நான்காம் புத்தகம்: டிடோவின் காதல்

Aeneas And Dido, Attributed To Pseudo-caroselli (Active C. 1630/1650)

அழகான நகரம் கார்த்தேஜ்!

கார்த்தேஜ் நாட்டின் அரண்மனை கடற்கரையை ஒட்டியே இருந்தது. அந்தக்  கடற்கரையும் அதன் பின்னால் விரிந்திருக்கும் கடலும் பேரொலி எழுப்பிய அலைகளும்  நங்கூரம் பாய்ச்சிய கப்பல்களும் வந்து போகும் மரக்கலங்களும் அந்தப் பிரதேசத்தை  மிகவும் ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அரண்மனை மேல் முகப்பிலிருந்து பார்க்கும்போது  கண்ணுக்கெட்டியவரைக்கும் தெரியும் அந்தக்  கடல் பிரதேசத்தின் வனப்பு கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும்.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்தேஜ்  நாட்டை ஆளும்  மிகவும் மதிப்பிற்குரிய பெருமைக்குரிய அழகு ராணி டிடோ மட்டும்   தன் அரண்மனையின் மேல் முகப்பில்  நின்று கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தது. அவள் உள்ளம் எரிமலை போலக் குமுறிக்கொண்டிருந்தது.  அவளது இதயம் கடல் அலைகள் போல அலைபாய்ந்து கொண்டிருந்தது.அவள் மனதில் அமைதி இல்லை.

காரணம் ,   நங்கூரம்  பாய்ச்சியிருந்த  ட்ரோஜன் கப்பல்கள் மெல்ல மெல்ல கார்த்தேஜ்  கடலிலிருந்து விடை பெற்றுப்  போய்க்கொண்டிருந்தது.  அவற்றில் நடு நாயகமாக இருந்த ஓர் அலங்காரக் கப்பலில் அவளின் உள்ளம் கவர்ந்த  நாயகன் ஏனியஸ்  போய்க்கொண்டிருந்தது. தன்னை விட்டு தன் காதலையும் துறந்துவிட்டு  சோக விழிகளுடன் கடமையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். அவனுக்குக் கிடைத்த இறையாணை அப்படி. அவனுக்குக் கடமைதான் முக்கியம். ஆனால் டிடோவிற்கோ காதல்தான் முக்கியம். அரசபதவி நாடு மற்ற உறவு அனைத்தையும் உதறி  எறிந்துவிட்டு அவனுடன் போகத் துடித்தாள். அவனுக்கும் அவள் மீது தீரக் காதல் இருந்தது என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள். கடவுளர்களின் திட்டம் விதி வடிவில் வந்து அவர்கள் இருவரையும் பிரித்தது.  அவள் விழியிலிருந்து கப்பல்களும் ஏனியஸும் மறைந்துவிட்டார்கள். அவள் இதயத்தின் ஒவ்வொரு துளியிலும்  அவன்  நிறைந்திருந்தான்.

அந்த இரவு ஏனியஸ் இல்லாத கார்த்தேஜ்  அவளுக்கு சூனியப் பிரதேசம்போலத் தோன்றியது. அவள்  சகோதரி அன்னா அவளை அமைதிப்படுத்த முயன்றாள். ஆனால் டிடோவின் மனமோ ஏனியாசிடமே இருந்தது.

“அன்னா! என் இதயம் அமைதியிழந்திருக்கிறது. அந்த ஏனியாஸ்… அவன் கண்களில் ஒரு துக்கம் இருக்கிறது; அவனுடைய  வார்த்தைகள் நெருப்பைப்போல் என் நெஞ்சைச் சுட்டெரிக்கின்றனவே! என்ன செய்வேன்?”

அன்னா மெதுவாகக் கூறினாள்: “அக்கா, அதுவே தெய்வத்தின் விதி! ட்ரோஜனின் வீரன்  ஏனியாஸும்  உன்னைப் பார்த்தநாள் முதல் உன்மீது தீவிரக் காதல் உடையவனாகத்தான் இருந்தான். நீங்கள் இருவரும் துன்பம் அனுபவித்தவர்கள். இப்போது காதல் துன்பத்தில் தவிக்கிறீர்கள். உங்கள் பிரிவு  கடவுளின் ஏற்பாடு!”

அன்னாவின் சொற்கள் டிடோவின் மனதைத்  துடிதுடிக்க வைத்தன.

அவள் இதுவரை மறைத்திருந்த மனக்கனவுகள் மெல்ல மலர்ந்தன. அவளும் ஏனியாஸும் சந்தித்து காதலைப் பரிமாறிய இன்ப நாட்களை மெல்லவே அசை போட்டாள். அவள் கண்கள் மூடின. ஆனால் மனக்கண் விரிந்து அந்த இன்ப நாளை நினைவிற்குக் கொண்டுவந்தது:

அன்று காலை, கார்த்தேஜின் மக்கள் காட்டில் வேட்டைக்கு சென்றனர். டிடோவும், ஏனியாஸும் சேர்ந்து புறப்பட்டனர். இருவரும் கொஞ்சிக் கொஞ்சி ஒரே தேரில் பவனி வந்தனர். காடு வந்ததும் இளங்காதலர்களுக்குள் உற்சாகம் பீரிட்டு எழுந்தது. அப்போது  திடீரென  மேகம் கருத்தது. பலத்த மழை பெய்தது. கூட வந்திருந்த அனைவரும் கண்ணில் தெரியும் குகைகளுக்குள்   ஓடினர். டிடோவும் ஏனியாஸும் ஒரு குகைக்குள் தஞ்சம் அடைந்தனர்.

————————————————————————————————————————————-

அந்த நேரத்தில், ஒலிம்பஸ் மலையில் வீனஸ், ஏனியாஸின் தாய், தன் மகன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று யோசித்தாள். அதனால் அவள் ஏனியாஸ் டிடோ காதலை ஆதரித்தாள். ஆனால் ஜூனோ,  கார்த்தேஜ் நகரத்தின் தெய்வம் ஏனியஸால்  தன் நகரம் அழியுமோ என பயந்தாள்.அதனால் இருவரையும் பிரிப்பது உசிதம் என்று கருதினாள்.  இருவரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டதனால் ஒருவரை ஒருவர் எதிரியாகவே பாவித்தனர்.

ஜூனோ மேலா வீனஸிடம், “வீனஸ்! நம் இருவரின் சண்டை எப்போது முடியும்? உன் மகனும் என் நகரத்தின் ராணியும் திருமணம் செய்து கொண்டால், இருவருக்கும் அமைதி வரும். என்று எனக்குத் தோன்றுகிறது. நீ ஏன் அதற்குக் குறுக்கே நிற்கிறாய்?” என்று வினவினாள்.

வீனஸ் சிரித்தாள்: “அது விதியோடு பொருந்துமா என்று பார்ப்போம்.”

அந்த நிமிடம் வீனஸும் ஜூனோவும்  ஒரு வலிய ஆட்டத்தை நடத்தத் தீர்மானித்தார்கள். அதன் விளைவுதான்  மின்னல் மழை மோகம்!

————————————————————————————————————————————

Amazon.com: Posterazzi Aeneas And Dido In The Cave Poster Print, (18 x 24): Posters & Printsமழையில் நனைந்த காதலர் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவினர். வெளியில் மின்னல் மின்னியது. இடி இடித்தது. காதலர் இருவரும்  அந்த குகையில் அந்த இருளில் தம்மை மறந்தனர்.  வீனஸ் மற்றும் ஜூனோ இரு தெய்வங்களும்  அமைதியான  சாட்சியாய்  நின்றார்கள். காதலர் இருவர் இதழ்களும் உடலும் இணைந்தன. இன்ப வெள்ளத்தில் மிதந்தனர் .  டிடோ ஏனியாஸ் மீது அன்பு மழை பொழிந்தாள். ஏனியஸ் தன் அன்பினால் அவளைத் திணரடித்தான். “நீ தான் என் இதய ராணி! நம் காதல் காலம் காலமாக இருக்கும்” என்று உறுதிமொழி கூறினான்.

இருவரும் காதல் வயப்பட்டு உலகத்தையே மறந்தனர். ஏனியஸ் தன் லட்சியத்தை மறந்தான். டிடோ தன் நாட்டையே மறந்தாள். தான் ராணி என்பதையும் மறந்தாள். நகரம் முழுவதும் காதலர்கள் சுற்றித் திரிந்தனர். கார்த்தேஜ் நகரில் எங்கும் டிடோ – ஏனியஸ் காதல் பற்றிப் பேச்சாகவே இருந்தது. “ராணி அரசை மறந்துவிட்டாள். அந்த ட்ரோஜன் அவளது மனதைப் பறித்துவிட்டான்!” என்று மக்கள் பேசத் தொடங்கினர்.


அந்தச் செய்தி வானுலகத்தையும் சென்றடைந்தது. கடவுளர் தலவர் ஜூபிட்டர் கோபமடைந்தார். அவர் தூதராக மெர்க்குரியை அனுப்பினார்:

“விதிப்படி ஏனியாஸ்  இத்தாலியிலே ஒரு பேரரசை நிறுவ வேண்டும். ! அவன் இங்கே கார்த்தேஜில் காதலில் வீழ்ந்து விட்டான்! உடனே அவனுக்கு நினைவூட்டல் அனுப்பி அவனைப் புறப்படும்படி செய்! ” என்று கூறி அனுப்பினார்.


மெர்க்குரி கீழே வந்து, கார்த்தேஜின் கடற்கரையில் நின்றான். அதுசமயம் ஏனியாஸ் கப்பல்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.  திடீரென அவன் காதுகளில் தெய்வத்தின் குரல் கேட்டது:

“ஏனியாஸ்! நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ  உன் மக்களுக்கு நீ கடமைப்பட்டவன். இத்தாலியிலே உன் விதி காத்திருக்கிறது! கடமையை மறந்து நீ இங்கே  காதலில் ஈடுபடலாகாது!

ஏனியாஸ் பெரும் அதிர்ச்சி அடைந்தான்.    அவனது முகம் வெளிறிப்போனது. மனம் இரண்டாயிற்று.

என் அருமை டிடோவிடம் இதை எப்படிச் சொல்லுவது? அவளைவிட்டு நான் பிரியவேண்டுமா? அதுதான் கடவுள் எனக்கு இட்ட கட்டளையா?  என்று அவன் சொல்லவியலாத துயரமடைந்தான்.

அந்த இரவு, அவன் தன் நண்பர்களை அழைத்தான். “நாளை விடியற்காலையில் நமது கப்பல்கள் புறப்படட்டும். இதை ராணி அறியக் கூடாது.” என்று தன் மனத்தின் விருப்பத்தை மீறி அறிவித்தான்.

ஆனால் அவர்களுக்கிடையே இருந்த காதலின் வலிமை அவன் புறப்படப்போகும் செய்தியை அவளுக்கு அறிவித்துவிட்டது. . டிடோவுக்கு செய்தி வந்து விட்டது. அவள் அவனைத் தேடி ஒடோடி வந்தாள்.

“ஏனியாஸ்! இது உண்மையா? நீ நிஜமாகவே என்னை விட்டு போகிறாயா?”

ஏனியாஸ் தலை குனிந்தான்.

“டிடோ, நான் உன்னை நேசிக்கவில்லை என்று சொல்ல முடியாது. உயிரைவிட அதிகமாக நேசிக்கிறேன்.  ஆனால் என் விதி — கடவுளின் கட்டளை! நான் இத்தாலியிலே சென்று ஒரு புதிய பேரரசை அமைக்க வேண்டும். என்னால் அதை மீற முடியாது.”

டிடோ கண்ணீரில்  நனைந்தாள்.

“அப்படி என்றால் என்னை ஏன் ஏமாற்றினாய்? அந்த குகையில், அந்த மின்னலின் சாட்சியில் — நீ எனக்கு துணை என ஏன் சொன்னாய்!” நெஞ்சம்  வெடித்துக் கேட்டாள்.

ஏனியாஸ் துயரத்துடன் சொன்னான்:

“நான் வாக்குறுதி அளித்தேன். அது முற்றிலும் உண்மை! ஆனால் இப்போது உன்னைவிட்டுச் செல்லவேண்டும். அது கடமை! இறைவனின் ஆணை! உன்னால் என்னை மன்னிக்க முடியும். முடிந்தால் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க  முயலுவோம்.   ஆனால் என் பிடரியைப் பிடித்துத் தள்ளும்  விதியிலிருந்து என்னால்  தப்பிக்க முடியாது.”

அவள் கோபத்துடன் கூறினாள்:

“ போ! என்னைவிட்டுப் போய்விடு! உனக்கு என் காதலைவிடக் கடவுளின் கட்டளைதான் பெரிது. நீ கடவுளின் கட்டளையை நிறைவேற்று ! அதேசமயம்  ஒரு பெண்ணின் உயிரை எரிக்கிறாய் என்ற உணர்வுடன் செல்!”

ஏனியஸ் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளை விட்டு  மௌனமாகப் புறப்பட்டான். சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்துக்  கொண்டிருந்த டிடோ தன் அரண்மனைக்கு ஓடினாள்.

அடுத்த நாள் காலை, கார்த்தேஜின் துறைமுகம் முழுதும் அசைந்தது. ட்ரோஜன் கப்பல்கள் தண்ணீரில் நின்றன. டிடோ அரண்மனையின் மேல் மாடியில் நின்று பார்த்தாள். அவன் போகிறான். அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. பார்த்தால் பிரியமுடியாது என்பது அவனுக்குத் தெரியும்.

டிடோவின் மனம் சுக்கு நூறாக  உடைந்தது.

அவளை அணைத்து ஆறுதல் சொல்லவந்த சகோதரியிடம்  சொன்னாள் : “அவனை  நான் மன்னிக்க மாட்டேன். அவன் இந்த நாட்டிலிருந்து போகலாம். என் இதயத்திலிருந்து நீங்க மாட்டான். ஒரு பெரிய மரக்கூண்டு கொண்டு வா! அதில் அவனுடைய  நினைவுகளை எல்லாம் போட்டு எரிக்கப்போகிறேன். உடனே கொண்டு வா! ” என்று உத்தரவிட்டாள் கார்த்தேஜின் அரசி.

டிடோவின் ஆணைப்படி ஒரு பெரிய மரக் கூண்டு வைக்கப் பட்டது.  அதன் மீது  எண்ணை ஊற்றி  எரிக்கும்படி உத்தரவிட்டாள்.

எரியும் அந்த மரக் கூண்டில் அவன் கொடுத்த பரிசுகளை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டாள்.

அவன் அந்தக் குகையில்  கொடுத்தக்  குறு வாளை எடுத்தாள். வானத்தை நோக்கிப் பார்த்தாள்.

The Death of Dido | Renae Cannon“நான் உன்னைப் பார்த்தபோதெல்லாம்  மலர்ந்தேன் . இப்போது உன் நினைவுகளில் மயங்குகிறேன்” என்று கூறிக்கொண்டு அவள் தன் நெஞ்சில் குறுவாளால்  குத்திக் கொண்டாள்.  அவனுடைய  நினைவுகள் குருதியாக வெளிவந்தன. ” ஏனியாஸ்! உன் நினைவுகள் இப்போது எரியட்டும்” என்று யாரும் எதிர்பார்க்காதபடி எரியும்  மரக் கூண்டிற்குள் பாய்ந்தாள்.

ஏனியஸின்   நினவுகளுடன் டிடோவின்  உடலும்  தீப்பற்றி எரிந்தது. அவன் நினைவுகளை முற்றிலும் அழிக்கமுடியாமல் அதனுடனே அவள் உயிர் துறந்தாள்.

அந்த மேடை அவளின் உயிர் முடிவதற்கான சின்னமாய் மாறியது. 

காற்றுத் தேவதை,   எரியும் டிடோவின் நறுமணத்தைக்  கப்பலில் சென்றுகொண்டிருக்கும் ஏனியஸ் நாசிக்குக் கொண்டுசென்றது. தூரத்தே கார்த்தேஜ் அரசியின் அரண்மனையிலிருந்து தீ பற்றி எரிவதைக் கண்டான்.  ‘அந்தத்  தீ… அது டிடோவின் அரண்மனை!” என்று அவன் கதறினான். அவன் இதயம் வெடித்தது. அவனால் திரும்ப இயலவில்லை. விதி தனது வலிமையான கரங்களினால் இழுத்துச் சென்றது. விதி வகுத்த  பாதையில் இத்தாலியை நோக்கிப் புறப்பட்டான்.

Punic Wars - Victrix Limitedஅந்த நாள் முதல், கார்த்தேஜின் மண்ணில் ஒரு சாபம் நிலை கொண்டது.

“ரோமன் சாம்ராஜ்ஜியத்தை ஆரம்பித்த ட்ரோஜன் சந்ததியருக்கும் கார்த்தேஜுக்கும் நித்தியப் பகை!”

அதுவே பின்னர் ரோமன்-கார்த்தேஜ் போர்களின் விதை ஆனது (PUNIC WARS – 1, 2, 3 ) 

(இதிகாசம் விரியும்)