ரெட்ரோ – உங்கள் சாய்ஸ்
ஓ.டி.டி யில் ‘ரெட்ரோ’ படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவி என் பக்கம் திரும்பி,
“இந்த மாதம் என்ன டாபிக் எழுதப்போறீங்க?”
“இன்னும் யோசிக்கல..”
“ரெட்ரோவை எழுதுங்களேன்”
“இந்தப் படத்தைப் பற்றியா?!”
“இல்ல, ‘ரெட்ரோ’ – அதுதான் தலைப்பு”
“என்னவெல்லாம் எழுதலாம், சொல்லு”
“உங்க அம்மாவைக் கேளுங்க” எதுக்கெடுத்தாலும், ஆயிரம் ஐடியா கொடுப்பாங்களே”
உடன், ZOOM கால் போட்டு, குடும்பத்தைக் கூப்பிட்டேன்.
இனி ஓவர் டு, Zoom கால்,
அத்திம்பேர் : “அந்த காலத்தில ஒவ்வொரு ஞாயித்துக் கிழமை, ஈவினிங் நாலு மணிக்கு ரேடியோ மெட்ராஸ்..ல, ‘நேயர் விருப்பத்தில’, என்னென்ன பாட்டு வரிசையா வரும்..னு நான் புட்டு, புட்டு வைப்பேனே அதை எழுது”
அக்கா : “வேணாம்டா, இரவு வண்ணச்சுடர், ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’, கேட்டுட்டு, உப்பிலி மாதிரி இவர் அசடு வழிவாரே, அதை வேணா எழுது”
அம்மா : “மாப்பிளையை ஒன்னும் சொல்லாதடி. மாநிலசெய்திகள் ‘ஜெயா பாலாஜி’ குரலைப் பத்தி எழுது. ‘ விவித் பாரதி..ல, உங்கள் விருப்பம் ஆரம்பத்துல வர அந்த “டோடடைங்.. டோடடைங்” மியூசிக்”
தங்கை : “ரேடியோ சிலோனை விட்டுட்டயே..ண்ணா. நம்ம வீட்டுல கார்த்தாலே ‘பொங்கும் பூம்புனல்..’ ல ஆரம்பிச்சு, ‘இரவின் மடியில் வரை’ ஓயாமல் டீக்கடை மாதிரி பாடிக்கிட்டே இருக்குமே”
நான் : “யெஸ், யெஸ், கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி ஷண்முகம், ‘உங்கள் அன்பு அறிவிப்பாளர்’ அப்துல் ஹமீது”
மனைவி : “ஏங்க, டிவி பத்தி சொல்லுங்க. இருவத்தஞ்சு வருஷமா ‘என்ஃபீல்ட் டிவி’ உழை, உழை..னு என்னை மாதிரி உழைச்சதே”
தங்கை : “ஆமாம்..ண்ணா . “பெப்சி உங்கள் சாய்ஸ்..ல, நான் எழுதின லெட்டர் வந்ததே. அதையும் எழுது”
நான் : ” அப்படியே, எதுத்த வீடு, பக்கத்துக்கு வீட்டு மக்களோட சேர்ந்து பார்த்த ஞாயித்துக் கிழமை தமிழ்ப் படம், ராமாயணம்..”
மனைவி : “நம்ம கல்யாணம், விரதம் அன்னிக்கி, ராமாயணம் பாக்க டிவி வைச்சே ஆகணும்..னு உங்க வீட்ல படுத்தினாங்களே. அந்தக் கதையும் எழுதுங்க”
நான் : “கவாஸ்கர்..ரோட கிரிக்கெட் சீரீஸ். ஆஸ்திரேலியால, நடந்த Benson & Hedges சீரிஸ், ஒருநாள் உலக கோப்பை. விடியக்காலை மூணு மணிக்கே எழுந்து பாத்தோமே, அத்திம்பேர்”
அக்கா : “ஆமாண்டா, ரவி சாஸ்திரிக்கு ‘ஆடி’ கார் கிடைக்கணும்..னு அம்மா, அம்மனுக்கு வேண்டிண்டாளே”
அம்மா : “அதை ஏன் கேக்கிற, இவன் டிவி பார்க்க உட்கார்ந்தாலே, ஸ்ரீகாந்த் விக்கெட் போயிடும். இவன் ராசி அப்படி! அதனாலே, ஆரம்பம் அஞ்சு ஓவர்..ல இவனை டிவி பக்கமே விடமாட்டோம்”
அத்திம்பேர்: “அப்ப, தமிழ் கிரிக்கெட் காமெண்ட்ரியை விட்டுடாத, வர்ணனையாளர்கள் ராமமூர்த்தி, கூத்தபிரான், அப்துல் ஜபார் + ‘வல்லுநர் மணி அவர்களே, இந்தப் பந்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ ‘அழகான பந்து, அளவு குறைவாக வீசப்பட்ட பந்து..”
மனைவி : “சோனி, பானாஸோனிக் காஸெட்? ‘கட்டுசாத கூடை’ போது, ஆளைக் காணுமே..ன்னு பார்த்தா, ‘ஹனிமூன்..க்கு எடுத்துண்டு போகணும்னு ‘கடைக்குப் போய் சினிமா பாட்டு ரெகார்ட் பண்ணிட்டு வந்தேளே. அந்த சோனி வாக்மேன் வச்சிட்டுப் பந்தா காமிச்சேளே”
தங்கை : “என்னோட ஒரு பிறந்த நாளுக்கு மண் வாசனை’ காஸெட், ரிலீஸ் ஆன அன்னிக்கு வாங்கி கொடுத்தாயே?”
அக்கா : “அப்புறம், டெக் ‘வாடகைக்கு எடுத்து, வீடியோ லைப்ரரில கேஸட் வாங்கிப் பார்த்த கதை”
அத்திம்பேர் : “வீடியோ கஃபே / பார்லர்..னு கூடக் கொஞ்ச நாள் ஓடித்து. சேர் எல்லாம் போட்டு இருட்டுல படம் போடுவா”
தங்கை : “எனக்கு நியாபகம் இருக்கு அத்திம்பேர். ‘இங்கிலீஷ்’ படம் பார்த்துட்டு வந்தேள்..னு, அக்கா, மூணு நாள் பட்டினி போட்டாளே”
அம்மா : “அது என்ன கதை? எனக்குத் தெரியாதே? அதையே எழுதேண்டா”
அத்திம்பேர் : “ஐயோ….!!”
அக்கா : “விடுமா.. ‘மால்குடி டேஸ்’, சுஹாசினியோட ‘பெண்’ சீரியல்னு பதிமூணு வாரத்துக்கு ஒரு தடவை, நல்ல நல்ல சீரியல் மாறும். நோ ஜவ்வுத் தொடர்”
தங்கை : “ஏன், ‘ஹம் லோக்’ இருந்ததே, மறந்துட்டயா? பிரேக் பாஸ்ட்..க்கு சமோசாவும், ஜிலேபியும் சாப்பிடுவாங்களே?”
அம்மா: “தியாகராஜ ஆராதனை, லைவ் ஆ காமிப்பா. அப்பப்ப நல்ல கச்சேரியெல்லாம் இருக்கும்”
தங்கை : “ஆனா, யாரும் செத்துடக்கூடாது. ஒரு வாரம் ‘சாரங்கி’ தான்”
அத்திம்பேர் : “பிரணாய் ராய், சேகர் குப்தா’ னு எலெக்ஷன் ரிசல்ட் நாள்..ல விடிய விடிய கலக்குவாங்களே’
நான் : “ஆனா, சாதாரண நாள்..ல பொதிகை, ராத்திரி 9:00 மணிக்கு மேல தூங்கப் போயிடும்.. அப்ப, டெல்லி கூட 11 மணியோட சரி..னு நினைக்கிறேன்
இப்போ மாதிரி, ராத்திரி எல்லாம் ‘பிரேக்கிங் நியூஸ்’ பயமுறுத்தல் கிடையாது..”
அம்மா: “அப்புறம் அந்த……….. “
ஆஹா, Zoom, time out ஆயிடுச்சே…!!
சொக்கா.. சொக்கா எதை எழுதுவேன்? எதை விடுவேன்..?





