திரு ராணிமைந்தன் அவர்கள் தனது 80 வது பிறந்தநாளையும், 50 ஆண்டுகால எழுத்துப் பணியையும் குறிக்கும் வகையில் “வந்த பாதை – ஒரு பார்வை (எண்பதில் நின்று திரும்பிப் பார்க்கிறேன்)” என்ற சுயவரலாற்று நூலை வெளியிட்டார். சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ள புத்தகம் போலவே, விழாவும் மிகச் சிறப்பாக சென்னை, ராயப்பேட்டை ‘திருவள்ளுவர்’ அரங்கில் நிகழ்த்தப்பட்டது – நாள் 13, செப்டம்பர், 2025.
அரங்கு நிறைய பிரபலங்கள் – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ரிசர்வ் வங்கி நண்பர்கள், உறவினர்கள் என ராணிமைந்தனை வாழ்த்தக் கூடியிருந்தனர். விழாவிற்குத் தலைமை ஏற்று சிறப்புரை திரு நல்லி குப்புசாமி செட்டியார். ராணிமைந்தன் எழுதியுள்ள பிரபலங்களின் வரலாற்று நூல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். புத்தகம் வெளிவந்தவுடன் முதல் பிரதியைத் தனக்கு அனுப்பி வைப்பதையும், சுவாரஸ்யத்துடன் வாசித்து, உடனே ராணிமைந்தனுக்குக் கடிதம் எழுதுவதையும் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் நல்லி செட்டியார்.
நூலை வெளியிட்டுப் பேசிய மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் ரணிமைந்தனை சாவி ஸார் காலத்திலிருந்து அறிமுகம் என்றார். அப்போதிருந்த அதே அமைதியான குணம், அதிர்ந்து பேசாத குரல்,மரியாதையோடு கூடிய பழக்க வழக்கங்கள், எந்த வேலையையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் சுறுசுறுப்பு போன்ற நற்குணங்கள் இன்றைக்கும் அப்படியே இருப்பதைக் குறிப்பிட்டார். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்ததாக, கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாமல் படிக்கத் தூண்டுபவையாக இருக்கும் என்றார். புத்தகத்திலிருந்து சில செய்திகளைக் குறிப்பிட்டுப் பேசி வாழ்த்தினார்.
வானது பதிப்பகம் ராமநாதன் அவர்கள் ராணிமைந்தனின் புத்தகங்களை வெளியிடுவதில் மிகவும் பெருமைப் படுவதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் திரு மூ.ராஜாராம் (ஐ.ஏ.எஸ். – பணி நிறைவு) ராணிமைந்தனைப் பற்றியும், அவரது புத்தகத்தைப் பற்றியும் பேசினார். வந்திருந்த விருந்தினர் நடிகர் சிவகுமாருடன் ஆன தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
விழாவிற்குத் தாமதமாக வந்த தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன், ராணிமைந்தனுடன் பயணித்த ‘சாவி’ நாட்களைப் பற்றியும், அவர் எழுதியுள்ள வரலாறு புத்தகங்கள், இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்பதையும், ‘வந்த பாதை’ புத்தகத்தை, பத்திரிகையாளர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதையும் மிகவும் நெகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் சிவகுமார், கட கடவென பாரதி பாடல் ஒன்றை சொல்லி அரங்கின் கரகோஷத்தைப் பெற்றார். ராணிமைந்தனின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அனைவரும் வாசிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். மலைச்சாமி ஐ ஏ எஸ், ஏவி மெய்யப்பச் செட்டியார், இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோரைப் பற்றி ராணிமைந்தன் எழுதியுள்ள நூல்களைப்பற்றி விரிவாகப் பேசினார். குறிப்புகள் ஏதுமின்றி, தங்குதடையின்றி பேசிய அவரது நினவாற்றல் வியக்க வைத்தது!
மேடையிலிருந்த உமா பிரசாத் (சாவி சாரின் மகள்) பேசவில்லையென்றாலும், தந்தையின் சார்பில் அவரது வாழ்த்துக்களை தன் புன்னகையால் தெரிவித்துக்கொண்டார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வேறொரு விழாவிற்குப் போக வேண்டியிருந்ததால், முன்னதாகவே வந்திருந்து, ராணிமைந்தனை வாழ்த்திச் சென்றார் .(ஏவி எம் தந்த எஸ் பி எம் – வாசிக்கவேண்டிய புத்தகம்).
ஏற்புரை ஆற்ற வந்த ராணிமைந்தன், மிகவும் நெகிழ்ந்து, அனைவருக்கும் நன்றி கூறினார். தன்னுடன் இருந்து புத்தக ஆக்கத்திற்கு உதவிய அனைவரையும் மேடைக்கழைத்து மரியாதை செய்தார். தன் குடும்ப உறுப்பினர்களை விருந்தினர்களுக்கு மரியாதை செய்யச் சொன்னவர், அவர்களின் ஒத்துழைப்பையும், குடும்ப பாரம் முழுவதையும் சுமந்து தனது எழுத்துலகப் பயணத்திற்கு உதவிய தன் மனையையும் நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.
விழா குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடைந்தது!
திரு பாக்கியம் ராமசாமி சார் அவர்கள்தான் எனக்கு ராணிமைந்தனை அறிமுகம் செய்தார். அவரது ‘அக்கறை’ கூட்டங்கள் சிலவற்றுக்குப் போயிருக்கிறேன். பழகுவதற்கு இனிய நண்பர், நேரம் தவறாமையை ஒரு தவமாகக் கடைபிடிப்பவர், யாரைப் பற்றியும் இகழ்ந்து பேசாதவர், குறித்த நேரத்தில் திட்டமிட்டு வேலைகளைச் செய்பவர் என நல்ல பண்புகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்.
வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ‘அனுபவப் பதிவு’ நூல். முனைவர் டி எஸ் அர்த்தநாரி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், ஏவி எம் சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் வாழ்த்துரைகளுடன், ராணிமைந்தனின் 68 சுவாரஸ்யமான அனுபவப் பதிவுகளுடன் வெளிவந்துள்ள அழகிய நூல். ஏராளமான வண்ணப் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அவருக்குக் கிடைத்த விருதுகள், எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்கள் (40), மொழிபெயர்ப்பு நூல்கள் (21), தொகுப்பு நூல்கள் (9) ஆகியவற்றின் பட்டியல், புத்தகத்தின் கடைசியில் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சுவாரஸ்யமான புத்தகம். குவிகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் பாராட்டி எழுதியுள்ளார் ராணிமைந்தன். (பக்கம் 190). அவர் சந்தித்த ஆளுமைகள், அவர்களுடன் ஆன அனுபவங்கள் சொல்லும் செய்திகள் எல்லாம் அனைவரும் வாசித்து மகிழத்தக்கவை மட்டுமல்ல, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் அனுபவங்கள்!
வாழ்த்துகள் ராணிமைந்தன் ஸார்!



