About Periyalvar: | Biography, Facts - Astropedia

வில்லிபுத்தூர் – பெயர்க்காரணம்

(புத்தூரின் வேடர் குலத்தலைவன் வில்லி என்பவன், காடாக இருந்த இடத்தைத் திருத்தி ஊராகச் செய்து, அங்கு ஒரு கோவில் கட்டினான். அவ்வூரில், புத்தூரின் மக்கள் வந்து குடிபுகுந்தனர். எனவே அவ்வூர் வில்லிபுத்தூர் என்று பெயர் பெற்றது)

வேடர் குலத்திற் கொருதலைவன்
விளங்கு புத்தூர் வில்லியென்பான்
காடு திருத்தி ஊராக்கிக்
கட்டி மகிழ்ந்தான் பெருங்கோவில்.
நாடிப் புத்தூர் வாழ்மக்கள்
நண்ணி அங்குக் குடியேற,
நீடு வில்லி புத்தூராய்
நிலைத்த தம்மா அதன்பெயரும்!

மக்களின் பக்திப் பண்பாடு

(அந்தணர்கள், நெசவாளர்கள்,பயிர்த்தொழில் செய்யும் உழவர்கள் போன்ற பலவகைப்பட்ட மக்கள், வாழ்வதற்குச் சிறந்த ஊர் என விரும்பி வந்து அவ்வூரில் குடியேறினர்.அவ்வூரின் திருமால் கோவிலில் வேளைதோறும் வழிபட்டனர். திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.பக்திப் பண்பாடு அங்குத் தழைத்தது)

ஆழும் மறைவல் அந்தணர்கள்,
அறுவை நெய்வார்,பயிர்த்தொழிலார்,
வாழ நல்ல பதியெனவே
வந்து விரும்பி வாழ்ந்தனரே
வேழம் காத்தான் ஆலயத்தில்
வேளை தோறும் வழிபாடு,
சூழும் விழாக்கள் அவையோடு
துலங்கும் பக்திப் பண்பாடு

(அறுவை – ஆடை/துணி)
( பதி – ஊர்)
(வேழம் காத்தான்- யானையைக் காத்த திருமால்)

பெரியாழ்வார்

வீசு தென்றல் வில்லிபுத்தூர்
மேன்மை மிகுந்த மறைமரபின்
பேசு புகழ்சேர் ஒருகுடியில்
பெரியாழ் வாரென் றுலகழைக்கும்
மாசு மறுவில் மாணிக்கம்
வந்து பிறந்தார் இறையருளால்
மூசு வண்டாய் மால்மலர்த்தாள்
மூழ்கிக் கிடக்கும் இயல்புடையார்.

(குறிப்பு – பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர் என்பதாகும்)

பெரியாழ்வாரின் தொண்டு

[விஷ்ணுசித்தர், வில்லிபுத்தாரில் உள்ள வடபெருங் கோவிலில் (வடபத்திர சாயி ஆலயம்), தொண்டு செய்து வந்தார்]

பயிரிடை கயல்கள் துள்ளும்
பதியமை ஆல யத்தில்
பயனெதும் கருத்தில் இன்றிப்
பற்றினால் தொண்டு செய்வார்
மயர்வறு மதிந லத்தார்
மாசிலா நல்லு ளத்தார்
உயர்வெனும் பணிவு டையார்
உறுபுகழ் மிக்கு டையார்

நந்தவனம் ஒன்றமைத்து நாளெல்லாம் பாடுபட்டுச்
சிந்துமெழில் செடிகளுடன் திகழ்பூக்கள் செறிமரங்கள்
அந்தவனம் தனில்நன்றாய் அவர்வளர்த்து மலர்பறித்துச்
செந்திருவின் கேளவனுக்குச் செய்தளிப்பார் பலமாலை.

பல நிறத்து மலர்கள் பறித்தல் மாலை தொடுத்தல்

மஞ்சள் ஒளிரும் கோலமலர்
வான்போல் மிளிரும் நீலமலர்
கொஞ்சும் சிவப்பு வண்ணமலர்
கொத்தாய்ப் பூக்கும் சின்னமலர்
விஞ்சும் அழகு வெள்ளைமலர்
வீழும் பனிநீர் உள்ளமலர்
நெஞ்சில் பக்தி மணம்கமழ,
நெகிழ்ந்து பறிப்பார் வைகறையில்.

அடுத்துமனம் அவனிடத்தில் ஆழ்ந்திருக்கும் அண்ணலவர்
தொடுத்தமைத்த மாலைகளில் தூயதிருத் துழாய்சேர்த்துப்
படுத்திருக்கும் திருக்கோலப் பாம்பணையான் சூடுதற்குக்
கொடுத்துமனம் மிகவுருகிக் கோவிலதை வலம்வருவார்.

வலம்வருவார் கைதொழுவார் மாலவனின் அடிபணிவார்
நிலம்விழுவார் நெடியவனை நினைத்துக்கண் ணீர்சொரிவார்
நலமருளிக் காப்பவனாம் நாரணனை, ஆயர்தம்
கு்லமணியை எண்ணியெண்ணிக் கொண்டாடிக் களித்திடுவார்.

அரசனின் ஐயம்

(மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற அரசனுக்கு ஓர் ஐயம் எழுந்தது . மறுமையிலும் நற்கதியை அருளும் பரதத்துவம் எது என்பதே அது..ஒரு கம்பத்தின் மேலே பொற்கிழி ஒன்றைக் கட்டி வைத்துச் சரியான விடையைக் கூறுபவர்க்கு அது கிட்டும என்று பறையறைந்து அறிவிக்கச் செய்தான்).

வல்லப தேவன் என்ற
மன்னனின் மனத்தோர் ஐயம்
செல்லுமிப் பிறவி போனால்
சேர்ந்திடும் மறுமை தன்னில்
நல்லதாம் கதியை நல்கும்
நயப்புறு பொருளைப் பற்றிச்
சொல்லவே வல்லார் யாரோ?
தோற்பறை அறைக என்றான்.

விடையுடன் விளக்கம் நன்றாய்
விளம்பவே வல்லார் யாரோ?
உடையஇக் கம்பம் மேலே
உளதொரு பொன்மு டிப்பு.
தடையிலா ததனை உண்மை
சாற்றுவார் பெறுவார் திண்ணம்
அடையுமிப் பரிசைப் பற்றி
அறைகவே முரசம் என்றான்

பெரியாழ்வார்,மன்னனின் ஐயம் தீர்த்துப் பொன் பெறுதல்

கனவில் வந்த இறைவன்

பெரியாழ்வார் கனவினிலே திருமால் தோன்றிப்
பீடுடைய மதுரைநகர் உடனே சென்று
சரியான விடைசொல்லி ஐயம் தீர்ப்பாய்
சார்ந்துனக்குத் துணையாக இருப்பேன் என்றான்
புரியாத தத்துவங்கள் புரிந்து கொண்டார்
பொருளான மறைஞானம் அறிந்து கொண்டார்
விரியாத அறிவுமலர் விரிந்த தாலே
வீறுகொண்டு மன்னவன்முன் விளக்க லானார்.

பெரியாழ்வாரின் விளக்கம்

உயிரனைத்தும் பொருளனைத்தும் படைத்தும் காத்தும்
உறுபொழுதில் தன்னிடத்தில் ஒடுங்கச் செய்தும்
மயலளித்தும் மயலறுத்தும் மாயம் செய்தும்
மனம்விரும்பும் விளையாட்டைச் செய்யும் மன்னன்
துயிலரவில் அறிந்தியற்றும் மறைமு தல்வன்
தோற்றமிலான் அழிவில்லான் எல்லாம் வல்லான்
இயலுகின்ற துயர்நீக்கி ஏற்றம் ஈவான்
இணையற்ற நாரணனே இறைவன் என்றார்.

இறைவன் காட்சி தந்தருளுதல்

வானவர் ஆர்ப்ப ரித்தார்
மக்களும் வாழ்ந்தொ லித்தார்
ஆனவக் கம்பம் தாழ
அரும்பொனைக் கொண்டார் ஆழ்வார்
யானைமேல் ஏற்றி மன்னன்
இனிதவர் உலவச் செய்தான்
கானலர் சூடும் மாயோன்
காட்சிதந் தருளி னானே.

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்

மட்டில் லாத மகிழ்ச்சியுடன்
மாலுக்(கு) இசைத்தார் பல்லாண்டு
பட்டர் பிரான் இவரென்றே
பட்டம் தந்தான் மதுரைமன்னன்
கிட்டும் பொன்னைக் கொண்டவரும்
கேடில் கோவில் பணிசெய்தார்.
எட்டுத் திசையும் புகழ்பரவ
இறைவன் தொண்டில் ஆழ்ந்திருந்தார்.

 

(தொடரும்)