
நான் இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு என் மகன் அமேசானில் ஆர்டர் கொடுத்திருந்த ‘My life in full’ என்னும் இந்திரா நூயி எழுதிய புத்தகம் வந்தது. கனடா வருவதற்குள் அதை படித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. இங்கே நூலகத்தில் வெயிட்டிங் லிஸ்ட் மிகவும் நீளமாக இருந்ததால் ஆன்லைனில் படிக்க என் மகள் ரிஜிஸ்டர் செய்தாள்.
சமீபத்தில் ஆன்லைனில் கிடைத்தது. டவுன் லோட் செய்து படித்து முடித்தேன்.
“எங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு ஃபர்னிச்சர் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சல்தான். மாலையில் பள்ளியிலிருந்து வந்ததும் தாத்தாவின் காலடியில் உட்கார்ந்து வீட்டுப்பாடங்களை செய்வோம். எங்களைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களை அடித்தபடி படிப்போம். உமிக்கரியால் பல் துலக்குவோம். 24 வயது வரை பல் டாக்டரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொண்டதில்லை.
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் அம்மா ஒரு டெய்லரை பிடித்து ஆறு செட் பள்ளிச் சீருடை தைக்க கொடுப்பாள். எப்போதும் இருக்கும் அளவை விட இரண்டு இன்ச் பெரிதாக தைக்கச் சொல்லுவாள். நாங்கள் வளர்ந்தாலும் போட்டுக்கொள்ள முடியுமே”. இப்படி தொடங்கும் இந்திரா நூயி யின் சுய சரிதம் நம்மை சட்டென்று உள்ளே இழுக்கிறது.
எளிய ஆங்கிலத்தில், சரளமான நடையில் தன் அனுபவங்களை அழகாக விவரித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இருக்கும் அதில் முதல் பாகத்தில் தன் இளமைக் காலம், படிப்பு, அமெரிக்காவில் மேல்படிப்பு, திருமணம், பெப்ஸிகோவிற்கு முந்தைய நிறுவனங்களில் பணி புரிந்தது போன்றவற்றையும், இரண்டாம் பாகத்தை பெப்ஸிகோ நாட்கள் என்றும் பிரித்திருக்கிறார்.
ஹொலி ஏஞ்செல்ஸ் சில் படிக்கும் பொழுது அம்மாவின் எதிர்ப்பை மீறி கிடார் கற்றுக்கொண்டு ஒரு இசைக்குழுவும் வைத்திருந்தாராம். தாம்பரம் கிருத்தவ கல்லூரியில் படித்த பொழுது பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ் வுமனாக களமிறங்கியதை மறக்க முடியாது என்கிறார்.
மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற பொழுது அங்கு மாணவர்கள் சாண்ட்விச்சை கடித்துக் கொண்டே வகுப்பை கவனித்ததும், இஷ்டப்படி தாமதமாக வகுப்பிற்கு வந்து, அனுமதி கேட்காமல் பாதியில் எழுந்து போனதும் அதிர்ச்சி அளித்ததாம்.
ஆரம்ப காலத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டோடு ஆள் வைத்துக் கொள்வது காஸ்ட்லியான விஷயமாக இருந்ததால் ஒரு நல்ல டே கேரை கண்டுபிடிப்பதில் இருந்த சிரமம், ஆசியக் குழந்தை என்பதால் அவர் குழந்தை பள்ளியில் புறக்கணிக்கப்பட்டது, அதே காரணத்தினால் அவருக்கு சொந்த வீடு அமைவதில் சிக்கல், ரியல்டரால் ஏமாற்றப்பட்டது போன்ற விஷயங்களைப் பற்றி படிக்கும் பொழுது இவர் நடந்து வந்த பாதை மலர்ப் பாதை அல்ல என்று புரிகிறது.
அவருடைய மூத்த பெண் சிறுமியாக இருந்த காலத்தில் அவள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறாள், புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என்று அவருடைய கணவர் கூற, தாயோ, “என்னுடைய மூன்று குழந்தைகளை எப்படி வளர்த்தேனோ அப்படித்தான் இவளையும் வளர்க்கிறேன்” என்றாராம். ‘டென்ஷன் இன் த ஃபேமிலி’ என்று ஒற்றை வரியில் கடந்து போனாலும் எப்படிப் பட்ட டென்ஷனாக இருந்திருக்கும் என்பது நமக்கு புரிகிறது.
பெப்ஸிகோவில் சி.இ.ஓ.வாக ஆன பிறகும் புறநகர்ப் பகுதிகளில் காரில் பயணிக்கும் பொழுது சிறிய சூப்பர் மார்க்கெட்டுகளைக் கண்டால் வண்டியை நிறுத்தி, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, ஒரு டிராலியை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் செய்வது போல் அங்கு பெப்ஸி கேன்கள் எப்படி அடுக்கப்பட்டிருக்கின்றன? யார் யார் பெப்ஸி வாங்குகிறார்கள் என்று கவனிப்பாராம்.
அலுவலகத்தில் உயரத்தை தொட விரும்பும் பெண்கள் ஏற வேண்டிய ஏணி குறுகலான, செங்குத்தான, வழுக்கும் படிகளைக் கொண்டது என்கிறார்.
“உயர் பதவியில் இருக்கும் பெண்ணின் முகத்தைப் பார்த்து பேச மாட்டார்கள், நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கே பேசுவார்கள்”.
ஒரு முறை ஒரு பத்திரிகையைச் சார்ந்த புகைப்படக்காரர், “மேடம் வேறு உடை அணிந்து கொள்கிறீர்களா? இந்த உடையை நீங்கள் ஏற்கனவே வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றாராம். “என்னுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக ஆண் பத்து வருடங்களாக ஒரே சூட்டை அணிந்து கொண்டிருப்பது அந்த புகைப்படக்காரருக்கு ஒரு பொருட்டில்லை என்றெல்லாம் அங்கலாய்க்கிறார்.
தன் வேலையில் அவர் சந்தித்த பல சவால்களைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அலுவலகத்தில் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று சில பெண்கள் முடிவு செய்வது சரியில்லை என்பது இவரது கருத்து. மகப்பேற்றினை சந்தோஷமாக அனுபவித்தேன் என்கிறார்.
அவருக்கு பால்ரூம் நடனம் கற்பித்த இளைஞன்,”சில சமயம் மற்றவர்களுக்கு பின்னால் செல்வது தவறில்லை” என்று கூறியதை ஒரு உபதேசமாக எடுத்துக் கொண்டதாக கூறுகிறார்.
பெப்சிகோவின் சி.யி.ஓ.வாக பதவியேற்றுக் கொண்டதை அவர் அம்மாவிடம் சொன்ன பொழுது அவர் தாயார்,”வெளியிலே நீ மஹா ராணியாக இருக்கலாம், வீட்டில் நீ ஒரு மனைவி, தாய், குடும்பத் தலைவி, உன் கிரீடத்தை கராஜிலேயே கழற்றி வைத்து விட்டு வா” என்றாராம். அந்தக் கிரீடம் உறவினர்களிடமிருந்து நம்மை எப்படி அன்னியப் படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். நம் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்ட பொழுது உறவினர்கள் யாரும் வாழ்த்துச் சொல்லவில்லையாம்.
அவருக்குப் பிறகு பெப்ஸி கோவின் தலைமை பதவிக்கு ஒரு ஆண் மகனை அவர் தேர்ந்தெடுத்தபொழுது,”ஒரு பெண் சி.இ.ஓ.விற்குப் பிறகும் கூட கார்ப்பரேட் உலகில் பெண்களுக்கு இருக்கும் கிளாஸ் சீலிங் தகர்க்கப்படவில்லை” என்று டைம்ஸ் பத்திரிகை எழுதியதாம். சி.இ.ஓ.வாக இருந்து ஓய்வு பெறும் ஒரு ஆணிடம் யாரும் நீங்கள் ஏன் உங்களைத் தொடர்ந்து ஒரு பெண்ணை நியமிக்கவில்லை?” என்று கேட்பதில்லை என்கிறார்.
“உன் கிரீடத்தை கராஜிலேயே கழற்றி வைத்து விட்டு வா” என்ற அதே அம்மா ரிடையர்மெண்டிற்குப் பிறகும் அவரிடம் ஆலோசனைகளும், உதவிகளும் கேட்டு வரும் கடிதங்களைப் பார்த்து, “இந்த உலகம் உன்னிடமிருந்து நிறைய எதிர் பார்க்கிறது, அதற்கு நீ செய்ய வேண்டியது இருக்கிறது, செய்” என்றாராம்.
அலுவலகத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன் குழந்தைகள் தன்னை எப்போது அழைத்தாலும் அதை புறக்கணித்த தில்லை யாம்.
“குழந்தைகளே நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நான் உங்களுக்கு உதவியாக உங்களோடு இருப்பேன்” என்று மகள்களுக்கு உறுதி அளித்து இப்புத்தகத்தை முடித்து தான் எப்போதும் பெண் என்று நிரூபித்திருக்கிறார்.
நல்ல வாசிப்பனுபவத்தை தந்த புத்தகம்.
