புத்தகம் : சித்திர பாரதி , காலச்சுவடு பதிப்பகம் ( மூன்றாம் பதிப்பு, 2006 )
எழுதியவர் : ரா. அ. பத்மநாபன்
பக்கங்கள் : 215
விலை : ரூ. 325
தமிழ் இருக்கும் வரை, திருக்குறளும் கம்பனும் சிலப்பதிகாரமும் இருக்கும் வரை, பாரதியின் புகழும் பெயரும் நிச்சயம் நிலைத்திருக்கும். பாரதியை மறந்தோம் என்றால் நாம் தமிழை மறந்தவர்கள் ஆவோம். பலரைப் போல் நானும் ஒரு பாரதிப் பித்தன்தான். எனக்குத் தமிழைப் புகட்டியவர்களும் நாட்டுப்பற்றையும் தமிழ்ப் பற்றையும் ஊட்டியவர்களும் என்னைவிட அதி தீவிரமான பாரதிப் பித்தர்கள்தான். வாழ்க இந்த பாரதிப் பித்தர்களின் பரம்பரை.
பாரதிப் பித்தர்கள் அனைவருக்கும் பொதுவான பழக்கம், சுலோகங்கள் சொல்லி இறை வணக்கம் செய்வது போல, அவ்வப்போது விடாது பாரதியின் பாடல்களையும் பாரதியைப் பற்றிய நூல்களையும் வாசித்து மகிழ்வது. என்னுடைய நெருங்கிய நண்பன் கர்னல் முரளிதரன், சிறிதே தமிழ் கற்றிருந்தாலும், விடாது தமிழ் படிப்பவன். பாரதியைப் பற்றிய நூல் என்றால், அதை உடனே வரவழைத்து படித்து மகிழ்பவன்.
அப்படிப்பட்டவர்கள் அவசியம் வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல்தான் ரா.அ.பத்மநாபனின் “சித்திர பாரதி”. பலரும் இதைப் பார்த்திருப்பார்கள். ஆனால், எத்தனை பேர் வாங்கிப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
2006 இல் வெளிவந்த காலச்சுவட்டின் மூன்றாவது பதிப்பு என்னிடம் உள்ளது. இதை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். அவ்வப்போது இந்த பெரிய வடிவ நூலைப் பிரிப்பதும், புரட்டுவதும், அங்குமிங்கும் படிப்பதுமாக இருக்கின்றேன். அது பாரதியை நேரிலே சந்தித்து அவருடன் உரையாடுவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஒவ்வொரு முறையும் தவறாமல் தருகிறது.
பாரதி அறிஞர் என்று போற்றப்படும் ரா.அ.பத்மநாபன் அவர்களின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பாரதி தேடல் 1937 இல் தொடங்கியது. “ஹிந்துஸ்தான்”, “பாரதி மலர்கள்”, “பாரதி புதையல்”, “பாரதி புதையல் பெருந்திரட்டு”, “பாரதியின் கடிதங்கள்”, “பாரதி பற்றி நண்பர்கள்”, “பாரதி கவிநயம்” ஆகிய முதன்மை ஆதாரங்கள் கொண்ட தொகுதிகள் இடையே சுடர்விடும் மகுடமாக விளங்குவது “சித்திரபாரதி”. 1957-இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பு தமிழ்ப் புத்தக வெளியீட்டு வரலாற்றில் ஒரு மைல்கல். 1982 இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. முதல் இரண்டு பதிப்புகளை விட பெரிய அளவில், மிக நேர்த்தியாக வெளிவந்த மூன்றாம் பதிப்பு இது.
ரா.அ.பத்மநாபனின் அரிய முயற்சியில் முதன் முறையாக கண்டெடுக்கப்பட்ட பாரதியின் கையெழுத்துப் படிகள், பழம் இதழ்கள், பாரதியின் சமகாலத்தவருடைய படங்கள் – நேர்காணல்கள், அரை நூற்றாண்டுக்கும் முன் எடுக்கப்பட்ட அரிய படங்கள் முதலானவற்றோடு அமைந்த பாரதியின் ஆதாரப்பூர்வமான வரலாறு இது.
ரா.அ.பத்மநாபன் தமது பதினாறாம் வயதிலேயே தமிழ்ப் பத்திரிகை உலகில் நுழைந்து விட்டவர். வ.உ.சி, சுப்ரமணிய சிவா, வ.வே.சு ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகிய தேசிய இயக்கப் பெருமக்களின் வரலாறுகளையும் எழுதியவர். தமிழக அரசு 2003 ஆம் ஆண்டுக்கான பாரதி விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த நூலை ஒரு பாரதிப் புதையல் என்றே குறிப்பிடத் தோன்றுகிறது.
பாரதி பக்தர்கள் எங்கு பார்த்தாலும் இதை சற்றும் யோசிக்காமல் வாங்கி வைத்து, அவ்வப்போது படித்து மகிழலாம். பாரதியின் நினைவுகளில் திளைக்கலாம்.


