செம்பை வைத்தியநாத பாகவதரின் 50ம் ஆண்டு நினைவு விழா

செம்பையில் பிறந்தவர் – சென்னைவாழ் ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டவர்.
டி வி கோபாலகிருஷ்ணன், கே ஜே யேசுதாஸ், பி லீலா, செம்பை நாராயணன், , ஜய விஜயன் வி வி சுப்ரமணியம் போன்ற சங்கீதக் கலைஞர்களின் குரு, திரு செம்பை வைத்தியநாத அய்யர் அவர்கள்;

கேரளாவில் செம்பை என்ற ஒரு சிறு கிராமததில் பிறந்து மிகப்பெரிய சாதனையை கர்நாடக இசையில் நிகழ்த்தியவர்.

தனது 80 வயது வரை இளமையாகப் பாடினார் .ஒருமுறை இதைப் பற்றி சங்கீத உபந்யாசகர் திரு டி எஸ் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவரிடம் கேட்டதற்கு, நான் எங்கே பாடுகிறேன் – அந்த குருவாயூரப்பன் தான் என்று சொல்லிவிட்டார். அந்த அளவிற்கு குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஒவ்வொரு கச்சேரியின் நிறைவிலும் நாராயணீயம் ஸ்லோகம் சொல்லித்தான் கச்சேரியை முடிப்பார். (அவரின் சீடரான திரு ஜேசுதாஸ் அவர்களும் தனது குருநாதர் போலவே ஸ்லோகம் சொல்லி கச்சேரியை முடிப்பார்).

குரு மற்றும் சிஷ்யர் இருவர் கச்சேரிகளையும், அக்ரே பஸ்யாமி அல்லது யோகீந்த்ரானாம் என்று கச்சேரி நிறைவில் குருவும் சிஷயரும் கம்பீரமாக எடுத்துச் சொல்லும் நாராயணீய ஸ்லோகங்களையும் கேட்டு ரசித்த பாக்யம் பெற்ற ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு நிறைய மனத் திருப்தி உண்டு. அந்த இசை ஞானத்தை, ரசிப்பைத் தந்த என் அப்பாவிற்கு நன்றி.

இசை உலகில் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வாழ்ந்தவர்களில் தெம்பும் திடமும் ஆக இருந்தவர்கள் மிகக் குறைவு .அதிலும் இசைப் பணியை தொடர்ந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு. அப்படிப் பலரும் கேட்டு ரசிக்கும் நிலையில் 80 வயது வரை பாடி, ரசிகர்களை மகிழ வைத்தவர்களில் ஒருவர்தான் சங்கீத கலாநிதி செம்பை வைத்தியநாத பாகவதர்.

1951 ஆம் வருடம் அவருக்கு மியூசிக் அகாதமி சங்கீத கலாநிதி விருது கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு உடல்நலம் குன்றி, அவரின் குரல் பாதிக்கப்பட்டது. இருந்தும் சுசீந்திரத்தில் ஒரு கச்சேரிக்கு ஒப்புக்கொண்ட அவரால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பாட முடியவில்லை. அதற்குப்பின் சில வருடங்கள் மருத்துவம் பார்த்து,கடைசியில் தனது இஷ்ட தெய்வம் குருவாயூரப்பனிடமே முறையிட்டார். நான் என்ன பாவம் செய்தேன் – உனது தோத்திரம் கூட சொல்ல முடியவில்லையே என்று மனமுருகிக் கேட்டார்.

அப்போது அருகே நின்று கொண்டிருந்த ஒரு நம்பூதிரி என்னோடு வாருங்கள் ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போகிறேன் உங்கள் குறை தீரும் என்று கூற அப்பொழுது செம்பை அவர்கள் குருவாயூரப்பன் சந்நிதியில் சொன்னார் .

இந்த நோய் குணமாகி நான் திரும்பவும் பாட ஆரம்பித்தால் ,பாட்டு மூலம் சம்பாதிப்பது எல்லாம் உனக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறிவிட்டு, நண்பருடன் சென்றவர் ஒரே வார வைத்யத்தில் கண்கண்ட மாற்றத்தைக் கண்டார்.

அதற்குப்பின் 1974 ஆம் வருடம் அவர் மறையும் வரை கச்சேரிகளில் கிடைத்த சன்மானம் மற்றும் தொகைகளை (போக்குவரத்து செலவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு )மீதிப் பணத்தை குருவாயூர் தேவஸ்தானத்திற்கு கொடுத்துவந்தார்.

செம்பையின் சங்கீதம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது. காரணம் தமது இசை இறைவனுக்கே அர்ப்பணம் என்ற பவித்ரமான எண்ணம் கொண்டவர். அவருடைய கச்சேரிகளில் புதிய பாணிகளில் ஸ்வரம் பாடுவார். பக்க வாத்யக்காரர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் தன்னுடன் பயணிக்க செய்வார். அவரின் வந்தேபாரத் வேக கற்பனா ஸ்வரம் மிகவும் ரசிக்கபட்ட ஒன்று. இசைக்கச்சேரியின் போது எந்த இடத்திலும் நிரவல், ஸ்வரப்ரஸ்தரம் செய்யும் விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்.

ஒருமுறை மும்பையில் (அன்றைய பாம்பே) கச்சேரி நிறைவில், ஒரு மராட்டிய ரசிகர் எழுந்து எங்கள் பாம்பேயில் கச்சேரி செய்வதால், எங்கள் ஊர் பெயரில் ஒரு பாட்டுப் பாடியே தீரவேண்டும் என்று பிடிவாதம் செய்தார். எல்லோரும் திகைக்க, சமயோசிதமாக, செம்பை அவர்கள், பாடுகிறேன் என்றார். அவர் பாடிய பாடலைக் கேட்டு அந்த ரசிகர் மட்டுமல்ல மொத்த அவையே மகிழ்ந்தது. அவர் பாடிய பாடல் – ஆடு பாம்பே (Bombay) விளையாடு பாம்பே (Bombay).

அவருடைய முதல் கச்சேரி கேரளாவில் 1905ஆம் வருடம் ஒற்றைப் பாலம் என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணர் கோவிலில் நடந்தது . அதேபோல, 1974 ஆம் வருடம் அவருடைய கடைசி கச்சேரி அதற்கு அருகில் இருந்த ஊரில் இருந்த கிருஷ்ணர் கோயிலில் நடந்தது .கச்சேரியை நிறைவாக நடத்தி முடித்துவிட்டு அதற்கு பிறகு அவரது வாழ்வு முடிந்தது

நல்ல இசைப் பரம்பரையில் வந்தவர். அவருடைய தந்தை ஆனந்த பாகவதர் புகழ் பெற்ற பாடகர் மற்றும் அனுஷ்டானம் பூஜை புனஸ்காரம் முதலியவற்றில் தவறமாட்டார். அதே வழக்கம் செம்பையிடமும் அப்படியே இருந்தது . குறைவான உறக்கம், எளிய உணவு, இடைப்பட்ட காலத்தில் நாராயணீய பாராயணம், சிஷ்யர்களுக்கு சங்கீதம், நித்ய கர்ம அனுஷ்டானம் என்றே அவரின் வாழ்வு கழிந்தது என்று அவரின் சீடர் கூறி இருக்கிறார்.

3 வயதிலேயே தனது அப்பாவிடம் சங்கீதம் கற்றுக்கொண்டு, கடுமையான உழைப்பினால் அவரது சாரீரம் நன்கு மெருகேறியது. 1904ஆம் ஆண்டு 8 ஆம் வயதில் தமது அரங்கேற்றக் கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். ஆரம்பத்தில் செம்பையும் அவரது சகோதரரும் இணைந்து கச்சேரிகள் செய்தார்கள்.

இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து பல இசைக் கச்சேரிகள் செய்தனர். 1914 ஆம் ஆண்டில் இருவருமாக சேர்ந்து செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் என்ற இசை விழாவை ஆண்டுதோறும் நடக்க ஏற்பாடு செய்தனர். இன்று வரை தொடர்ந்து இந்த உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூரில் செட்டியார் ஒருவர் இசை விழா நடத்தி வந்தார் . அந்தக் கச்சேரிகளை ஏற்பாடு செய்தவர் ஶ்ரீ முத்தையா பாகவதர் அவர்கள்.

அதில் பாட விரும்பிய செம்பை அவர்களுக்கு , இளைஞர் என்ற காரணத்தால் சந்தர்ப்பம் தரவில்லை அந்த விழாவில் ஒரு நாள் ஜலதரங்கக் கச்சேரி நடந்தது. அவருக்கு வழக்கமாக வாசிக்கும் வயலின் வித்வான் வராமல் போகவே, செம்பை அவர்கள் தான் வாசிப்பேன் என்று கூற வயலின் வாய்ப்பு வந்தது. அவருக்கு சன்மானம் வழங்க வந்தபோது அவர் சொன்னார் – நான் கரூரில் வந்தது பாட்டு கச்சேரி செய்ய. சன்மானம் தருவதற்குப் பதில், வாய்ப்பாட்டு கச்சேரிக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்றார் .மறுநாள் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுத்தார்கள் ..அருமையான கச்சேரியாக அது அமைய, அதற்குப்பின் செம்பையினுடைய புகழ் எல்லா இடமும் பரவியது.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.

கல்கி அவரை சங்கீத சாம்ராட் என்று அழைத்தார் .1951ல் சங்கீத கலாநிதி ,1958ல் ஜனாதிபதி விருது அதற்குப்பின் பத்ம பூஷண் என பல கௌரவங்கள் அவருக்குக் கிடைத்தது. 1996ஆம் ஆண்டு செம்பையின் நூறாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில்
இந்திய அஞ்சல் துறை ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற செம்பையின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கணீரென கடைசி வரிசையிலுள்ளவர்களுக்கும் கேட்கும். ஒரு சமயம் நாதசுவரத்தைப் பக்கவாத்தியமாக வைத்து கச்சேரி செய்தார் என்றால் அவரது குரல் எத்தகையது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பல சபாக்களிலும் இசை விழாக்களிலும் பாடியதுடன் பிளேட் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் தனது பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டார்.

செம்பை இசைக்கலைஞர்களை தூக்கி விடுவதில் பெருமை கொண்டவர். பாலக்காடு மணி பழனி சுப்புடு, எம் எஸ் கோபாலகிருஷ்ணன் ,டிவி கோபாலகிருஷ்ணன், என்று பல பக்கவாத்தியக்காரர்களை உற்சாகப்படுத்தி வாசிக்க வைத்து அவர்கள் திறனை உயர்த்தியவர்.
“ரக்ஷ மாம்”, “வாதாபி கணபதிம்”, “பாவன குரு” போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார்.
வாணி என்ற ஒரு திரைப்படத்தில் கூடத் தோன்றி ஒரு கச்சேரி செய்தார். சௌடையா மற்றும் பாலக்காடு மணி பக்க வாத்யத்துடன் வந்த அந்தப் படத்தில் கிடைத்த சன்மானத்தில் செம்பை பார்த்தசாரதி கோவில் உபயோகத்திற்கு தங்க கவசம் அளித்தார்.

1974 ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர் திரு டி வி கோபாலகிருஷ்ணன் அவர்கள் செம்பை பெயரில் அமைப்பு ஒன்று அமைத்து ஆண்டுதோறும் அவரது குருவின் நினைவாக இசை விழா எடுத்து வருகிறார்.

 

கர்நாடக இசைப் பயணத்தில் செம்பையின் பங்கு என்பது மகத்தானது மட்டுமல்ல, மறக்க முடியாத ஒன்றும் கூட..