கதைகளும் திரைப்படங்களும்..

எழுதியவர்: சுபாஷிணி ரமணன்

பதிப்பகம்  :புஸ்தகா டிஜிட்டல் மீடியா

பக்கங்கள்  :79

விலை        : ₹ 90

நூல் வெளியீடு:2023

      

                  

  

இந்தநூல் என்னை ஈர்த்தமைக்கு காரணம் இது வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாய் முற்றிலும் புத்தம்புதியதாய்  பாராட்டப்பட வேண்டியதாய் கவனிக்க வேண்டியதொரு முயற்சியாயிருந்தது தான். 

      என்ன அப்பேர்ப்பட்ட வித்தியாசம் என்கிறீர்களா ..?நமக்கே சில நாவல்களையோ சிறுகதைகளையோ வாசிக்கையில் அடடா ..இதை திரைப்படமாக எடுத்தால்…இன்னாரின்னார் நடித்தால் ..என்றெல்லாம் கற்பனை தோன்றும் அல்லவா?இப்படித் தோன்றிய கற்பனையை  சிலர்  முனைந்து வெள்ளித்திரையில் உலவவைத்து  மகிழவும் வைத்துள்ளனர்.

    அம்மாதிரி அச்சில் அரங்கேறி பின்பு வெள்ளித்திரையிலும் ப்ரமிக்க வைத்த சில படைப்புகளை மட்டும் இந்நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியை.

        முதலில் அவர் வடித்தெடுப்பது பத்திரிகையில் வெளியான படைப்பின் கதைச் சுருக்கம்.

        பின்னர் திரைப்படம். இதையும் முழுதாய் பார்த்து திரைக்கதை வடிவத்தையும் உள்வாங்கி சாறெடுத்து மூலக்கதையையும் திரைக்கதையையும் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளை அலசிப் பிழிந்து…பலே! பலே!! சுபாவுக்கு ஒரு சபாஷ்.!!!

       கதை வெளியான பத்திரிகையின் பெயர் படைப்பாளியின் முக்கிய விவரங்கள் அவர்தம் படைப்புகள் என வாழ்க்கைக்குறிப்பையே தந்து விட்டு… அப்போதைய காலத்தில் வெளியான அதன் மீதான தாக்கத்தையும் குறிப்பிடுகிறார்.

        திரைப்படத்துக்கும் வெளியானவருடம் முதல் நடிகநடிகையர் வசனம் பாடல்கள் பாடியவர்கள் பாடல்கள் இயக்குநர் என்று முழுத்தகவல்களோடு அதன் மீதான பத்திரிகை விமர்சனங்களையும் தேடிப் பிடித்து இணைத்துள்ளார். 

அவை உருவான சமயங்களில் நிகழ்ந்த விஷயங்களை  சம்பந்தப்பட்டவர்கள் சமாளித்ததை அதுகுறித்த கண்ணோட்டங்களையும் கண்டறிந்து குறிப்புகளை இணைத்துள்ளார்.

           உதாரணமாக மகரிஷியின் பத்ரகாளியின் நாயகி ராணி சந்திராவின் எதிர்பாராத மரணம்  படக்குழுவினரை ஸ்தம்பிக்க வைத்ததையும் எவ்வாறு  மீண்டார்கள் என்பதையும்  கதையின் முடிவை மட்டும் திரையில் மாற்றியமைத்ததையும் கதையின் க்ளைமேக்ஸில் மகரிஷி நாயகியை வர்ணித்ததை துளியும் மாற்றாது அழுத்தமான கண் மையைக்கூட கவனித்து இழைத்ததையும் கூர்ந்து அவதானித்துள்ளார்.

மொத்தம் இதில் ஆறு கதைகளும் அதன் மறுவடிவான திரைப்படங்களும் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.

மணியனின் “இலவுகாத்தகிளியோ ?” தலைப்பு மாற்றப்பட்டு “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்று கே.பாலசந்தரின் படமாகவே வந்தது. அதில் மணியனைக்காணோம் என்கிறார் தைரியமாக.  இது வெற்றிப்படம்தான்! ஆனால் இப்போது பார்க்கையில்ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்கள் உள்ளன என்று ஒரு குட்டும் வைக்கிறார் ஆசிரியை

   அனுராதா ரமணனின் “சிறை”

வாசகர்களின் மனதை விட்டகலாத கதை. அதைசிதைத்து விடாமல் இயக்குநர் துரை திரையில் கொண்டுவந்ததில் நடிகை லஷ்மியின் நடிப்பும் பெரும்பங்கு வகித்தது. இதன் இறுதிக்காட்சியில் “அந்தோணிக்கு விதவையாயிருக்கேன்” என்று பாகிரதி ஆவேசமாகக் கூறும் காட்சியில் இயக்குநர் கண்ணீர் வழிய படமெடுத்ததைத்  தேவிபாலா கூறியுள்ளதையும் இணைத்ததில் சிறை இன்னும் வலிமையாகிறது.

       டெயில் பீஸாக இதை தெலுங்கில் “ஆனந்த ஜ்யோதி”பத்திரிகையில் மொழி பெயர்த்த திருமதி கௌரி கிருபானந்தனின்  வரிகளையும்  சேர்த்ததில் இன்னுமே இன்ட்ரஸ்ட்டிங்!

         தேவனின் “கோமதியின் காதலன்” படத்தில் சாவித்திரிக்கு பெரும்பான்மை நேரம் பாட்டைக் கொடுத்து ஆடவைத்து விட்டார்கள் என்பதில் ஆசிரியரின் குறும்பு தெரிகிறது.(மொத்தம் 12பாடல்கள்!மெனக்கெட்டு எண்ணியதோடு யார்யார் எந்தப்பாடலை பாடினர் என்ற பட்டியலுமிட்டு ..அடேங்கப்பா போட வைக்கிறார்.)

             இப்படி ஆறுக்குமே பஞ்ச் டைலாக் பஞ்சு மிட்டாய் தித்திப்பாய்..!(மற்றவை சிவசங்ரியின் 47நாட்கள்/கல்கியின் கள்வனின் காதலி) 

              “இது ஒரு டாக்டரேட் டாபிக்” என்று தன் அணிந்துரையில் புகழ்கிறார் பிரபல எழுத்தாளர் திருமதி வேதா கோபாலன். 

         ஒப்புக் கொள்ளும்படியாகத்தான் இவருடைய அசுர உழைப்பும் தேடலும் நூல் முழுக்க மிளிர்கிறது.

      எழுத்தாளர் திரு.தேவிபாலா அவர்களோ இன்னமும் திரைப்படங்களாக வெளியான சில  கதைகளைக் குறிப்பிட்டு அவற்றையும் எழுதும்படி கோரிக்கை வைக்கிறார்.

இதற்குமேவ் இந்தநூல் குறித்து என்ன சொல்ல? 

       வாழ்த்துகள் சுபாஷிணி ரமணன்.