சரித்திரப்பாடத்தில் நாம் படித்திருப்பது இது: ‘கஜினி முகம்மது தொடர்ந்து 17 முறைகள் வட இந்தியா மீது படையெடுத்தான். சோம்நாத் கோவிலைக் கொள்ளையிட்டு அழித்தான்’.
பொதுவாக, பரீட்சையில் பல முறை தோல்வியடையும் மாணவரை கஜினி முகமதுவுடன் நாம் ஒப்பிட்டு நகைக்கிறோம். ஆனால், கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மறுபடி மறுபடி இந்தியாவுக்கு வரவில்லை. அநேகமாக அவனுடைய பதினேழு படையெடுப்புகளுமே அவனுக்கு வெற்றிதான்!
அதுக்கும் மேலே அவன் செய்தது என்ன? பார்ப்போம். முதலில் காரணங்களை ஆராய்வோம்: மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், அரேபியாவில் இருந்த மன்னர்கள் இந்தியாவைப்பற்றி கதைகள் கேட்டு வாயைப் பிளந்தனர். விண்ணை முட்டும் கோயில்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள். கொட்டிக் கிடக்கும் ஆபரணங்கள், தங்கம், வைரம் என்று திகழும் செல்வக் களஞ்சியங்கள் – இவை பற்றிப் பலர் விளக்கமாக விவரிக்கக் கேட்டு வந்தனர். வெறிச்சோடிய பாலைவனத்தையும் கரடுமுரடான மலைத் தொடர்களையும் சூழ்நிலையாகக் கொண்டு ஆட்சி புரிந்த அம்மன்னர்கள் இந்தக் கதைகள் கேட்டு விட்ட ஜொள்ளுக்கு அளவில்லை.
கஜினி முகமது (971–1030 கி.பி.) ஆப்கானிஸ்தானின் கஜினி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இந்தியாவில் பின்னாளில் அடிமை வம்சம் இருந்தது போல கஜினியிலும் அடிமை மன்னன் முகம்மது சபுக்தகின் என்பவனின் மகனாகப் பிறந்தான். (ஆட்சி காலம் கி.பி. 998 முதல் 1030 வரை).
கதைக்கு வருவோம்: பெரும் குதிரைப் படையோடு கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான் கஜினி முகமது. சிந்து நதியைக் கடந்து பஞ்சாப் பீடபூமியில் அவன் படை புகுந்த போது அதை மடக்கி நின்று எதிர்கொண்டது பஞ்சாப் மன்னன் ஜெயபாலனின் படை. அது ஜெயபாலனின் போதாத காலம்! அசுரத்தனமும் அதிபுத்திசாலித்தனமும் கலந்து போரிட்ட கஜினியின் படையிடம் ஜெயபாலன் வீரர்களின் வீரம் ௭டுபடவில்லை. கஜினியின் படை, போரில் பெரும் வெற்றி அடைந்தது. கொள்ளையடித்த செல்வத்தை அள்ளிக் கொண்டு ஒட்டகங்கள் மீது ஏற்றி வைப்பதில் ஆயிரமாயிரம் வீரர்களுக்கு சில நாட்கள் பிடித்ததாம்.
செல்வப்பெட்டகங்களுடன், கஜினி நாட்டுக்குத் திரும்பினான். ஒவ்வொரு முறையும் இதே கதை தான்… இதே கொள்ளை, கொலைகள்… பிறகு ஊர் திரும்பல்! (பின்னர், 1008-ல் ஜெயபாலின் மகன் ஆனந்தபாலுக்கும் எதிராக நடைபெற்ற இரண்டாம் யுத்தத்திலும் கஜினி மிகப்பெரும் வெற்றி பெற்றான்)
கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏன் தான் பிடிக்காது? கி.பி.1000-ல் ஆரம்பித்து அநேகமாக ஆண்டுக்கொருமுறை இந்தியாவின்மீது படையெடுப்பதை ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டான் கஜினி. செளராஷ்டிரம், கன்னோசி, மதுரா, தானேஸ்வர் என்று ஒவ்வொன்றாக கஜினி படையின் தாக்குதலில் இரத்தம் சிந்திச் சிவந்தது. இந்தியாவில் முல்தான் பிரதேசத்தை ஆண்ட சுல்தான் தாவூத் என்னும் இஸ்மாயிலி பிரிவைச் சேர்ந்த சுல்தானையும் வெட்டிச் சாய்த்து முல்தான் தலைநகரைத் தரைமட்டமாக்கினான் முகமது கஜினி. மதுராவைத் தாக்கி ஏராளமான பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து வாரிச் சுருட்டிச் சென்றான். அதனைத் தொடர்ந்து குஜராத், கன்னௌஜ் போன்ற பகுதிகளைத் தாக்கினான்.
கொடுமை என்னவென்றால் கஜினி, தான் வெற்றிகொண்ட மன்னர்களின் கைவிரல்கள் அத்தனையையும் வெட்டி எடுத்துக்கொண்டு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தானாம். . லாஹூரில் கிடைத்த ஒரு தங்க நாணயத்தில் அவன் படத்திற்குக் கீழே பொறிக்கப்பட்ட சமாசாரம்: ‘சிலை உடைத்தவன்!’
டிசம்பர் 1025 – பதினேழாவது முறை. கஜினியின் படைகள் புழுதி பறக்க ராஜஸ்தான் பாலைவனத்தைப் புயலாகக் கடந்தது. குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் ஊருக்குள் மெல்ல கஜினியின் படை புகுந்தது. அங்கு கடற்கரையோரம் இருந்த சோமநாதர் என்று வழிபடப்பட்ட சிவன் கோயில் – நாடெங்கும் புகழ்பெற்றது. கர்ப்பக்கிருகத்தில் காட்சி தந்த சிவலிங்கம் அந்தரத்தில் மிதக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது! சோமநாதர் ஆலயத்தின் செல்வச்செழிப்பைச் சொல்ல இயலாது. மன்னர்களும் செல்வந்தர்களும் பக்தர்களும் காணிக்கையாக அளித்த செல்வம் மலைபோலிருந்தது. நூற்றுக்கணக்கான தங்க விக்கிரகங்கள். அவற்றை அலங்கரிக்க வைரங்கள், வைடூரியங்கள், முத்துக்கள் பதித்த அற்புதமான ஆபரணங்கள். கோயில் கஜானாவில் நிரம்பி வழிந்த பொற்காசுகள்..!
தொலைவிலிருந்தே ஜொலித்துக்கொண்டிருந்த புகழ்வாய்ந்த இந்த ஆலயத்தைத் தன் படையின் முன்னணியில் குதிரை மீது அமர்ந்து பார்வையிட்டான் முகமது கஜினி. “இதுதான் அந்தப் பெரும் செல்வங்கொழிந்த கோயிலா?” என்று எண்ணி உவகை கொண்டான். ஆணையிட்டான் கஜினி. ஏந்திய ஈட்டிகளுடனும் அகன்ற வாட்களுடனும் பாய்ந்தது அவன் படை. சோமநாதர் கோயில் நெருங்க நெருங்க, இப்படி ஒரு கூட்டம் தன்னை வழிமறித்து எதிர்ப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பல்லாயிரக்கணக்கில் ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து ஓடி வந்தார்கள். கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு கஜினியின் படையை எதிர்த்து நின்றார்கள். சுல்தானின் கண்கள் சிவந்தன “தடுப்பவர்களின் தலைகளைத் தரையில் உருளச் செய்யுங்கள்” என்று கர்ஜித்தான் கஜினி. வீரர்களின் வாட்கள் சுழன்றது. வெட்டித் தள்ளத் தள்ள மேலும் மேலும் மக்கள் முன்னேறி வந்து வழிமறித்தார்கள்.
அன்று சோமநாதர் ஆலயத்தின் வெளியே துண்டாக்கப்பட்டு, உயிரற்று ஐம்பதாயிரத்துக்கும் மேல் உடல்கள் கிடந்தது. கடல் அலைகள் இரத்த மயமாகிற்று. தங்கள் ஆலயத்தைக் காக்க உயிரையும் பலியாகத் தந்த மக்கள் அவர்கள்!
ஆலயத்துக்குள் நுழைந்த கஜினி முகமது, கோயிலின். செல்வச் செழிப்பைக் கண்டு பிரமித்துப்போனான். விக்கிரகம், ஆபரணம் என்று ஒன்று விடாமல் அள்ளி மூட்டை கட்டினார்கள் சுல்தான் வீரர்கள். கர்ப்பக்கிருகத்தில் ஒளிவீசிக்கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த சிவலிங்கத்தைப் பார்த்து கஜினி பிரமித்தான்! ஆலயத்தைச் சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன.
சோமநாதர் கோயிலில் நடந்தேறிய இத்தனை கொடூரத்தையும் விவரமாக, எழுதியிருப்பவர் அல் காஸ்வினி எனும் அரபு நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளர்.
கடைசி முறையாக இந்தியாவை ஒரு நிறைவான பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்துவிட்டு நாடு திரும்பினான் முகமது கஜினி. சோமநாதர் கோயிலிலிருந்து அவன் கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறு டன் எடைக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது!
கொள்ளையடித்த பெரும் செல்வத்தைக் கொண்டு தன் சொந்த ஊரான கஜினியைச் சிறந்த நகரமாக உருவாக்கச் செலவழித்தான். அருமையானதொரு நூல்நிலயமும், அருங்காட்சியகமும் மக்களுக்காகக் கட்டித் தந்தான். அவன் அரண்மனையில் கவிஞர்களும் பாடகர்களும் ஓவியர்களும் கூடி, தங்கள் கலைத்திறனை சுல்தான்முன் காட்டி அவனை மகிழ்வித்தார்கள். பிர்தெளஸி, அல்பெரூனி போன்ற புகழ்வாய்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களை அவன் ஆதரித்தான்.
வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு பேரரசனின் பெரும் படை வடகிழக்கு இந்தியாவுக்கு வந்தது. அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. கலிங்கம், வங்கம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன. கங்கைநதி நீரைக் குடங்களில் நிரப்பி, தான் வெற்றி கண்ட மன்னர்களின் தலை மீது வைத்துத் தன் ஊருக்குத் திரும்பினான் அந்த மன்னன். அந்தப் பேரரசன்தான் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மானித்த ராஜேந்திர சோழன்!
இந்தியாவின் வடமேற்கே கஜினி படையெடுத்து வந்திருக்கும் விஷயத்தை நிச்சயம் ஒற்றர்கள் ராஜேந்திர சோழனிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், ராஜேந்திர சோழனின் விருப்பம் கப்பற்படையுடன் சென்று மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது. தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு மாமன்னன் கங்கை வரை வந்து வெற்றிக்கொடி நாட்டிய விஷயம் முகமது கஜினிக்கும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ‘சிந்து நதியைக் கடந்தது போதாதா? கங்கையை வேறு கடந்து, படை பலம் தெரியாமல் யாரோ ஒரு தென்னாட்டு மன்னனுடன் யார் மோதிக் கொண்டிருப்பது? எதற்கு வீண்வம்பு?’ என்று தன் கவனத்தை வடமேற்குப் பகுதிகளிலேயே கஜினி செலுத்தியிருக்க வேண்டும்.
கஜினி முகமது, ராஜேந்திர சோழன் – இருவரும் போர்க்களத்தில் நேருக்குநேர் சந்திக்காமலேயே திரும்பினார்கள் என்கிறது வரலாறு! சந்தித்திருந்தால்???
1030 கி.பி.யில், ஆப்கானிஸ்தான் திரும்பிய கஜினி முகமது, ஒரு விஷக் காய்ச்சலில் படுத்து 1030-ல் இறந்துபோன செய்தி கேட்ட வடஇந்தியா நிம்மதிப் பெருமூச்சு விட்டது!
ஆனால் அது துவக்கம் தான். கஜினியின் படையெடுப்புகள் இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளத்தை இந்தியாவில் பதித்தன.
சரித்திரம் சொல்லும் கதைகள் தொடர்கிறது.
