பக்தியின் வடிவம்

பிள்ளையார் புத்த மதக் கடவுளா?
எனக்கு தெரிந்தவர் வீட்டுக்கு குழந்தை, ஐந்து வயது இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி அன்று என் வீட்டிற்கு வந்திருந்தாள். அலங்காரம் செய்து ஜரிகை வேட்டி அங்க வஸ்திரத்துடன் நான் வைத்திருந்த பிள்ளையாரைப் பார்த்துக் கேட்டாள்,

“பாட்டி பிள்ளையாருக்கு ஏன் கிராண்டா டிரஸ் பண்ணி இருக்கீங்க? அவர் என்ன கிளம்பி மாலுக்கு போகப் போறாரா?”

சின்னக் குழந்தை அதற்குத் தெரிந்த விதத்தில் ஜோக் அடித்து சிரித்தது.

“ ஆமாண்டா கண்ணு ! இன்னைக்கு பிள்ளையாருக்கும் ஹாப்பி டே! எங்க வேணும்னாலும் கிளம்புவாரு. அதுக்குத் தான் ரெடியா டிரஸ் பண்ணி இருக்காரு”.

குழந்தையின் பாணியிலேயே அதற்கு பதில் சொன்னேன். சிரித்துக் கொண்டே விளையாடக் கிளம்பி விட்டாள். தெய்வத்தையும் நம்மை மாதிரி மனுஷனாக பாவித்து விட்டது குழந்தை.

இவ்வளவுதான் பக்தி. ரொம்ப சிம்பிள். தெய்வத்தை நம்மில் ஒருவராய் நினைத்துக் கொள்வது, கொண்டாடுவதுதான் பக்தி. நம் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் எப்படி எல்லாம் கொண்டாடுகிறோம்? விதவிதமாய் புத்தாடை போட்டு, நகைகள் அணிவித்து, புதுப்புது நாகரீக அழகு படுத்தி, அதற்குப் பிடித்ததை எல்லாம் சாப்பிடக் கொடுத்து, ‘கண்ணே, மணியே, அழகே, அருஞ்செல்வமே’ என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டாடுகிறோமே அது எதனால் ? அந்த குழந்தையின் மேல் நமக்கு இருக்கும் அன்பால், பிரியத்தால், பாசத்தால் !
இதையே தெய்வத்திடம் காட்டுவது தான் பக்தி. அன்பு, பிரியம், வாத்சல்யம், பாசம் எல்லாவற்றையும் தெய்வத்திடம் காட்டிக் கரைவது தான் பக்தி.

அப்படி தெய்வத்தைக் கொண்டாடுவதற்கு இது சரி, இது தப்பு என்று எதுவுமே இல்லை.
திண்ணன் என்ற பெயர் கொண்ட கண்ணப்ப நாயனார் வாயில் நீர் சுமந்து வந்து அதை உமிழ்ந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததையும், சபரி பழங்களை எல்லாம் தான் தின்று பார்த்து சுவையான பழங்களை ராமருக்கு கொடுத்ததும் அன்பினால் வந்த பக்தி. இவற்றை தெய்வங்கள் ஏற்றுக் கொண்ட கதைகளையும் நாம் பார்க்கிறோம். ஆக பக்தி என்பதில் அன்பு தான் முன்னிலை.

இதில் வழக்கங்களையும் சாங்கியங்களையும் பிடித்துக்கொண்டு எது உயர்ந்தது எது சிறந்தது என்று போட்டி போடுவதிலும்,சண்டையிடுவதிலும் பிரயோஜனம் இல்லை. தான் செய்வதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களைக் குறை செய்வதும், மனதை நோக அடிப்பதும் ரொம்பவும் தவறு.

பொங்கல் என்பது ஆதியில் விவசாயிகள் இயற்கைக்கு சொல்லும் நன்றியாகவும் அறுவடை நேரத்தில் கையில் கொஞ்சம் பணம் புழங்கும் என்பதால் கொண்டாட்டமாகவும் இருந்தது. வீட்டை சுத்தப்படுத்தி வேண்டாதவற்றை கொளுத்தி அந்த நெருப்பில் பறையை வாட்டி கொட்டி ஆனந்தமாக கூத்தாடுவதையும், வீட்டிற்கு வெள்ளை அடிப்பதையும் போகி ஆக்கி, புது நெல் குத்தி அரிசியை எடுத்து பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி புத்தாடை உடுத்தி மகிழ்வதைப் பொங்கல் பண்டிகையாக்கி, வீட்டு மனிதரைப் போலப் புழங்கும் மாடுகளைக் கொண்டாட கொம்புக்கு வண்ணம் அடித்து திமில் அடக்கி விளையாடி மாட்டுப்பொங்கல் கொண்டாடி, விவசாயம் பார்த்த களைப்பு தீர சுற்றத்தாரைக் காணச் செல்லக் காணும் பொங்கல் நாளை ஒதுக்கி, இப்படி எல்லாம் தான் பண்டிகைகள் வளர ஆரம்பித்தன.

இப்போது வயல் வரப்பும் இல்லை, மாடு கன்றும் இல்லை. மூடிய கதவுக்குள் சூரியனுக்கே உள்ளே வர வழியில்லாத இடத்தில், காஸ் அடுப்பில் குக்கர் வைத்துப் பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது, “ஏன் கலர் கோலம் போடவில்லை, அடுப்புக்கு ஏன் மஞ்சள் தடவவில்லை” என்றெல்லாம் மாமியார் கோபித்துக் கொண்டால் “இனிமேல் பொங்கலுக்கு டிரெக்கிங் போய் விட வேண்டும் “ என்றுதான் மருமகள் முடிவு செய்வாள்.

பக்தியோடு பழக்கங்களை இணைத்து வைத்தது நம் தேசத்தின் பண்பாடு. அழகுணர்ச்சி, கலைநயம், சுவை, சுற்றம், நட்பு இவர்களோடு இணைதல், இதுதான் நம் பக்திக் கொண்டாட்டம். தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, புத்தாண்டு இப்படி எந்தப் பண்டிகையை எடுத்துக் கொண்டாலும் அழகும் கலையும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் கோலம் போடுவதில் ஆரம்பிக்கிறது அழகுணர்ச்சி. அவரவர் ஆசைக்கேற்ப பூஜைக்கான அலங்காரம், தன்னை அழகுப்படுத்திக் கொள்வது என்று தொடர்கிறது கலை நயம். கொண்டாடும் தெய்வத்திற்கு ஏற்ப வித விதமான உணவு வகைகள் தயாரித்து படைக்கப்படுகின்றன. சுற்றமும் நட்பும் இணைந்து உண்ட பின், சந்திப்பு கோயில் என்று பொழுது நிறைவடைகிறது.

ஆக பக்தியின் பின்னணியில் வாழ்க்கையின் தேவைகளே நிறைவு செய்யப்பட்டு விடுகின்றன. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து இவைகளைச் செய்யும் போது மகிழ்ச்சி பேச்சு கிண்டல் கேலி எல்லாவற்றிலுமே மனம் இளைப்பாறுகிறது. நம் திறமைகள் மெருகேறுகின்றன. செய்து முடித்த பின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. ஸ்டிரெஸ் பறந்து போகிறது.

ஆகவே எதற்காக பக்திக் கொண்டாட்டம் என்கிற அடிப்படையைப் புரிந்து கொள்வது முக்கியம். அதை விட்டு விட்டு இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற பிடிவாதத்தை வைத்துக் கொண்டு அதனால் கணவன்,மனைவி,மருமகள்,மாமியார், அப்பா,அம்மா இப்படி இவர்களுக்குள் சண்டை வந்தால் அப்படி ஒரு பண்டிகை கொண்டாடவே வேண்டாம்.

இன்றைய தலைமுறையினர் பக்தி பண்பாடு கலாச்சாரம் இவற்றைப் பற்றி நிறைய பேசுகின்றனர். அவற்றைப் பின் பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம் அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் செயல்பட முனைகின்றனர். அவர்களிடம் இது சரி,அது சரியல்ல என்கிற அளவுகோல்களை வைத்துக் கொண்டு குற்றம் கண்டுபிடித்தால், பொங்கும் பாலில் நீர் தெளித்தாற் போல் ஆர்வம் குறைந்து எதற்கு இதெல்லாம் என்று ஒதுங்கி விடுவர்.

“ஏன் லேட்டாக எழுந்திருந்தாய்” என்கிற கோபத்தில் ஆரம்பித்து,
“ எங்க அம்மா இப்படிப் பண்ண மாட்டாங்க” என்கிற ஒப்பீட்டில் சண்டை வளர்ந்து, ஹெட் போனுடன் தனித்திருக்கும் குழந்தைகளை நாலு சாத்து சாத்தி, கோபத்தை வெளிப்படுத்தி, அழுது அரற்றி, கடைசியில் ஜொமாட்டொவில் சாப்பாடு ஆர்டர் செய்வது அல்ல பண்டிகைக் கொண்டாட்டம்.

சின்னச் சின்னத் தவறுகளையும் சண்டைகளையும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு பெரிதாக்கி வருத்தப்படுவதால் வாழ்க்கையின் நிம்மதி தொலைகிறது. மன அழுத்தம் அதிகமாகின்றது.

சந்தோஷமான வாழ்க்கைக்கு லேசான மனதுக்கும் பக்தியும் பண்டிகை கொண்டாட்டமும் ஒரு பெரிய வழி. பக்தியும் பண்டிகைக் கொண்டாட்டமும் நல்ல விஷயம் தான். ஆனால் இதன் அடிப்படை மகிழ்ச்சி அன்பு பாசம் குடும்பத்தின் இணக்கம் இவைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.