார்ப்பது முழுமையாக நின்று விட்டது.

புஷ்பா எதைச் செய்யவேண்டும் என்று எண்ணினாளோ, நிறைவேற்றினாள்!

இந்த நிலை நீடித்திருக்க, ரெசிபிரோக்கல் லர்னிங் (reciprocal learning) என்னும் ஒருவருக்கொருவர்க் கற்றுத் தரும் முறையைத் தேர்வு செய்தோம். ஏனெனில் இந்த முறையில் ஒத்துழைப்பு, பற்று , புரிதல் அதிகரிக்கும் என்றதால். வாழ்க்கையிலும் மற்றவருடன் இணைந்து செயல்படுவது யதார்த்தம். இந்த முறை அதற்கு உதவும் என்பதாலும் தேர்வானது.

சமூக நலம் மேம்படுவதைப் பார்த்தாள் புஷ்பா. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்தார்கள். ஒவ்வொருவரும் தன் பங்கிற்குச் செய்தால்தான் புரிதல் நேரும் எனப் புரிந்ததுமே கைகோர்த்துச் செயல்பட்டார்கள். ஏற்ற தாழ்வு ஒழிந்தது. இந்த கற்றல் முறையைப் பின்பற்றியவர்களை நீண்ட கால ஆராய்ச்சி (Longitudinal Study) முறையில் ஆராய்ந்ததின் கண்டுபிடிப்பு, மற்றவர் கருத்தை மதிப்பது, தோழமை, கற்பதற்கு ஆர்வம் இவை மேம்பட்டது, மேலும் படித்த பாடங்களைப் பல வருடகாலங்களுக்கு ஞாபகம் வைத்திருந்தார்கள். தங்கள் மாணவர்கள் இவ்வாறு உருவாகலாம் என்று கண்டறிந்ததில் புஷ்பாவும் மற்ற ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்!

 

நம்முள் ஒளிந்து

இருக்கும் வளங்களை

அறிவோம்!

அவற்றைத் தூண்டுதலாக்கி

நாமும் பிறரும்

மேம்படச் செய்வோம்!