
சாழல் என்றொரு வினா – விடை விளையாட்டு. சாழேலோ என்று பாடி முடித்தபடி விளையாடப்படும். இதில் முதலிரண்டு வரிகளில் ஒரு பெண் வினா கேட்பதாக இருக்கும். அதற்கு மற்றொரு பெண் அடுத்த இரு வரிகளில் விடை கூறுவாள். மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் திருச்சாழல் என்றே ஒரு பகுதி உண்டு. இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது என அறிகிறோம்.
திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி ஐந்தில் உள்ள ஒரு அழகான பாடல்.
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.
முதலாமவள் கேட்கிறாள்: ‘மானைப்போலும் மென்மையான பார்வையை உடைய வைதேஹியை அழைத்துக்கொண்டு கல்லும் முள்ளும் நிறைந்த வழியில் சென்று காட்டில் போய் வாழ்ந்தானே இந்தப்பிரான்,’ என அங்கலாய்ப்பாக அமைந்தது போலுள்ளது. அதற்கு அடுத்தவள் கூறுகிறாள்: ‘அவ்வாறு கல்லில் நடந்து காடு சென்ற திருவடிகளை வானவர்கள் தங்கள் தலையில் பூப்போல வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்களே!’
அழகும் மணமும் மிகுந்த பூக்களைக் கொய்து இறைவனுக்குச் சார்த்தி, பூசை செய்வது, அலங்கரித்து அழகுபார்ப்பது என்பனவெல்லாம் நனது நாட்டில் புராணகாலத்திலிருந்து நடைமுறையிலிருந்து வந்துள்ளன. சங்ககால மகளிர் மலர்களைக் கொய்து மாலைகளாகக் கட்டியும் தலையிலணிந்தும் அழகு செய்து கொண்டனர் என்பதனைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டிலிருந்து அறியலாம். ஆடவரும் மலர்மாலைகளை அணிந்தனர். சிறந்த மலர்களைப் பறிப்பதும், விதம்விதமான மாலைகளாகக் கட்டுவதும் தமிழர் / பாரத சமுதாயத்தினரின் அருமையான ஒரு பொழுதுபோக்காகவும், தாம் வணங்கும், அரசர்கள், பெரியோர்களுக்கு அளிப்பதற்காகவும், இறைவனுக்குச் சார்த்தவும், பூசை செய்வதற்கும் என்றெல்லாம் நமது வாழ்க்கை முறையுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு கலையாகவே வளர்ந்துவிட்டது. இன்றும்கூட அதன் பிரதிபலிப்புகள் நம்மிடையே ஆழப்பதிந்துள்ளன.
மல்லிகை, முல்லை, சாதி ஆகிய மலர்களே கொய்யத்தக்கவை; தாமரை போன்ற மலர்களைத் தண்டினை ஒடித்தோ முறித்தோதான் பறிக்க வேண்டும்; அழுத்தமான காம்பு கொண்ட செம்பருத்தி போலும் மலர்களை நகத்தினால் கிள்ளியே எடுக்க வேண்டும்.
ஒருபெண் கூறுகிறாள்: “நமது புத்தி எனும் எண்ணத்தினுள் புகுந்துவிட்டான் பெருந்துறையில் இருக்கும் அந்த ஈசன்; அவன் யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து அதனால் தன்னைப் போர்த்துக் கொண்ட பெருமை வாய்ந்தவனடி அம்மா!” என அவனுடைய உடல்வலிமையை வியக்கிறாள்.
இன்னொருத்தி தொடர்கிறாள்: “இவன் பித்தன் எனும் பைத்தியக்காரன் போலவும் வடிவெடுப்பான் தெரியுமா? சிறுபிள்ளை போலவும் ஆகிவிடுபவன் இவனே!”
அறிவில் சிறந்தவளாகிய இவர்களின் தாய் கூறுகிறாள்: “உத்தரகோசமங்கை எனும் ஊரில் உறையும் இவனே முத்தி தரவல்ல முழுமுதல் பொருளாவான்! ஆகவே நமது புத்தியை முழுமையாகத் தன்வசம் ஆக்கிக் கொண்டுவிட்ட அவனுடைய பெருமையைப் பாடி நாம் பூக்களைக் கொய்வோமடி குழந்தைகளே!”
அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையும் ஆய்
முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ.
இதில் மாணிக்கவாசகர் ஒரு அரியபெரிய தத்துவத்தினை மறைபொருளாக வைத்துள்ளார். ‘நான்’ எனும் அகந்தையை (யானை போலும் பெரியது அந்த அகந்தை!) ஒழித்தவர்களுக்கு ஈசனிடம் பற்று அதிகரிக்கும். அவர்கள் பித்தர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அதனால் முழுமுதற்பொருள் அந்த ஈசனே என அறிந்து கொள்கின்றார்கள் என்பது மறைபொருள்.
உந்தி பறத்தல் என்பதும் மற்றொரு விளையாட்டு. இதனை நான் சிறுமியாக இருந்தபோது பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் ஆடிமகிழ்ந்துள்ளேன். விறுவிறுப்பான விளையாட்டு.
இருவர் எதிரெதிராக நின்றுகொண்டு ஒருத்தி வலதுகையால் மற்றவளின் வலக்கையையும், இடதுகையால் இடதுகையையும் பின்னலிட்டதுபோல் குறுக்காக நீட்டிப் பிடித்துக் கொண்டுள்ளனர். பாதங்களின் விரல்பகுதி மட்டுமே தரையைத் தொடுகின்றது. உள்ளங்காலும் குதிகாலும் உயர்ந்திருக்க, இருவரும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு உடலைப் பின்னுக்குத் தள்ளிய வண்ணம் விசையுடன் வேகமாகச் சுழன்றாடுகின்றனர். பாடலையும் பாடுகின்றனர். இவ்வாறு சுழன்றாடும்போது நீர்ச்சுழிபோல உடலின் தலைப்பாகத்தின் விட்டம் பெரியதாகவும் கால்களின் விட்டம் குறுகியதாகவும் இருக்கிறது. இந்தநிலையில் இது நீர்ச்சுழியை ஒத்திருப்பதனால் இவ்விளையாட்டு உந்தி (நீர்ச்சுழி) எனப்பெயர் பெற்றது. பாதங்களின் பின்பகுதி தரையைத் தொடாமல் சுழன்றாடுவதனால் பறவைகள் எழுந்து பறப்பதனைப் போன்றுள்ளது. பின்னலிட்ட கைகளும் கூடவே சேர்ந்தசைவதும் பறத்தலைப் போலிருப்பதனால் இவ்விளையாட்டு ‘உந்தி பறத்தல்’ அல்லது ‘தும்பி பறத்தல்’ எனப்படுகிறது! இவர்கள் அணிந்துள்ள பல வண்ணவண்ணப் பாவாடைகளும் உடன் சுழன்று பறப்பது உடன் வண்ணப் பறவைகளும் பறப்பது போல காட்சியளிக்கின்றது.
உந்தி என்றால் கொப்பூழ் (தொப்புள்) என்பதும் பொருள். அதுவும் இவ்வடிவிலமைந்த ஒரு சிறுகுழிதானே! நீண்ட பாடல்களைப் பாட முடியாது. மூச்சிரைக்க விளையாடும் விளையாட்டு இது. அதனால் சிறிய இரண்டு வரிகள்!
‘வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற’
“முப்புரங்களையும் அழிக்க சிவபிரான் மேருமலையை வில்லாக வளைத்தார்; போருக்கான ஆரவாரம் ஆரம்பித்தது; போர் தொடங்கிய உடனே முப்புரங்களும் அழிந்துபோயின. உந்தீ பற,” என அந்தக் கதையைச் சுருக்கமான சிலசொற்களில் அடக்கிய ஒரு பாடலைப்பாடுகிறாள் ஒருத்தி. சுழியாகச்சுழலும் லயம் தப்பாமல் மற்றொரு பெண் மூச்சிரைக்க மறுமொழி தருகிறாள்.
‘ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற.’ அதாவது, “அவை அனைத்தும் ஒருங்குசேர வெந்து நீறானதைப்பாடி உந்தீபறப்போம்,” என்கிறாள்.
ஆழ்வாரும் உந்திபறத்தலை, ‘பாடிப்பற’ என்று ‘முடியொன்றி மூவுலகங்களையும்’ எனும் பாசுரத்தில் பாடியுள்ளார்.
எத்தனையெத்தனை ஆடல்கள், பாடல்கள், விளையாட்டுக்கள்!
திருத்தோள் நோக்கம், ஊசல் ஆடும்போது பாடும் பாடல்கள் எனப்பலவகை.
ஊசல் (ஊஞ்சல்) விளையாட்டு மிகப் பழமையானது. நம் மூதாதையர்களான வானரங்கள் கூட மரங்களில் தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்துள்ளனர்!!
ஒரு அழகான பாடல். பெண்கள் ஒரு மலர்ச்சோலையில் விளையாடுகிறார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய அணிகளை அணிவதற்காக, காதுகளை நீளமாக தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடியவண்ணம் ஒருவரையொருவர் ஊக்கியபடி இப்பெண்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது.
இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:
ஏலநறுங் குழலாட மாலை யாட
இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்
சாலவடி காதாடக் குழைக ளாடத்
தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்
கோலமட மயிலனையீ ராடீ ரூசல்
குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்
பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்
பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்.
இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும், இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.
அடுத்து கும்மி, கோலாட்டம் என்பன பற்றி சிறிது கூறி இதனை நிறைவு செய்யலாம்.
பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினவிழாவில் இளம் சிறுமிகளான நாங்கள் பாரதியாரின் பெண் விடுதலைக்கும்மி எனும் பாடலைப் பாடியபடியே கும்மியடிக்கிறோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!’ எனும் அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த வரிகளைப் பாடியபடி கும்மியடிக்கும் பெண்குழந்தைகளில் நானுமொருத்தியாய் பட்டுப்பாவாடை அணிந்து தாழம்பூ தைத்த பின்னலுடன் கைவளைகள் குலுங்கக் கும்மியடித்த இனிய நினைவுகள் இன்றுபோல் புதிதாக நினைவிருக்கிறது.
வீட்டில் பாட்டியிடம் இதனைக்கூறியபோதில் இன்னொரு பேராச்சரியம்! அவர் தானும் தான் சிறுபெண்ணாக இருந்தபோது கும்மியடித்து ஆடியதனைக் கூறிமகிழ்ந்தார்.
‘பிரம்மதேவருடன் கன்னிகையாம் அம்மன்
பிரம்மாதி தோஷங்கள் தீர்த்தவளாம்
அறுபத்தாயிரங்கோடி தீர்த்தத்தோடம்மன்
அடர்ந்துவாரதைப் பாருங்கடி
கும்பகோணத்திலே வந்திறங்கி அம்மன்
கொடியபாபம் நிவர்த்தி பண்ணி
கும்ப கஜேந்திரனைக் கண்டு தரிசித்து
கொந்தளித்து வாராள் பாருங்கடி’
இது காவேரியம்மன் கும்மியாம். அற்புதமாக இல்லை? ஆடிப்பெருக்கன்று ஆற்றங்கரையில் பெண்கள் கூடிக் கும்மியடித்துப் பாடிய பாடலாம்! புராணக்கதைகளோடு ஆடலும் பாடலும் சேர்ந்துவிட்டதால் எழும் ஆனந்தமான அனுபவங்கள் நிரம்பிய அழகான பொழுதுகள் அவை!
இன்னும் இதுபோல வத்சலை கல்யாணக்கும்மி, ருக்மிணி கல்யாணக்கும்மி, கோபிகா வஸ்திராபஹரணக்கும்மி, மீனாட்சி சுந்தரேசுவரர் கும்மி, வள்ளியம்மன் கும்மி, கோதைக்கும்மி இன்னபிற எல்லாம் உண்டு என்று பாட்டி சிலவற்றைப் பாடிக்காட்டியதும் ஆர்வம் பலமடங்காகி விட்டது.
இந்தக் கும்மி ஆட்டம், கொம்மி, கொம்மை, கொம்மி கொட்டுதல் என்று கூறப்படும் மிகப்பழமையான ஆட்டம். குரவைக்கூத்து என்று சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் கேட்டிருப்போமே, அதன் ஒருகிளையான ஆட்டமே இது; தெய்வங்களின் கதைகளைப் புனைந்துபாடி பெண்களால் மட்டுமே ஆடப்படுவது. பல பெண்கள் சேர்ந்து வட்டமாக நின்று கைகளைக் கொட்டிப் பாடிக்கொண்டும், கால்களையும், இடுப்பையும், தலையையும் பாட்டின் இசைக்குத் தக்கவாறு அசைத்துக் குனிந்தும் நிமிர்ந்தும் ஆடுவார்கள்.
இந்திரவிழாக்காலத்தில் பூம்புகாரில் பெண்கள், வேகவைத்த பயறு, பொங்கல் முதலியனவற்றை தெய்வத்திற்குப் படைத்துக் குரவையாடியபோது துணங்கை, கொம்மை ஆடியவற்றையும் ஆடினர் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது!
கும்மி அல்லது கொம்மி(மை) கொட்டியாடுவது விழாக்காலங்களில் பெண்களின் பாரம்பரிய ஆடலாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற இந்திய மாநிலங்களிலும் வட நாட்டு மாநிலங்களிலும் இன்றும் பலவிதமான மாற்றங்களுடன் ஆடப்பட்டும் வருகிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப பாரம்பரியப் பாடல் இலக்கியமாக, எளிய சொற்களால் புராணக்கதைகளைக் கொண்டுி கும்மிகள் புனையப்பட்டன.
‘சாந்துப் பொட்டு தளதளென்ன- நல்ல
சந்தனவாடை கமகமென்ன
கூந்தலழகுக் காரியெல்லாம் காலைக்
குவித்துக் கும்மியடியுங்கடி
ஆகாய லிங்கத்தைக் கண்டேனடி இங்கே
ஆரும் அறியாமல் நின்றேனடி
ஏகாந்தமாக இருந்தேனடி மன
தேக்கம் தொலைந்தது பாருங்கடி
விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு முன்னே
விட்ட குறை வந்து தொட்டாச்சு
மதி அமிர்தமும் உண்டாச்சுதென்று
வாழ்த்திக் கும்மி அடியுங்கடி’- இவை கோபாலகிருஷ்ண பாரதியாரின் சிதம்பரக்கும்மியிலிருந்து சிலவரிகள்!
கையில் வண்ணக்கோல்களை ஏந்தி ஆடும் கோலாட்டமும் இப்படிப்பட்டதே! இவற்றை அசைபோட்டு மகிழ்வோமே!
[நிறைந்தது.]
