“அப்ப்பா “என்று ஓடிவந்து கட்டிக் கொண்ட மகளின் நெற்றியில் குனிந்து முத்தம் வைத்தான் சங்கர்.

“ஏய் !யார் உன்னை உள்ளே விட்டது. இந்த வாட்ச் மேன் எங்க போனான் ?”

யானையின் பிளிறலாய் ஒலித்தது மதுரநாயகத்தின் குரல்

“ஏய்! சங்கீக்கழுதே! வா இந்தப் பக்கம்.வாசல் தொறந்து கெடந்தா தெருவுல போறதெல்லாம் நடு வீட்டுக்குள்ளே வந்திடும் போல! த்தூ மானங்கெட்டதுக . எங்கே வந்தே இங்கே?. இது சத்திரமா? இங்கே கொலைகாரனுக்கும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவனுக்கும் எடமில்லே.சங்கீ…இங்கே வா”

மதுரநாயகத்தின் குரல் நெருப்பைக் கொட்டியது. பேரில்தான் மதுரம்.பேச்செல்லாம் தேள்கொடுக்குதான். நிமிர்ந்தான்.

மாடியிலிருந்து இறங்கும் அவருக்குப் பின் கீதா இறங்கிக் கொண்டிருந்தாள்.முகத்தில் கலவையான உணர்வுகள்.மருண்ட விழிகளில் அலைப்புறுதல்கள். காதலோடு பயமும் அப்பாவின் மீதான மரியாதையும் அப்பாவித்தனமும் மின்னி மின்னி மறைந்தன.

மதுரநாயகத்தின் ஒரே மகள் கீதா.அவளுடைய கணவன் தான் சங்கர். வீட்டோடு மாப்பிள்ளை என்பதுதான் திருமணத்துக்கான முதல் நிபந்தனையே. பெற்றோர் இன்றி மாமனின் நிழலில் வளர்ந்தவனுக்கு இந்த நிபந்தனை பெரிதாகத் தோன்றவில்லைதான். தாயற்ற பெண்ணை தாய்க்குத்தாயாக வளர்த்திருக்கும் தந்தையிடமிருந்து மகளைப் பிரிப்பானேன் என்று எண்ணம்.

இருவருமே காதலும் நேசமுமாய் பொருந்தித்தான் வாழ்ந்தனர். மாமனாருக்கு உதவியாக தொழிலும் பங்கெடுத்துக் கொண்டான்.

வாழ்க்கை இனிதாகவே போனது.குழந்தையும் நேசத்தின் அடையாளமாய் பிறக்க தங்கள் இருவரின் பெயரையும் சேர்த்து சங்கீதா என்று பெயர் சூட்டிக் கொண்டாடினான்.

ஆனால்..விதிக்கு விருப்பமில்லை போலும் அது வேறுவிதமாய் கறுப்பு வண்ணத்தைத் தோய்த்து அழுத்தமாய் எழுத ஆரம்பித்தது.

“தாத்தா.. எங்கப்பாவோடதான் நானிருப்பேன்.”

“ஒங்கப்பன் கொலைகாரன்”

“இருக்கட்டும். “

“ஒரு கொலைகாரனை வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன்”

“எனக்கு எங்கப்பா வேணும்”
உதடு பிதுங்கி அழுகை முகிழ்த்தது. கூடவே கோபமும் பிடிவாதமும் துணையாய் வந்தது.

“உங்கொப்பன் உன்னையும் கொன்னாலும் கொன்னுடுவான் “

சங்கருக்கு சுளீர் என்றிருந்தது.துடித்துப் போய் பிள்ளையைப் பார்க்க

“எங்கப்பா நல்லவர். அப்படியெல்லாம் செய்ய மாட்டார். நீங்கதான் கெட்டவர். பொழுதுக்கும் அம்மாவை என்னை திட்டிட்டே இருக்கிறீங்க”

” சின்னப்புள்ளையா லட்சணமா இரு. எனக்கு மானமரியாதை கௌரவம் முக்கியம். அவனை வெளியே அனுப்பிட்டு நீ உள்ளே வா. “

“எனக்கு எங்கப்பாதான் முக்கியம். அவர் ஒன்னும் தப்பு செய்யலை. நல்லதுதான் பண்ணார்”

“நீ குழந்தை புரியாமப் பேசாதே. .சங்கீ! தீபாவளிக்கு பட்டாசு வாங்கனும்னு சொன்னேயில்லே. கிளம்பு நானும் வரேன். காரிலே போயிட்டு உனக்கு வேணும்றது வாங்கிட்டு வரலாம்”

“நேத்து காசக் கரியாக்கக்கூடாதுன்னு திட்டுனீங்க இப்போ என்ன? “
குழந்தை புருவம் வளைத்து யோசித்துக் கேட்டாள்.

“ அப்போ சொன்னேன். இப்போ கிளம்பு.”

மகளிடம் திரும்பி பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினிர்

“கீதா! பாத்துட்டே நிக்கிறே .மானம் போவுது.அவளை இழுத்துட்டு வா. உன்புருஷனை கழுத்தைப்புடிச்சு வெளியே தள்ளு. அவன் நின்ன இடத்தை பினாயில் ஊத்தி கழுவச் சொல்லு”

“தாத்தா! எங்கப்பா ஒன்னும் கெட்டவர்ரில்லே. அந்த வேன் ட்ரைவர் என் ப்ரெண்ட் அனுவை பேட் டச் பண்ணான். அப்பாகிட்டே சொன்னேன் அத அப்பா கேட்டதுக்கு சண்டை வந்துச்சு அப்பா அவனை தள்ளிவிட்டார். அவன் விழுந்து செத்துட்டான். அனுவோட அப்பா கூட என் ப்ரெண்ட்ஸ் மூனு பேருகூட பேரண்ட்ஸோடு வந்து ஜட்ஜ்கிட்டே சொன்னாங்க தானே! ஜட்ஜ் ஆண்ட்டிகூட குட் தானே சொன்னாங்க.”

“ஆனாலும் பேரு கெட்டுப் போச்சே.கொலைகாரன் பொண்ணு அப்படின்னுதான் ஒன்னை கூப்பிடுவாங்க”

“கூப்பிட்டா கூப்பிடட்டும். எங்கப்பா எனக்கு ஹீரோதான். நல்லவர். ஹீரோ போலே சண்டை போட்டார். அந்த வேன் டிரைவர் தான் பொல்லாதவன். தப்பைத்தானே தட்டிக் கேட்டார். எனக்கு எங்கப்பா தான் வேனும்.
அப்பா! நீ வாப்பா போவோம். அம்மாவுக்கு அவங்கப்பா தான் ஒசத்தின்னா அவரோடையே இருக்கட்டும். எனக்கு நீதான்ப்பா பெரிசு.வாப்பா போவோம்.”கையை இறுக்கிப் பிடித்தாள்.

தனக்காக வாதாடிய மகளை அள்ளிக் கொண்டான். கண்ணீர் வழிந்தது.

“அழாதேப்பா.!”. “பிஞ்சுக்கையினால் துடைத்துவிட்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நீயில்லாம ரெண்டு தீபாவளி போயிடுச்சுப்பா. நீ என்கூடயிருப்பா .அதுதான் தீபாவளி. புது டிரஸ் பட்டாசெல்லாம் வேணாம்ப்பா. வாப்பா போவோம். நீதான் எனக்கு வேணும்ப்பா “

குழந்தைகளிடம் அத்துமீறிய வேன் டிரைவரை அதட்டிக் கேட்க தள்ளுமுள்ளு உண்டாகி அதில் எக்குதப்பாய் கீழே விழுந்ததில் உயிரை விட்டு விட்டான அவன்.

கடைசியில் டிரைவர் மீதான குற்றச்சாட்டு உண்மையென நிருபித்து எதிர்பாராது நடந்த விபத்து என்று சாட்சிகள் மூலம் முடிவாகி மூன்றாண்டு தண்டனை கிடைத்தது சங்கருக்கு.

விடுதலையாகி மனைவி மக்களை தேடி வந்த இடத்தில் இப்படியோர் வரவேற்பு.

“அம்மா! நீ இங்கியேயிருந்துக்கோ.நான் எங்கப்பாவோட போறேன். “

குழந்தை தீர்ப்பெழுதி விட்டாள்.

கீதா மூவரையும் மாறிமாறிப் பார்த்தாள். மகள் சொல்வது நிஜம்தானே. தப்பைத்தானே தட்டிக்கேட்டான். அதற்கு தண்டனையும் அனுபவித்தாயிற்று. கணவனின் மீதான மொத்தக் காதலும் பெருகிவர அப்பாவைத் தாண்டிக் கொண்டு வந்து கணவனின் அருகில் நின்றாள்.

“வாங்க போலாம்”

“அம்மா! “

“எனக்கும் உங்கப்பா தான்டீ வேனும்”

மூவரும் கைகோர்த்து வெளியே போக மதுரநாயகம் கண்ணைக்கூட சிமிட்டாமல் உறைந்து போய் நின்றார்.

வெளியே வானவீதியில் பட்டாசு வெடித்து வர்ணஜாலமாய் வெளிச்சப்பூக்கள் ப்ரகாசித்து சரிந்து விழுந்தன.