புத்தக விமர்சனம்

 

 

 

 

 

 

 

 

புத்தகம்   : மரகதக் கணையாழி

ஆசிரியர் : திருமதி. ஜே. செல்லம் ஜெரினா

வெளியீடு :வானதி பதிப்பகம்

விலை        :ரூ 210

பக்கங்கள் : 202

பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ; 2024

 

எனக்கு சரித்திர நாவல் என்றாலே மிகவும் விருப்பம்.

திருமதி. செல்லம் ஜெரினா  அவர்கள் எழுதிய “மரகத கணையாழி” என்ற அருமையானதொரு சரித்திர நாவலை மிகச் சமீபமாக படித்தேன்.

 

கதையை சுருக்கமாக பார்த்தோமானால் ..

மதுரையையும், திருநெல்வேலியையும் ஆண்ட பாண்டியர்கள் சரித்திரத்தில் தொடங்குகிறது கதை.. பாண்டிய நாட்டின் வடபகுதி, தென்பகுதி என ஆண்ட தாயாதிகள்..  இரு மன்னருக்குள் நடக்கும் போர்.  அதன் விளைவுகள் எனக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. பாண்டிய மன்னர்களுக்கிடையே மாறி மாறி நடக்கும் போர். மதுரையை வெற்றி கொண்டு பாண்டியநாடு மொத்தத்தையும் தானே ஆள நினைக்கும் குலசேகர பாண்டியனின் பேராசை.. முதல் போரில் பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக வரும் ஈழத்து அரசன்.. அதன் பின் குலசேகரனுக்கு உதவும் சோழ மன்னன்..என மாறி மாறி போர்களின் பிடியில் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

இடையே அயந்திகாவின் காதல்.. மன்னன்

விக்ரம பாண்டியனை காதலிக்கும் அயந்திகா அவன் காதலின் அன்பு பரிசாய் மரகத கணையாழியை யை பெறுகிறாள். இறுதியில் கணவனின் அன்பு பரிசாய் பெறும்  அந்த மரகதக்கணையாழியாலேயே அவள் தேடப்படும் அவலம். தாயின் துன்பத்தைக் கண்டு அவள் மகள்  விஸ்மயாதேவி எடுக்கும் முடிவு என இறுதி அத்தியாயங்கள் நம் மனதை அசைக்கின்றன.

எப்போதுமே புத்த விஹாரங்கள் ஆன்மீகத்தை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தாலும், அரசியல்

நிலைப்பாட்டில் ஒரு பங்கு வகித்தது என்பது பொன்னியின் செல்வன் கதையிலிருந்து நாம் பார்த்து வருவது. இந்த நாவலிலும் புத்த விஹாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. கதையே புத்த குரு தரும சேனர் கண்ணோட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

.அழகான வர்ணனைகள் மனதை மயக்குகிறது. மரகத கணையாழியை பற்றிய விவரிப்பு மிகவும் அருமை. மரகதக் கணையாழி என்ற பெயரே எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது அதேபோல அது கதையின் முடிவிற்கு ஒரு முக்கியமானதொரு பொருளாய் மாறிப் போகிறது.   சோழத் தளபதியின் காதல்  இடைச்சொருகலாய் மணம் வீசுகிறது.

அயந்திகா தேவியின் கதாபாத்திரம் மனதை கொள்ளை கொள்கிறது.. பாண்டிய இளவரசியாய் பிறந்து, சோழ நாட்டில் பணிப்பெண்ணாய் வளர்ந்து, பாண்டிய மன்னனை மணந்தும் அங்கீகாரம் கிடைக்காமல், மகனையும் பறிகொடுத்து, அபலயாய் திரியும் அவள் நிலை மனதை உருக்குகிறது

கணவனின் மனதை, இன்னொரு பெண் கவர்வதை ஒரு பெண்ணால் பொறுக்க முடியாது என்பதற்கு ராஜமாதாக்களும் விதிவிலக்கல்ல என்பதை பட்டத்தரிசி திரைலோக்கியமா தேவி உணர்த்துகிறார். அயந்திகா தேவி உண்மை பாத்திரமா அல்லது ஆசிரியரின் கற்பனை பத்திரமா என்று தெரியாது ஆனால் அந்தக் காலத்து மன்னர்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பாவப்பட்ட பெண்கள் நிறைவே இருந்திருப்பார்கள்.  தருமசேனர் கதாபாத்திரமும் வலு உள்ளதாக படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சரித்திர நாவலை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. திருமதி செல்லம் ஜெரினா அவர்கள் இந்நாவலுக்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது அவர் எழுத்திலேயே தெரிகிறது. அவரது முயற்சியால் விளைந்த இந்நாவல் நமது படிப்பனுபவத்திற்கு மிகப்பெரிய விருந்து.