நூல் – என்பிலதனை வெயில் காயும்
எழுத்தாளர் – நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம் வெளியீடு
200 பக்கங்கள்
விலை ரூ.180/-
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் 1979-ல் எழுதிய புத்தகம் இது. சக மனிதர்கள் மீதான அக்கறையும், சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகளில் நாம் தொடர்ந்து காணமுடிகிறது.
தலைகீழ் விகிதங்கள், சாலப் பரிந்து, மிதவை, மாமிசப் படைப்புகள், எட்டுத் திக்கும்
மதயானை, சதுரங்க குதிரை, தீதும் நன்றும், கொங்கு தேர் வாழ்க்கை , சூடிய பூ சூடற்க போன்ற இவரது நூல்கள் இதுவரை நான் வாசித்தவை. ஒவ்வொன்றும் வெகு அருமையான நூல்கள்.
இனி நூலுக்குள் செல்வோம்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு கணித பட்டப் படிப்பு படிக்கும் நாயகனின் வாழ்வில் சந்திக்கும் கசப்பான நிகழ்வுகளை, தாய் தந்தையரின் கலப்புத் திருமணம் மூலம் ஏற்படும் அவமானங்களை, எதார்த்தம் நிறைந்த வரிகளாக வெகு இயல்பான மொழி நடையில் ஆசிரியரின் எழுத்தாக்கம் உள்ளது.
நாயகி அவனது ஊரைச் சேர்ந்த பணக்கார பண்ணை வீட்டுப் பெண். அவனும் அவளும் பேசிக்கொள்பவை சொற்ப வார்த்தைகள் தான். அவளைப் பற்றி இவன் மனதுக்குள் விமர்சித்துக் கொள்வதும் ‘ஒட்டாமல்’ பழகும் விதமும்
இருவருக்கிடையேயான உறவில் அவ்வளவு நெருக்கம் இல்லை.
இருப்பினும் அவளுக்கு ஒரு கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரியும் வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்துவிடும் வேளையில்…“ஏமாற்றம் அடைந்தது போல் ஒரு உணர்வு. ஏதோ இழக்கக் கூடாததை இழந்ததுபோல், எதை இழக்கிறோம் என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாமல்… அதைப் பற்றி எண்ணவே உள்ளம் கலவரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் தாண்ட முயன்று, முடியாது தவித்த மனம். இது வேண்டாம். இது சரியில்லை… எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக, துயரமாக, வெறுப்பாக, கசப்பாக…”
இது நாயகனின் மனோநிலை. அவளது திருமணத்தை எண்ணி அவனது மனம் கனத்துப் போகிறது.
அம்மா அப்பா இல்லாத சூழலில்,
தாத்தா பாட்டியின் ஒரே நம்பிக்கை அவன்தான், இதுவரை தன்னைப் படிக்க வைத்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஓய்வு கொடுத்து அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். கல்லூரியில்
முதல் வகுப்பில் தேறி பி.எஸ்.சி. கணிதம் பட்டம் பெற்று வேலை தேடுகிறான்
நாயகனின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்… எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்… அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்… தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்… எல்லாவற்றுக்கும் உட்சபட்சமாக, இறுதியில், உயரிய பதவியில் இருக்கும் தன் தாய்மாமாவிடம் வேலை கேட்டு அது நிராகரிக்கப்படும் போதும் அவரிடம் தன் தாயின் முகச்சாயலைத் தேடும் பரிதாபமும் கதையை வாசிப்பவர் மனம் கனக்கச் செய்கிறது!
நூல் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆயினும் வறுமை எனும் கொடுமை, சமூக ஏற்றத் தாழ்வுகளை நினைக்கத் தூண்டும் எளிய எதார்த்தம் நிறைந்த வரிகள் கதை எங்கும் காண முடிகிறது.
” இரவின் கண்கள் விழித்துப் பார்த்தன. பளிச் பளிச் என்று கண்ணுள் தெறித்தன. பூங்காற்று இதமாக வீசியது. நிலவு உதிக்க இன்னும் நேரமிருந்ததால் நட்சத்திரங்களின் அமர்ந்த ஒளி. ஆற்றங்கரையின் புன்னை மரங்கள் இருளைச் சிறைப்பிடித்து வைத்திருந்தன. நீரலையின் சிற்றரவம். மணி எட்டரை இருக்கும். தூரத்தில் கேட்ட பேச் சொலி கிட்ட வர வர ஒலிகள் பொருள் கொண்டன”
” புன்னை மரத்திலிருந்த ஒரு மீன்கொத்தி தண்ணீரில் பாய்ந்து உயர்ந்தது. மீனுடன் கூடிய அதன் அலகு கூட்டல் குறி போல்”
“…இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு?”
” மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… ……. …….. மக்களாட்சித் தலைவன்கள்
மன்னர்கள் தங்கிய இடங்களில் வௌவால்கள் தலைகீழாய்த் தொங்குகின்றன. மக்களாட்சி வௌவால்கள்”
“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டது போல்…”
நீங்களும் வாசியுங்கள்.