இந்த ஆண்டு சூர்ய படைப்பாற்றல் விருது எழுத்தாளர் திரு.பாவண்ணனுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த புத்தகத்திற்கான அக்ஷர விருது திருமதி.வித்யா சுப்பிரமணியம் எழுதிய ஆகாசத் தூது நூலுக்கு வழங்கப்படவுள்ளது.
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் வி.ராமசுப்பிரமணியம், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு.தாமோதர் மெளசோ, பிரபல பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் ஆகியோர் இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.
பாவண்ணன்
மூன்று கவிதைத் தொகுப்புகள், 22 சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் இரண்டு குறுநாவல்கள், 38 கட்டுரைத் தொகுப்புகள், 11சிறார் இலக்கிய நூல்கள் ஆகியவற்றைத் தனது சொந்தப் படைப்புகளாக வெளியிட்டுள்ள பாவண்ணன் அவரது மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ்ப் படைப்புலகைச் செழுமைப்படுத்தியவர்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு 25 நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புப் பரிசினை வழங்கிக் கெளரவித்தது. இலக்கிய உலகில் சிறப்பிற்குரிய விருதுகளாகக் கருதப்படும் கனடாவின் இயல் விருது, அமெரிக்காவின் விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது தமிழக அரசின் விருதுகளாலும் சிறப்பிக்கப்பட்டவர்.
ஆகாசத் தூது


ஆகாசத் தூது சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சித்தரிப்பதோடு மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சங்களான, துக்கம், கடமை, நம்பிக்கை போன்றவற்றின் மீதான சிந்தனைகளையும் தூண்டுகிறது. இந்தப் புதினம் ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு தேசம் ஆகியவை காலத்தின் நீரோட்டங்களின் வழியாகத் தங்கள் பாதையைக் கண்டறியும் கதை. வாழ்வின் போராட்டங்களை மட்டுமன்றி அந்தப் போராட்டங்களின் ஊடாக நம்பிக்கையையும், புயலுக்கு நடுவே ஒளிச்சுடரைக் காண்பதையும், சித்தரிப்பது இந்த நாவலின் சிறப்பு..
நாற்பதாண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் வித்யா சுப்ரமணியன் தமிழக அரசின் பரிசு உட்படப் பல பரிசுகளாலும் விருதுகளாலும் சிறப்பிக்கப்பட்டவர்.
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் வி.ராமசுப்பிரமணியம், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு.தாமோதர் மெளசோ, பிரபல பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் ஆகியோர் இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்
