ஆயுத பூஜைப்
பண்டிகை தினத்தில்
ஒரு நிராயுதபாணியின் பிறந்த தினம்..
ஒரு புன் சிரிப்பால் சிகரங்களை வளைத்துவிட முடியும் என்றால்.. உண்மையை மட்டும் பேசி ஆதிக்க சக்திகளை அலற வைக்க முடியும் என்றால்..
உண்ணா நோன்பிருந்து அரசாங்கத்தை அச்சுறுத்த முடியும் என்றால்..
மௌன விரதம் காத்து பிரகடனங்கள் செய்ய முடியும் என்றால்..
தேசத்தின் நீள அகலங்களைக் கால்களால் நடந்து அளந்து ஒரு வரைபடம் தயாரித்து விட முடியும் என்றால்..
பகைவனைப் பகுத்தறிந்து மனிதம் தேர்ந்து பகைமை எனும் பேயை மட்டும்
விரட்ட முடியும் என்றால்..
விதேசி விற்ற சட்டைக்கு
இட்ட தீயால்
பரங்கியர் கோட்டையின்
படுதாக்களுக்கு எரியூட்ட முடியும் என்றால்..
களத்தில் போரிடாமல் புறமுதுகும் காட்டாமல் போரில் வென்றும் காட்ட முடியும் என்றால்..
அகிம்சை என்னும்
கொடியுயர்த்தி அகில உலகமும் ஆள முடியும் என்றால்..
மார்பைத் துளைத்த தோட்டாக்களிடமும் ஜீவகாருண்யம் காட்ட முடியும் என்றால்
இவரிடம் இல்லாத படைக்கலமா ஆயுதமா?
இவர் எப்படி நிராயுதபாணி ஆவார்?
